(Reading time: 35 - 69 minutes)

02. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

வளை கைது செய்ய சொல்லி இருக்கிறானா? ஏன்? நடந்தவைகளுக்கு இவளை பழிதீர்க்கவா? இவ்வளவு கீழ்த்தரமானவனா ஆதிக்?

அவன் கண்களில் வெறி. அதிகார வெறி? அதிகாரமாக கண் அசைவால் சொன்னான் ‘உட்கார்’.

இது நின்று சண்டைபோடும் தருணம் அல்ல. அமர்ந்து கொண்டாள்.

Eppadi solven vennilave

மனதிற்குள் என்ன செய்ய வேண்டும் என இதற்குள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

அப்பாவை அழைத்தால் பரிதவித்துப் போவார். அதனால் தன் மொபைலில் வந்தனா ஆன்டியின் எண்ணை அழுத்தினாள். வந்தனா டிஜிபி.

சட்டென இவள் மொபைல் பறிபோனது. உபயம் அருகிலிருந்த பெண் காவலர்.               

நிமிர்ந்து பலம் கொண்ட மட்டும் ஆதிக்கை முறைத்தாள்.

“இது சரி இல்ல ஆதிக்…” முனங்கின அவள் உதடுகள்.

இவளுக்கு அடுத்தபடியாக ஒரு நாற்காலியை நகர்த்திப் போட்டு அந்த காவலரும் அமர்ந்து கொள்ள, வேறு வழி இன்றி இவள்.

மேடையில் பேசுவோர் பேச நடக்க வேண்டியது நடந்து எஸ்பி அதிரூபன் பரிசுகளை வழங்குவார் என்ற அறிவிப்பிற்கு பிறகு அவன் தயாராக நின்றான்.

அவார்டுகள் அறிவிக்கப்பட, இவள் பிரிவில் ரேயா ராஜ்குமார் என்ற பெயர் அழைக்கப்படவும் எழுந்தாள். இவளோடு சேர்ந்து அந்த பெண் காவலரும் எழ தனக்கு வழிவிடத்தான் என நினைத்து இவள் நன்றி சொல்லி மேடையை நோக்கி நடக்க, அந்த பெண் காவலரும் இவளை மேடை வரை பின் தொடர்ந்தார்.

கோபத்தின் சிடு சிடுப்பு இவளுள். அதை முகத்தில் தாங்கி மேடை ஏறினாள்..

“ஏய்….எம்.கே….கொஞ்சம் சிரியேன்….போட்டோ எடுக்றவங்க பயந்துட போறாங்க…” அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் மெல்லிய குரலில் குறும்பு கொப்பளிக்க அவன்.

முதன் முதலில் அவன் அந்த எம்.கேவின் விளக்கம் சொன்ன அந்த நிமிடம் ஞாபகம் வந்து இப்பொழுதும் உயிர் வரை சிலிர்க்கிறது. சே….இவன் வேறு ஒருத்தியின் கணவன். அன்றுமே இவன் மனதில் நான் இருந்தது இல்லை.

உயிர்வரை வலிக்கிறது. ஆனாலும் மேடையில் தான் இருப்பதை உணர்ந்து, ஒரு போலிப் புன்னகை புரிந்தவண்ணம் பரிசை பெற்றுக்கொள்ள கையை நீட்டினாள்.

நீட்டிய கையை சட்டென பற்றினான் அவன். சிலீரிட்டது சரீரம். திடும் என்றது உள்ளம். பயம் என்றது அறிவு.

மேடையில் இத்தனை பேர் முன்னிலையில் தன்னிடம் ப்ரச்சனை செய்ய முடிவு செய்துவிட்டானா இவன்? உண்மையில் இது ஆதிக் தானா?

முகம் காந்த, பற்றிய கையை இவள் உதற எத்தனிக்க, அவனோ அவள் கையை குலுக்கினான்.

சே! பதறிய மனதுக்கு எல்லாம் தப்பாகவே புரிகிறது என இவள் தன்னைத்தானே மனதிற்குள் திட்டிக்கொள்ள,

பற்றியிருந்த அவன் கையின் அழுத்தம் மெல்ல கூடியது. அவள் கையை அவன் இன்னும் விட்டபாடில்லை. அடி வயிற்றிலிருந்து ஒரு அலை சிலீர் என கிளம்பினாலும், மறுபுறம் மிரண்டு போனாள் ரேயா.

 திருமணமான பின்பு அதுவும் தன் மாமனாரை அருகில் நிறுத்திக் கொண்டு….அதுவும் இவளிடம்…

 இவன் என்ன சொல்ல வருகிறான்?

அவனிடமிருந்து மெல்ல கையை உருவினாள்.

அவன் கையிலிருந்த ஷீல்டை பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு திரும்பி நடந்தாள்.

அடுத்தும் அவள் பெயரே அறிவிக்கப்பட மீண்டுமாக அவனிடம் சென்று நின்றாக வேண்டிய நிலை.

“எங்க போனாலும் திரும்பி என்ட்டதான் வருவ கே.டி...…..”

அவன் கண்களில் அதே குறும்பு சிரிப்பு.

சே! அவன் சிரிக்கும்பொழுது கண்ணும் எப்படி சிரிக்கும் என்று கூடவா இவளுக்கு இன்னும் ஞாபகம் இருக்கின்றது.

அவனை மறந்துவிட்டதாக நம்பிக் கொண்டு இருக்கிறாளே அது சரியா? நெஞ்சுவலிக்க பரிதாபமாக அவனைப் பார்த்தாள். அதோடு இவனது இந்த கேடி வேறு…

“என்னை கூப்பிட்டது ப்ரின்ஸிபால்” வெறுப்புடன் சொன்னவள் திரும்பி நடக்க, மீண்டுமாய் அவள் பெயர் அறிவிக்கப்பட்டது.

மீண்டுமாக அவனிடம் சென்றவளை” இங்கயே நில்லு ரேயு” நிற்க சொன்னான். காது கேட்காதவள் போல் திரும்பி நடந்தாள்.

“ஏன் திரும்ப திரும்ப ஏறி இறங்குற…?” சற்று அதிகமான சத்தம்.

இவன் பேசியது சேர்மன் காதிலும் விழ, அவரும் “வெயிட் செய்து எல்லாத்தையும் வங்கிட்டு போம்மா” என்றவர் அவனிடமாக திரும்பி நம்ம காலேஜின் பெஸ்ட் ஸ்டூடண்ட் இவங்க தான் ” என்றார்.

“எங்க ஸ்கூல் ஸ்டூடண்ட் ஆச்சே… அதுவும் தென்கோட்டை காரங்கன்னா சும்மாவா?…..”ஆதிக்கின் பதிலில் சேர்மன் ஆனந்தமாகிப் போனார்.

 “நம்ம ஊர் பொண்ணாமா நீ…, அதான் காலேஜ் டாப்பர், கங்கிராஜுலேஷன்ஸ்…” படு உற்சாகமாக இவளைப் பாராட்டினார்.

அங்கிள்! என ஆச்சர்யதொனியில் அழைத்தான் ஆதிக் “ இது நம்ம ராஜ்குமார் அங்கிளின் டாட்டர் தெரியலையா?”

“வாட்…? படுவா முந்தா நாள் கூட உங்கப்பாவ பார்த்தேன்மா, ஒரு வார்த்தை என் பொண்னு உன் காலேஜில்தான் படிக்கான்னு சொல்லலையே……இருக்கு அவனுக்கு இன்னைக்கு…..அவன் என் வீட்டுக்கு வந்து சாரிடா…என் பொண்ணை வீட்டுக்கு அனுப்பிவைடானு கெஞ்சுற வரை உன்னை நான் எங்க வீட்ல இருந்து விடப் போறதில்லை…பங்ஷன் முடிஞ்சதும் நீ நேரே என் கூட நம்ம வீட்டுக்கு வர்ற….” சேர்மன் சொல்லிக் கொண்டு போக பதறி விழித்தாள் ரேயா.

சேர்மன் வீட்டிற்கா, ஆதிக்கை அவன் மாமனார் வீட்டில் வேறு போய் பார்க்க வேண்டுமா?

“இல்லை…” வேகமாக மறுத்தாள்.

அதற்குள் ஆதிக்கோ, அங்கிள்…பங்க்ஷன் முடியட்டும் பேசிக்கிடலாம் என பேச்சை திசை திருப்பியவன், அறிவிப்பாளரை நோக்கி கண்ஜாடை காட்ட மீண்டும் இவள் பெயரே அறிவிக்கப்பட்டது. இத்தனை பரிசு வாங்கியதற்காக நொந்து போனாள் ரேயா.

அவனோ “அங்கிளை நான் சமாளிச்சுகிறேன் ” மெல்ல சொல்லியபடி இவளிடம் இவளது கோப்பை மற்றும் சர்டிஃபிகேட்டை நீட்டினான்.

ஒரு கணம் பழைய ஆதிக் அவனுள் தெரிந்தான் அவளுக்கு. அவள் கேளாமலே உதவி செய்யும் ஆதிக்.

அவளுக்கான அனைத்து பரிசுகளும் வழங்கப்பட்டு முடிக்க, மேடையிலிருந்து இறங்க போனவளிடம் “கீழ போய் வெயிட் செய்……ஃபங்க்ஷன் முடியவும் நாம வெளிய போறோம்….” அவள் கண்களைப் படித்தபடி சொல்லி அனுப்பினான். முகமெங்கும் குறும்பு இருந்தாலும் அவன் விளையாடவில்லை என காண்பிக்கும் அழுத்தமும்.

இவனுடன் வெளியேவா?... இதயம் வாயில் துடிக்க தட தடவென இறங்கிப் போனாள் தன் இருக்கைக்கு. அந்த பெண் காவலர் தொடரத்தான்.

தன் இருக்கையில் அமர்ந்தவள் மீண்டும் மேடையை நோக்கி நிமிரவே இல்லை. சுகந்தியிடமிருந்த தன் கேமிராவில் பதிந்திருந்த புகைப்படங்களை உருட்டியபடி இருந்தாள். மனமோ கொதி களமாய்.

சேர்மன் ஒரு பக்கம் உரிமையுடன் இவளை அவன் இருக்கும் வீட்டிற்கு வா என்கிறார். அவர் மருமகனோ மறுபக்கம் என்னோடு வெளியே வா என்கிறான். என்ன தைரியம் இருந்தால் இவன் இவளை இப்படி கூப்பிடுவான்?

எப்போது இப்படி மாறினான்? அவனுக்கு திருமணமாகிவிட்ட செய்தியை ஜீரணம் செய்யவே மனம் பலமின்றி தள்ளாடுகிறது, இதில் இவனின் தொந்தரவு வேறு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.