(Reading time: 24 - 48 minutes)

சிறிது நேரம் மௌனித்த லக்ஷ்மி “முதல்லயே இனியாவை உங்க தங்கச்சி தன் பையனுக்கு பொண்ணு கேட்டுட்டாங்க. அதுக்கு முன்னாடியே நமக்கு இவங்க விஷயம் தெரிஞ்சிருந்தா பரவாயில்லை, இல்லை அதுக்கு முன்னாடியே ராஜி அண்ணியாவது நம்ம கிட்ட பொண்ணு கேட்டிருந்தா பரவாயில்லை.  இது ரெண்டும் இல்லாம நம்ம ஊருல வச்சி இவங்க விஷயம் நமக்கு தெரியுது. அங்க உங்க தங்கச்சி என்னெல்லாம் பேசினாங்க. இப்ப நாம இனியாவை ராஜீ வீட்டுக்கு மருமகளாக்கினா உங்க ரெண்டு தங்கச்சி உறவும் நமக்கு இல்லாம போயிடும், அதை விட அவங்க ரெண்டு பேருக்கும் ஒரே அண்ணனா இருக்கற உங்க உறவு அவங்களுக்கு போயிடும்.  அதுவும் இல்லாம நம்ம ஊருல யாருமே இப்ப ராஜி அண்ணி கூட உறவு வச்சில்ல, இப்ப போய் நாம அவங்க வீட்டுல நம்ம பொண்ணை கொடுத்தா ஊர் என்ன சொல்லும். இது எல்லாத்துக்கும் மேல உங்க தங்கச்சி ராஜியே இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலையே” என்றார்.

ராஜகோபாலிற்கு பிரமிப்பாக இருந்தது.

அவரின் தங்கைகளால் லக்ஷ்மி என்னவெல்லாம் அனுபவித்திருக்கிறாள் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஏன் தானே சில சமயங்களில் தங்கைகளின் போய் பேச்சுக்களையும், கண்ணீர்களையும் நம்பி ராஜியை என்னவெல்லாம் கூறி இருக்கிறோம். ஆனால் லக்ஷ்மியோ ரெண்டு பேருக்கும் அண்ணன்னு இருக்கற உங்களோட உறவு போயிடும் என்று கூறுகிறாளே.

“நீ எவ்வளவு நல்லவ லக்ஷ்மி”

“என்னங்க நீங்க”

“இல்லமா சுதாவும், செல்வியும் என்ன எல்லாம் செஞ்சிருக்காங்க. அவங்களால நீ எவ்வளவு கஷ்டப் பட்டிருப்ப. ஆனா நீ இப்பவும் அவங்களை மனசுல வச்சிட்டு பேசறியே”

“எங்கம்மா சொல்லுவாங்க. வீட்டு பொண்ணுங்க வயிர் எரிஞ்சி போகக்கூடாதுன்னு, எப்படி இருந்தாலும் அவங்க உங்க தங்கச்சி இல்லையா, அவங்களுக்கு என்னன்னா அவங்க அண்ணனை நான் எங்கிருந்தோ வந்து திடீர்ன்னு வந்து உரிமை கொண்டாடறேன்ன்னு கோபம், எனக்கு என்னன்னா, அவங்க நினைக்கற மாதிரி, எனக்கே எனக்குன்னு நீங்க இருக்கும் போது அவங்க தர சின்ன சின்ன பிரச்சனை எல்லாம் நான் தாங்கிக்க மாட்டேனா”

எவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமாக சொல்கிற மனைவியை பார்த்து அவருக்கு பெருமையாக இருந்தது.

லக்ஷ்மி சொன்னதை போல், அவள் என்றுமே தங்கைகள் எதிரில் தன் மேல் உரிமை கொண்டாடியதில்லை, மாறாக அவர்கள் தான் லக்ஷ்மியை வெறுப்பேற்ற எண்ணியோ என்னவோ அண்ணனிடம் ரொம்ப உரிமை எடுத்துக் கொண்டார்கள் என்று இன்று எண்ணும் போது ராஜகோபாலிற்கு புரிந்தது. ஆனால் லக்ஷ்மி அதற்கெல்லாம் அலட்டிக் கொண்டதேயில்லை. (அந்த செயல் தான் தங்கைகளை இன்னும் வெறுப்பேற்றி இருக்கும் என்று தோன்றியது.) லக்ஷ்மியின் மனதில் நான் அவளுடையவன் என்ற எண்ணம் இருந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டார். அவர் முகத்தில் தானாக புன்னகை வந்தது.

ஒரு வித மயக்கத்துடன் மனைவியை பார்த்து சிரித்தார்.

அதில் ஈர்க்கப்பட்ட லக்ஷ்மியோ “போதுமே. வீட்டுல கல்யாண வயசுல பொண்ணை வச்சிக்கிட்டு இந்த பார்வை பார்த்துக்கிட்டு” என்று முணுமுணுத்தார்.

“அதுக்கு தான் நீ விட மாற்றியேடீ”

“என்ன ஐயா ரொம்ப நாளுக்கு அப்புறம் வாடி போடின்னு எல்லாம் பேசறீங்க”

“என் பொண்டாட்டியை அப்படி கூப்பிட நான் யாரைக் கேட்கணும்”

“அது சரி”

“சரி. அதெல்லாம் விடு. இப்ப இருக்கற பிரச்சனைக்கு வா”

“என்ன”

“முதல்ல இனியாவை என் தங்கச்சி தான் கேட்டா, அதெல்லாம் சரி தான், ஆனா நான் தான் அவளுக்கு தர மாட்டேன்னு அப்பவே சொல்லிட்டேனே, வேற இடத்துல பேசி வச்சிருக்கேன்னு கூட சொல்லிட்டேனே”

“ஆனா அவங்க அதை எல்லாம் பெருசாவே எடுத்துக்கலை, நம்மளை எப்படியாச்சும் சம்மதிக்க வச்சிடலாம்ன்னு தான் ஊருக்கு கூப்பிட்டதே”

“அதுக்கு நான் என்ன பண்றது, அது அவளோட எண்ணம், அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.”

“இப்படி சொன்னா எப்படி”

“வேற என்ன சொல்றது. இளவரசனுக்குமே இல்லைன்னாலும் நான் அவங்க வீட்டுல இனியாவை குடுக்கறதா இல்லை, அதை நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன், அவ கேட்கும் போதும் நான் அதை நேரா சொல்லிட்டேன் தானே. சோ இதுல என் தப்பு எதுவும் இல்லை.”

“அதுக்கில்லைங்க”

“இரு லக்ஷ்மி. நான் சொல்றதை முழுசா கேளு. புள்ளைங்க ரெண்டு பேரும் விரும்பறாங்க. அது ஒரு காரணம், ஆனா அதுக்கு முன்னாடியே நான் இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சா என்னன்னு யோசிச்சேன், உனக்கு தெரியாது எனக்கு ராஜின்னா எவ்வளவு பிரியம்ன்னு. என் தங்கச்சிங்களுக்கும் அவளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, இன்னும் சொல்லபோனா ராஜிக்கு தான் இன்னும் முதல் இடம். என் தங்கச்சிங்க எனக்கு கல்யாணம் ஆன பிறகு தான் என் கிட்ட பாசமா எல்லாம் பேச ஆரம்பிச்சாங்க. ஆனா முதல்ல இருந்தே எதுவுமே எதிர்பார்க்காம என் மேல பாசமா இருந்தது ராஜி மட்டும் தான். அதுவே இவங்க ரெண்டு பேருக்கும் பிடிக்காதுன்னு வச்சிக்கலாம். அதுக்காக நான் இவங்க மேல எல்லாம் பாசம் இல்லாம இல்லை. ஆனா இவங்களுக்கு ராஜி என் கிட்ட பாசமா இருக்கறது பிடிக்காது.”

“ஏன் தங்கச்சிங்களுக்கும், சித்தப்பா பொண்ணுக்கும் வித்தியாசம் பார்க்கணுமா என்ன. அவளை இத்தனை வருசமா பிரிஞ்சி இருந்தும் கூட அவ மேல வச்சிருந்த பாசம் மாறலை, அவளை பார்த்த உடனே இன்னும் அதிகமா தான் ஆச்சி. இத்தனை வருஷம் இல்லாம அவளை பார்த்த உடனே எவ்வளவு சந்தோசப் பட்டேன் தெரியுமா”

“இப்ப ராஜி வீட்டுக்கு என் பொண்ணை கொடுத்தா சுதா செல்வி உறவு போயிடும், நான் கஷ்டப் படுவேன்னு எல்லாம் நீ நினைக்காத, அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது, அப்படியே ஏதாச்சும் அவங்க சண்டை போட்டாலும் அது எத்தனை நாளுக்கு, அவங்களா கொஞ்ச நாள்ல வந்துடுவாங்க. அப்புறம் என்ன சொன்ன, ஊர்ல என்ன சொல்லுவாங்கன்னா, எவன் என்ன சொல்லுவான், என் தங்கச்சி பையனுக்கு நான் பொண்ணு கொடுக்கறதுல எவன் என்ன சொல்லணும், இப்படி ஊர் பேச்சுக்கு எல்லாம் மதிப்பு கொடுத்தா நாம எதையுமே ஒழுங்கா செய்ய முடியாது.”  

“இதெல்லாத்தையும் விடு. நமக்கு நம்ம பசங்களோட சந்தோஷம் தான் முக்கியம். அதை மட்டும் பாரு. கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் இனியா கல்யாணத்தை நினைச்சி நாம எவ்வளவு பீல் பண்ணி இருப்போம், இப்ப அவளுக்கே பிடிச்ச ஒரு மாப்பிள்ளை இருக்கும் போது நீ ஏன் அதை ஏத்துக்க மாற்ற. இவ்வளவு நாள் எந்த சொந்தமும் இல்லாம தனியா வாழ்ந்த ராஜிக்கு என் பொண்ணை கொடுத்து அவளுக்கு காணாம போன எல்லா சொந்தத்தையும் கொடுக்கணும்ன்னு நினைக்கறேன் லக்ஷ்மி.”

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்த மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் ராஜகோபால். அவள் ஏதாவது பதில் சொல்வாளா என்று.

யோசனையில் இருந்து மீண்ட லக்ஷ்மி தன் கணவன் தன் பதிலுக்காக காத்துக் கொண்டிருப்பது தெரிய “நீங்க சொல்றது எல்லாம் எனக்கு புரியுது. அது நியாயம்ன்னும் எனக்கு தெரியுது. ஆனா என்னால ஏனோ முழு மனசா சம்மதிக்க முடியலை. என் பொண்ணு கல்யாணத்துல என்னோட முழு சம்மதம் வேண்டாவாங்க” என்றார்.

“நீ சும்மா போட்டு குழப்பிக்காத. பொறுமையா யோசி. நீ முழு மனசோட தான் சம்மதிக்கணும். ஒன்னு மட்டும் சொல்றேன் கேளு. எல்லாம் சரின்னும் நீ ஒத்துக்கற. ஆனா உன்னால முழு சம்மதம் கொடுக்க முடியலைன்னும் போது, இனியா பக்கம் தப்பே இல்லாம எல்லாமே சரியா இருக்கும் போது அவளால வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கறதை நினைச்சே பார்க்க முடியாதுன்றதை மட்டும் நீ நியாபகம் வச்சிக்க”

“நான் அவ கிட்ட சொன்னேன். நான் சப்போர்ட் பண்றேன்மா. கல்யாணத்துக்கு ஒத்துக்கன்னு. அப்ப அவ திடீர்ன்னு கல்யாணமே வேண்டாம்ன்னு குண்டை தூக்கி போட்டுட்டா. எனக்கே கஸ்டமாகிடுச்சி. அவங்க ரெண்டு பேருக்கும் அதனாலேயே கொஞ்ச பிரச்சனை. கொஞ்ச நாள் கழிச்சி அவளாலேயே தாங்க முடியாம கஷ்டப் பட்டுக்கிட்டிருந்தா. அப்ப நான் கேட்டேன், ஏன்மா நான் தான் கல்யாணம் பண்ணி வைக்கறேன்னு சொன்னேனே அப்ப வேண்டாம்னு சொல்லிட்டு இப்ப கஷ்டப் படறியேன்னு, அதுக்கு இல்லைப்பா அம்மா வேண்டாம்ன்னு சொல்லும் போது நான் எப்படிப்பா அவங்களுக்கு எதிரா சரின்னு சொல்லுவேன்னு, ஆனா எனக்கு தெரியும், அவளால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு. அப்படி இந்த சின்ன வயசுல அம்மாவோட எண்ணத்துக்கு மதிப்பு கொடுத்து அவ நடந்துக்கும் போது, நீ எப்படி நடந்துக்கணும்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.