(Reading time: 39 - 77 minutes)

 

ஹேய்… பத்மினி… என்னடி பண்ணுற அங்கே…”

“………..”

“பாரு… எதிர் ஃப்ளாட்டில் இருக்குற உன் குட்டி ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ரெடி… நீ உள்ளே சாமி கும்பிடுறியா?... வாடி வெளியே…”

“………”

“எவ்வளவு சொல்லுறேன்… கொஞ்சமாவது காதில் வாங்குகிறாளா பார்… எல்லாம் என்னை சொல்லணும்… பார்க்க பாவமாய் இருக்கிறாயே… கிராமத்துப் பெண்ணாயிற்றே நல்லவள் என்று நம்பி உன்னுடன் இந்த வீட்டில் இருக்கிறேன் அல்லவா… என்னை தான் நான் நொந்து கொள்ளணும்…”

“………..”

“ஹேய்…. குட்டீஸ்… உங்க தோழி இப்போதைக்கு வருவாள் என்று எனக்கு தோன்றவில்லை… நீங்க போய் கேம் விளையாடுங்க… சரியா?...”

“இல்ல… அவ எங்களை கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருக்கா… எங்கள ஏமாத்தமாட்டா… அப்படிதான நந்து?...”

“ஆமாண்ணா… இந்த மயில் பொய் சொல்லுறா.. நீ இவ பேச்ச கேட்காதண்ணா, நம்மள அவ கூட்டிட்டு போவா…”

“அப்படி சொல்லுங்க நந்து-சித்து…” என்றபடி வெளியே வந்தாள் பத்மினி…

அவளைப் பார்த்த மயிலுக்கு பேச்சே வரவில்லை…

“என்ன மயில் மேடம்… பேச்சையே காணோம்?...”

“நீ இவ்வளவு அழகா வந்து நின்னா, யாருக்கு தான் பேச்சு வரும்… பாரு, எனக்கே கூட பேச்சு தடுமாறுது…” என்றபடி அவளைப் பார்த்து புன்னகைத்தான் சித்து என்ற சித்தார்த்…

“அண்ணா…. நம்ம பத்மினி எப்பவும் அழகு தான்… நீ ஒரு 20 இயர்ஸ் முன்னாடி பொறந்துருக்கலாம்ல… நான் நம்ம பத்மினியை அண்ணி சொல்லியிருப்பேன்… போண்ணா… எல்லாம் உன்னால தான்… நீ மிஸ் பண்ணிட்ட…” என்றபடி செல்ல கோபம் கொண்டாள் நந்து என்ற நந்திதா..

“ஒன்னும் பிரச்சினையில்லை நந்து, நான் சீக்கிரம் காம்ப்ளான் குடிச்சு வளர்ந்திடுவேன்… அப்புறம் நீ அவளை அண்ணி சொல்லிக்க… சரியா… அதுவர, அவ நமக்கு ஃப்ரெண்ட்… ஓகே…?...”

“ஓகே சித்து அண்ணா… நீ தான் என் செல்ல அண்ணா…” என்றபடி தன் எட்டு வயது அண்ணனை அணைத்துக்கொண்டாள் அந்த எட்டு வயது சிறுமி…

“அட வாலுங்களா… இந்த வயசில பேசுற பேச்சைப் பாரு… இருங்க உங்க அம்மாகிட்ட சொல்லிக்கொடுக்குறேன்…”

“சொல்லிக்கோ ம…யி….ல்…. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…” என்றான் ஸ்டைலாக தன் சின்னக் கண்ணாடியை மாட்டிக்கொண்டே…

“அய்யோ…. அண்ணா, சூப்பரா இருக்கே…” என்று ஆர்ப்பரித்தாள் நந்து…

“ஒட்டிப்பிறந்தாலும் பிறந்தீங்க… எப்பப்பாரு இவ உனக்கு ஜால்ரா தட்டிக்கிட்டே இருக்குறா…”

“அதுல உனக்கென்ன பொறாமை மயில்?... என் தங்கை எனக்கு ஜால்ரா தட்டாம உனக்கா தட்டுவா?...”

“அடங்கப்பா… உங்களை சமாளிக்க என்னால முடியாதுப்பா…”

“அது அப்படி வா வழிக்கு… பத்மினி நான் நேத்து சொன்னேன்ல, இந்த மயிலை ஈசியா சரி பண்ணிடலாம்ன்னு… இனி அவ உன்னை கிண்டல் பண்ணவே மாட்டா… யூ டோன்ட் வொரி…”

“ஆமா… சித்து… யூ ஆர் கரெக்ட்… சூப்பர் சித்து… கலக்கிட்ட…”

“ஹாஹாஹா… தேங்க்ஸ்… பத்மினி…”

“ஹேய்…. சித்து… அதென்ன, என்ன பத்மினி சொல்லுற இந்த மயில் மாதிரி?... ஹ்ம்ம்” என்று ஒரக்கண்ணால் ஒய்யாரமாக கேட்டாள் பத்மினி…

“அய்யோ… அம்மா நீ சும்மாவே அழகு… இதுல இப்படி கேட்டுட்டே இருந்து எங்களை மயக்காதே தாயே… நல்லாயிருப்ப… சீக்கிரம் கோவிலுக்கு கிளம்பு….” என்றாள் மயில்…

“ஆமா… மயில் சொல்லுறது கரெக்ட் தான்… வா நாம போகலாம்…” என்றான் சித்து…

“நீ முதலில் சொல்லு ஏன் என்னை பத்மினி சொல்லுற?...”

“அடடா…… மயில்னு நீ அவளை கிண்டல் செய்யுற மாதிரி… நாங்க அவகூட சேர்ந்து உன்னை கலாய்க்கிற மாதிரி நடிச்சோம்… இல்லைன்னா, அவ பாவம் கஷ்டபடுவாள்ள… அதான்…”

“ஓஹோ… கதை அப்படி போகுதா?... சரிதான்… இனி அவ என்னை பத்மினி சொன்னா, என்ன பண்ணுறது?...”

“நீ ஏன் அத பத்தி கவலைப்படுற?... நான் எதுக்கு இருக்கேன்.. ?” என்றான் வீராப்பாக சித்து…

“அதான… அண்ணா இருக்கும்போது நீ ஏன் இந்த மயிலுக்கு பயப்படுற?... ஃப்ரீயா விடு… சரிதானே சித்து நான் சொன்னது…” என்று தமையனையும் துணைக்கு அழைத்தாள் நந்து…

“ரொம்ப சரி நந்து… என் தங்கச்சி நீ என்னைக்கு தப்பா சொல்லியிருக்க?...”

“அப்பா… சாமிகளா… தயவு செஞ்சு கிளம்புங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…” என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினாள் மயில்…

“ஹைய்யா…. ஜெயிச்சிட்டோம்…” என்று மூவரும் கோரசாக கத்த, மயில் அவர்களை புரியாமல் பார்த்தாள்…

“என்ன மயில் பார்க்குற?... உன்னை இப்படி கும்பிட வைக்கிறதா என் ஃப்ரெண்ட் பெட் கட்டினா நேத்து… இப்போ அவ ஜெயிச்சிட்டாளே… ஹாஹாஹா…”

“அட வாண்டுகளா… ஏண்டி எருமைமாடே… இதுக்கெல்லாம் நீ தான் காரணமா?... உன்னை…” என்றபடி மயில் பத்மினியை துரத்த, அவள் தப்பித்து ஓட, குட்டீஸ் இருவரும் உற்சாகமாயினர்…

“என் செல்ல மயில் தானே நீ… இப்படி நீயே உன் செல்லத்தை கோச்சிக்கலாமா?...” என்று குழந்தையாக அவள் கேட்க, தோழியைக்கட்டி கொண்டாள் மயில்…

“சரி சரி போதும் உன் மயில்கிட்ட கொஞ்சினது… போகலாம்… வா…” என்று சித்துவும் நந்துவும் அவளை இழுத்துக்கொண்டு சென்றனர்…

வட்ட முகம், அதில் வலது பக்கம் ஒரு சிறு கல் மூக்குத்தி, காதில் ஜிமிக்கி, நெற்றியில் சின்னதாய் பொட்டு, அதற்கும் மேல் விபூதி பட்டும் படாமலும்… அடர்த்தியான நீண்ட கூந்தல் முழங்காலுக்கும் சற்றே குறைவாய்… அதை அழகாக பின்னி மணம் மிகுந்த மல்லிகை தோளிரண்டிலும் வழிய… பாவாடை-தாவணியில் அழகு மங்கையாக செல்லும் தன் தோழி சாகரிகாவைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மயில் என்னும் மயூரி…

ஹ்ம்ம்… எப்போது பார்த்தாலும் ராமன் ராமன் என்று உருகுகிறாள்… வாரம் ஒருதடவை அவரை கோவிலுக்கு சென்று சந்திக்கிறாள்… சென்னையில் இருக்கிறாள் என்று தான் பெயர்… ஒரு இடத்திற்கும் போவதில்லை… ஆஃபீஸ், கோவில்… இரண்டு மட்டும் தான்,,, இவள் இப்படி இருப்பதால் தான் எனக்கும் இவளை மிக பிடித்துவிட்டதோ… ஹ்ம்ம்… இவளுக்கும் எனக்கும் ஒரு மாத பழக்கம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் தான்… என்னவோ, காலம் காலமாய் பழகினவர்கள் போல் அவ்வளவு பாசம், நட்பு…. இது தொடர வேண்டும் ஸ்ரீராமா… அடடா.. இவ கூட பழகி பழகி இப்போ நானும் இப்படி ஆயிட்டேனே… ஹ்ம்ம்… என்று தன்னையே திட்டிக்கொண்டே சென்றாள் மயூரி… இவளும் சாகரிகாவை போல் பேரழகு தான்… என்ன ஒன்று அவளை விட இவள் சற்றே உயரம் குறைவு… அவ்வளவே…

“சாகரி… மயில்னு நீ ஏன் அவளைக் கூப்பிடுற?...”

“அதுவா சித்து… அவ பேரு மயூரி தானே… நான் அதை சுருக்கி மயூன்னு கூப்பிட்டா என்னை திட்டுறா… ஏன்னு தெரியலை… அதான் மயில் மயில்னு சொல்லி கிண்டல் பண்ணுறேன்…”

“ஓ…. பட் உன்னை ஏன் அவ பத்மினின்னு கூப்பிடுறான்னு எனக்கு தெரியுமே…”

“எப்படி சித்து?...”

“அட என்ன சாகரி நீ… நீதானே அன்னைக்கு சொன்ன… அதுக்குள்ளே மறந்துட்டியா?...”

“நானா?...”

“ஆமா… நீயே தான்…”

“ஹேய்… வாலு… எங்கிட்டயேவா… உன் தில்லுமுல்லு காட்டுற?.. உண்மையை சொல்லு பார்ப்போம் இப்போ… நீ என் குட்டி சித்து தானே…” என்று அவள் ஆரம்பத்தில் சற்று கோபமாகவும், இறுதியில் கொஞ்சலாகவும் கேட்க, அந்த சித்து மனமிறங்கி “மயில் தான் சொன்னாள்” என்றான்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.