(Reading time: 21 - 41 minutes)

'சாரிடா' என்றான் அஷோக். நான் எதுவும் பிளான் பண்ணி எல்லாம் சொல்லலை. ஏதோ சட்டுன்னு சொல்லிட்டேன் அப்புறம் எனக்கே தப்புன்னு புரிஞ்சிது. அதனாலே உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே பிரச்சனை வருமோ? உன்னை தப்பா நினைச்சிடுவாரோன்னு ஒரே பயம். நேத்து பூரா தூங்கலைடா. நான் தான் சொன்னேன்னு தெரிஞ்சா நீ என் கூட பேசவே மாட்டியோன்னு நினைச்சேன். என்னை வெறுத்திடுவியோன்னு ரொம்ப பயந்துட்டேன்டா. அப்படியெல்லாம் செய்ய மாட்டே இல்லே? தவிப்புடன் கேட்டான் அவன்.

கவலை தோய்ந்த முகத்துடன் அவன் கேட்க, சில நொடிகள் அவனையே பார்த்தவள், தன்னையும் மறந்து சிரித்து விட்டிருந்தாள்

'தப்பு பண்ணிட்டு முழிக்கறதை பாரு' என்றவள் 'நீ சொன்னதும் ஒரு வகையிலே நல்லது தான். ஆனா சொன்ன  விதம் தான் தப்பு'.

பதில் சொல்லவில்லை அவன்.

'விடு. அவருக்கு இதெல்லாம் தெரிஞ்சுதான் ஆகணும். நானே சொல்லவும் முடியாம, மறைக்கவும் முடியாம ரொம்ப கஷ்டபட்டுட்டு இருந்தேன். இப்போ மனசு ரிலீவ்டா இருக்கு. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? விஷ்வா அவரோட அத்தை பையன் தான்'

அத்தை பையனா?

ஆமாம். அவங்க ரெண்டுபேருக்கும் கொஞ்சம் சண்டை. விடு எல்லாம் கொஞ்ச நாளிலே சரியாயிடும். சாப்பிட்டு முடித்து எழுந்து சென்று கை கழுவி  வந்தாள் அபர்ணா.

சிறிது நேரம் அவனுடன் பேசிவிட்டு அவள் கிளம்பும் போது மறுபடியும் கேட்டான் அஷோக்.

உனக்கு என் மேலே கோபம் இல்லையேடா?

'அதெல்லாம் ஒண்ணுமே இல்லை குரங்கு. நீ மனசை குழப்பிக்காதே. எனக்காக ஒண்ணே ஒண்ணு பண்ணு. விஷ்வா மேலே உனக்கு இருக்கிற கோபத்தை கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கோ. ப்ளீஸ். விஷ்வா ரொம்ப பாவம்.' என்றாள் புன்னகையுடன்.

சரிடா. வேறே எதுக்காக இல்லைனாலும் உனக்காக மாத்திக்கறேன். தேங்க்ஸ்டா குரங்கு' கையசைத்து வழி அனுப்பினான் அஷோக்.

அந்த நாள் முழுவதும் கடந்திருந்தது. அத்தையின் உடல் நிலையில் எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை. விஷ்வா ஒரு புறமும், பரத் ஒரு புறமும் சுற்றிக்கொண்டே இருக்க, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்திருந்தாள் அஸ்வினி.

இரவு ஒன்பது மணி அளவில் வந்தார் பரத்திடம் வந்தார் டாக்டர். அவர் எப்போதும் அத்தையை பரிசோதிக்கும் மருத்துவர் தான்.

'இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது மிஸ்டர் பரத். கொஞ்சம் மாசிவ் அட்டாக்தான் காலையிலே பார்க்கலாம். எல்லாத்துக்கும் தயாரா இருங்க. அவங்க பசங்க வந்திட்டாங்க இல்லையா?

அவர் சொன்ன விதமே பரத்தை கொஞ்சம் புரட்டிபோட்டது.

'யாரவது ஒருத்தர் மட்டும் இங்கே இருங்க. மத்தவங்க வீட்டுக்கு போயிட்டு காலையிலே வாங்க. இங்கே எல்லாரும் இருக்க வேண்டாம். ஹாஸ்பிடல் ரூல்ஸ்' என்றார் அவர்.

பரத்தின் தோளை தட்டிவிட்டு அவர் நகர, சட்டென சொன்னான் விஷ்வா 'நான் இங்கே இருக்கேன் நீங்க கிளம்புங்க.

இல்லைடா... நான் ... பரத் துவங்குவதற்குள்

எங்க அம்மாவை நான் பார்த்துக்கறேன்.... என்றான் அழுத்தமாக.

அந்த நிலையில் வேறெதுவுமே பேச தோன்றவில்லை பரத்துக்கு.

அஸ்வினியை அழைத்து சென்று வீட்டில் விட்டுவிட்டு, தனது காரை எடுத்துக்கொண்டு மறுபடி மருத்துவமனைக்கே வந்தான் அவன். மருத்துவமனையின் வாசலில் சாலையின் ஒரு ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு சீட்டின் பின்னால் சாய்ந்து கண்களை மூடினான் அவன். அவன் கண்களை மீறியது வெள்ளம்.

அத்தை... அவனது உயிரான அத்தை.... அத்தை தான் அவனது முழு பலம். அவனை தோளில் போட்டு வளர்த்து அவனை அழகாக செதுக்கியவள் அவள். அவளை விட்டு அவன் பிரிந்து இருந்த நாட்கள் மிக குறைவு அவள் அவனை விட்டு போய் விடுவாளா? அந்த எண்ணமே அவனை குலுக்கியது மொத்தமாக தளர்ந்து போயிருந்தான் பரத்.

அத்தை என்னை விட்டு போயிடாதே ... அத்தை.... வாய் விட்டு சொன்னான் அவன்.

என்னடா வாழ்கை இது? ஒரே இரவில் வாழ்கை இப்படி புரண்டு போகுமா என்ன? இப்படி ஒரு நிலையில்லாத வாழ்கையில் எதற்காகவாம் சண்டையும், சச்சரவுகளும், கோபங்களும் வெறுப்புகளும்? ஒரு பெருமூச்சு எழுந்தது அவனிடம்.

அதே நேரத்தில் தலையில்  இடி விழுந்தவனாக அமர்ந்திருந்தான் விஷ்வா.

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட புரியவில்லை அவனுக்கு. நேற்று மாலை அவர் கையால் சாப்பிட்டேனே. இன்று என் தாயை இப்படி ஒரு நிலையில் பார்ப்பேன் என்று நான் நினைக்கவில்லையே.

அவர் முகம் அவன் கண்ணை விட்டு அகலவில்லை. அவன் மனம் அவனை கேள்விகேட்க துவங்கியது. ஒரு மகனாக என்ன செய்து விட்டாய் உன் தாய்க்கு.?

பல லட்சங்களுக்கு அதிபதி. ஆனால் இந்த நிமிடம் வரை பெற்றவளுக்கென ஒரு புடவை கூட வாங்கிக்கொடுத்ததில்லையே நான்.....

என் தந்தையை நான் இழந்தேன்தான். அதே நேரத்தில் ஒரு கணவனை இழந்த வலி அவருக்கும் இருந்திருக்குமே. அதை நான் ஒரு முறை கூட உணர்ந்து பார்க்கவில்லையே. என் தந்தைக்கு பிறகு, ஒரு மகனாக நான் என் அம்மாவை தோளில் தாங்கிக்கொண்டிருக்க வேண்டாமா?  

'எதுக்குமா அவரை இங்கே வரச்சொன்னே? இத்தனை வருஷம் கழிச்சு திடீர்ன்னு உனக்கு என்னமா அவர் மேலே பாசம்.? இப்படி அவரை வரச்சொல்லி கொன்னுட்டியே மா?' அன்று அவரை பார்துக்கேட்டேனே? அந்த வார்த்தை என் தாயை மொத்தமாக கிழித்து போட்டிருக்குமோ?

நான் என் தாயை நிறையவே அழ வைத்திருக்கிறேனோ.? வாழ வேண்டுமே. நான் என் அம்மாவுடன், அம்மாவுக்காக கொஞ்ச நாள் வாழ வேண்டுமே. அவரை சிரிக்க வைத்து பார்க்க வேண்டுமே. நடக்காதா அது.? எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காதா?

மனம் தவிக்க அவன் கண்களில் நீர் பெருகியது.. எதுவுமே நம்மை விட்டு போய்விடும் என்று தெரியும் போதுதான் அதன் மதிப்பு புரிகிறதா?

நான் நினைத்திருந்தால் எப்போதோ என் அன்னையை என்னுடன் அழைத்து சென்றிருக்க முடியுமோ? நான் செய்ய தவறி விட்டேனா? வாழ்கையின் நல்ல தருணங்களை நான் இழந்து விட்டேனா?

அம்மா .... என்னை விட்டு போயிடாதம்மா..... வாய்விட்டு சொன்னான் விஷ்வா.

காரிலேயே அமர்ந்திருந்தான் பரத். மனதிற்குள் ஏதோ தோன்ற அபர்ணாவை அழைத்தான். காலையிலிருந்து அவளை அழைக்கவேயில்லை அவன்.

ஒரு யோசனையுடனே அவள் அழைப்பை ஏற்க 'அத்தைக்கு ரொம்ப உடம்பு சரியில்லைடா கண்ணம்மா' குரல் உடைந்தது. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா.

தனது மன பாரங்களை அவளிடம் கொட்டி தீர்த்தான் பரத்.

அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது. நாளைக்கு காலையிலே எல்லாம் சரியாயிடும். நீங்க வேணும்னா பாருங்க.' திரும்ப திரும்ப சொல்லி அவன் வேதனையை குறைக்க முயன்றுக்கொண்டிருந்தாள்.

அவன் அழைப்பை துண்டித்த சில நிமிடங்களில், விஷ்வாவிடமிருந்து அழைப்பு அவளுக்கு.

'அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது இல்லையாடா? நான் அவங்களை ரொம்ப வேதனை படுத்தி இருக்கேன்டா. அவங்க பிழைச்சு வரணும். நான் அவங்களை பத்திரமா, சந்தோஷமா பார்த்துக்கணும்'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.