(Reading time: 21 - 41 minutes)

ந்த ஹோட்டலில் காலை உணவுக்காக இருவரும் அமர்ந்தனர்.

ஏன் அஷோக் ஒரு மாதிரி இருக்கே? கேட்டாள் அவள்.

ஒண்ணுமில்லைடா....

ஆமாம்  நேத்து ஏன் காலேஜ் வரலை நீ? வந்திருந்தா அவரையும் பார்த்திருக்கலாம் தெரியுமா.

ம்...

ஹேய்.... நேத்து விஷ்வா உன் மேலே மோதிட்டானாமே. அடி எதுவும் பட்டுச்சா?

பச்.... என்றான் அஷோக். அதெல்லாம் ஒண்ணுமில்லை.

அதற்குள் அவர்கள் சொன்ன உணவுகள் வர சாப்பிட துவங்கினாள் அபர்ணா. எத்தனை முயன்றும் அஷோக்கால் இயல்பாக இருக்க முடியவில்லை.

அவளுடைய பேச்சும் பரத்திடமே சென்று சென்று நிற்க, ஒரு கட்டத்தில் சொல்லியே விட்டிருந்தான் அஷோக். 'நான் நேத்து உங்க காலேஜ் வந்திருந்தேன்டா. அவரை பார்த்தேன்.

வியப்புடன் நிமிர்ந்தாள் அவள். 'அவரை பார்த்தியா? ஏன் என்கிட்டே சொல்லலை,

அது... என்று மெல்ல நிமிர்ந்தவன் நேற்று நடந்ததை சொல்ல துவங்கினான்.

நேற்று காலை அவன் சென்னை வந்திறங்கி தான் தங்க வேண்டிய ஹோட்டலை அடைந்து ஆட்டோவிலிருந்து இறங்கி நடந்த போது அங்கே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்தான் அஷோக்.

அந்த வானத்தை செலுத்திக்கொண்டு வந்தது விஷ்வா.

அடி ஒன்றும் பெரிதாக படவில்லை. பதறித்தான் போனான் விஷ்வா.

அய்யோ! சாரி அஷோக். அடி ஏதாவது பட்டிருக்கா?  வாங்க டாக்டர்கிட்டே போலாம். தப்பு என் மேலே தான் நான் எதோ ஞாபகத்திலே இருந்தேன்....சாரி அஷோக்... மறுபடி மறுபடி மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தான் அவன்.

அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றான் அஷோக்.

விஷ்வாவின் காரணமே இல்லாத வெறுப்பு எப்போதுமே உண்டு அஷோக்கிற்கு. காலையில் நடந்த அந்த சம்பவமும் அதனால் கையில் ஏற்பட்ட வலியும் விஷ்வாவை திரும்ப திரும்ப நினைவூட்டிக்கொண்டே இருக்க, மனம் ஏனோ கொதித்துக்கொண்டே இருந்தது அவனுக்கு.

மாலையில் அபர்ணாவை பார்க்கும் எண்ணத்தில் தான் கல்லூரிக்கு வந்திருந்தான் அஷோக்.

அவளது ஸ்டாப் ரூமை அவன் அடைந்த போது அவள் அங்கே இல்லை. அங்கே இருந்தது பரத்.

பரத்தின் பெயர், அவன் அவளுடன் வேலை பார்க்கிறான் மட்டுமே தெரியும் அஷோக்கிற்கு. அவன் பரத்தை பார்த்ததில்லை.

அவன் மட்டுமே அங்கே அமர்ந்திருக்க அவனருகில் வந்து சொன்னான் அஷோக், 'எக்ஸ்கியூஸ் மீ .நான் அபர்ணாவோட  அண்ணன் அஷோக்'

'ஓ!' மலர்ந்து எழுந்து கைகுலுக்கினான் பரத். 'வெரி கிளாட் டு மீட் யூ மிஸ்டர் அஷோக். ஐ யாம் பரத்வாஜ்'

ஓ! 'மாப்பிள்ளை.!!!!!!!!! 'கிளாட் டு மீட் யூ' சிரித்தான் அஷோக். நான் உங்களை பார்ப்பேன்னு யோசிக்கவேயில்லை பாருங்க. வெறும் கையோட வந்திட்டேன்.

'நமக்குள்ளே என்ன formalities. அபர்ணா கிளாஸ்லே இருக்கா. வர அரை மணி நேரம் ஆகும். நாம அப்படியே வெளியே போயிட்டு வருவோம் வாங்க மச்சான்.' அவனை அழைத்துக்கொண்டு நடந்தான் பரத்.

அங்கே இருந்த ஒரு ஹோட்டலில் அமர்ந்திருந்தனர் இருவரும். சில நிமிடங்களில் பேச்சு அபர்ணாவை  நோக்கி திரும்ப, அவளுக்கு பிடித்தவை, பிடிக்காதவை பற்றி சொல்லிக்கொண்டே வந்த அஷோக்கின் மனதில் சட்டென வந்தான் விஷ்வா.

அடி மனதில் விஷ்வாவின் மீதிருந்த கோபம் சட்டென தலைக்காட்ட, யோசிக்காமல் சொல்லியே விட்டிருந்தான் அஷோக் 'உங்களுக்கு அவளோட friend விஷ்வாவை பத்தி தெரியுமா? அவன் கிட்டே மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க..

கொஞ்சம் திடுக்கிட்டு நிமிர்ந்தான் பரத். 'விஷ்வாவா?'

ஆமாம். அவன் அவளோட உயிர் நண்பனாம்.... எப்போ பாரு அப்பூ, அப்பூன்னு அவ பின்னாடியே சுத்திட்டு. எனக்கே கோபமா வரும்.

வி....ஷ்....வா..... பரத் யோசனையுடன் உச்சரித்தான் அவனது பெயரை. எங்கே இருக்கார் அந்த விஷ்வா? இங்கே சென்னையிலேதானா?

ஆமாம். இங்கேதான் மயிலாப்பூர்லே. இப்போதான் அமெரிக்காவிலிருந்து திரும்ப வந்திருக்கான்.

பரத்தின் முகத்தில் பல யோசனை ரேகைகள். 'ரொம்ப க்ளோஸ் friendsஸா ரெண்டு பேரும் காபியை ருசித்தபடியே  கேட்டான் பரத்.

ஆமாமாம்.. சலிப்புடன் ஒலித்தது அஷோக்கின் குரல். காலேஜ் படிக்கிறதிலிருந்து.... ஒரு தடவை அவனை காப்பாத்த அபர்ணா தண்ணிக்குள்ளே குதிச்சிட்டான்னா பார்த்துக்கோங்க... அவன் வீட்டிலேயே அவனோட யாருக்கும் ஒத்து வரலை......

ம்????? என்றபடி நிமிர்ந்தான் பரத்.

ஆமாம். அவனுக்கும் அவங்க அம்மாவுக்கும் ஏதோ பிரச்சனை. அவன் அப்பாவோட வீட்டை விட்டு தனியா வந்திட்டான். இப்போ அவன் அப்பாவும் இல்லை.

அஷோக்கையே இமைக்காமல் பார்த்திருந்தான் பரத்.

அவனாலே அவ படிச்ச காலேஜ்லே ஆரம்பிச்சு எல்லா இடத்திலேயும் இவளுக்கு கெட்ட பேரு.  போதும். அவனை விட்டுடுன்னா கேட்க மாட்டேங்கறா இவ... நீங்களாவது சொல்லுங்க... சொல்லி முடித்தான் அவன்.

மொத்தமாக மாறிப்போயிருந்தது பரத்தின் முகம். அப்போதுதான் தான் செய்த தவறு புரிந்தது அஷோக்கிற்கு.

சட்டென சில நிமிடங்கள் யோசனையுடன் மௌனமானான் அஷோக்.

அந்த மௌனத்தை உடைக்க, கஷ்டப்பட்டு வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன் சொன்னான் பரத் ' டோன்ட் வொர்ரி மச்சான். இது ஒரு மேட்டரே இல்லை நான் பார்த்துகறேன்'

அவன் சொன்ன போதிலும் அஷோக்கின் அடி மனதில் ஒரு உறுத்தல் பிறந்து விட்டிருந்தது. அதன் பிறகு அபர்ணாவை சந்திக்கும் தைரியம் வரவில்லை. ஏதோ சாக்கு சொல்லிவிட்டு அவளை பார்க்காமலே அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தான் அஷோக்.

நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டு, அபர்ணாவின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் அஷோக்.

அவள் முகமெங்கும் பரவிய சில நொடி அதிர்ச்சி அவனை உலுக்கத்தான் செய்தது. சில நொடிகள் கழித்து அவள் முகத்தில் சிந்தனை ரேகைகள் பரவின.

அப்படியென்றால் பரத்துக்கு நேற்றே எல்லாம் தெரிந்துவிட்டதா? தெரிந்த பிறகும் அவனுக்கு கோபமா வரவில்லையா?

நேற்று நடந்தவைகள் அவள் மனதில் ஓட, சட்டென்று உறைத்தது அவளுக்கு 'அதனால் தான் நான் நேற்று மாலை கல்லூரியில் அவனை தேடிக்கொண்டு வந்த போது ஏதோ குழப்பத்துடன் அமர்ந்திருந்தானா?

அதன் பின் நடந்தவைகளை யோசித்து பார்த்தாள் அவள்.

அவனது இதமான புன்னகை நினைவுக்கு வந்தது அவளுக்கு. 'ஹாப்பி நியூ இயர் கண்ணம்மா. என் கண்ணம்மா எப்பவும் சந்தோஷமா இருக்கணும்' நிறைவாக மனதார சொன்னானே  அவன். எப்படி அது.? கொஞ்சமும் கோபம் இல்லையா என் மீது? கொஞ்சம் வியப்பாகவே இருந்தது அபர்ணாவுக்கு.

நேத்து அதுக்கப்புறம் பரத்தை பார்த்தியாடா? மெல்லக்கேட்டான் அஷோக். எதுவும் பிரச்சனையா?

'அதெல்லாம் ஒண்ணுமில்லை. அவர் ரொம்ப நல்லவர் தெரிஞ்சுக்கோ. உன்னை மாதிரியெல்லாம் இல்லை.' என்றாள் அபர்ணா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.