(Reading time: 18 - 36 minutes)

ரண்டு நாட்களுக்குப் பிறகு,

ஹேய்… எதுக்குடி… நீ இப்போ குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துட்டிருக்குற?...

இல்ல பாலா… இன்னைக்கு வள்ளி லீவ்… சோ வ்ருதுணன் சார் வந்ததும் வேலை விஷயமா எதும் கேட்டார்னா, யார் அவர்கிட்ட போய் பதில் சொல்லுறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்…

இதுக்கு எதுக்குடி யோசிக்கணும்… நம்மள்ள யாராவது தான் போய் பதில் சொல்லணும்…

ஓஹோ… அப்படீங்களா மேடம்…

ஆமாடி… இப்போ அதுக்கு என்னாங்குற நீ?...

அப்படின்னா… இன்னைக்கு நீயே அவர்கிட்ட பதில் சொல்லு… என்று மஞ்சு இலகுவாக சொல்லிவிட்டு, பாலாவைப் பார்க்க…

அவள் முதலில் ஷாக் ஆனாலும், பின் சரி என்றதும் மஞ்சரிக்கு ஆஹா… நாம நினைச்சது நடந்திடும் போலேயே… என்ற சந்தோஷம் ஒட்டிக்கொண்டது…

என்ன பாலா, காலையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்குறாங்க போல உங்க ப்ரெண்ட்… ??... என்ன விஷயம் பாலா?... எங்கிட்ட சொன்னா நானும் சந்தோஷப்படுவேன்ல… என்றபடி மைவிழியன் அங்கே வர,

மஞ்சரி அவனை முறைத்தாள்… பாலாவுக்கோ சிரிப்பு வந்தது மஞ்சரியின் கோபம் பார்த்து…

என்ன பாலா?... இந்த கொளுத்துற அக்கினி வெயிலில் வெளியே நின்னாதான் எரிஞ்சு போயிடுவேன்னு நினைச்சேன்… ஆனா, இங்க சில பேரோட பார்வையே எரிச்சி சாம்பலாக்கிடும் போலேயே… என்று அவன் கேலி செய்ய…

என்ன சொல்லுறீங்க சார்… நிஜமாவா?... எனக்கு அப்படி எதும் தெரியலையே… ஏசி கூட போட்டிருக்காங்களே… எனக்கு யார் பார்வையும் அப்படி வித்தியாசமா தெரியலையே… என சொல்ல…

ஹ்ம்ம்… உங்களுக்கென்ன மேடம்…. எனக்குத்தானே எல்லாமே வில்லங்கமா அமையுது… என்று அவன் சற்றே சலித்துக்கொள்ள…

அடடா… என்ன மேட்டர்ன்னு சொல்லுங்க சார்… நான் முடிஞ்சா ஹெல்ப் பண்ணுறேன்… என்றாள் பாலா….

அடியே… முதலில் நான் சொன்ன வேலையை செய்யுற வழியைப் பாரு… அதை விட்டுட்டு தேவை இல்லாம அடுத்தவங்களுக்கு எதாவது உதவி செய்யுறேன்னு கிளம்பி போன நான் மனுஷியா இருக்கமாட்டேன் சொல்லிட்டேன்… என்று மஞ்சு கோபத்தில் பற்களைக் கடிக்க…

அய்யய்யோ… பாலா… உங்க ப்ரெண்ட் பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு…. நீங்களே எனக்கு உதவி செய்யுறேன்னு சொன்னாலும் எனக்கு வேண்டாம்ப்பா… ஆளை விடுங்க… என்று அவன் பெரிய கும்பிடு போட்டதும் மஞ்சு அவனை கொலைவெறியோடு பார்த்தாள்…

பின், மஞ்சு எழுந்து பாலாவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடித்துவிட்டு, தனியா மாட்டுவல்ல அப்போ உன்னை பேசிக்கிறேன்… என்று பாலாவிடம் சொன்னவள்,

என்னதான் குட்டிக்கரணமே சிலர் அடிச்சாலும் என் மனசு மாறாது… யாரிடமும் நான் பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை… என்று விழியனைப் பார்த்து கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றதும்,

சாரி… விழியன் சார்… என்றாள் பாலா…

மஞ்சு சொன்னதுக்கு நீங்க எதுக்கு பாலா சாரி சொல்லுறீங்க…

நான் அவ செஞ்சதுக்கு சாரி சொல்லலை… நான் செஞ்சதுக்கு சாரி சொன்னேன்…

நீங்க என்ன செஞ்சீங்க பாலா?...

இல்ல… சார்… அன்னைக்கு நான் உங்களைத் திட்டி கேவலமா பேசினேனே… அதான்…. சாரி… என்று தயக்கத்துடன் சொன்னவளைப் பார்த்தவன்,

யாரோ ஒருத்தங்கன்னா எனக்கு கோபம் வந்திருக்கும்தான்… ஆனா, என் தங்கச்சின்னு நினைச்சப்போ கோபமெல்லாம் வரவே இல்ல பாலா… அதான் உண்மை…

என்ன… என்ன சொன்னீங்க??...

கேட்கலையா… சரி சொல்லுறேன் இப்போ நல்லா கேட்டுக்கோ…. உன்னை தான் சொன்னேன்… தங்கச்சின்னு… போதுமா?... என்று அவன் நிறுத்தி நிதானமாக சொல்ல..

அவளுக்கு சந்தோஷம் வந்தாலும், ஒரு பக்கம் விரக்தி புன்னகை வந்தது…

அதைக் கண்டு கொண்டவன், இன்னைக்குன்னு இல்ல… உன்னை எப்போ பார்த்தேனோ, அப்பவே எனக்கு அப்படித்தான் கூப்பிட தோணுச்சு… சொன்னா நீ எதும் நினைச்சிப்பியோன்னு பயமா கூட இருந்துச்சு… அப்புறம் மஞ்சுவை காதலிச்ச பின்னாடி, உங்கிட்ட பேசுற ஒவ்வொரு தடவையும் சொல்லிடணும்னு தான் நினைப்பேன்… ஆனா, ஏதோ ஒரு தயக்கம் சொல்லவே விடலை… பட் இன்னைக்கு சொன்னதுல நிஜமாவே நான் ஹேப்பி… என்றவன், அவள் எதுவும் சொல்லாமல் இருக்கவும்,

உனக்கு ஒன்னு தெரியுமா?... மஞ்சுகிட்ட காதல் சொல்லக்கூட நான் நேரம் காலம் எல்லாம் பார்க்கலை… பார்த்ததும் பட்டுன்னு சொல்லிட்டேன்… ஆனா, உங்கிட்ட தங்கச்சின்னு சொல்லுறதுக்கு நான் எவ்வளவு பாடு பட்டேன் தெரியுமா?... என்று அவன் ஃபீல் பண்ணி சொல்லவும்,

பாலாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது…

குட்… இப்படித்தான் சிரிக்கணும்… அப்போதான் எனக்கும் என் தங்கச்சியைப் பார்க்க நல்லா இருக்கும்… என்று அவன் சொல்ல..

ஹ்ம்ம்…. என்றாள் அவள்…

சரிதான்… அண்ணன் அப்படிங்கிற வார்த்தை வர, ரொம்ப நாள் ஆகும்போலேயே… சரி வெயிட் பண்ணுறேன்… வேற வழி?... என அவன் உதடு பிதுக்கி இரு கைகளையும் விரித்து சொல்ல…

நீங்க சரியான ஆளு தான் விழியன் சார்… பேசியே ஆளை சரி பண்ணிடுறீங்க… ஹ்ம்ம்… ஆனா, அது மஞ்சு விஷயத்தில மட்டும் மிஸ் ஆகுதே ஏன்?...

அதெல்லாம் எப்போ எப்படி செய்யணும்னு உன் அண்ணனுக்கு தெரியும் தங்கச்சி… பார்த்துட்டே இரு…

ஹ்ம்ம்… பார்க்கத்தான் போறேன்… உங்க பராக்கிரமத்தை இல்ல… என் ஃப்ரெண்ட் கிட்ட நீங்க அடி வாங்க போறதை…

அய்யோ… பாலா… ஏன்மா உனக்கு இந்த கொலை வெறி?... நான் பாவம் இல்லையா?... இந்த அண்ணனுக்கு நீ கூட சப்போர்ட் பண்ண மாட்டியா?...

எப்படி சப்போர்ட் பண்ணுறதாம்?... அன்னைக்கு கொஞ்ச நஞ்ச கூத்தா பண்ணீங்க நீங்க?... செய்யுறதெல்லாம் செஞ்சிட்டு சப்போர்ட் பண்ணுன்னு சொன்னா எப்படி???

ஹ்ம்ம்… அன்னைக்கு நான் செஞ்சது தப்புதான்… அவ என்னோட வாழப் போற எதிர்கால வாழ்க்கையில அவ அழவேக்கூடாதுன்னு நான் நினைச்சேன்… அதனால தான் அன்னைக்கு அவகிட்ட அப்படி பேசி, அந்த ஒரு நாள் மட்டும் அவளை ஃபீல் பண்ண வச்சிட்டேன்… அப்புறம் அவகிட்ட சமாதானமா எடுத்து பேசி புரிய வச்சிடலாம்னு நினைச்சேன்… ஹ்ம்ம்… என்ன இருந்தாலும் நான் செஞ்சது தப்புதான்… என அவன் சொல்ல…

சமாதானமா??... அப்படி வேற ஆசை இருக்கா உங்களுக்கு?... நீங்க சமாதானம் பேசலாம் வான்னு வெத்தலை பாக்கு வச்சி கூப்பிட்டாலும் அவ வரமாட்டா… அது தெரியும்தானே?...

தெரியும் தங்கச்சி… நல்லாவே தெரியும்… ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்… அவ என் மேல கோபப்பட்டு பேசாம இருக்குறது கூட என் மேல அவளுக்கு இருக்குற காதல் தான்… அது எனக்கு நல்லாவே தெரியும்… அவளுக்கு என் மேல இருக்குற கோபம் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரும்னு நம்புறேன்… ஹ்ம்ம்… பார்க்கலாம்…

ஹ்ம்ம்.. ஆல் த பெஸ்ட்… நல்லதே நடக்கணும்னு நானும் வேண்டிக்கிறேன்… என்றவள் வ்ருதுணன் அவன் அறைக்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு, எம்டி சார் கிட்ட ப்ராஜெக்ட் பத்தி சொல்லணும்… வந்துடுறேன்… என்று சொல்லிவிட்டு சில அடி தூரம் நடந்தவள்,

திரும்பி நின்று விழியனைப் பார்க்க, அவன் என்ன என்ற கேள்வியுடன் அவளைப் பார்த்த போது,

தேங்க்ஸ் அண்ணா… என்றாள் அவள் நிறைந்த மகிழ்வுடன்…

யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் சிஸ்டர்… என்றவன், இதுதான் நீ எனக்கு சொல்லுற லாஸ்ட் தேங்க்ஸா இருக்கணும்… சரியா?... அண்ணனுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லக்கூடாது ஒகேயா?... என்று கேட்க…

டீல் அண்ணா… என்று சொல்லிவிட்டு வ்ருதுணனின் அறை நோக்கி நடந்தாள் பாலா…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.