(Reading time: 34 - 67 minutes)

" ஹே நிலா நில்லு " என்று பாக்கியம் அதட்டல் போட அதற்கும் பதில் இல்லாமல் அங்கிருந்து நகர்ந்தாள்  அவள் ..

" இவளை என்னன்னு  சொல்றதுன்னே தெரியல மாப்பிளை " என்று பெருமூச்சு விட்டார் அவர் ..

" விடுங்க அத்தை .. அவ அவளுக்கு பிடிச்ச மாதிரி இருக்குறது தான் எனக்கும் பிடிச்சிருக்கு .. " என்றவன் பாக்கியத்திற்கு சமையல் செய்ய உதவ தொடங்கினான் ..

" அட என்ன மாப்பிளை இதெல்லாம் நீங்க பண்ணிகிட்டு ?"

" ஏன் , என் அம்மாவிற்கு நான் பண்ண மாட்டேனா ?" என்று இயல்பாய் கூறியவன், அவன் உதிர்த்த வார்த்தைகளை அப்போதுதான் ஆராய்ந்தான் .. சட்டென அன்னையின் நியாபகம் வந்தது அவனுக்கு .. அவனை திட்டலாம் என்று அங்கு வந்த தேன்நிலா  அவனது வாடிய முகத்தை கண்டதும் உருகியே விட்டாள் .. இருந்தாலும் இன்னொரு பெண்ணை பார்க்கிறேன்னு சொல்றதுக்கு என்ன தைரியம் வேண்டும் இவனுக்கு ? என்று அவளது குறும்புத்தனம் தலைநீட்ட, குளிர்சாதன பெட்டியில் இருந்த கேக் அவளுக்கு நியாபகம் வந்தது ..

" மது என்றாலே தித்திக்கும் , இன்னைக்கு முகமே எந்த கேக் அபிஷேகத்தினால் தித்திக்க போகுது " என்றவள் , பூனை நடைபோட்டு அந்த கேக்கை எடுத்து கொண்டு சமையல் அறையில் இருந்து வெளிவந்தாள் ..

" மதூ .... " என்று செல்லமாய் குழைந்தபடி அவனை கூப்பிட்டாள்  நிலா .. அவள் சமையலறை வெளியில் ஒளிந்து நின்று கொள்ளவும் , அவள் குரலில் இருந்தே ஏதோ திட்டம் போட்டு விட்டாள்  என்பதை உணர்ந்து கொண்டான் மதியழகன் .. " எஸ் வரேன் " என்று அவன் குரல் கொடுக்கவும் தயாராய் நின்றாள்  நிலா .. அவனோ , சமையலறையில்  பின்னே இருந்த வாசலின் மூலமாய் வரவேற்பு அறைக்குள் நுழைந்தான் ..

அவனுக்கு முதுகு காட்டிய படி சமையலறையை நிலா எட்டி பார்க்க, அவளை பின்னாலிருந்து அணைத்து  அவள் கைகளை சிறைபிடித்து அதே கேக் மூலம் அவள் முகத்தில் கோலம் போட்டிருந்தான் மதியழகன் .. அவனது திடீர் அணைப்பிலும் , தாக்குதலிலும் திக்கி தடுமாறி நின்றாள்  தேன்நிலா .. இவை எல்லாம் நடந்தது சில நொடிகளில் தான் .. அதற்குள் சுதாரித்து அவன் பக்கம் திரும்பியவள்,

" ஹே திருட்டு பூனை .. என்ன கோலம் பண்ணி வெச்சிருக்க நீ ?

மது நான் உன்னை சும்மா விட மாட்டேன் " என்று கத்திக்கொண்டு அவனை துரத்த

" ஐயோ அத்தை , வந்து என்னை காப்பாற்றுங்க " என்று மதி குரல் கொடுக்க, பதறியடித்து கொண்டு ஓடி வந்த பாக்கியமோ அங்கு கண்ட காட்சியை கண்டு தலையில் கைவைத்து கொண்டார் .. நிலாவிற்கு சரிசமாய் மதியழகனின் முகத்திலும் கேக் பூசப்பட்டு இருக்க , (அது எப்படின்னு நீங்களே கற்பனை பண்ணிக்கணும் சரியா ? ) இருவரும் கைகளில் குட்டி தலையணையை வைத்து கொண்டு போர் வீரர்களை போல நின்று கொண்டிருந்தனர் ..

" மது ஒழுங்கா நில்லு "

" வேணாம் பேபிம்மா , வலி தாங்க முடியல அப்பறம் நான் அழுதிடுவேன் "

" அழு எனக்கென்ன ? என்னை விட்டுட்டு அந்த அருக்காணியை சைட் அடிக்கலாம்னு பார்கரியா நீ ? அதையும் என் முன்னாடியே சொல்லுற  ? என்ன தைரியம் உனக்கு ? உன்னை சும்மா விட மாட்டேன் இரு " என்று துரத்தினாள்  அவள் .

" நிலா !!” என்று அதட்டல் போட்டார் பாக்கியம்

" அம்மா , உள்ளே போ " என்று பாஷா பாணியில் கூறி பாக்கியத்திடம் இருந்து மேலும் சில அர்ச்சனைகளை வாங்கி கொண்டாள்  நிலா.. ஒருவழியாய் இருவரையும் சமாளிப்பதற்குள் அவருக்குதான் போதுமென்றாகிவிட்டது .. மதியழகனிடம் விரல் உயர்த்தி கண்சிமிட்டி ஒழுங்கு காட்டியபடி தனதறைக்குள்  நுழைந்து கொண்டாள்  தேன்நிலா  .. அன்று நாள்  முழுக்க அவளோடுதான் நேரம் ஒதுக்குவதாய் இருந்தான் மதி ..

" என்ன மது .. எப்பவும் பம்பரம் போல சுத்திகிட்டே இருப்ப , இப்போலாம் பம்பரம் நிலாவை மட்டும் சுத்துது போல ?" என்று கண்சிமிட்டி வினவினாள்  நிலா ..

" கள்ளி , இப்படி மதி மயங்குற மாதிரி பார்த்து வெச்சா , எப்படி டீ வேலைய பார்க்க மனசு வரும் ?" என்று மனதிற்குள் கூறியவன்

" அதில்லைடா, ஷக்தி - மித்ரா கல்யாணம்னு நான் கொஞ்சம் பிசி ஆகிட்டேன் .. உன்கூட சரியா நேரம் ஒதுக்கவே முடியலையா அதுனாலதான் " என்றான் மதி .. அவன் அப்படி கூறவும் , அதுவரை அவன் விரல்களை பிடித்து விளையாடி கொண்டிருந்தவள் சட்டென , அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்  .. பிறகு

" மது, என் முகத்தை வலது பக்கம் இருந்து பாரேன் , இப்போ இடது பக்கம் பாரேன் " என்று இருபுறமும் முகத்தை அவனுக்கு காட்டினாள் .. குழிவிழும் கன்னங்கள் அவனை அருகே வாவென்று அழைக்க, இவள் என்ன சொல்ல வருகிறாள் ? என கேள்வியாய்  பார்த்தான் மதி ..

" என்ன குட்டிமா ?"

" அச்சோ மக்கு மது , எனக்கு சின்ன வயசுலேயே காது குத்தியாச்சு .. அது உன் கண்களுக்கு தெரியுதா ? சோ நீ புதுசா எனக்கு காது  குத்த வேணாம் " என்றாள் ... லேசாய் அசடு வழிந்தான் மதி ..

" அது ஒன்னும் இல்லடா , ஒரு ரெண்டு மூணு நாளாய் நிறைய பேரோடு கலகலன்னு இருந்துட்டு இப்போ நானும் அம்முவும் மட்டும் வீட்டில் இருக்க ஒரு மாதிரி இருந்தது ..ஷாந்தனு  வேற பாட்டி வீட்டுக்கு போயிட்டான் .. அதான் " என்றான் மதி சிறுபிள்ளை போல .. நிலாவும் அன்றிலிருந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறாள் .. ஷக்தியின்  குடும்பத்தினரோடு அறிமுகமாகிய மதி , அவனது பெற்றோரிடமும் , மித்ராவின் பெற்றோரிடமும் மிகவும் இணக்கமாகவே இருந்தான் .. ஆதியின் பெற்றோரிடம் கூட நல்ல பெயர் வாங்க தவறவில்லை அவன் .. அவன் தனது பெற்றோரை நாடுவதை தேன்நிலா  உணர்ந்தாள் .. இதுதான் சரியான சமயம் என்று மனதில் தோன்றியதை எடுத்துரைத்தாள் ..

"நான் ஒரு விஷயம் சொல்லவா மது ??"

" சொல்லு குட்டிமா "

" 24 மணி நேரம் கூட போதாமல் ஓடிகிட்டே இருக்கிற மதியழகனுக்கே தனிமை உணர்வு லேசாய் எட்டி பார்க்கும்போது, வீட்டில் தனியாய் இருக்கும் அம்மு பாட்டிக்கு இந்த தனிமை உணர்வு வந்திருக்காதா ?"

" ..."

" யாருதான் தப்பு பண்ணவில்லை மது ? எல்லாருமே ஏதோ ஒரு சூழ்நிலையின் காரணமாய் தவறான முடிவுகள் எடுக்குறது சகஜம் தானே ? அதற்காக உறவே வேணாம்னு ஒதுக்கி வைக்கிறதில் என்ன நியாயம் இருக்கு ?"

" ..."

" அப்படியே பிரிவுதான் அவங்களுக்கு தண்டனைன்னாலும் அந்த தண்டனைக்கும் ஒரு கால அவகாசம் இல்லையா ? எல்லாருக்கும் சந்தோஷத்தை கொடுக்குற என் மதுவுக்கு , அவருடைய அம்மா அப்பாவை தண்டிக்கிற குணம் மட்டும் எப்படி வந்தது ?" . மிகவும் தன்மையாய்  அதே நேரம், அவனுக்கு புரியும் விதத்தில் எடுத்து கூறினாள்  தேன்நிலா .

 " ஐ லவ் யூ மது .. எனக்கு என்ன தேவைன்னு என்னையே உணரவிடாமல் எல்லாத்தையும் பார்த்து செய்யுற என் மதுவுக்கு நானும் சந்தோஷத்தை தரணும்னு நினைக்கிறதில் என்ன தப்பு  இருக்கு ? "

"..."

" நம்ம குடும்பம் நிறையணும் மது .. வீடு முழுக்க சொந்த பந்தம், எல்லாரோடும் சலுகையாய்  செல்லம் கொஞ்சி, அப்பபோ உன்னோடு கண்ணாமூச்சி ஆடி,  உன் பொறுமையின் அளவை சோதிச்சுகிட்டே  இருக்கணும்னு எனக்கு ஆசையா இருக்குடா குட்டிபையா "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.