(Reading time: 9 - 18 minutes)

யாவை நம்பி வந்தது எவ்வ்ளோ பெரிய தப்பென்று கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரிய ஆரம்பித்தது ஷைனிக்கு.இப்படி ஒரு நடு இரவில் தொடர்பு கொள்ள எந்த சாதனமும் இல்லாமல் இப்படி ஒருநாள் தன்னைவிட்டு அவன் போவான் என்று அவள் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை.எப்படியாவது விடியும் வரைக்கும் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.கண்களை இமைகளால் மூட முடியவில்லை.எல்லா விளக்குகளையும் போட்டுக் கொண்டு யாரோட வருகைக்காகவோ காத்திருப்பதைப் போல வராத தயாவிற்காகக் காத்திருந்தாள்.வாசித்து முடித்த புத்தகங்களையெல்லாம் பிரித்து வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தாள்.கடந்து போகும் வண்டியெல்லாம் தயாவின் வண்டியாக இருக்கக் கூடாதா என நினைத்து ஓடி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துத் திரும்பினாள். இதுவரை ஒரு தனியான இரவு வாய்த்திருக்கவில்லை.....அப்பா அம்மாவுடன் இருந்த காலத்தில் ஒருநாள் கூடத் தனியாக இருந்தது கிடையாது.தயாவுடன் இருந்தபோதும் அவனுக்கு எந்தவிதமான் வெளியூர் வேலை எதுவும் இல்லாத்தால் அந்தச் சந்தர்ப்பமே அமையாமல் போயிற்று. இப்போ இரவு அவளை விழுங்கக் காத்திருக்கும் பாம்பு போல நீண்டு கொண்டே போயிற்று.

 

ஷைனிக்குக் காலம் கடந்து ஞானோதயம் வந்தது போலிருந்தது. தான் செய்த தப்பெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகக் கண்முன்னால் வந்து சென்றது.

 

"என் பேச்சைக் கேளுடி....அவன் உனக்குச் சரி வரமாட்டான்....உங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சமாவது பொருத்தமிருக்கா....கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா...."

 

"ஒரு வருடம் பொறும்மா...அதற்குள் இது காதல்தானா....இல்லே பரிதாபத்தில் வந்த அன்பான்னு தெளிவாயிடும்....."

 

"உன் கால்லே விழுறேம்மா.....கொஞ்சம் நிதானமா முடிவெடும்மா...."

 

"நாளைக்குக் கண்ணைக் கசக்கிட்டு வந்தா என்னன்னு கேக்க நாங்க உனக்காக இருக்க மாட்டோம்"

 

அம்மா அப்பாவின் காட்டுக் கத்தல் ஷைனியின் காதுகளில் ஏறவில்லை.

 

காதலித்தவுடன் பொண்ணுங்களுக்கு எங்கிருந்துதான் இந்தத் திமிர் வந்து சேர்கிறதோ....யாரையும் எடுத்தெறிந்து பேசுவது ........உலகத்திலேயே அவர்களைப் போலக் காதல் ஜோடி கிடையாது என்பது போலவும் காதல் பற்றி உங்களுக்கெல்லாம் என்ன தெரியும் என்பது போல மிதந்துதான் கிடப்பார்கள். ஷைனியும் அப்படித்தான்.யார் சொல்வதும் காதிலேயே விழாமல் தயா காட்டிய அன்பில் மயங்கிக் கிடந்தாள். உலகத்தில் அவனை விட்டால் வேறு யாருமே நல்லவர்கள் கிடையாது என்று முழுமையாக நம்பினாள். கையில் வேலை, தன்னை நினைத்து உருகும் ஒரு உயிர் , உயிர் வாழ இதை விட வேறு என்ன வேண்டியிருக்கப் போகிறது? என்றுதான் நினைத்தாள்.  

இல்லை வாழ்வு அது மட்டுமே ஆகிவிடாது....சுற்றிலும் மனிதர்கள் தேவை. எந்தக் காதல் நாம் மட்டுமே போதும் வாழ்க்கைக்கு என்று தனியாக எல்லோரையும் பெற்றோரை, உற்றாரை உதறித் தள்ளிவிட்டுத் தனியாக ஒதுங்கிக் கொள்கிறதோ அந்தக் காதல் பொதுவாகத் தோற்றுத்தான் போகிறது. நீங்கள் எல்லோரும் வேண்டும் ஆனால் அவனும்/அவளும் வேண்டும் என்று போராடி ஜெயிக்கும் காதல்தான் பொதுவாக நிலைத்து நிற்கிறது. இன்றைக்குத் தோற்றுத்தான் போய் விட்டேன் என நினைத்துக் குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தாள்.

 

ந்த இரவு ஒரு நிமிடத்தில் முடிந்து விடாதா....யாரைப் பற்றியும் கவலைப் படாமல் அம்மா வீட்டிற்குச் சென்று அம்மாவின் மடியில் விழுந்து நீங்க எல்லாரும் சொன்னதுதாம்மா சரி....எனக்கும் அவனுக்கும் ஒத்துவரலைம்மா...வரவும் வராதும்மா என்று சொல்லிக் கதறி அழவேண்டும் என்று நினைத்துக் காத்திருந்தாள்.கீர்த்தியைக் கட்டிக் கொண்டு நீ சொன்னதுதாண்டி சரி....'அவன் எனக்கு மேச்சிங்க் இல்லவேயில்லை.எனக்கு அவன் மேல் வெறும் பரிதாபம் மட்டும்தான்....அதைப் புரிந்து கொள்ள இவ்வ்ளோ நாட்கள் ஆகிவிட்டது....கீர்த்தி....' என கட்டிக் கொள்ளவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தாள்.

இரவு நீண்டு கொண்டேயிருந்தது. திடீரென்று இனி அம்மா என்ன முடிவெடுப்பாங்க...என யோசிக்க ஆரம்பித்தாள்.

 

'கல்யாணம் முடிஞ்சிருச்சும்மா...இனி அவனோட ஒத்து வாழ்ற வழியைப் பாரும்மா...' என்பார்களா...

 

நாங்கதான் மொதல்லியே சொன்னோமே கேட்டியா....இப்போ பாரு இப்பிடி வந்து நிக்கிறியே....' என்பார்களா...

 

'நீ ஒண்ணும் கவலைப் படாதே நீ எங்களோடவே காலம் முழுக்க இருந்துக்கோ...நாங்க பாத்துக்கறோம்..." என்பார்களா....

 

ம்மாவைப் பற்றி அறிந்திருந்தாள். அம்மா எப்படியும் ஒத்து வாழற வழியைப் பாருன்னுதான் சொல்வாங்க.....எத்தனை நாளைக்கு இப்பிடியே தயாவின் அல்பத்தனமான சந்தேகத்தோடும்....செத்துருவேன் என்னும் மிரட்டலுக்கும் வீட்டை விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடும் ட்ராமாவுக்கும் பயந்துகொண்டே வாழ்வது.....முடியுமா....கண்கள் இருட்டிக் கொண்டு வருவது போலிருந்தது ஷைனிக்கு.

 

அம்மா, அப்பா, தங்கை, கீர்த்தி இப்பிடி ஒவ்வொருவராக முன் வந்து நாங்கதான் அப்போவே சொன்னோமே கேட்டியா.....என்று கேட்பதும் அவர்களுக்கெல்லாம் என்ன சொல்லப் போகிறோம் என்னும் பயமும் மாறி மாறி வந்து வதைத்தது. எப்போது தூங்கினாள் என்றே தெரியாது தூங்கிப் போனாள்.

யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டுச் சடக்கென்று கண்விழித்த போது இரவு இன்னும் மீதமிருந்தது.கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே ஓடிப் போய்க் கதவைத் திறந்தாள். ஒருவருமில்லை. தயாதான் பயமுறுத்துகிறானோ என்று வெளியே நன்றாக எட்டிப் பார்த்தாள்.யாருமில்லை. யாராகயிருக்கும்....பிரமையோ...இன்னும் பயம் மனதைக் கவ்விக் கொள்ள கட்டிலில் குப்புறப் படுத்து அழுது தீர்த்தாள். விடிவதற்குள் ஒரு முடிவை எடுத்திருந்தாள். இனி இங்கேயிருந்தால் பயத்தில் செத்தே போய்விடுவோம்....அம்மாவிடம் சென்றால் மீண்டும் இந்த நரகத்துக்குத்தான் அனுப்பி வைப்பார்கள்.

 

கொஞ்சம் துணிமணிகள், செர்டிஃபிகேட் அடங்கிய ஃபைல், ஏடிஎம் கார்ட் இவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு யாரும் பார்த்துவிடக் கூடாதே என்று நன்றாக விடியும் முன்னேயே வீட்டைப் பூட்டிக் கொண்டு ஒரு முடிவுடன் விடு விடு என்று ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடந்தாள் ஷைனி. 

தொடரும்

Karai othungum meengal - 18

Karai othungum meengal - 20

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.