(Reading time: 34 - 67 minutes)

பிரிவிலே சுகம் கண்டேன்

அத்தை மகனே  !

நான் கண்ணீரில்

வைரம்  எடுத்தேன்

என்னவனே  !

உன்னோடு சேர்ந்து 

உன் கைகள் கோர்த்து

உன் விழி பார்த்து

ஒவ்வொரு நொடியும் லயித்திருந்தால்

மணி நேரத்தில் ஒருமுறைதான்

உன்னை எண்ணி ரசித்திருப்பேன் !

ஆனால் ,

என் விழிகளிலிருந்து நீ தொலைந்ததும் 

என் கையணைப்பில் இருந்து நீ பறந்ததும்

வினாடிகளுக்குள் இருக்கும் நொடிகளுக்கு எல்லாம் 

உனது நினைவுகளை காணிக்கையாய் கொடுக்கிறேன் !

பசியென்று உணவை ருசிக்கிறேன்

உன் சமையலின் நினைவு !

குளிர்ந்த நீரில் முகம் துடைத்தால்

உன்  ஈரவிழிகளின் நினைவு  !

காற்று வந்து கூந்தல் கலைத்தால்

உன் விரல்களின் நர்த்தனங்களின் நினைவு !

சூரியனின் கதிர்கள்  கண்கூசிட வைத்தால்

உன் பளிச்சிடும் புன்னகையின் நினைவு !

நடந்துசெல்லும் பாதையில் 

ஒவ்வொரு ஆண்மகனின் சாயலிலும்

உனது   முகத்தை காணுகிறேன்

கம்பீரமான குரல் எத்திசையில் இருந்து வந்தாலும்

என் செவியோரம் நீ சொன்ன

காதல் வார்த்தைகளை  நினைவு கூர்கிறேன்

வண்ண மலர்களை  சுற்றி ரீங்காரிமிடும்

வண்டுகளை கண்டால்

எனக்கு தெரியாமல் என்னை சுற்றி வந்த

உன் கள்ளத்தனங்களை  ஆராதிக்கிறேன் !

எந்த காதல் பாடலை கேட்டாலும்

உன்னுடன் சேர்ந்து நான் பாடுவதாய் நினைக்கிறேன்!

இலைகளை உரசி மழைநீர்

மண் தொடும்போதெல்லாம்

நீ எப்போதோ என்னிடம்

 மன்னிப்பு கேட்ட தருணங்களை

எண்ணி சிலிர்க்கிறேன் !

கம்பீரத்தின் சிகரம் நீ !

கர்வத்தின் உச்சக்கட்டம் நீ !

மௌனத்தின் பிம்பம் நீ !

தீயின் தமையன் நீ !

அழுத்தத்தின் அரசன் நீ !

இறுக்கத்தின் இமயம் நீ !

எனினும் என்னிடம் மட்டும்

பனியாய்  உருகிவிடும் உன் பார்வையை

அககண்ணில் தேடுகிறேன் !

என்னவனே,

என்ன மாயம் செய்தாயோ ?

எதை கொடுத்து எனை சிறைபிடித்தாய் ?

எதை சொல்லி எனை மயங்க வைத்தாய் ?

எதை தேடி நான் உன்னை தொலைத்தேனோ

அதை நான் அறியவில்லை !

ஆனால்

 இன்று உன்னை தேடி எனை தொலைத்தேன்

கொஞ்சம் கொஞ்சமாய் !

நேரம் தவறாமல்  உறக்கம் கொண்டேன்

கனவிலாவது நீ வருவாய் என்று !

வண்ண உடை அணிந்து

எனை அலங்கரித்து கொண்டேன்

நீ திரும்பி வரும் வேளையில்

என் பிரிவின் துயரை நீ உணர்ந்து துடிக்க வேண்டாமென !

நித்தம்  பாடினேன் , நர்த்தனம் ஆடினேன்

என் மெட்டி சிந்திடும் ராகம்

உனது புன்னகையின் எதிரொலியென  கருதி !

கண்ணீரை மறைத்து வைக்கிறேன்

அவை உன்னை சுட்டுவிட கூடாது என்று !

உன் பெயரை மட்டும் தினமும் உச்சரிக்கேன்

குருவின் பெயர் கூறும் ஏகலைவன் போல!

என் தனிமையில் கூட

உன் நினைவுகள் ஒளிந்திருக்கும்

ஒரே காரணத்திற்காக

சுகமாக இந்த சுமையை ஸ்வீகறித்து

நித்தமும் உனக்குள் சங்கமிக்கிறேன்

எனது உயிரின் உயிரானவனே!

காதல் தந்த ஷக்தியுடன்  - திருமதி சங்கமித்ரா ஷக்தி

என்று கையொப்பமிட்டாள் மித்ரா .. அடிக்கடி அவளே அதை படித்து ரசித்து கொண்டாள்  .. எழுதிய அந்த கடிதத்தை அவனது உடைகளில்  மறைத்து வைத்தாள் .. அவனே பார்த்து கொள்ளட்டும் என்றெண்ணி ..

" ஹே குரங்கே , ரெடியா? எவ்வளவு நேரம்பா இந்த பொண்ணுங்களுக்கு கெளம்பறதுக்கு ..  " என்று குரல் கொடுத்தான் அன்பெழிலன் .. அவன் பேசி முடித்ததும் அவன் முதுகில் பட்டென அறைந்தாள்  காவியதர்ஷினி ..

" அடியே , உன்னையா குரங்குன்னு சொன்னேன் ? ஏன் இப்படி அடிச்ச ? ஸ்ஸ்ஸ்  ஆ   வலிக்கிறது கில்லர் "

" நீ என் மித்ரா செல்லத்தை குரங்குன்னு சொன்னா , இப்படித்தான் அடி வாங்குவ ஹிட்லர் " என்று கூறி கண்ணடித்தாள் காவியா .. சரியாய் அதே நேரம் அங்கு வந்த  மித்ரா காவியாவிற்கு ஹை  5 கொடுத்தாள் .. தனது இரண்டு அண்ணிகளிடையே இருக்கும் சுமூகமான உறவினை ரசித்தபடியே ஜோதியில் ஐக்கியமாகினாள்  முகில்மதி .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.