(Reading time: 21 - 41 minutes)

ந்த இரவு முழுவதும் இருவரும் மாறி மாறி அவளை அழைக்க, ஒரே நேரத்தில் இருவரின் மனபாரங்களுக்கும் மருந்தாகிப்போயிருந்தாள் அபர்ணா.

காலை விடிந்தது. பரத் மருத்துவமனைக்குள் நுழைந்து, அறைக்கு அருகில் வர, அவன் அறைக்கதவு தட்டப்பட்டது.

விழுந்தடித்து ஓடி வந்து விஷ்வா கதவை  திறக்க, அதே நேரத்தில் அங்கே பரத் வந்து நிற்க சொன்னாள் அந்த நர்ஸ் 'உங்கம்மா ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டாங்க. கொஞ்சம் நினைவு திரும்பி இருக்கு. ரொம்ப தொந்தரவு பண்ணாம பார்த்திட்டு உடனே வந்திடுங்க.

இருவரும் எப்படி மைதிலியின் அருகில் வந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

அரை மயக்கத்தில்தான் இருந்தார் அவர். அருகில் நின்ற தனது மகனின் கையை பற்றிக்கொண்டார் அவர். அவர் மனமெங்கும் அப்படி ஒரு நிறைவு. தனது மகனை மற்றொரு முறை பெற்றெடுத்து விட்டதை போன்றதொரு உணர்வு. மகனுடன் வாழ இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்துவிட்ட சந்தோஷம்.

விஷ்... வா... என்றார் மெல்ல

உ..உனக்கு... சரியாடுச்சு மா.  நீ ரெஸ்ட் எடு மா.... குரல் உடைய சொன்னான் விஷ்வா.

என்.... கூடவே....

'இருக்கேன்மா. உன் கூடவே இனிமே இருப்பேன்மா' தொலைந்து போன பொக்கிஷம் திரும்ப கிடைத்துவிட்ட நிம்மதி அவனிடத்தில். அம்மாவின் கையை அழுத்தினான் விஷ்வா.

கட்டிலின் இன்னொரு பக்கத்தில் தவிப்புடன் நின்றிருந்தான் பரத். மெல்ல திரும்பினார் அத்தை. அவனை பார்த்து  புன்னகைத்தார் அவர்.

அவன் கண்களில் நீர் கட்டிக்கொண்டது. 'போதுமடா இறைவா. இந்த புன்னகை ஒன்றே போதும். என் உயிரை என்னிடம் திரும்ப கொடுத்தாயே உனக்கு பல கோடி நன்றிகள்.'

சில நொடிகளில் அப்படியே உறங்கிப்போனார் அத்தை. அந்த ஒரே நாள், அந்த புது வருட தினம் அந்த மூவர் மனதிலுமே சில மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது.

இரண்டு மூன்று நாட்களில் கொஞ்சம் தேறி இருந்தார் அத்தை. அவர் அருகிலேயே தவம் கிடந்தான் விஷ்வா. யாரையும் அவர் அருகே நெருங்கக்கூட விடவில்லை அவன்.

அதிகம் பேச முடியவில்லை அத்தையால். அவர் பார்வையிலேயே ஒரு கனிவு வந்திருந்தது.  ஒரே நாளில் அவரிடம் பல மாற்றங்கள் வந்திருந்தன.

சில நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்தார் அத்தை. இத்தனை நாட்கள் மருத்தவமனையில் அடிக்கடி சந்தித்துக்கொண்ட போதிலும் விஷ்வாவும், பரத்தும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.

பரத்தின் வீட்டுக்குள் வந்தான் விஷ்வா.

அம்மா... என்றான் அவன். நீ ரெடியா இரு. இன்னைக்கு சாயங்காலம் நம்ம வீட்டுக்கு போயிடலாம்.

எதுவுமே பேசாமல் மார்புக்கு குறுக்காக கையை கட்டிக்கொண்டு அவர்கள் இருவரையும் பார்த்தபடியே நின்றிருந்தான் பரத்.

டேய்...விஷ்வா என்னடா? என்றார் தாத்தா. இப்போதான் வீட்டுக்கு வந்திருக்கா ஒரு வாரம் பத்து நாள் கழிச்சு வேணும்னா கூட்டிட்டு போடா.

இல்லை தாத்தா. நான் எங்க அம்மாவை பார்த்துக்கறேன். அஸ்வினியும் எங்களோட வரப்போறா. நாங்க பத்திரமா பார்த்துப்போம்.

'விஷ்வா' என்றார் மைதிலி. 'கண்ணன்கிட்டே ஒரு வார்த்தை கேளுடா.'

'அவன்கிட்டே எதுக்கு கேட்கணும்?' சட்டென வெடித்தது கேள்வி.

இல்லைடா. இத்தனை நாள் என் சந்தோஷம், வலி, வேதனை எல்லாத்திலேயும் கூடவே நின்னு என்னை தாங்கினவன்டா அவன். அவனை நீ ஒரு வார்த்தை கேட்கறதுதான் முறை.

இல்லைமா. வாழ்க்கையிலே எதுக்காகவும், யாருக்காகவும் நான் அவன் கிட்டே போய் நிக்க மாட்டேன். என்றான் சட்டென.

பேசவேயில்லை பரத். தெரியும் அவனுக்கு. எதுவுமே வேண்டாம், அபர்ணா என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் மொத்தமாக தோற்று போவான் விஷ்வா என்று தெரியும் பரத்துக்கு. அவர்கள் நட்பை வைத்து அவனை மிக அழகாக ஆட்டி வைக்கலாம் என்றும் தெரியும் அவனுக்கு.

'ஒரு பையனும் பொண்ணும் friendsஸா இருந்தா நீங்க கரெக்டா புரிஞ்சிப்பீங்கதானே? அவங்களை பிரிக்கணும் நினைக்க மாட்டீங்க அப்படிதானே?' ப்ராமிஸ்? சில நாட்களுக்கு முன்னால் அவன் முன்னால் கை நீள தவித்தனவே அந்த கண்கள். அந்த கண்களை அழவைக்க அவனால் முடியவே முடியாது. சத்தியமாக முடியாது.' ஒரு பெருமூச்சு எழுந்தது பரத்திடம்.

'நீ கேளும்மா. யார் யார் கிட்டே கேட்கணுமோ கேட்டுட்டு ரெடியா இரு,' நான் சாயங்காலம் வந்து உன்னை கூட்டிட்டு போறேன். நீயும் ரெடியா இருடா.' அஸ்வினியை பார்த்து சொல்லி விட்டு கிளம்பி விட்டிருந்தான் விஷ்வா.

அவன் சென்ற பின் அத்தையின் அருகில் வந்து அமர்ந்தான் பரத்.

கண்ணா... என்றார் மெல்ல. நான் கொஞ்ச நாள் விஷ்வாவோட இருந்திட்டு வரவாடா?

என்ன அத்தை நீ என்னை போய் கேட்டுட்டு. நீ திரும்ப எழுந்து வந்ததே போதும் எனக்கு. எங்கே இருந்தா என்ன? நான் அப்பப்போ வந்து உன்னை பார்த்துக்கறேன். சந்தோஷமா போயிட்டு வா அத்தை. என்றான் புன்னகையுடன்.

அன்று மதியம் அத்தையை பார்க்க வந்திருந்தாள் அபர்ணா.

பேச்சினிடையே சொன்னார் அவர் 'நான் இன்னைக்கு என் பையன் வீட்டுக்கு போயிடுவேன்மா.

கொஞ்சம் வியந்து தான் போனாள் அபர்ணா. பரத் சம்மதித்து விட்டனா? விஷ்வா இதைப்பற்றி அவளிடம் சொல்லவில்லையே. மெல்ல நிமிர்ந்து அங்கே நின்றிருந்த பரத்தை பார்த்தாள்.

சின்ன புன்னகையுடன் அறையை விட்டு வெளியேறினான் அவன்.  

சில நிமிடங்கள் கழித்து தனது அறையில் நின்றிருந்தவனின் முன்னால் வந்து நின்றாள் அபர்ணா.

இமைக்காமல் அவளையே பார்த்திருந்தான் பரத். கிட்டதட்ட பத்து நாட்கள் ஆகிறது அவளிடம் சரியாக பேசி. அன்று இரவு காரில் அமர்ந்து புலம்பியதோடு சரி. அதன் பிறகு பரிமாறிக்கொண்டது ஓரிரு வார்த்தைகளே.

சாரி... என்றாள் தலைகுனிந்து விரல்களை பார்த்தபடியே

எதுக்குடா? மெல்ல அவள் அருகில் வந்தான் பரத்.

'அண்ணன் உங்க கிட்டே பேசினதை சொன்னான். விஷ்வா என்னோட friend அப்படின்னு நான் முன்னாடியே சொல்லி இருக்கணும். நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை. கொஞ்சம் பயமா இருந்தது. அதான் சொல்லலை.' மெல்ல நிமிர்ந்தாள் அவள்.

பதில் பேசவில்லை அவன்.

'தப்புதான். உங்களுக்கு என் மேலே கோபம் இல்லையா? எதையும் மனசிலே வச்சுக்காதீங்க என்ன தோணுதோ சொல்லிடுங்க. திட்டுறதுன்னா கூட திட்டிடுங்க ப்ளீஸ் நான் வாங்கிக்கறேன் ப்ளீஸ் கண்ணா.'  கெஞ்சலுடன் அவள் ஒலித்தது அவள் குரல்.

சில நொடிகள் தவித்துக்கொண்டிருந்த அவள் கண்களுக்குள் பார்த்துக்கொண்டு நின்றான் அவன். 'என்ன சொல்வது.? எதுவுமே தோன்றவில்லை அவனுக்கு. அவள் என் கண்ணம்மா என்பதை தவிர வேறெதுவுமே தோன்றவில்லை.'

'ப்ளீஸ் கண்ணா ......' அவள் சொல்ல சட்டென அவள் கன்னத்தில் இதழ் பதித்து நிமிர்ந்தான் அவன்.

சிலிர்த்து போய் நின்றாள் அவள். சில நொடிகள் புன்னகையுடன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றவன் எதுவுமே பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேறினான்.

மாலை கிளம்பி விட்டிருந்தார் அத்தை. அழைத்து போக வந்திருந்தான் விஷ்வா.

கிளம்பும் நேரத்தில் மனம் கேட்காமல் மறுபடியும் சொன்னார் அத்தை 'கண்ணன் கிட்டே ஒரு வார்த்தை கேட்டுடு விஷ்வா.

அதை மறுத்து அவன் ஏதோ சொல்ல விழைய முந்திக்கொண்டான் பரத் 'விடு அத்தை தன்னோட அம்மாவை கூட்டிட்டு போக அவன் யாரை கேட்கணும். நீ சந்தோஷமா போயிட்டு வா அத்தை.'

பேச்சிழந்து போனான் விஷ்வா. 'கண்ணனா இப்படி பேசுவது?'

அத்தை டாக்ஸியில் ஏறி அமர, அவர் கையைப்பற்றிக்கொண்டு சொன்னான் பரத். 'வேலையை விட்டுடு அத்தை. உடம்பை பார்த்துக்கோ. செல் போனை கையிலேயே வெச்சுக்கோ. கொஞ்சம் முடியலைன்னாலும் உடனே போன் பண்ணு நான் பத்து நிமிஷத்திலே அங்கே வந்திடுவேன்.  பத்திரமா இருந்துக்கோ அத்தை' சொல்லிவிட்டு கார் கதவை மூடிய நொடியில், எத்தனை முயன்றும் தனது கண்களில் நீர் சேருவதை அவனால் தவிர்க்கவே முடியவில்லை.

விஷ்வா காரில் ஏறி அமர, கார் நகர கண்களில் நீர் பளபளக்க அத்தைக்கு கை அசைத்தான் பரத்.

தொடரும்...

Go to episode # 16

Go to episode # 18

{kunena_discuss:726}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.