(Reading time: 35 - 69 minutes)

றத்தாழ சதுரம் போல இருந்த அந்த வளாகத்தின் மையபுறம் திறந்த வெளியாக இருக்க, அந்த திறந்த வெளியை சுற்றிலுமாக ஓடியது அந்த காரிடார். அருகிலிருந்த அறைகளின் சுவர்கள் பெரும்பாலும் கண்ணாடி.

காரிடாரில் நடந்தபடி பார்க்க முடிந்த அறைகளை பார்த்தபடி நடந்து வந்தாள் ரேயா.

அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால் என்ன?

மெல்ல ஒரு காலை எடுத்து உள்ளே வைத்தாள். யாரும் உள்ளே வரக்கூடாது என தடுக்கவில்லை.

மெல்ல உள்ளே நுழைந்தாள். அது மிக சிறிய அறையாக இருந்தது. அதன் மறு புறமும் வாசல். அதோடு அறையின் ஒரு சுவர் முழுவது கம்ப்யூட்டரின் யூபிஎஸ் போல எதுவோ…20 25 எண்ணம், வயர்களால் இணைக்கப் பட்டு…

என்னதிது..?

அடுத்த வாசல் புறமிருந்து பேச்சு சத்தம்.

“டேய் ஆதிக்….அப்பவே நான் கிளம்புறேன்…லேட் ஆகிட்டுன்னு குதிச்சுகிட்டு இருந்த…இன்னும் இங்க என்ன செய்துட்டு இருக்க….?’

அதுதான் இவள் முதன்முறையாக அவன் பெயரை அவள் கேட்ட நேரம்.

“ஷ்ஷ்….மெதுவா பேசு தாயே….இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுறேன்..….” அதன்பின் இருவர் மெதுவாக பேசிகொள்ளும் சத்தம். இவளுக்கு எதுவும் கேட்கவில்லை.

இவள் கவனமும் அதில் இல்லை. ஆனால் அந்த சத்தம் வந்த திசையிலிருந்த வாசலுக்குள் நுழையலாமா வேண்டாமா என இவள் யோசித்துக் கொண்டிருந்தாள் அங்கு என்ன இருக்கும்? 

இவள் கவனம் அந்த வாசல் புறமிருக்க…

அதற்குள் இவள் அருகில் “ஏய்…. நீ…இங்க என்ன செய்ற…?” கிட்டதட்ட கர்ஜித்தது ஒரு குரல். வெள்ளை நிறத்தில் வேட்டை நாய் முகபாவத்துடன் ஒருவன்.

மிரண்டு போய் இரெண்டெட்டு பின் வைத்தாள் ரேயா.

“ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூட்ண்டா…? இங்க எதுக்கு வந்த..? இது என்ட்ரி ரெஸ்ட்ரிக்டட் ஏரியா…”

“அது…வந்து…” இவள் திணற

“பொண்ணுங்கன்னா யாரும் எதுவும் கேட்க மாட்டாங்கன்னு நினைப்பு..? ஈ ன்னு இளிச்சு வச்சா போதும் எல்லாரும் விட்டுறுவாங்கன்னு தைரியம்…?..” அந்த வெள்ளையன் பொறிந்து கொண்டு போக ரேயாவிற்கு அதாக அழுகை வந்தது.

“நீ வாடி….இன்னைக்கு டைரக்டர்ட்ட இதை கொண்டு போகாம விடமாட்டேன்….நியாயம்னு ஒன்னு இருக்குல்ல….”

ஆனால் அதே நேரம் உள்ளிருந்து ஒரு ஆண் குரல் வெகு நிதானமாக  “பொன்ராஜ் சார் அவளுக்கு சித்தப்பாதான் வேணி….நீ டென்ஷனாகாத…அவர் பார்த்துப்பார் இவ இங்க என்ன நடந்ததுன்னு அவர்ட்டயே சொல்லட்டும்….” என்றது.

அசந்து போனாள் ரேயா.

பொன்ராஜ் சித்தப்பாவா…..? யாரிந்த புண்ணியவான்..…?ஒரே நிமிஷத்துல டைரக்டரை எனக்கு சித்தப்பாவா ஆக்கிட்டானே...

அந்த வெள்ளையன் முகம் இப்பொழுது மாறிய விதத்தைக் காணவேண்டுமே…

“மேம் டைரக்டர் சார் ரிலடிவா மேம் நீங்க…..சாரி மேம்…வெரி சாரி மேம்…..ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ல…வெரி சாரி…”

இவள் திரு திருவென முழித்தாள். இப்பொழுது இவள் உள்ளே வந்தது நியாயமாகிவிட்டதாமா?

அந்த அவன் சென்ற இடம் தெரியவில்லை.

சிரிப்பாகவும் வந்தது. அதே நேரம் டைரக்டரை இவளுக்கு இன்ஸ்டெண்ட் சித்தப்பாவாக்கிய அந்த புத்திசாலி பொய்சொல்லியை காணவேண்டும் என்றும் தோன்றியது.

ஆனால் அதற்குள் அப்பாவும் ஷாலுவும் அங்கு அறையைவிட்டு வெளியே வருவது தெரிந்தது.

“பொய் சொல்லி யாருக்கும் ஹெல்ப் செய்ய முடியாது ….இன்ஸ்டன்ட்டா தப்பிக்கிற மாதிரி தெரிஞ்சாலும் பின்னால அதால கண்டிப்பா கஷ்டம்தான் படுவாங்க….” சத்தமாக சொல்லிவிட்டு இவள் அவசரமாக வெளிபக்க வாசலை நோக்கி ஓட

அந்த ஆதிக் சொல்வது காதில் கேட்டது. “ பொய் சொல்றதுதான் தப்பு…..எனக்கு மாமான்னா உனக்கு சித்தப்பா தான்…..நான் சொன்னது பொய் இல்லை…”

முதலில் ஒன்றும் புரியாவிட்டாலும் காரிடாரில் பாதி தூரம் வரவும் அதன் அர்த்தம் வேறாக உறைக்க திரும்பி பார்வைக்கு கிடைக்கிறனா என அந்த உருவம் தெரியாதவனை தேடினாள் ரேயா. யாருமில்லை.

அதற்குள் அவள் அப்பா அருகில் வந்திருந்தார்.

ப்பொழுது அவள் ஊரான தென்கோட்டையில் ரேயா 12 படித்துக் கொண்டிருந்தாள். ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸர் அப்பாவும் அவளும் மட்டும்தான் வீட்டில். ஷாலு ஹாஸ்டலில் இருந்தாள்.

அன்று அவள் மாவட்ட ஸ்போர்ட்ஸ் சோனல் மீட். இவர்கள் ஊர் அரசு ஆண்கள் மேல்னிலைப் பள்ளியில் நடை பெற்றது. பள்ளியின் டீமில் இவளும் இருந்தாள். லாங் ஜம்ப் மற்றும் 100 மீட்டர் ஓட்டம் இவளது ஆட்டம்.

அப்பாவிற்கு ஒரு பழக்கம் உள்ளூரில் இருக்கும் பள்ளிக்கு காரில் அனுப்ப மாட்டார். “மத்த யாரும் கார்ல வரலைங்கிறப்ப நாம மட்டும் அப்டி போனா நல்லா இருக்காது” என்பார்.

தென்கோட்டை கிராமும் அல்லாமல் நகரமும் அல்லாத ஒரு சிறு நகரம். மொத்த ஊரில் இவள் அப்பாவை தெரியாதவர் யாராவது இருந்தால் அதிசயம். ஆனாலும் “தேவையில்லாம அடுத்தவங்க நம்மள திரும்பி பார்க்கிற மாதிரி வச்சுக கூடாது“ என்பார்.

எது எப்படியோ இவளுக்கும் தனியாக காரில் செல்வதை விட மற்ற தோழிகளுடன் பேருந்தில் சென்று வருவதே சமீபகாலம் வரை பிடித்திருக்கிறது.

இன்று விளையாட்டு போட்டி முடியும் நேரமும், பள்ளி முடியும் நேரமும் ஒன்றாக இருந்ததால் பள்ளி பேருந்து பள்ளியில் இருந்த பெரும்பான்மை மாணவிகளுக்காக சென்றுவிட, விளையாட்டு போட்டிகளுக்கு சென்றிருந்த மாணவிகளை அவரவர் செல்ல வேண்டிய இடத்திற்கேற்ப அரசு பேருந்தில் ஏற்றிவிட்டு விடைபெற்றார் இவர்களது விளையாட்டு ஆசிரியை குணசுந்தரி.

பேருந்து நிலையத்திலிருந்து அடுத்த நிறுத்தம் இவளது வீடு.

பேருந்து கிளம்பியவுடன் இவள் எதிரில் வந்து நின்றான் ஒரு சுருட்டை முடிக்காரன் “ ஹாய் ரேயா “ என்றபடி.

இப்பொழுது எப்படியோ ஆறு வருடங்களுக்கு முன்னதாக தென் கோட்டையில் அரசு பேருந்தில் அனைவர் முன்னிலையில் ஒரு ஆணும் பெண்ணும் நட்பு பாராட்ட முடியாது. அது காதலாக பார்க்கப்பட்டு காறி உமிழப் படும்.

அதுவும் பெரும்பான்மையானவர் ஒருவருக்கொருவர் தெரிந்தவர் என்ற நிலையில் இன்ஸ்டெண்ட் அறிவுரையில் ஆரம்பித்து அடி தடி வரை ஆன் த ஸ்பாட் கிடைக்கும்.

அதுவும் ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸர் அப்பா காதல் விஷயத்தில் கொலை செய்ய கூட தயங்க மாட்டார் என்பது இவளுக்கு தெரியும்.

ஆக அவனது ஹாயில் அரண்டு போனாள் ரேயா.

அவனை இந்த விளையாட்டுப் போட்டியில் வாலண்டியர் பணி செய்ய பார்த்திருந்தாள் ரேயா.

அவ்வப்போது இவளது குணசுந்தரி மேடத்திடம் வந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தான். 

மேடம் கூட இவனை குமார் குமார் என்று மிகவும் தெரிந்தவன் போல் பெயர் சொல்லி கூப்பிட்டு கொண்டிருந்தார்கள்.

மேடத்தின் உறவினனாய் இருப்பான்.

இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்?

இவனும் இந்த தென்கோட்டை காரன் தானே…? இந்த ஊரைப் பற்றி இவனுக்கு தெரியாதாமா?

இழுத்து இவனுக்கு இரண்டு அறைவிட்டால் இந்த இடத்தோடு இவளுக்கு முடிந்துவிடும் ப்ரச்சனை. அறைய வேண்டிய அவசியம் கூட இல்லை. குரலை உயர்த்தி திட்டினால் போதும்.

இவள் தொடங்கியதை முடிக்க வேண்டியவிதமாய் முடிக்க ஆட்கள் இருக்கிறார்கள் இப் பேருந்திலேயே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.