(Reading time: 42 - 84 minutes)

 

கவல் அறிந்த ஆதர்ஷ் விரைந்து வந்தான்… ராசு செல்வியும் வந்திருந்தனர்… சாகரி காணாமல் போவதற்கு ஒரு வாரம் முன்பு பெங்களூருக்கு வேலை விஷயமாக சென்றிருந்தான் முகிலன்… மயூரி அவனுக்கு தகவல் சொன்ன போது, அவன்தான் இப்போது வர முடியாத நிலையில் இருப்பதாகவும், ஆதர்ஷ் வருவான் என்றும் கூறினான்…

ஆதர்ஷிடம், நீ அங்கே தானே இருக்கிறாய்… நீ போயிட்டு வா ஆதி… அந்த பொண்ணு நம்ம ஆஃபீசில் வேலைப்பார்க்கும் பொண்ணு… உன் தங்கையின் தோழி வேறு… அதனால் நீ… என்று இழுத்தவனிடம், கண்டிப்பாக நான் போகதாண்டா செய்வேன்… இது என் கடமையும் கூட… என்னவளுக்கு ஆறுதலாவது நான் இருக்கணும்டா… என் உயிர் அங்கே துடிக்கும்டா… அதைப் பார்க்கும் துணிவு எனக்கு இல்லதான்… ஆனா நான் இந்த நேரத்துல பக்கத்தில் இருந்தா என் சகிக்கு ஏதோ ஒரு வகையில் ஆறுதலாவாகவும் இருக்கும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன், முகிலனிடம் சரி என்று சொன்னான்…

ராசுவும் செல்வியும் கூட இருந்த போதிலும், ஆதர்ஷ் தள்ளி நிற்கவில்லை… தினேஷிற்கு ஆதரவாக இருந்தான் ஒவ்வொரு நொடியும்… ஏழுநாட்கள் முழுதாக தினேஷுடன் இருந்தான் ஆதர்ஷ்…

ஒவ்வொரு வினாடியும் தன்னவளுக்கு விழிகளால் ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தான்… அழுது அழுது இரவு முழுவதும் உறங்காமல் அவள் விசும்பும் குரல் அவனுக்கு கேட்க உயிர் அற்றுப் போனது அவனுக்கு... அனைவரும் அவளை சூழ்ந்திருந்த படியால் அவன் அவளை நெருங்கவில்லை…

சுற்றியிருந்த சொந்தங்கள், பந்தங்கள் அனைவரும் மூன்றாம் நாளே கிளம்பிவிட, ராசுவும் செல்வியும் மயூரியை அழைத்துக் கொண்டு ஐந்தாம் நாள் காலையில் கிளம்பி சென்றனர்… ஒரு கையெழுத்து விஷயமாக அவர்கள் சென்றே ஆக வேண்டும் என்று போன் வர, தினேஷ் தான் அவர்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தான்… நான் பார்த்துக் கொள்கிறேன்… என்று…

ன்றிரவு அதே போல் அவள் குரல் கேட்க, காவ்யா தினேஷிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள் வெளியே… சித்து நந்துவும் உறங்கி விட்டிருந்தனர்…

ஆதர்ஷ் அவள் அருகே சென்றான்… கலைந்திருந்த ஓவியம் போல் இருந்தவளைப் பார்த்தவன் இதயம் இரத்தம் சிந்தியது… தூக்கத்தில் அழுகையினூடே ஏதேதோ உளறிக் கொண்டிருந்தாள் அவள்…

என் ராம் கூடவும் எனக்கு வாழ கொடுத்து வைக்கலை… இப்போ நீங்களும்… நான் என்ன பாவம் செஞ்சேன்… என்று அழுதவள்,

தெய்வமா இருக்குற நீங்க இரண்டு பேரும் என் ராம் கூட இருங்க… அவருக்கு எதுவும் ஆகாம பார்த்துக்கோங்க… என் தர்ஷ் நல்லா இருந்தா போதும்… என்றவள் அவளை மீறி தூக்கத்தில் விசும்ப ஆரம்பிக்க, அதற்கும் மேல் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவளை மடிதாங்கி கொண்டான் ஆதர்ஷ்… தரையில் இருந்த அவளது சிரம் அவனது மடியில் இருந்தது…

அவன் மடி சாய்ந்ததாலோ, இல்லை தன்னவன் ஸ்பரிசம் பட்டதாலோ, அழுகை நின்றது அவளுக்கு… சுருண்டுப் படுத்துக் கொண்டவள், தன்னையும் மீறி ராம் ராம் என்று பிதற்ற, அவள் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தான்…. அவன் வருடல் அவளுக்கு தேவைப்பட்டதோ என்னவோ, மெல்ல அவளின் உளறலும் நின்றது… அவள் இனி நிம்மதியாக உறங்குவாள் என்று தெரிந்து கொண்டவன் அவளது தலைக்கு ஒரு தலையணையை வைத்து விட்டு அங்கிருந்து அகன்றான்…

றுநாள் காலையில் அவனிடம் தினேஷ் ,நீ கிளம்பு ஆதர்ஷ்… எத்தனை நாட்கள் தான் எங்க கூட இருப்ப… எல்லாம் முடிஞ்சது… நான் நாளைக்கு இரவில் இங்கிருந்து கிளம்புறதா இருக்கேன்… இங்க இருந்தா அவ அழுதுட்டே இருப்பா… அதான்… என்றவனிடம், நாளைக்கு எல்லாரும் சேர்ந்தே போகலாம்… அவளை இங்கே இப்படி விட்டுட்டு போக எனக்கு மனசில்லை தினேஷ்… நான் உங்களோடவே வரேனே… என்றான் கெஞ்சுதலோடு…

அத்தனை தொழில்களுக்கு அதிபதி… அத்தனையையும் விட்டு விட்டு இங்கு இருக்கின்றான்… தினேஷிற்கு தெரியும் இதனால் அவனுக்கு எத்தனை கோடி இழப்பு வரும் என்று… இருந்தும் கொஞ்சம் கூட அதைப் பொருட்படுத்தாமல் தன்னவளுடன் இங்கிருந்து கிளம்புகிறேனே என்று கெஞ்சியவனைப் பார்த்த போது தினேஷ் நெஞ்சம் நெகிழ்ந்து போனது…

எனக்கு எதுவும் வேண்டாம் எனக்கு பசிக்கலை என்று காவ்யாவிடம் சாகரி மறுத்துக் கொண்டிருந்த போது, தினேஷ் ஆதர்ஷை சாப்பிட உள்ளே அழைத்துச் சென்றான்…

என்னகவி… என்னாச்சு… என்று கேட்ட கணவனிடம் சாகரியின் மறுப்பை சொன்னவள் அடுத்து என்ன செய்வதென்று யோசித்த போது, நீ சாப்பாடு எடுத்து வை என்றவன், நந்து சித்து சாப்பிட்டார்களா என்று கேட்டான்… அப்பவே சாப்பாடு கொடுத்து தூங்க  வைச்சிட்டாங்க ஆதர்ஷ் தம்பி என்றாள் காவ்யா…

தன் தங்கையின் மீது மட்டுமல்ல தன் தங்கையின் குடும்பத்தின் மீதும் அவனுக்குள்ள அக்கறையை தான் புரிந்து கொண்டு என்ன செய்ய, புரிந்து கொண்டவள் இப்போது புரிந்தே விலகுகிறாளே என்று தங்கைக்காக உள்ளுக்குள் மறுகியவன், மனதை தேற்றிக் கொண்டு ஆதர்ஷை அமர சொன்னான்…

சாகரிக்கு தட்டை வைத்த போது அவள் எழுந்து செல்ல, தினேஷின் குரல் அவளை நிற்க வைத்தது… நீ சாப்பிடாம இருக்குற சரி, ஏன்னா நமக்கு அவங்க அப்பா-அம்மா… ஆனா இதோ நிற்கிறானே இவன் எதுக்கு பட்டினி கிடக்கணும்???... என்ற தினேஷை ஆதர்ஷ் தடுத்தான் மேற்கொண்டு பேச விடாமல்…

தன்னவன் பட்டினியா இருக்கிறானா?... தனக்காக தானே…. இத்தனையும்… அவன் இங்கு இருப்பது, இப்படி பட்டினியாக இருப்பது அனைத்தும்…. இப்படி எனக்காக எல்லாம் செய்யும் உனக்கு நான் என்ன செய்தேன்?... ஒன்றுமே இல்லையே… உன்னை காதலித்து பின் காரணமே சொல்லாமல் உன்னை விட்டு விலகி நிற்கின்றேன்… இன்று வரை ஏன் என்று நீ என்னை மறித்து கேட்கவில்லையே… உன்னுடன் வாழ எனக்கு கொடுத்து வைக்கவில்லையே கொஞ்சமும்… என்று நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் வர,

இப்படி அழுதுட்டே இரு… என்று தினேஷ் சொல்லி எழுந்து போகும் போது, சாப்பிடாம எங்கே போறீங்க என்றாள் காவ்யா…

அவன் இங்கே வந்து எத்தனை நாள் ஆகுது… எல்லாம் யாருக்காக நமக்காக தானே… அவனை சாப்பிட்டாயா என்று யாராவது கேட்டிருப்போமா… ஆனால் அவன் நமக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்கிறான் இதுவரை… நாம் சாப்பிடாம இருந்த சில நாட்கள் அவனும் சாப்பிடாமல் இருந்திருக்கின்றான்… இன்றாவது அவன் சாப்பிடட்டுமே என்று அழைத்து வந்தேன்… எங்கே… அது தான் நடக்காது என்று தெரிந்து போயிற்றே என்றான் சாகரியைப் பார்த்துக் கொண்டே…

நீ போ கவி… போய் எல்லாத்தையும் குப்பையில் கொட்டு, என்று அவன் முடிக்கும் முன், அண்ணி சாப்பாடு எடுத்து வைங்க என்றபடி வெளியே சென்றாள்…

அங்கே பின்னாடி இருந்த மல்லிகை செடியின் மணத்தை நுகர்ந்து கொண்டிருந்தவன், சாப்பிட வாங்க என்ற அழைப்பில் ஆச்சரியப்பட்டு போனான்… அன்று கோவிலில் பேசாமல் போனவள் இன்று தான் பேசுகிறாள் தன்னிடம்… என்று சந்தோஷம் கொண்டான்…

சரி என்று தலை அசைத்தவன், அவள் பின்னாடியே செல்ல, அவளே அனைவருக்கும் பறிமாறினாள்… ஆதர்ஷிற்கு அவள் பறிமாறும் போது எல்லையில்லா உவகை மனதினுள் உருவானது அவனுக்கு… தன்னவளின் கையால், உணவு… மனம் நிறைவாக சாப்பிட்டான்… அவளும் சாப்பிட்டாள் தன்னவனுக்காக… அவனுக்கு பறிமாறும் போது, இனி இது போல் பறிமாற எனக்கு வாய்ப்பும் இல்லை, இந்த சந்தோஷத்தையாவது உங்களுக்கு கொடுக்க முடிந்ததே… என்று மகிழ்ந்து கொண்டாள் அவள்…

பின்னர், அனைவரும் கிளம்பி சென்னை வந்து விட்டனர்… அதன் பின் அவள் ஆதர்ஷிடம் பேச முயற்சிக்க கூட இல்லை… ஒரு மாதமும் ஆகி விட்டது… இந்த நிலையில் தினேஷிற்கு இப்படி போன் வர, அவன் என்ன செய்ய என்று அமைதியாக அமர்ந்திருந்த போது, தங்கை சாப்பாட்டை வேண்டாம் என்று சொல்வது காதில் விழுந்தது…

நந்துவும் சித்துவும், அவளிடம் அத்தை நீ ஏன் சாப்பிடாம இருக்குற?... சாப்பிடு… என்று கெஞ்ச…

அவள் ஒன்னுமில்லை என்றாள்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.