(Reading time: 44 - 88 minutes)

சோம்பல் முறித்துக் கொண்டே பால்கனியில் சாய்ந்து தன்னை மறந்து பாடினான். பக்கத்தில் இருந்த பால்கனியில் அவன் பாடுவதை கவனித்த இளம்பெண் “வாவ். நல்லா பாடுறீங்க. நீங்க தமிழா? பூமா வீட்டு கெஸ்டா?” கேட்டாள். அவள் கேள்விகளுக்கு புன்முறுவலித்த படி பதிலளித்தான். “உங்க பாட்டும் மட்டும் இல்ல ஸ்மைலும் சூப்பர்”, என்றவளுக்கு பதில் பேசாமல் முறைத்து விட்டு உள்ளே வந்தான். மீண்டும் பூமாவும், குணாவும் அவனை குறுகுறுவென பார்த்தனர்.

 

“ஏன் ரெண்டு பேரும் எப்ப பாத்தாலும் குறுகுறுன்னே பாக்கிறீங்க?”, கேட்டான் கார்த்திக் புன்னகைத்தபடி.

 

“நான் சைக்காலாஜி படிச்சிருக்கேன். அதை வச்சு சொல்றேன். நீங்க ஏதோ யோசனையில் இருக்கிற மாதிரி தெரியுது.” என்றாள் பூமா.

 

அதை கேட்டு சிரித்த குணா, “ஆனா ஊனா சைக்காலஜி, ஆனா அதில் எத்தனை கப் வைச்சு படிச்சான்னு ஸ்ரீக்கு தான் தெரியும்” என்றான்.

 

“ஏன்?”, புரியாமல் கார்த்திக் கேட்க,

 

“நான் ஒரு தடவை பரீட்சை எழுதுனா நூறு தடவை எழுதின மாதிரி. அதுனால ஒரு தடவை எழுதி பெயில் ஆனா அந்த அரியர் எக்ஸாமை என் பேர்ல ஸ்ரீ எழுதுவா” என்றாள் சாவகாசமாக.

 

வியப்பும் சிரிப்புமாய் கார்த்திக், “அவங்க எஞ்சினியரிங் படிச்சிருக்காங்க. சைக்காலஜி கஷ்டமாச்சே?” கேட்டான்.

 

“நானும் சந்தியாவும் அவளை ப்ளாக் மெயில் பண்ணி படிக்க வைச்சுடுவோம். ஸ்ரீக்கும் சந்தியா மாதிரி படிப்பு நல்லா வரும். அதனால நைட்டெல்லாம் கண் விழிச்சு அவளை படிக்க வைச்சு என் ஹால் டிக்கெட் கொடுத்து அனுப்பி விட்டுடுவோம். “ என்று சொல்ல சிரித்த கார்த்திக்கிடம்,

 

“அதுக்காக நான் சைக்காலஜி படிக்கவே இல்லைன்னு சொல்ல முடியாது. நீங்க ஏதோ யோசனையிலே இருக்கிறீங்க. கரெக்டா?” கேட்டாள் பூமா.

 

“பேய்க்கு அக்கான்னா சும்மாவா? போட்டு வாங்குறதுலே குறியா இருக்காங்களே. “ என்று நினைத்தவனிடம் குணா,

 

“கார்த்திக் மாதிரி கீக் எல்லாம் அப்படி தான் இருப்பாங்க பாப்பூ” என்று பூமாவிடம் சொல்லிவிட்டு, “ஆனா கார்த்திக் உங்க வாய்ஸ் கேட்டு அசந்துட்டேன். சான்ஸ் லெஸ். அழகா பாடுறீங்க. “ பாராட்டினான் குணா. அதை பூமாவும் வழி மொழிய,

 

அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு “இதுக்கு மேல இருந்தா நமக்கு நல்லதில்லை” என்று எண்ணி மணியை பார்த்து விட்டு, கிளம்ப ஆயத்தமாகிய கார்த்திக், காபி டேபிளை உருட்டினான். அதை கவனித்த பூமா,

 

“கார் சாவி தானே தேடினாலும் கிடைக்காது” என்று நமுட்டு சிரிப்பு சிரித்தாள் பூமா. அவளிடம் கார்த்திக் கெஞ்ச,

 

குணா அவனருகில் வந்து சாவியை நீட்டியவாறு,

 

“இந்தாங்க கார்த்திக், சாவி. ஒரு கம்பெனிக்கு பாஸ்ஸா இருந்தாலும் பந்தா பண்ணாம இவ்வளோ லக்கேஜ் எடுத்துட்டு வீடு தேடி வந்து கொடுத்த உங்களை நல்ல விதமாக உபசரித்தா தான் எங்களுக்கு சந்தோஷம். நீங்க இப்போ கிளம்புனீங்கன்னா எங்க வீட்டில் தங்க இஷ்டமில்லாம தான் கிளம்புறீங்கன்னு நினைச்சுக்குவோம்.”

 

என்க, தர்மசங்கடமாய் என்ன சொல்வதென தெரியாமல் அவன் பூமாவை பார்க்க, “ப்ளீஸ், இன்னைக்கு ஒரு நாள் இருக்க கூடாதா? நம்ம ஊரு மக்களை பாத்தா எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா?”, பூமா கேட்டதில் மறுப்பு சொல்ல மனதில்லாமல் அங்கு இருந்து செல்ல சம்மதித்தான்.

 

வன் தங்குவதற்கு ஒரு அறையை ஒதுக்கி, கூட்டிச் சென்றான் குணா. “உங்களுக்கு டையர்ட்டா இருந்தா இந்த ரூம்ல ரெஸ்ட் எடுங்க. பூமா சொன்ன மாதிரி லஞ்சுக்கு ரெஸ்டாரண்ட் போகலாம்” என்று சொல்ல,

 

தனது பையை அந்த அறையில் வைத்த கார்த்திக்,

 

“அப்பாடா….இவர் சமையல் சோதனையில் இருந்து தப்பிச்சோம்” என்று நினைக்கும் பொழுதே,

 

அது காதில் விழுந்தது போல, “இப்போ நான் சமைத்து வைக்கிறதை நைட் வந்து சாப்பிடலாம்” என்று குணா அவன் தலையில் இடியை இறக்கி சென்றான்.

 

காலை சிற்றுண்டியை முடித்து விட்டு சற்று நேரத்தில் சந்தியாவிற்கு அழைத்தாள் பூமா.

 

ஏற்கனவே சந்தியாவிற்கு போனில் சொன்னதை நேரில் விவரித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீமா. “அம்மாக்கு ஹைப்பர் டென்ஷன். பிபி அதிகமா இருக்குதாம். இதுக்கு அறிகுறி எல்லாம் ரொம்ப நாளா இருந்திருக்கு. அம்மா இது வரை நம்ம கிட்ட சொன்னதே கிடையாது. இன்னைக்கு உங்கம்மா ஸ்ட்ரோக் வராம தப்பிச்சது கடவுள் புண்ணியம்ன்னு டாக்டர் சொன்னாருடி. அம்மாக்கு டயட், எக்ஸர்சைஸ், மருந்து எல்லாம் சரியா பாலோ பண்ணனுமாம். ஸ்கூல்க்கு போற அவசரத்தில பாதி நாள் சாப்பிடாம ஓடிடுவாங்க. நீ கொஞ்சம் கவனமா பாத்துக்கோ. உப்பு போடாம தான் சமைக்கணும். அதை விட அவங்களுக்கு ஸ்ட்ரெஸ்(மன உளைச்சல்) வராம பாத்துக்கணுமாம்.” ரத்த அழுத்ததிற்கு மருந்து உண்ட பின் லக்ஷ்மியின் தற்போது உடல்நிலை தேறியிருந்தது.

 

அப்போது அங்கிருந்த தன்ராஜ், “அதெல்லாம் பாத்துக்கிடுவோம் பாப்பா. நீ கிளம்பு. ட்ரைன்னுக்கு லேட்டாக போகுது” என்றார் தன்ராஜ்.

 

“கிளம்புடி. நாளைக்கு லீவ் போட்டிருக்கேன். நான் அம்மாவை பாத்துக்கிடுவேன்” சொன்னது விந்தியா.

 

கிளம்ப ஆயத்தமான ஸ்ரீமா, சந்தியாவுடன் தனியாக பேச வேண்டுமென்று அவளது அறைக்குள் அழைத்துச் சென்று கதவை உட்புறமாய் தாழிட்டாள். அவள் செய்வது புரியாமல் விழித்த சந்தியாவிடம், கைப்பையில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து அவள் முன் நீட்டினாள். கேள்வியும் யோசனையையுமாய் அதை வாங்கி திறந்து பார்த்த சந்தியாவின் முகத்தில் அதிர்ச்சி. அதில் இருந்தது உதட்டுச் சாயமும், கூடவே

 

ஹூ அம் ஐ டு யு??????????? நான் உனக்கு என்ன உறவு?

 

என்ற வாசகமும்...அது கார்த்திக்கின் கையெழுத்து என தெளிவாக தெரிந்தது. வெள்ளியிரவு அவன் பரிசளித்த பெட்டி...வெளி தாள் கிழிந்து, திறக்கப் பட்டு, படிக்கப்பட்டு அவள் கைகளுக்கு வந்ததுள்ளது. “ஸ்ரீ அப்படி செய்ய மாட்டாளே” என்ற நினைவோடு அவளைப் பார்க்க, “தருண் கைக்கு உன் பேக் மாட்டி, இந்த கிப்ட் ரேப் கலர்புல்லா இருக்கவும் வாயில் வைச்சு கடிச்சே கிழிச்சிட்டான்டி. அந்த பாக்ஸ்ஸயும் ஊன்னாலே கடிச்சிட்டு இருந்தான். அப்போ தான் அவன் சேட்டையை கவனிச்சு அவன் கைல இருந்ததை வாங்கித் திறந்து பார்த்தேன். “ என்று ஸ்ரீமா விளக்கம் கொடுத்து சந்தியாவின் பதிலுக்காக காத்திருந்தாள்.

 

“இது கார்த்திக் கொடுத்தது ஸ்ரீ. உள்ள என்ன இருக்குன்னு இப்போ தான் தெரியும்.” என்று தயக்கத்துடன் சொன்னாள் சந்தியா.

 

“கார்த்திக் உன்னை லவ் பண்றாரா சந்து?” சந்தேகமாய் கேட்டாள் ஸ்ரீமா.

 

உன்னை காதலிக்கிறேன் என்று அவன் நேரடியாக ஒரு நாளும் சொன்னது இல்லையே?? ஆசையாய் பேசி இருக்கிறான். ஆனால் எப்போதும் அவள் எண்ணத்தை கேட்பதிலே தானே குறியாக இருந்திருக்கிறான் தவிர அவனாய் முன் வந்து எதுவும் சொல்லவில்லையே. முதன் முதலாக அவன் காதலைப் பற்றிய பயம் துளிர்விட்டது.  

 

“அப்படி தான் நினைக்கிறேன் ஸ்ரீ” தயக்கத்துடன் சந்தியா உறுதியில்லாமல் சொன்னது ஸ்ரீமாவின் கோபத்தை தூண்டியது.

 

“தன்கிட்ட வேலை பாக்கிற பொண்ணுக்கு பின்ன எந்த எண்ணத்தில லிப்ஸ்டிக் வாங்கி கொடுத்தான் ?” கோபமாக கேட்டாள் ஸ்ரீ. முதல் கேள்வியில் இருந்த மரியாதை போய் இரண்டாவது கேள்வியில் ஒருமையில் வந்தது.

 

ஸ்ரீ கார்த்திக்கை ஒருமையில் விளிப்பதை சந்தியா விரும்பவில்லை.

 

“ஏன் ஸ்ரீ கார்த்திக்கிற்கு கொடுத்த மரியாதையை குறைக்கிற? அவர் மத்த பணக்கார பசங்களை மாதிரி கிடையாது. ஹி இஸ் எ பெர்பெக் மேன். தயவு செய்து அவரை தப்பா பேசாத...“ கார்த்திக்கிற்காக நிதானமாக வாதாட முயன்று தோற்று போய் கெஞ்சலாக கேட்டாள். அவள் இப்படி உணர்ச்சி வசப்படும் ரகம் இல்லையே! அவளுள் உள்ள அவனின் பாதிப்பு அவளின் இயல்பை மாற்றியது.

 

“ஒரு பெர்பெக்ட் மேன் செய்ற காரியமாடி இது?”, தங்கை பதிலில் மேலும் அதிர்ச்சியாய், கோபம் குறையாமல் கேட்டாள் ஸ்ரீ.

 

கேள்வியாய் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீமாவை தவிர்க்க எண்ணினாலோ? இல்லை சொல்வதற்கு அவகாசம் வேண்டும் என்று நினைத்தாளோ? உணர்ச்சிகளை துடைத்த முகத்தோடு ஜன்னல் அருகே சென்று, ஜன்னல் கம்பியை பிடித்தவாறு வெளியே வெறித்து பார்த்தவள், “இதை செய்ததுக்கு என்னால கார்த்திக் மேல கோபப் படமுடியலையே ஸ்ரீ…” இயலாமையில் குரல் தழுதழுக்க சொன்னாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.