(Reading time: 12 - 23 minutes)

விடுமுறை  நாளுக்கே உரிய சோம்பேறித்தனத்துடன் வளைய வந்துக்கொண்டிருந்தான் வசந்த்.

 தனது லேப்டாப்பை திறந்து சதுரங்கம் ஆட துவங்கினான் . மனம் சில நிமிடங்கள் கூட அதில் நிலைக்கவில்லை. பழைய நினைவுகளிலேயே சென்று நின்றது.

அர்ச்சனாவின் அப்பாவை அவன் முதல் முதலாய் சந்தித்த நாள் அவன் மனதில் நிழலாடியது.

வசந்தும் அர்ச்சனாவும் சந்தித்த அடுத்த  ஒரு வாரத்துக்குள்ளாகவே மனோவுக்கும், ஸ்வேதாவுக்கும் திருமணம் முடிவாகிவிட்டிருந்தது

மனோவின் அப்பா மனோவிடம் சொன்னார்,

'உன் நிச்சியதார்தத்திலேயே அர்ச்சனா, வசந்த் கல்யாணத்தை பேசி முடிச்சிடலாம். அதுவரைக்கும் அவங்க ரெண்டு பேரும் சந்திச்சதை அவ அப்பாகிட்டே சொல்ல வேண்டாம்.  தேவை இல்லாமல் குதிப்பான்'

அர்ச்சனாவும் அப்பாவிடம் எதுவும் சொல்லிகொள்ளவில்லை.' என்னவென்று சொல்வதாம்?'

மனோ நிச்சியதார்தத்தின் முன் தினம், மதியம், பெங்களூர் வந்திறங்கினான் வசந்த்.அவன் அப்பா அன்று இரவு வருவதாக இருந்தது.

அவன்  மனோ வீட்டில் நுழைந்த நேரம் மனோவும், அர்ச்சனாவின் அப்பாவும் செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர்.

'என் friend வசந்த் சித்தப்பா' அவன் தோளை அணைத்து அறிமுகப்படுத்தினான் மனோ.

அவரோடு கைகுலுக்கிய வசந்த் சும்மா இருந்திருக்க வேண்டும்.

அவன் பார்வை செஸ் போர்டின் மீது பதிய 'என்னடா மனோ தோத்துட்டிருக்கியா? என்றபடி காய் நகர்த்த துவங்கினான்.

அடுத்த மூன்று நகர்த்தலில் அவரை தோற்கடித்துவிட்டிருந்தான் வசந்த்.

மெல்ல மாறியது அவர் முகம்.

'ம்' பார்க்கலாம்' என்றபடி வசந்தின் முகத்தை ஆராய்ந்தவர் ' உங்களை தோற்கடிக்க எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் சார் ' என்றார் அழுத்தமாய்

'முயற்சி பண்ணுங்க. பை ஆல் மீன்ஸ்' சிரித்தான் வசந்த்.

அடுத்த நொடி அங்கிருந்து நகர்ந்துவிட்டிருந்தார் அப்பா. முதல் பார்வையிலேயே அவர் மனதில் வசந்தின் மீது காரணமேயில்லாமல்  ஒரு பகை முளைவிட்டிருந்தது.

வசந்தின் மீது பாய்ந்தான் மனோ, 'அறிவிருக்காடா உனக்கு? இப்போ எதுக்கு அவரை தோற்கடிச்சே?'

'சாதாரண விளையாட்டு தானே டா? அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷனாரார் அவர்?'

'ம். கேள்வி கேளு நீ. அவனவன் பொண்ணை கரெக்ட் பண்றதுக்கு முன்னாடி அப்பாவை கரெக்ட் பண்ணிடறான்.  நீ என்னடானா..........ஏண்டா? இதுக்கெல்லாமாடா கிளாஸ் எடுக்க முடியும்?'

'சரி தெரியாம பண்ணிட்டேன் விடுடா' என்றவனின் கண்கள் வேறு எதையோ தேடின.

'இதையெல்லாம் மட்டும் கரெக்டா பண்ணு'  என்றான் மனோ. 'நீ தேடற ஆளு இங்கே இல்லை. அவங்க மாமா குடும்பத்தோட ஹோடேல்ல இருக்கா'

நிச்சியதார்தத்துக்காக அவர்கள் எல்லோரும் சிங்கபூரிலிருந்து வந்திருந்தனர்.

'டே ராசா' என்றான் மனோ வசந்திடம் 'நாளைக்கு ஈவினிங் குள்ளே பேசி முடிச்சிடலாம். அதுவரைக்கும் அவளை தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதே'

றுநாள் மாலை நிச்சியதார்தம். அந்த பெரிய ஹோட்டலில் ஏற்பாடு ஆகியிருந்தது.

க்ரீம் நிற சேலையும், தலை நிறைய மல்லிகையுமாய் ,கண்ணாடி வளையல்கள் கலகலக்க வலம் வந்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா. தவிர்க்கவே முடியாமல் அவன் கண்கள் அவளை பின் தொடர்ந்துக்கொண்டிருந்தன.

முக்கியமான விருந்தினர்களை அவனுக்கு அறிமுகம் செய்துக்கொண்டிருந்தான் மனோ. தன் அப்பாவின்  நண்பர் ஒருவரை அறிமுகப்படுத்தி விட்டு, அவர் விலகியதும் சொன்னான் மனோ,

'அஞ்சு பசங்க டா இவருக்கு. அம்பது வயசாச்சு. இன்னமும் பொண்டாட்டி தோளுல கைப்போட்டு பேசிட்டிருக்கார் பார். கிரேட் லவர்.'

'மண்ணாங்கட்டி' என்றான் வசந்த்' ஒரு குழந்தைங்கிறது ஒரு பொண்ணுக்கு எவ்வளோ வலி தெரியுமா? பொண்டாட்டி மேல அந்த அக்கறை கூட இல்லாம அஞ்சு பிள்ளைக்கு அப்பனாயிருக்காரு. இதுல அவருக்கு 'கிரேட் லவர்' ன்னு பட்டம் வேறயா?

சற்று வியந்துதான் போனான் மனோ. சரியாய் அந்த நேரத்தில் அங்கே வந்த அர்ச்சனா அந்த வார்த்தைகளில் சில நொடிகள் அப்படியே நின்று விட்டிருந்தாள்.

னோ நிச்சியதார்தம் முடிந்து எல்லாரும் சாப்பிட கிளம்பும் முன் மெல்ல துவங்கினார் மனோவின் அப்பா.

மனோ ,வசந்த், அர்ச்சனா உட்பட எல்லோரும் மேடை மீதே இருந்தனர்.

'வசந்துக்கு உன் பொண்ணை பிடிச்சுபோச்சுப்பா' என்றார் தன் தம்பியை பார்த்து 'அவன் அப்பாவுக்கும் சம்மதம்.  நீ என்ன சொல்றே?

அந்த சபையில் இதை துவக்கியதையே விரும்பாதவராய் சொன்னார் அர்ச்சனாவின் அப்பா' 'அப்புறமா பேசுவோமே. நான் அர்ச்சனாவை கேட்டு பதில் சொல்றேன்'

விடுவதாக இல்லை மனோவின் அப்பா.

அர்ச்சனாவை இப்பவே கேட்டுடுவோமே' என்றவர் அவள் தோளை அணைத்தபடி கேட்டார், ' சொல்லுமா உனக்கு வசந்தை பிடிச்சிருக்கா? இல்லையா? இல்லை யோசிக்க டைம் வேணுமா? மனசுல இருக்கிறதை தைரியமா சொல்லு.

அந்த நிறைந்த சபையில், அத்தனை பேர் முன்னிலையில், மேகத்திலேயே தேங்கி நிற்கும் நீர் திடீரென பொழிந்து விடுவதை போல், சட்டென சொல்லிவிட்டிருந்தாள் அர்ச்சனா

'எனக்கு வசந்தை ரொம்ப பிடிச்சிருக்கு பெரியப்பா'

ஏனோ அந்த நேரத்தில் எதையுமே யோசிக்க தோன்றவில்லை அவளுக்கு. அந்த நிமிடம் மனதில் என்ன இருந்ததோ அதை அப்படியே சொல்லிவிட்டிருந்தாள் அர்ச்சனா.

யாருமே எதிர்ப்பார்க்கவில்லை அதை. வசந்தே கூட எதிர்ப்பார்க்கவில்லை.

'வசந்தின் கையை பிடித்து குலுக்கினான் மனோ. 'என் தங்கச்சி அடிச்சா பாரு சிக்ஸர். சூப்பர்டா'

ஆடியே போனார் அர்ச்சனாவின் அப்பா. அவர் இதயத்தை அதிர்வலைகள் உலுக்கின. ''எப்படி இப்படி பேச முடிந்தது அர்ச்சனாவால்?

சிரித்துக்கொண்டே நிமிர்ந்த வசந்தின் கண்கள் தனிச்சையாய் சந்தித்தன அர்ச்சனாவின் அப்பா கண்களை.

அவர் ரத்தம் கொதித்தே போனது.

'இவன் ஏதோ திட்டமிட்டே என் மகளை தன் பக்கம் இழுத்து விட்டான்' தீர்மானமாய் சொன்னது அவர் மனம்.

ஆனால், அதற்கு மேல் எதையுமே தடுக்க முடியவில்லை அவரால். 

அவர் அண்ணனும், வசந்தின் அப்பாவும் சேர்ந்து குறித்த நிச்சியதார்த்த தேதியை ஒப்புக்கொள்ளவே வேண்டியிருந்தது.

ரவு உணவு buffet முறையில் அந்த ஹோடேலின் தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அர்ச்சனாவின் அப்பா மட்டும் சாப்பிட வரவில்லை

அங்கே இருந்த மரங்களை அலங்கரித்துகொண்டிருந்த விளக்குகளினூடே, கையில் தட்டை வைத்துக்கொண்டு, எல்லாரும் உலவிக்கொண்டிருந்தனர்

அங்கே ஸ்வேதாவின் நிச்சியதார்தத்தில் அர்ச்சனா திடீரென கதாநாயகி ஆகிப்போயிருந்தாள்.

அவள் சட்டென சொல்லிவிட்ட வார்த்தைகளின் ஆழம் அப்போதுதான் அவளுக்கே மெல்ல மெல்ல புரிய துவங்கியது.

'அது எப்படி அப்படி சொல்லிவிட்டேன்?' காரணம் அவளுக்கே புரியவில்லை

எல்லாருடைய பார்வையும் அவள் மீதே. காதுக்குளே கிசுகிசுக்கபட்ட கேலி பேச்சுக்களும், புன்னகையுடன் நிகழ்ந்த கைகுலுக்கல்களும், குறு குறு பார்வைகளுமாய்...............

வெட்கம், நாணம் எல்லாவற்றையும் வார்த்தையில் தான் கேள்விப்பட்டிருக்கிறாள், இப்போது அதை அப்படியே அனுபவித்துக்கொண்டிருந்தாள்.....

உடலெங்கும் புது ரத்தம் பாய்வதை போல்............, சுவாசம் விட்டு விட்டு கிடைப்பதைப்போல்.........,

'அது எப்படி அது? 'எனக்கு வசந்தை ரொம்ப பிடிச்சிருக்கு பெரியப்பா....'  அவள் காதுக்குள் சொன்னாள் ஸ்வேதா. நியாயமாய் இவள் செய்துக்கொண்டிருக்க வேண்டியதை அவள் செய்துக்கொண்டிருந்தாள்.

இதையெல்லாம் கூட சமாளித்து விடலாம். அவன் பார்வை இவள் மீது பதிந்து பதிந்து விலகுகிறதே அதை எப்படி சமாளிப்பதாம்?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.