(Reading time: 40 - 79 minutes)

வெளியேறிவள் கையில் போனை எடுத்துக் கொண்டு படிக்கட்டுகளில்  ஏறி மொட்டை மாடிக்கு சென்றாள். தனது போனில் பேஸ்புக்கில் கார்த்திக்கின் பக்கத்தை திறந்து பார்த்தாள். கார்த்திக் ஒவ்வொரு இரவும் “குட் நைட்” செய்தியோடு பாட்டையும் பாடி பதிவு செய்திருந்தான். சனிக்கிழமை அவன் பதிந்திருந்த பாடலை கேட்டு உருகி அழுகை வந்ததது... திரையில் அவன் அவளை முதன்முதலாய்  எடுத்த வெள்ளை நிற சுடிதாரில் ரோஜாவை எடுத்த போட்டோ வர, பின்னணியில் அவன் குரலில் “வெண்மதியே வெண்மதியே நில்லு” பாடல்.

ஐன்னலின் வழி வந்து விழுந்தது மின்னலின் ஒளி

அதில் தெரிந்தது அழகு தேவதை அதிசய முகமே

தீப்பொறி என் இரு விழிகளும் தீக்குச்சி என என்னை உரசிட

கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே!

அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே

அளந்து பார்க்க பல விழி இல்லையே

என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே

ஐஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை

அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்

அது போல்…... எந்த நாள் வரும்?

உயிர் உருகிய அந்த நாள் சுகம்

அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்

என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே..

வேதனை கலந்த குரலில் அவன் பாடுவதை யார் கேட்டாலும் அழுது விடுவார்கள். சந்தியா விதிவிலக்காகவில்லை ..…“நான் உனது தான்...உனக்கா புரியாதா? பழுத்த பழனியப்பா...ஏன்டா என்னை மறக்கணும்? நான் மறக்க விட மாட்டேன்… ஐ லவ் யு இடியட்..” திட்டிக் கொண்டே அவனுக்காக வருந்தினாள்.

ஞாயிற்றுக்கிழமைக்கு  “ரோஜா ரோஜா “ பாட்டை பாடி பதிந்திருந்தான். அவன் மனமாற்றத்தை அவளால் உணர முடிந்தது. “உன்னை வேறு கைகளில் தர மாட்டேன்”, வரிகளை  நினைத்து புன்முறுவலித்தாள்.

திங்கட்கிழமைக்கு இன்னும் பதியாமல் இருந்தது. “மீட்டிங் முடியலையோ…”  மனதிற்குள் சிந்தித்துக் கொண்டே, தன் அறைக்கு வந்தாள். அவள் முன் எதிர்பட்டாள் சக்தி.

“ஜந்து சிக்கினா சிக்கன் 65 ன்னு சொல்லிட்டு, உன்னை அவன் பொரிச்சு எடுக்கிறான்..நீ கவுண்டர் குடுக்காம கம்முன்னு இருக்க? உங்களை கவனித்துகிட்டே தான் இருந்தேன்..அண்ணல் நோக்கி கொண்டே இருந்தார்....என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும் திடீர்னு? வாயால சண்டை போட்டு போர் அடிச்சதுன்னு இப்போ கண்ணால சண்டை போடுறீங்களா?” கேட்டாள் சக்தி.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை” சந்தியா மழுப்பலாக பதிலளித்து விட்டு, “உன் கல்யாண வேலையெல்லாம் எந்த நிலையில் இருக்கு? நகை, புடவையெல்லாம் எடுத்தாச்சா?” பேச்சை திசை திருப்பினாள். “நகை பர்சேஸ் எல்லாம் முடிந்தது. வைர தோடு மட்டும் தான் பாக்கி” என்று சக்தி சொல்லிக் கொண்டிருக்கும் போது, “வைரத் தோடா?” கேட்டுக் கொண்டே அவளருகில் வந்தாள் மது. “எங்க வீட்டில் டயமண்ட் வாங்க என்னை தான் கூப்பிட்டு போவாங்க. எனக்கு ஒரளவுக்கு டயமன்ட் பத்தி ஜட்ஜ் பண்ண தெரியும். தாத்தாவோட பூர்வீக தொழில் நவரத்தின வியாபாரம் தான்.” என்று விவரம் சொன்ன மது, சக்தி விரும்பினால் தாங்கள் வாடிக்கையாக வாங்கும் கடைக்கு அழைத்து செல்வதாக சொன்னாள். “அம்மாவும் அங்க தான் வாங்கணும்ன்னு சொன்னாங்க. சனிக்கிழமை அங்க போகலாம்னு நினைத்தோம். உனக்கு ஓகேவா? ஜந்து நீயும் வா” அழைத்தாள் சக்தி.

மது சம்மதம் தெரிவிக்க, சந்தியாவோ, “அந்த ஊருக்கு நாம எப்பவும் போற கோவிலுக்கும்  கூட்டிகிட்டு போனா தான் வருவேன்.” , நிபந்தனை விதித்தாள்.

“சரி போலாம். ஆனா மது?“ என யோசனையாய் கேட்க, மது முந்திக் கொண்டு,

“கோவிலுக்குன்னா நான் டபுள் ஓகே”, வேகமாக சொன்னாள்.

அவள் சொன்னதும் சந்தியாவும், சக்தியும் சிரித்து விட்டனர்.

“ஏன் சிரிக்கிறீங்க?”

அவளுக்கு விளக்க வந்த சக்தியை தடுத்து, “சாமி, கோவில் இந்த மாதிரி  விஷயம் எல்லாம் விளக்கினா புரியாது, உணர்ந்தா தான் புரியும். நீயே நேரில் பாத்து தெரிஞ்சிக்குவ.” என்று மதுவிடம் சொல்லி விட்டு,  சக்கு, இந்த சின்ன தம்பி குஷ்பூவை வெளில கூட்டிட்டு போறோம். எம்.எஸ் கிட்ட சொல்லி நமக்கு துணைக்கு மாமியாரை ஏற்பாடு பண்ண சொல்லு”

“நீ எம். எஸ். அம்மாவை மாமியார்ன்னு  சொல்றியா?” விளக்கம் கேட்டாள் மது.

“இல்ல….இது மாமா வீட்டு மாமி.” என்று மதுவை இன்னும் குழப்பி விட்ட சந்தியா சக்தியிடம் திரும்பி “எங்க அப்பாகிட்ட வழக்கம் போல பட்டு மாமி தான் பெர்மிஷன் வாங்கி கொடுக்கணும்.”, கோரிக்கை வைத்தாள்.

“சரிடி… ஆனா மப்டி மாமி யை காவலுக்கு  அனுப்ப என்ன  சொல்லுவாரோ எம்.எஸ்?”, யோசனையாய் கேட்டாள் சக்தி.

“சென்னைல உள்ள பெரிய புள்ளி  எஸ்.எஸ்.விக்கு நெருங்கிய சொந்தக்கார பொண்ணு தான் மதுன்னு  சொல்லு...கேள்வியே கேட்காம மப்டி மாமியை அனுப்பி விடுவார்” என்றாள்  சந்தியா.

அவள் சொல்லும் போது “இன்னும் தூங்கலையா” லக்ஷ்மியின் சத்தம் தூரத்தில் ஆரம்பித்து, அருகில் கேட்டுக் கொண்டே வந்தது. லக்ஷ்மி மெதுவாக படிகளில் ஏறி வந்தார்.

“இல்லைமா. இனிமே தான் தூங்க போறோம்.” லக்ஷ்மி அருகில் வர பதிலளித்தாள் சந்தியா. சந்தியாவின் பதிலை கேட்டுக் கொண்டே மதுவின் முகத்தை ஆராய்ந்தார் லக்ஷ்மி. அவளின் தெளிவான முகம்  அவருக்கு நிம்மதியை அளித்தது. இருந்தாலும்,

“பாயை ஹாலில் விரி. நானும் உங்க கூட படுக்கிறேன்.” என கட்டளை பிறப்பித்தவரிடம் முகத்தை சுளித்து “வேண்டாம் “ என சொல்ல வந்த சந்தியாவை முந்திக் கொண்ட மது,

“தேங்க்ஸ் ஆண்ட்டி. நான் ஆண்ட்டி பக்கத்தில” ஆர்வமாய் மது சொன்னவுடன் உணர்ச்சிவசப்பட்ட லக்ஷ்மியிடம் மறுப்பு சொல்ல முடியாமல்,

“அம்மா சென்டிமென்ட்ல உருக்கிட்டாளே இந்த மது” என்று சொல்லிக் கொண்டே சக்தியும் சந்தியாவும் வேண்டா வெறுப்பாக படுக்கையை தயார் செய்ய அனைவரும் படுத்தனர்.

க்ஷ்மியின் அருகில் மதுவும், மது அருகில் சக்தியும், சக்தி அருகில் சந்தியாவும் படுத்தனர். லக்ஷ்மி படுத்த ஐந்து நிமிடங்களில் தூங்கி விட்டார். அதை உறுதி செய்த சந்தியா, சக்தியின் காதில் ஏதோ சொன்னாள். அதை கேட்டு விடிவிளக்கு வெளிச்சத்தில் மது சரியாக தெரியாததால் தனது போனில் உள்ள வெளிச்சத்தில் அவளை பார்க்க, அவள் லக்ஷ்மியின் சேலையை பிடித்தவாறு தூங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். இதில் காலுக்கு ஒரு தலையணை வேற…. சக்தி போனை கீழே  வைத்து விட்டு, மெதுவாக தனது கையை ஊன்றி லேசாக எக்கி மதுவின் கையை பற்றி கட்டை விரலை பிடித்து  மதுவின் வாய்க்குள் திணித்து விட, விழித்துக் கொண்ட  மதுவிடம்,

“கை சூப்பிட்டு தூங்கு” கிண்டலடித்தாள் சக்தி.

நடப்பது புரியாமல் விழித்த மது “என்னது ?” மீண்டும் கேட்டாள்.

“கை சூப்பி பாப்பான்னு சொன்னேன்” என கிண்டலடித்தாள் சக்தி.

“ஏய் உன்னை” காலுக்கு போட்டிருந்த தலையணை எடுத்து மது அடிக்க வர,

“கை சூப்பி பாப்பாக்கு ரோஷம் வருதே”, விடாமல் சக்தி சீண்ட,

“இங்க பாரு சந்தியா... இவ என்னை கிண்டல் பண்ற” மது சிணுங்கிக் கொண்டே சந்தியாவிடம் முறையிட்டாள்.

“டோன்ட் ஒர்ரி மது...அவ வீக் பாயின்ட்ல கை வைச்சா போதும்” , என்று  சக்தியின் இடுப்பில் லேசாக தனது விரல்களால் குத்த, எதிர்வினை செயலாக கண்ணிமைக்கும் நேரத்தில் சக்தி சந்தியாவை அறைய வந்தாள், சக்தி. அதை எதிர்பார்த்திருந்தவள் போல முகத்தை தலையணையை எடுத்து மறைத்துக் கொண்டே தட்டி தடவி இருட்டில் பாதி எழுந்தும் எழாமலும் பின்னோக்கி நகன்றாள் சந்தியா.

“இடுப்பில கை வைக்காதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். பிசாசு” அவளை திட்டிக் கொண்டே அடிக்க வந்தாள் சக்தி. 

“இப்படி சொன்னா எம். எஸ். பாவம் டி… அவர் ஹெல்மட் போட்டுக்கிட்டு தான் உன்னை அப்ரோச் பண்ணனும்… ரகசியமாக சொன்னாலும், நிசப்தமாக இருந்த அந்த இடத்தில் அவள் குரல் தெளிவாக ஒலித்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.