(Reading time: 42 - 84 minutes)

 

தினேஷ் மறுநாளே அவளின் எண்ணிற்கு முயற்சிக்க, அது அப்போதும் அதே பதிலை சொல்ல, உடனே தந்தைக்கு அழைத்தான்...

அவர் எடுத்த எடுப்பில் தினேஷ் எப்படியிருக்கப்பா, ?... ஊரில் என் மருமக காவ்யா, மயூரி, சித்து நந்து, அப்புறம் நம்ம வீட்டு வாலு சாகரி எல்லாரும் நல்லாயிருக்காங்களாப்பா?.. என்று கேட்டதும் ஒரு நிமிடம் உறைந்து தான் போனான் தினேஷ்...

அவள் அங்கு இல்லை என்றால், வேறெங்கே என்று எண்ணமிடவும் அவனால் முடியவில்லை... தகப்பனிடத்தில் சிறிது நேரத்தில் அழைப்பதாக சொல்லிவிட்டு ஆதர்ஷிடம் பேச முயற்சித்த வேளையில் அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது...

தினேஷ், உன் தங்கை நாளை இரவு வந்து சேருவாள்... மீறி போலீசிற்கோ, இல்லை வேறு யாரிடமோ அவளைப் பற்றி விசாரித்தால் நாளை அவள் வந்து சேரமாட்டாள் நினைவிருக்கட்டும்... என்றபடி பேசிய அந்த குரல் அதன் பின் ஒலிக்கவில்லை...

உறைந்து போய் அமர்ந்திருந்தவனின் அருகே காவ்யா வந்து என்னவென்று கேட்டபோது... மனைவியை இடையோடு கட்டிக்கொண்டு நடந்தவற்றைக் கூறினான்...

என் தங்கைக்கு எதுவும் ஆகியிருக்காதுல்ல கவி, ஆதர்ஷ் பாவம்... அவன் ரொம்ப துடித்துப் போயிருப்பான் அவளிடம் பேசாமல்... இப்போது இதையும் நான் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேனே என்று உடைந்து போனவனை முடியுமட்டும் சமாதானம் செய்தாள் காவ்யா...

அவள் காணாமல் போய் மூன்று நாள் நிறைவடையும் நேரமும் வந்தது... அதுவரை ஆதர்ஷின் அழைப்புகளை அவன் ஏற்கவில்லை.. என்னாயிற்று என் தங்கைக்கு என்று அவன் புலம்பிய தருணத்தில் அவள் வந்து சேர்ந்தாள்...

கசங்கிய உடை, கலைந்த கூந்தல், தள்ளாடிய நடை, அழுது வீங்கிய கண்கள், பார்க்கவே பரிதாபமாக, மனதை உருக்கும் தோற்றத்தில் வந்தவளை காவ்யா நெருங்கிய போது, கையமர்த்தி தடுத்துவிட்டாள் சாகரி... எனக்கு எதுவும் ஆகவில்லை... என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்ததை தினேஷிடமும் காவ்யாவிடமும் காண்பித்துவிட்டு அவளின் அறைக்குள் சென்று விட்டாள்...

தன் பின் வந்த நாட்களில் ஆதர்ஷ் அவளுக்கு தொடர்பு கொண்டபோது அவள் அவன் அழைப்பை ஏற்கவில்லை... அவன் தினேஷிடம் பேசியபோது அவனும் சரியாக பதிலளிக்கவில்லை...

அவள் கிடைத்து 5 நாட்கள் ஆனது... இந்த 8 நாட்களில் ஆதர்ஷிற்கு பைத்தியம் ஒன்று தான் பிடிக்கவில்லை... மற்றபடி துவண்டு ஓய்ந்து போனான் முற்றிலும்...

ஏன் சீதை.. எதற்காக என்னிடம் பேச மறுக்கிறாய் என்று உள்ளத்தில் கோடி முறை கேட்டுக்கொண்டான் ஆதர்ஷ்...

மனதில் கொஞ்சமும் நிம்மதிக்கான சுவடே இல்லை அவனுக்கு... அவள் மட்டும் தான் நிறைந்திருந்தாள் அவனது சிந்தையில்...

அன்று அறைக்குள் சென்று தாழிட்டவளின் கண்ணீர் விடிந்தும் ஓயவில்லை... அவளின் ஆதர்ஷ் ராமை எண்ணி எண்ணி கலங்கினாள் அந்த பேதையும்...

அதன் பின் யாரிடமும் அவள் சரியாக பேசவில்லை... மயூரி அவளை பத்மினி, சாகரி என்று அழைத்தபோது, என்னை அவ்வாறு அழைக்காதே என்றாள்... சரி அப்படி என்றால் இனி சீ.... என்று மயூரி முடிக்கும் முன் அப்படி அழைக்காதே... என்று கத்தியவள், ரிகா என்று மட்டும் கூப்பிடு என்றபடி சென்றுவிட்டாள்...

நந்து சித்துவிடம் மட்டும் சற்று சிரித்து பேசினாள்... தனது பழைய கலகலப்போடு அவர்களிடம் பழகாவிடினும் ஓரளவு பேசி சிரித்தாள்... அதுவும் அந்த மழலைகளுக்காக மட்டுமே...

ரு வாரம், ஒரு நாள் ஆகிவிட்டது அவனைப் பார்த்து பேசி, மனதில் சற்றும் நிம்மதி இல்லாத நிலையில் அவனை சந்தித்த நாளையாவது அந்த இடத்தில் சென்று உணரலாம் என்று முடிவெடுத்து கோவிலுக்குச் சென்றாள்...

என்னவளை ஏன் என்னிடமிருந்து பறிக்கிறாய் நீ?... என்னவளை என்னிடம் கொடுத்துவிடு... அவள் இல்லாத வாழ்வு எனக்கு கசக்கிறது... என்று கண் மூடி வேண்டியவன் கண் திறந்த போது அவள் இருந்தாள்...

இத்தனை நாட்கள், அவளைப் பிரிந்திருந்து வாடிய துயரம், வலி, அவன் அனுபவித்த வேதனை என அத்தனையும் அவன் விழி உரைக்க, அவளோ அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள்...

அவளின் தவிர்க்கும் பார்வை அவன் இதயத்தைக்கூறு போட, மனம் பாராங்கல்லாய் கணப்பதை உணர்ந்தான்... யாரோ போன்று அவள் அவனை கடந்து சென்ற விதம் அவனைக் கொன்று புதைக்க, யார்.... நீயா!!!!!! என்னைப் பாராமல் செல்வது என்றவன் வலியுடன் அவள் பின்னே சென்று அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு எதிரில் அமர்ந்தான்...  

இப்போது அவன் பார்வை மொத்தமும் அவளிடம் தான் இருந்தது... அவளும் அவன் பார்வையை தவிர்க்கவில்லை... கலங்கிய விழிகளுடன் எதிர்கொண்டாள் அவனது பார்வை வீச்சை...

நான் உன்னிடம் சொல்லாமல் சென்றது போல், என்னைப் பார்க்க மறுக்கிறாயே... என்னிடம் சொல்லாமல் போனதும் யாரோ என்னவளே... இந்த பாவி மனம் முழுவதும் உன் பெயரும், உன் முகமும், உனக்கான என் தேடலும் தான் நிறைந்து நிற்கிறது... என் காதலும் நானும் உனை எண்ணி வாழ்ந்தே நாட்களை கடத்திச் செல்கிறோம்... எனக்குள் மீதியிருப்பது உனக்காக என் பாடல் மட்டுமே... ஏன் சகி... எதற்காக என்னை விட்டு பிரிந்து சென்றாய்?... உன்னைக் காணாது நான் துடித்த துடிப்பும் தவிப்பும் நீ அறிந்தால் தாங்குவாயாடி?... என்னிடம் வந்துவிடு சகி... உனக்காக ஏங்குகிறேன்... என்னிடம் வந்துவிடு என் சகி...

அவன் உணர்த்திய வலி, பிரிந்திருந்த ஏக்கம், அவனின் காதல் அனைத்தையும் கண்டவள், உன்னை நான் பார்த்த நேரம் தான் என் வாழ்வின் மிகச்சிறந்த பொன்னாள் என் வாழ்வின் நன்னாள்... அந்த நாளின் நினைவு மட்டும் தான் நான் இன்றும் உயிர் வாழப் போதுமானதாக உள்ளது... என்றவள் அவனை இமைக்காமல் பார்க்க...

அந்த நாளின் நினைவு உள்ளது தானே சகி.. பின் ஏனடி இந்த மௌனம்?... இத்தனை நாட்கள் உன் காதல் இல்லாத நிலையிலும் உன்னை எண்ணி எண்ணியே உயிர் வாழ்ந்தேனடி சகி... உன் காதல் மட்டும் போதும் சகி... என் ஜீவன் வாழ... நீ இல்லாத நாட்கள் கண்ணீரில் கரைந்து காணாமல் போகிறேன் குட்டிமா... கஷ்டமாயிருக்குடா... என்னிடம் வந்துவிடு சகி...

அவனின் இந்த இறைஞ்சுதல் அவளைக்கொல்ல, எழுந்து விருட்டென நடந்தவள், ஒரு தூணின் பின் சென்று மறைந்து கொண்டாள்...

அவனை தஞ்சமைடய முடியாத தவிப்பு வெறுமை மனதினுள் சூழ, அந்த தூணின் மேல் சாய்ந்து தன் சொல்ல முடியாத வேதனையையும் வலியையும் அதனுக்கு தெரியப்படுத்தினாள் கண்ணீரின்மூலம்… உங்க மனசில உள்ளதை உங்க கண்ணு எனக்கு சொல்லுதே… என்னால எதையுமே சொல்லமுடியலையே… அய்யோ… என் மனசில இருக்குற ஏக்கம் குறையாதா?... என்னவனை இப்படி கஷ்டப்படுத்துறேனே… அதை விட நான் படுற கஷ்டம் யாருக்கு தெரியும்???... இப்படி பாவம் செய்தவள் ஆனேனே…  என்று அந்த தூணில் குத்தி தன் இயலாமையை அவள் வெளிப்படுத்தி அதில் அப்படியே சரிந்து கீழே அமர்ந்தாள்… நம்ம காதல் இனி இணையாதா தர்ஷ்…. என்று முகம் மறைத்து அழுதவளின் மேல் நிழல் விழ, எதிரே நம்ப முடியாத அதிர்ச்சியுடன் நின்றிருந்தான் ஆதர்ஷ்…

சட்டென அவனை அங்கு எதிர்பார்க்காதவள் நீர் சிந்திய விழிகளை மறைக்க முயன்று தோற்றாள்…. என் முன் அழுகிறாயா?... நான் தான் அதற்கு காரணமா?... என்னால் தானா?... என்னைப் பார்த்ததும் உன் முகத்தில் பூக்கும் புன்னகை எங்கே… எனக்கென நீ கொள்ளும் வெட்கம் எங்கே… அனைத்தும் இன்று மாயமாகிப் போனதே சீதை… உன் முகத்தில் அழுகை, கண்ணீர் என்னைப் பிரிய முடியாத போது தான் நான் பார்த்திருக்கிறேன்… ஆனால் இன்று என்னைப் பார்த்ததினால் அழுகிறாயே… எனில் நான் இல்லையென்றால் அழமாட்டாய் அல்லவா?... என்னைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் நீ சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றுதான் நினைப்பேன்… இனியும் என்னைப் பார்க்காமல் சந்தோஷமாக இருடா… என் அபிநயா சிரிக்கணும்…

நீ அழுவதைப் பார்க்க என்னால முடியவில்லை சீதை… நான் போறேன்டா… நீ இனி அழாதே சகி… என் சகி அழுறதை பார்க்க கஷ்டமாயிருக்குடி…. என்று பார்வையால் சொன்னவன், போறேன்டா… என்று விருட்டென அவளைக் கடந்து சென்றான்…

அந்த நொடி மிஞ்சியிருக்கும் தன் உயிரும் தன்னை விட்டு போவது போல் உணர்ந்தாள் அவள்… அவளையும் அறியாமல் அவனை அழைக்க எழுந்த கரத்தை தவிப்போடு இயலாமையோடு பார்த்திருந்தாள் அவள்…

நீயே இல்லாத போது நான் இங்கு ஏது?... என்று விரக்தி பொங்க நினைத்தவள், பொய்யாக இனி உலவப் போகிறேன் என்று அவன் செல்லும் திசையையேப் பார்த்துக்கொண்டிருந்தவள் அழுந்த மூடியிருந்த உதடுகளில் அவனது பெயரை உச்சரித்தாள் மெதுவாக இதுவரைப் போட்டுக்கொண்டிருந்த மௌனத்திரையை உடைத்து…

காற்றில் கலந்து அவன் செவிகளை எட்டியதோ என்னவோ அவள் வார்த்தை… ஒரு நிமிடம் நின்று திரும்பியவன், அவளைப் பார்த்தான்… கைகள் அவனை நோக்கி உயர்ந்திருப்பதையும் இயலாமையோடு அவள் நிற்பதையும், கண்களின் கண்ணீர் இன்னும் வற்றாததையும் பார்த்தவன் விழிகளில் தவிப்போடு அவள் இருப்பதை பார்த்துவிட்டு போறேண்டா சகி… என் சகிடி நீ… என் உயிர்… சகி…. என்று விழி மூடி அவளை முதன் முதலில் சந்தித்த அந்த பொன்னாளை கண்ணுக்குள் கொண்டு வந்தவன், அந்த நாளின் நினைவு போதும் சீதை நான் எஞ்சிய உயிர் வாழ என்று மெலிதாய் தலை அசைத்து அவளிடம் இருந்து விடைபெற்று திரும்பியவன் கண்ணில் காதல் என்னும் நீர் வழிந்தது… ஒற்றை விரலால் அதை வலது கன்னத்திலிருந்து அகற்றியவன், இடது கன்னத்தில் வழிந்திருந்த நீரை அகற்றாமலே நடைபிணமாய் சென்றான்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.