(Reading time: 16 - 32 minutes)

 

வினோதமான, விபரீதமான, வேதனையான, குழப்பமான குமுறலான, கூக்குரல்கள்.

நிலவு ஓயும் நாள்.  முன்னிருந்த புல்வெளியில் ஆங்காங்கே மின்விளக்குகள் ஒளிர்ந்தாலும் பின் கழுத்தில் சில்லிட்டது புதிதாய் அங்கு வந்தவளுக்கு.

வரண்டாவை கடந்து உள்ளே போனாள். ஓ.பி. இன்னும் உள்ளே போனால், விதவிதமான லேப் மற்றும் உபகரண அறைகள். ஆளின்றி இருந்தன அவை.

அடுத்த பிரிவிற்கு செல்லும் வழி, உள்ளே நுழைந்தாள். ஆங்காங்கே மங்கலான இரவு விளக்குகள் தவிர எதுவும் இல்லை வெளிச்சம் என்ற பெயரில்.

“க்..குட் ஈவ்னிங் மேம்...”வெளிர் நீல நிற ஆடையிலிருந்த இரு ஆண்களில் ஒருவன் வணக்கம் தெரிவித்தான். அடுத்தவன் அதை தொடர்ந்தான். தலையை சிறிதாய் அசைத்துவிட்டு முன்னேறினாள். இயல்பாய் இருப்பது போல் ஒரு முக பாவம். ஆனால் அடுத்து நுழைந்த பகுதியில் கண் கண்ட காட்சியில் அவள் அரண்டு போனது நிஜம்.

இரு புறமும் கம்பி கதவுகள். வித விதமான ஒலிகள். கதவு வாழியாய் காற்றை ஆராய்ந்தன சில கரங்கள். மங்கிய வெளிச்சத்தில் பயங்கரமாய் தோன்றியது காட்சி.

பயந்தபடி தொடர்ந்தாள்.

இப்பொழுது இவளுக்கு எதிராக இவள்போல் சீருடை அணிந்த இருவர் வர இயல்பாய் இருப்பது சிரமமாகபட்டது இவளுக்கு. கண்டு பிடித்துவிட்டார்கள் எனில்? இருள்தான் உதவ வேண்டும்.

“டாக்டர் ஜேசன் வீட்டுக்கு போயாச்சு. இனி அவர் நைட் ரவுண்ட்ஃஸுக்கு தான் வருவார். குழந்தைங்க வந்ததிலிருந்தே இப்படித்தான்”

“அவர் வொய்ஃப் கூட வரல போல...என்ன ப்ரச்சனையோ அவங்களுக்கு?”

“தெரியலப்பா...அவங்களுக்கு உடம்பு சரியில்லனு சொல்லிகிறாங்க....இன்னும் என்னலாமோ ரூமர்...பேசியபடி கடந்தனர் அவர்கள்.

குழந்தைங்க பக்கத்தில்தான் இருக்காங்க. இவள் மனம் குறித்தது.

இன்னுமாய் சற்று நடந்தாள் டாக்டர் ஜேசன் மஅத்யூஸ் என்ற பலகையுடன் அவன் அறை. அந்த பெரிய காரிடார் முழுவதுக்குமாக மொத்தம் இரு நோ வாட்ஃஸ் பல்புகள் மாத்திரம். மற்ற பகுதிகளை விடவும் இங்கு இருள். ஆட்கள் யாரும் அங்கு இல்லை. அறையை தாண்டி அவள் நடக்க எத்தனிக்கையில் தொலைவில் யாரோ வருவது போல் ஒரு அசைவு. மருத்துவ சீருடை நிறம் கண்ணில் புரிய, ஜேசனின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அடுத்த மருத்துவரும் அவளை அடையாளம் காணாமல் கடந்து செல்வார் என என்ன நிச்சயம்?

இப்பொழுதுக்கு ஜேசன் வரப்போவது இல்லை. மருத்துவ மனையின் உரிமையாளன்  அறைக்குள் அவன் இல்லா நேரத்தில் அடுத்தவர் வரும் வாய்ப்பு சொற்பம்.

ள்ளே சென்று பின்பாக கதவை சாத்திக்கொண்டவள் கண்களை முதலில் இருளுக்கு பழக்குவித்தாள். அவன் அறையில் குடைந்தால் உருப்படியாக ஏதாவது கிடைக்குமா? மெல்ல அலமாரி நோக்கி நடந்தாள்.

“க்ர்ர்.....க்ர்ர்......க்ர்ர்....” சத்தத்தில் அடி வயிற்றில் சில்லிட்டது.

சுவரில் நகம் கிழிக்கும் சத்தம் உள்ளிருந்து வந்தது. உள்ளிருந்து என்றால் ஆம் அறைக்கு உள்ளிருந்துதான்.

மெல்ல சத்தம் வந்த பகுதி நோக்கி முன்னேறினாள். அட்டாச்ட் பாத்ரூமின் கதவு தெரிந்தது.

பாத்ரூமிற்குள் அடைத்து வைத்து...யார்?....ஏன்?...இப்படி ஒரு மருத்துவ முறையா?

நிதானமாக அதே நேரம் மிகவும் கவனத்தோடு அச் சிறு கதவின் அருகில் சென்றாள்.

“யார் நீ?” தூக்கி வாரிப் போட்டது நிரல்யாவிற்கு.

இவளை பார்த்து கேட்டபடி அறை வாசலில் வந்து நின்றான் ஜேசன். இருட்டிலும் அவன்தான் என காட்டி கொடுத்தது குரல். இனி யோசிக்க நேரமில்லை.

பிஃஸ்டலை கையிலெடுத்து அவனருகில் இருந்த இரு அடி உயர அலங்கார குடுவையை மனதில் குறிவைத்து சுட்டாள். ‘ஷ்ஷ்ஷ்க்.... என்ற சத்தத்தை மாத்திரம் எழுப்பியபடி வெளிப்பட்டது தோட்டா.

“சில்ல்”‘  குடுவை நொருங்கி விழும் சத்தம்.

“ஓபன் த ரூம் ஐ சே” இரும்பு குரலில் இவள் சொல்ல,

“ஹேய்...ஹேய்..என்ன செய்ற நீ?”

பதறிய ஜேசன் இரு கைகளை தலைக்கு மேல் தூக்கினான். அவன் கை பட்டு ஒளிர்ந்தது மின் விளக்கு.

“ஜஸ்ட் ஓபன் த ரூம்”

“நிரல்யா மேம் நீங்களா?” இப்பொழுது அவன் கைகள் கீழிறங்கி இருந்தன. “ஜஸ்ட் கான்ட் பிலீவ்.....நீங்க எப்படி இங்க...அதுவும் பிஸ்டலும் கையுமா?....”

ஓபன் த டோர் அவன் அருகிலிருந்த டோர் மேட் துள்ளி போய் தூர விழுந்தது. உபயம் அடுத்த தோட்டா.

“ஐ மிஸ்ட் இட் பர்பஸ்ஃபுல்லி, ஓபன்!!! “

“கூல்...கூல் டவுண்” அவன் முகம் தீவிர சிந்தனை வயப்பட்டது.

“ஏன்? எதுக்காக இவ்வளவு கோபம்?” கேட்டான்.

“உள்ள யாரு?”

“என் பேஷண்ட், அதுக்கென்ன இப்போ?”

“வேர் ஆர் தோஸ் பேபிஸ்?” கடினமான குரலில் ஒரு கேள்வி.

“யாரு? என் டாட்டர்ஸா? என் வீட்டில இருக்காங்க.” உணர்ச்சி மறைத்த குரலில் ஒரு பதில்.

“பொய்....வீடு பூட்டியிருக்குது” அதட்டினாள்.

“ஓ...அங்க போயிருந்தீங்களா....இங்க ஹாஃஸ்பிட்டல் பக்கத்தில ஒரு வீடு இருக்குது....”

“ஜெஷுரனுக்கு தெரியல?”

“என் எல்லா ப்ராபர்டீஃஸையும் அவர்ட்ட காண்பிக்கனுமோ?” இது என்ன முட்டாள்தனம் என்றது போன்று ஒரு தொனி.

“எனக்கு குழந்தைகள பத்தி தெரியனும்...அவங்க இனிஷியல் ‘ஜே’ வா?”

அவன் முகம் இறுகியது.

“என் டாட்டர்ஃஸ் இன்ஷியல் வேற என்னதா இருக்க முடியும்?”

அவன் சொன்ன தொனியில் கொதித்தாள் நிரால்யா.

“துவிய ஏன் மேரேஜ் பண்ணல? அவ குழந்த வேணும்.....ஆனா...அவ வேண்டாம்...நீ எல்லாம்....”

“அவ இன்னும் என்னை மேரேஜ் செய்ய சம்மதிக்கலை.. இந்த பதிலில் முதலில் உறுதியானது அக்குழந்தைகள் துதியினுடையது என.

ஹான்! குழம்பிப் போனாள் நிரல்யா. எப்படிபட்ட பெண் இந்த துவி?

ஏன்....?” யோசனையாய் பார்த்தாள் அவனை.

“லாலி.... டாலி யின் பயாலஜிக்கல் ஃபாதர் நான் கிடையாது...” சிறு இடைவெளி கொடுத்தான்.

“ஐ லவ் துவி...எஸ்...ஐம் இன் லவ்....” இவளுக்கு சொன்னது போல் இல்லை அந்த பதில்.

“அதை புரிஞ்சிக்கிற நிலையில் அவ இருக்காளா இல்லையான்னுதான் எனக்கு புரியல.” என்றவன் சென்று அந்த கதவை திறந்தான்.

அது பாத்ரூம் இல்லை. ஒரு பெரிய அறை.

ஒருபக்க தரையில் விரித்திருந்த பெரிய மெத்தையை தவிர எதுவுமில்லை அங்கே.

எதை நம்பி உள்ளே செல்வாள் நிரல்யா, ஜேசனை பார்த்தாள்.

கதவை தாண்டி ஒரு எட்டு உள்ளே வைத்தவன் கதவிற்கு பின்புறம் மறைந்திருந்த அந்த உருவத்தை தேடாமல் ஒரு கையால் பிடித்து மென்மையாய் இழுத்து இவள் பார்வைக்கு கொண்டு வந்தான்.

துவி!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.