(Reading time: 40 - 79 minutes)

வாயாடி….உனக்கு கொழுப்பு”  என சொல்லிக் கொண்டே அவளை அடிக்க சக்தி எழுந்து ஓடி வர, சந்தியாவும் எழுந்து ஓடினாள். சத்தம் கேட்டு அப்பொழுது தான் தூங்க ஆரம்பித்திருந்த லக்ஷ்மி கண் விழித்து “சந்தியா இருட்டில என்ன விளையாட்டு? , குரலை உயர்த்தி அதட்டினார்.

“அதும்மா..இந்த சக்தி தான்”, சந்தியா தயங்கிய குரலில்.

“சத்தம் போடாம தூங்குங்க”, மீண்டும் அதட்டினார்.

“ஹூம்...இதை உங்க கிளாஸ் பிள்ளைங்களுக்கு சொன்னா உபயோகமா இருக்கும்” முணுமுணுத்துக் கொண்டே வந்து படுத்தாள் சந்தியா. சக்தியும் தனது இடத்தில் வந்து படுக்க, மது அவளிடம்  ரகசிய குரலில்,

“பாவம் உன்னால சந்தியாவுக்கு டோஸ்”

“உன் கட்டை விரலை வாயில் வைக்க சொன்னதே அவள் தான்” என்றாள் சக்தி பதிலுக்கு ரகசியமாய்.

இவர்கள் பேசுவதை அனந்த சயனத்தில் படுத்த படி கவனித்துக் கொண்டிருந்த சந்தியாவை முறைத்த மதுவிடம்,

“வாழ்கையில் இதெல்லாம்  ஜகஜம் மது. கண்டுக்காத “ ரகசியமாக சொன்னாள் சந்தியா. “ஹூம்…” என்று கோபித்துக் கொண்டு லக்ஷ்மி பக்கம் திரும்பி மீண்டும் அவர் சேலையை பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்  மது. சில விநாடிகள் கழித்து,

“ஏ ஜந்து...உன்கிட்ட ஒரு டவுட் கேக்கணும். அம்மா தூங்குன பிறகு கேக்குறேன்” இரகசியமாய் சொன்னாள் சக்தி.

“குக்கர் விசில் விட ரெடியான அறிகுறி தெரியுது. நீ சொல்லலாம்” என அவள் சொல்லி முடிக்கும் போது லக்ஷ்மியிடமிருந்து  மெலிதான குறட்டை சத்தம் வந்தது.

“குறட்டை சத்தத்தை குக்கர் விசில்ன்னு சொல்றியா? உன்னை“, அவர் தூங்கி விட்டார் என அறிந்து சாதாரண குரலில் போலி மிரட்டல் விட்டாள் சக்தி.

“சரி, என்ன டவுட்?”, கேட்டாள் சந்தியா.

“இந்த இடுப்பு மேட்டர் தான்டி. எனக்கு இடுப்புல கைய வைச்சாலே பிடிக்காதே! என்னையறியாம அடிக்க கை வந்துடுது. நீ சொன்ன மாதிரி எம்.எஸ். சை ஹெல்மெட் தான் போட சொல்லணும் போல. “ அங்கலாய்ப்புடன் சொன்னாள்.

இவர்கள் பேசுவதை கேட்டு அவர்கள் பக்கம் திரும்பிய மதுவை கவனித்த சந்தியா “ஏ கை சூப்பி பாப்பா...இது பெரியவங்க விஷயம்...நீ பாட்டுக்கு சேலை பிடிச்சுகிட்டு அந்த பக்கம் திரும்பி தூங்கு” , விரட்டினாள்.

சொன்னவுடன் “யேய்...நானும் பிக் கேர்ள்  தான். எனக்கும் சொல்லுங்க. எல்லாம் புரியும்”, என்றாள் ரோஷமாக.

“சக்தி உன் டவுட்டை சொல்லுடி. இவ என்ன சொல்றான்னு பார்ப்போம்” என சந்தியா சொல்ல சக்தி தனது சந்தேகத்தை சொன்னாள்.

அதற்கு மது, “இவ்வளோ தான? இந்த மாதிரி எனக்கு ஒரு ப்ரிச்சனை இருக்குன்னு சொன்னா அவரும் தொடாம அலர்ட்டா இருப்பார்ல. அவர் என்ன இந்த சந்தியா வாலு  மாதிரியா உங்கிட்ட வம்பு இழுக்க போறார்?”

சக்தியும், சந்தியாவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொள்ள,

“சான்ஸே இல்லடி…. இப்படி ஒரு சுடாத பழத்தை என் வாழ்க்கையில்  பாத்ததே இல்லை”, வெந்து நொந்து போய் சொன்னாள் சக்தி.

“மது, நீ கற்று தெளிய நிறைய விஷயம் இருக்கு...ஆனா இங்க வேண்டாம். எல்லாரும் என் ரூம்க்கு போலாம்”, என்று மதுவிற்கு விழிப்புணர்வை உருவாக்க சந்தியாவின் அறைக்கு தோழிகள் புலம் பெயர்ந்தனர்.

மே 22, செவ்வாய் கிழமை

த்தா ஜெயிலுக்கு போறேன் “, என்ற பாண்டியன் அதிகாலை விடியும் முன் எழுந்த பாண்டியன் குளித்து கிளம்பி தூங்கிக் கொண்டிருந்த வடிவின் முன் நின்றான். அரவம் கேட்டு கண்விழித்த வடிவு,

“உடம்பெல்லாம் வீக்கம் இன்னும் ஆறலை. காலங்காத்தால செயிலுக்கு போய் என்ன செய்ய போகுத?” எரிச்சலாய் கேட்டுக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள்.

“நம்ம பச்சையை  பாத்துட்டு வரலாம்னு தான்”

அதிர்ச்சியாய் அவனை பார்த்துக் கொண்டே, “அந்த பயபுள்ள தேன் சகவாசம் சரியில்லாம வெட்டு குத்துன்னு சுத்திகிட்டு திரியுதே..அவனை பாத்து என்ன செய்ய போவுத?”, புரியாமல் வினவினாள் வடிவு.

“நேத்து அந்த சிறுக்கிய வெட்டிட்டு செயிலுக்கு போனாலும் பரவாயில்லைன்னு சொன்னியே ஆத்தா. அது விசயமா பச்சையை பாக்க போறேன். அவன் எனக்காக என்ன வேணாலும் செய்வான்”, ஆணித்தரமாக சொன்னான் பாண்டியன்.

“அந்த தன்ராசும் அவன் வீட்டு பொட்டைச்சிங்களும் நாசமா போகணும்ன்னு  காளியாத்தாளுக்கு காசு வெட்டி போட்டா ஆத்தாளே பாத்துப்பா….நீ எதுக்கு ராசா அந்த பயல பாக்க மேலெல்லாம் காயத்தோட அலையுத…. ஆபிசுக்கு லீவு போட்டு வீட்டில கெடக்குறதவுட்டு புட்டு விடிஞ்சும் விடியாமலும் செயிலுக்கு….. ந...ல்ல்லா  ஓடுத” அங்கலாய்த்தாள் வடிவு.

“காளியாத்தா என்ன...என் ஆத்தா சொன்ன பெரிய வார்த்தைக்கே அவ விளங்காம தான் போவா…..போக வைப்பேன்…” நற நறவென பற்களை கடித்தபடி கோபத்தில் உருமினான்.

மகன் தன்னை சொன்னவுடன் நெகிழ்ந்தாலும், “அந்த சிறுக்கி தேன் ஊரெல்லாம் ஆம்பிளைங்களை மயக்கி வச்சிருக்காளே! அவுகளை எதுத்து உன்னால என்னய்யா பண்ண முடியும்?”, மகன் மீதிருந்த ரத்த காயங்களை கவலையுடன் பார்த்த வண்ணம் கண்ணீரும் கம்பலையுமாய் கேட்டாள்.

டிவின் கண்ணீர்,  தன் கனவை தகர்த்தவளை ஒருவனுக்கும் ஆகாமல் கெட்டு போனப் பால் போலாக்கி விட வேண்டும்  என்ற வெறியை மேலும்  கொழுந்து விட்டு எரிய வைத்தது. ஒவ்வொரு வருட திருவிழாவிற்கும்  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து மிளிர்ந்து பவளக்கொடியாக பவனி வரும் சந்தியா அவன் அலட்சிய பார்வை வீசி முகத்தை வேறு புறம் திருப்பி கொள்வதை பார்க்கும் போதெல்லாம் அவளை  ஆள வேண்டும் என்ற ஆசை, வெறியாக அவன் மனதில் வேரூன்றி விட்டது. இனி அதற்கு சாத்தியமில்லை என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

“என்ன கேவலமா பாத்தவளை, நாய் கூட சீண்டாத படி ஆக்குவேன். இது உன் மேல சத்தியம்” ஆவேசமாக சொல்லிக் கொண்டே அவள் அருகில் சென்று தலையிலடித்து சூளுரைத்தவன் விறு விறுவென நடந்து கதவருகில் இருந்த செருப்பை மாட்டிக் கொண்டு பச்சை என்ற பச்சையப்பனை  பார்க்க கிளம்பி சென்றான்.

மகனின் அதிரடியை பார்த்த வடிவு திகைத்துப் போய் நின்றாள்.

ந்தியா வீட்டில், தோழிகள் இரவு அரட்டை அடுத்து விட்டு வெகு நேரம் கழித்து தூங்கியதால் காலை யாராலும் எழுந்தரிக்க முடியவில்லை. அந்த அரட்டையின் இடையிலும் எத்தனை தடவை பேஸ்புக்கை பாத்திருப்பாள் சந்தியா...ஆனால், கார்த்திக்கோ  பாடலை பதிவு செய்யவே இல்லை.

யோகா வகுப்பு முடிந்து சக்தி வீட்டிற்கு சென்று விட, சந்தியா ஆட்டோ பிடித்து சென்ற வாரம் அவன் அழைத்து சென்ற அந்த பாழடைந்த குடோனை பார்க்க சென்றாள்…இரும்பு கேட்டின் அருகே நின்றபடி அந்த இடத்தை வரலாற்று சின்னம் போல பார்த்துக் கொண்டு இருந்தாள். சென்ற செவ்வாய் அவன் அவளை அள்ளி சென்று காரில் ஏற்றியது, அப்போது நடந்து செல்ல சண்டை...மனம் ஏங்கியது அவன் அருகாமையை…. அன்று  அவன் தொடுகையில் தடுமாறியது காதலினாலா? “அட நீயா சந்தியா? எப்புடி இப்புடி? அவன் கைல என்ன தான் மந்திரம் இருக்கோ...” தன்னையும் அவனையும் வியந்தாள். சம்பவம் நடந்த இடத்தை பார்த்த படி சமைந்து நின்றவள், ஆட்டோக்காரனின் அழைப்பில் சிந்தை கலைந்தாள்.

“என்னம்மா இங்க நின்னு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க.....இந்த பக்கம் அவ்வளவா ஆள் நடமாட்டம் இருக்காது. வயசு பொண்ணு தனியா நிக்கிறது நல்லதில்ல. எனக்கும் அடுத்த சவாரிக்கு போகணும்ம்மா….சீக்கிரம் கிளம்புனா நல்லாயிருக்கும்” பொதுநலமும், சுயநலமும் கலந்து லேசான கெஞ்சலோடு முடித்தான்.

அவன் சொன்ன பின் லேசான பயம் தொற்றிக் கொள்ள “இப்படி ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு இங்க வந்திருக்குமோ….எல்லாம் இந்த கார்த்திக்கால….இந்த ஆட்டோக்காரன் பார்வை வேற ஒரு மார்க்கமா இருக்கோ முருகா காப்பாத்து”, அலர்ட் செய்த ஆட்டோக்காரன் மீது சந்தேகம் வரும் அளவிற்கு ஓவர் அல்ர்ட்டானாள் சந்தியா. ஓடி வந்து ஆட்டோவில் ஏறி சதாசிவம் வீட்டிற்கு செல்ல ஆட்டோக்காரனை பணித்து விட்டு, அவன் வேறு எங்கும் கடத்தி கொண்டு சென்று விடுவானோ என பீதியுடன், போனை  கையில் தயாராக வைத்திருந்தாள். கைப்பைக்குள் அவளின் மூக்குப் பொடி பெட்டியை கையில் மறைத்து வைத்துக் கொண்டாள். தனது பிற தற்காப்பு சாதனங்களை சரிபார்த்துக் கொண்டு கந்த சஷ்டி கவசத்தை மனதிற்குள் சொல்லி முடித்து ஆழ மூர்ச்சை இழுத்து விடும் சமயம் ஆட்டோ சதாசிவம் வீடு இருந்த தெருவிற்குள் நுழைந்தது. “நல்லவன் தான்” நினைத்துக் கொண்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.