(Reading time: 35 - 69 minutes)

மெல்ல திறந்து பார்த்தாள். முதல் பக்கத்திலேயே எழுதி இருந்தது. ஆதிக், அடுத்து அவன் பல்கலைகழக பெயர், அதோடு அவனது மொபைல் எண். இ.மெயில்.

சட்டென நோட்டை மூடி வைத்துவிட்டாள். இவனை தொடர்பு கொண்டு அடுத்த புலிவாலை பிடிக்கவா?

ஆனால் யார் இவன்? வந்தது எதற்காக? எப்படி அறிந்தான் இத்தனையும்? கேள்விகள் குடையத்தொடங்கின ரேயாவை.

ங்கு ஷாலு கல்லூரி ஹாஸ்டலில் தங்கி இருந்தாள். வார இறுதி நாட்களில் அவளது சித்தப்பாவின் வீட்டிற்கு செல்லவேண்டும் என்பது அப்பாவின் ஏற்பாடு. இரண்டாம் குழந்தைக்கே உரிய துடுக்கு தனமும், சில நேரங்களில் தோன்றும் ஒருவித தைரியமும் உண்டு ரேயாவிற்கு.

ஆனால் அப்படி எதுவும் கிடையாது ஷாலுவிற்கு. சேஃப்டி, பொம்ளபிள்ளைக்கு பேர் முக்கியம் என ஒவ்வொரு காரணத்திற்காய் அப்பாவின் இரும்பு கைக்குள் அடங்கி பயந்து வளர்ந்தவள் அவள். பயம் பாதுகாப்பு உணர்வு என்ற இரண்டை தவிர வேறு உணர்வுகள் எதையும் அவள் உணர்ந்ததே இல்லை என்ற அளவிற்கு இதுவரை இருந்தது வாழ்க்கை.

இன்றும் அவள் தனியாக அவளது சித்தப்பா வீட்டிற்கு கிளம்பி செல்ல வேண்டும் என்றதும் பயந்து போய் இருந்தாள்.

போனில் அழைத்த சித்தப்பாவிடம் இவள் பேசிய விதத்திலேயே அவர் புரிந்து கொண்டார் போலும்…”சித்தப்பா கார் அனுப்றேன்டா…வெயிட் பண்ணு…’ என்று தீர்வு சொன்னார்.

நிம்மதியாக இருந்தது. சந்தோஷமாகவும். இவளுக்கு எப்பொழுதாவது வந்து போகும் இந்த சித்தப்பா வீடு பிடிக்கும். சித்தப்பாவும் சரி சித்தியும் சரி பாசமாக நடந்து கொள்வார்கள். அவர்கள் வார்த்தையிலும் அது வெளிப்படும்.

அவர்களின் இரட்டை குட்டிகளானா ஆதவ், பூரவ் இவளது மகிழ்ச்சியின் அடுத்த காரணம்.

ஆக ஆசையாக கிளம்பி காத்திருந்தாள் வெள்ளி மாலை.

சித்தப்பா கார் கண்ணில் தட்டுப்பட வேகமாக எழுந்து போய், அவசரமாக அதன் பின் கதவை திறந்து ஏறப் போனாள். அப்பொழுதுதான் கவனித்தாள் டிரைவர் சீட்டில் புதியவன்.

சித்தப்பா வர மாட்டார் என தெரியும். “கண்டிப்பா போயே ஆக வேண்டிய ஒரு வெட்டிங் ரிஷப்ஷன்டா ஷாலு….நீ வீட்டுக்கு வா….எவ்ளவு சீக்கிரம் முடியுமோ அவ்ளவு சீக்கிரம் நாங்க வந்துடுறோம்” என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் ரொம்ப வருடமாக உள்ள டிரைவர் என்பதால் அவளுக்கு சித்தப்பா வீட்டின் டிரைவருடன் தனியாக செல்வது ஒன்றும் வித்யாசமாக படவில்லை. ஆனால் இந்த புதியவன்?

உட்கார்ந்திருந்தாலும் திடகாத்திரமான இளைஞன் என தெரிகின்றது. இவனுடன் தனியாகவா? கிண்டியிலிருந்து வேளச்சேரி செல்ல எவ்வளவு நேரமாகும்? அதற்குள் இவன் எதாவது செய்துவிட்டால்?

பயந்தபடி ஏறி பின்னிருக்கையின் ஒரு ஓரத்தில் ஒடுங்கினாள்.

“ஒரே நிமிஷத்தில என்னை ட்ரைவராக்கிட்ட….க்ரேட் ஷாலு…” என்றபடி காரை கிளப்பினான் அவன்.

எடுத்தவுடன் ஒருமையில் பேசுகிறான். இவன் சரி இல்லை. மனதிற்குள் குறித்தாள் பெண். அதுவும் முன்னிருக்கையில் இவன் அருகில் உட்காரவில்லை என்று குறை வேறு சொல்கிறான்.

என்னதான் சிட்டி என்றாலும் முன்னபின்ன அறிமுகமில்லாத பெண்ணிடம் இப்படித்தான் பழகுவதா?

கார் செல்ல தொடங்கியது.

“ஹாஸ்ட்டல் எப்டி இருக்கு ஷாலு?..செட்லாயிட்டியா…?”

“ம்”

“காலேஜ் பிடிச்சிருக்கா?”

“ம்’

“ஃப்ரெண்ட்ஸ் செட் ஆகிட்டாங்களா…?”

“ம்”

“லைப்ரரி நல்லா இருக்குதா?”

“ம்”

“கேம்பஸ்ல கேண்டீன் இருக்குதான?”

“ம்”

“நீ இப்ப என்னை சைட் அடிக்கிறதான?”

“ம்….ஆங்க்…இல்ல…”

“அது….உண்மை வெளிய வருது பாரு…கிளம்பின நேரத்துல இருந்து நீ என்னை முறச்சு முறச்சு பார்க்கிறப்பவே நினச்சேன்….”

“ஐயோ…அப்டில்லாம் எதுவும் இல்ல..”

“ஒரு அழகான பையன பார்த்ர கூடாதே….இந்த காலத்துல ஆம்ள பையங்களுக்குதான் கொஞ்சம் கூட பதுகாப்பே இல்லை…”

“நான் அப்டில்லாம் இல்ல….நீங்க தான் தேவையில்லாம பேசிகிட்டே வர்றீங்க…”

“பொறுக்கின்னு சொல்ற”

அவளிடம் பதில் இல்லை.

அடுத்து அவனும் எதுவும் பேசவில்லை.

சற்று நேரம் கழித்து காரை நிறுத்தினான். அது ஒரு ட்ரைவ் இன் ஹோட்டல். இவன் எங்கு கூட்டி வந்திருக்கிறான்? ஏன்?

“எனக்கு வீட்டுக்கு போகனும்…”

“கண்டிப்பா வீட்டுக்குத் தான் போக போறோம்….ஆனா சாப்டுட்டு….அங்க வீட்ல சாப்ட இப்போ ஒன்னும் இருக்காது….”

“பரவாயில்லை நான் எதாவது செஞ்சு சாப்டுகிடுவேன்….வீட்டுக்கு போவோம்…”

“கரெக்ட்…நீ செஞ்சு சாப்டுகிடுவ….பட் மதியமே சாப்டாத…சமையலே தெரியாத நான் என்ன செய்றதாம்?”

“……………………”

“தெரியுமே உங்களுக்கும் தாரேன் சொல்ல உனக்கு மனசு வராதே…..ஆனால் நான் நல்லவன்மா….பார்க்க வச்சு சாப்ட என்னால முடியாது….ஹோட்டல்ல ஒரே டேபிள்ல உட்கார்ந்து சாப்ட நீ ஒத்துக்க மாட்ட….அதான் இங்க வந்தேன்… உட்கார்ந்திருக்க இடத்தில இருந்தே சாப்டுகோ….கிளம்பிடுவோம்….”

இவன் வாங்கிதர்ற சாப்பாட சாப்டுறதா?

“எனக்கு சாப்பாடு வேண்டாம்…”

“இங்க சாப்பாடு நல்லாத்தான் இருக்கும் ஷாலு…”

“இல்ல…வேண்டாம்…”

“ரெண்டு தோசை மட்டுமாவது சாப்டு ஷாலு…இல்லனா இடியாப்பாம் தேங்கா பால்...ஸ்வீட்டா இருக்கும்…”

ரியர்வியூவில் தெரிந்த அவனை முறைத்தாள்.

இரண்டு பேருக்கும் இடியாப்பம் ஆர்டர் செய்தான்.

வந்த உணவை இவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

நான் வேண்டாம்னு சொல்றேன்….நீ பாட்டுக்கு ஆர்டர் செய்ற….நீ சொன்னா நான் செய்துடனுமா…?

அவனும் அடுத்து எதுவும் பேசவில்லை.

அவன் சாப்பிட்டு முடிக்கவும், இரண்டு தோசை பார்சல் வாங்கியவன், காரை கிளப்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.