(Reading time: 15 - 30 minutes)

நான் அம்மாவிடம் “ஐயோ, அது ஸ்ருதியைப் பற்றிக் யோசித்துக் கொண்டிருந்த போது நீங்கள் ஏதோ கேட்கவும் என்னவென்று தெரியாமலே பதில் சொன்னேன்.” என்றேன்.

“ஐயோ ஏண்டா, நான் வேறு அவளைத் திட்டி, மைதிலி என்ன நினைத்தாளோ. நான் போய் அவளிடம் ஸாரி சொல்கிறேன்” என்றார்கள்.

ஆனால் அம்மாவிடம் என்னால் தானே பிரச்சினை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டேன். கொஞ்ச நாள் கழித்து உன்னிடம் பேசலாம் என்று நினைத்து விட்டு விட்டேன். அப்போது தான் சபரியின் திருமணம் முடிவானது. இந்த ஜெர்மன் ஒப்பந்தம் தொடர்பான வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. “

அப்போது மைதிலி குறுக்கிட்டு அவன் அம்மா சபரி எப்படி பெரிய குடும்பத்தைச் சமாளிப்பாள் என்று கேட்டதற்கு ராம் பதில் சொல்லியதைப் பற்றிக் கேட்டாள். திடுக்கிட்ட ராம் “நீ அதைக் கேட்டாயா? நான் அம்மாவிடம் சொன்னது தனியாக வளர்ந்த மைதிலியே நம் அனைவருடனும் அனுசரித்துப் போகும் போது சபரி மாட்டாளா? என்ற அர்த்தத்தில் தான் கேட்டேன்.’

அதற்கு மைதிலி ‘அப்பொழுது மட்டுமல்ல, சபரியின் கல்யாணத்திலும் இதே போல் நீங்கள் பேசியதைக் கேட்டேன்.’ என்றாள்

ராம் “ இல்லை மைதிலி. நம் திருமணம் அவசரமாக நடந்ததால், சபரியும் முரளியும் எப்படி அனுபவித்து அந்த திருமணம் செய்து கொண்டார்கள் . நாமும் அதே போல் செய்திருக்கலாம் என்ற அர்த்தத்தில் தான், நான் அவரிடம் நம்முடைய திருமணமும் இதே போல் நடந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று கூறினேன். சரி நான் முடித்து விடுகிறேன்.”

இந்த நேரத்தில் நம் பிரச்சினையைப் பற்றி என்னால் சிந்திக்கக் கூட முடியவில்லை. சபரி கல்யாண வேலைகளில் நீ கலந்து கொள்ளாதது கூட என் கண்களில் படவில்லை. ஆனால் அன்று நீ மண்டபத்திலிருந்து வீட்டிற்குச் சென்றது எனக்குத் தெரியாமல் நான் முரளியின் வீட்டிற்கு சென்று விட்டேன். நம் குடும்பத்தினர் முதலில் சபரியோடு சென்று விட்டார்கள். நான் மண்டப வேலைகளை முடித்து விட்டு நேரே சென்றுவிட்டேன். அவர்கள் நான் உன்னை அழைத்து வருவேன் என்றும், நான் நீ அவர்களோடு சென்று விட்டதாகவும் நினைத்து உன்னை விட்டு விட்டு போய் விட்டோம.; ஆனால் நீ மண்டபத்தில் இல்லையென்பது எனக்குத் தெரியும். அங்கே அவர்களிடம் உனக்கு சற்று ஓய்வு தேவையாக இருப்பதாகக் கூறி வீட்டிற்குச் சென்று விட்டதாக கூறினேன்.

ஆனால் வீட்டில் அம்மா உன்னை கேட்கவும் நீ முழிக்கவும் தான் யாருமே உன்னிடம் சபரி வீட்டிற்குச் செல்லவிருந்ததைக் கூறவில்லை என்று புரிந்தது.

அன்றைக்குத் தான் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. என்னுடைய கோபத்தால் எத்தனை விஷயங்களில் இதே போல் நடந்திருக்கும் என்று தோன்ற ஆரம்பித்தது. அப்போது மீண்டும் நீ வந்து என்னுடன் பேச வேண்டும் எனும் போது எனக்கு என்னுடைய கோபத்தை முழுமையாக விட்டு விட்டு உன்னுடன் சமாதானமாக வேண்டும் என்று எண்ணினேன். ஏனெனில் மீண்டும் உன்னை காயப்படுத்தி விடக்கூடாதே. சற்று அவகாசம் எடுத்துக் கொண்டேன். அதனால் தான் அப்போதும் உன்னிடமிருந்து ஒதுங்கினேன்.

ஒரு வாரம் கழித்து உன்னிடம் பேசலாம் என்று வரும்போது தான், அம்மா என்னிடம் வருத்தப்பட்டார்கள். அவர்கள் முதலில் உன் டெலிவரி பற்றி பேசியதையும், சபரி கல்யாணத்திற்கு பிறகு நீ கீழேயே வருவதில்லை எனவும் கூறினார்கள். அதுவரை அம்மா உன்னை சாதாரணமாக ஏதோ திட்டி விட்டார்கள் என்றுதான் எண்ணியிருந்தேன். அம்மா மிகவும் வேதனைப்பட்டார்கள். அப்பொழுதுதான் அம்மாவிடம் நம் பிரச்சினையைப் சொல்லி, நானே உன்னை சமாதானம் செய்வதாக  கூறிவிட்டு மேலே வந்த போது தான் நீ வீட்டை விட்டுச் சென்று விட்டது தெரிந்தது. உன்னிடம் நான் இதை எதிர் பார்க்க வில்லை மைதிலி. உன்னுடைய சுய மரியாதைப் பற்றித் தெரியும். ஆனால் எதிர்த்துக் கேட்பாய் என எண்ணிணே தவிர விட்டு விலகுவாய் என்று எண்ணவில்லை.

உன் கடிதத்தைப் பார்த்த பிறகு அன்று இரவு முழுவதும் உன்னை எவ்வளவு வேதனைப் படுத்தியிருக்கிறேன் என்று  எண்ணி வருத்தப் பட்டேன். அடுத்த நாள் எல்லோரிடமும் என்னுடைய கோபத்தால் நீ வீட்டை விட்டுப் போய்விட்டதாகக் கூறி விட்டேன்.

ஆனால் எனக்கு அன்று தோன்றியது என் மீதுள்ள கோபத்தில்தான் போய் விட்டாய். உன் பிரெண்ட்ஸ் யார் வீட்டிற்காவது போயிருப்பாய் என்று எண்ணினேன்.  ஆனால் அவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. நான் உன் ஹாஸ்டலில் விசாரித்ததில் நீ அங்கு வரவில்லை என்று தெரிந்தது. மேலும் உன் தோழிகள் யாரையும் எனக்குத் தெரியாது. எனவே நீயே கூடிய சீக்கிரம் உன் கோபம் தீர்ந்த பிறகு என்னைத் தொடர்பு கொள்வாய் என்று எண்ணினேன். ஆனால் நீ என்னை அடியோடு வெறுத்திருப்பாய் என்று எண்ணவில்லை. பிறகு ஒரு மாதம் வரை நீ தொடர்பு கொள்ளவில்லை என்றதும் நீ என்னை வெறுத்து விட்டாயோ என்று வருத்தப்பட்டேன். மீடியாவில் விளம்பரம் செய்யலாம் என்று நினைத்தால் அதனால் ஒருவேளை உனக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயந்தேன். மேலும் மீடியாவில் விளம்பரம் செய்தால் போலீஸ் கேஸ் என்று ஆகும். உன் மனநிலை தெரியாமல் செய்ய எனக்கு இஷ்டமில்லை. அதனால்தான் வீட்டில் எல்லோரும் கேட்ட போதும் மறுத்து விட்டேன்.

இந்நிலையில் என் ஒப்பந்தம் தொடர்பாக ஜெர்மன் செல்ல வேண்டியிருந்தது. நான் தனிமையில் ஜெர்மனில் இருந்த போது தான் என்னால் உன் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. நீ உன் வாழ்வில் உன்னுடைய குழந்தைப் பருவம் முதல் எதையுமே அனுபவிக்கவில்லை. என்னிடம் அன்பை மட்டுமே எதிர்பார்த்தாய். நான் உன்னிடம் இன்னும் என் அன்பை அதிகமாக உணர்த்தியருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணியபடி இருந்தேன்.

அப்பொழுது ஒருநாள் எனக்கு சொல்லத் தெரியாத வேதனையும் வலியும் நெஞ்சில் எழுந்தது. ஏன் எதற்கு என்று கூட எனக்குப் புரியவில்லை. வீட்டிற்கு பேசியபோது எல்லோரும் நன்றாக இருப்பது புரிந்தது. அப்போதுதான் உனக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்று தவிக்க ஆரம்பித்தேன். உன்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. ஒரு 6 மணி நேரம் கழிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மனது சமநிலை அடைந்தது. அதற்கு பிறகுதான் நன்றாக யோசித்ததில் உனக்கு ஏதேனும் ஆபத்து என்று எண்ணும்போதே என் உயிர் துடித்ததை உணர்ந்தேன். நெருங்கிய உறவுகளிடம் மட்டும் ஏற்படும் அந்த உணர்வு உன் மீதும் ஏற்பட்டது. அப்பொழுது தான் அது காதல் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

அன்றைக்குத் தான் நான் உணர்ந்தேன். உன் வாழ்க்கையில் அதிரடியாக நுழைந்து திருமணம் செய்து மீண்டும் உன்னைத் தனிமையில் வேதனைப் பட விட்டு விட்டேனே என்று வருத்தமாக இருந்தது. நான் பேசாமல் இருந்திருந்தால் நீ நிம்மதியாக இருந்திருப்பாய் என்று தோன்றியது.

ஜெர்மனியில் கிளை அலுவலகமாக இருந்ததால் அதை நன்றாக கன்ட்ரோலுக்கு வரும்வரை நான் அங்கேயே இரண்டு வருடம் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.  நடுவில் சைதன்யா திருமணத்திற்கு கூட அத்தைக்காக ஒரே ஒரு நாள் வந்து விட்டு சென்று விட்டேன்.

சைதன்யா திருமணத்திற்கு வந்து விட்டு ஜெர்மன் செல்வதற்கு முன் என் நண்பன் ஒருவனின் டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் உன்னைத் தேட ஏற்பாடு செய்தேன். உன்னைத் தேடும் நேரத்தில் அத்தை மாமாவிடம் மெதுவாக ஸ்ருதியைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். ஸ்ருதியின் அப்பாவிடமும் ஸ்ருதியின் தோழியின் அண்ணனாக அறிமுகம் ஆகி அவரையும் கரைக்க ஆரம்பித்தேன். மாமாவையும் அத்தையும் இரண்டு மூன்று தடவைகளில் முடிவெடுக்க வைத்து விட்டேன். ஸ்ருதியின் அப்பாதான் இழுத்தடித்து விட்டார். கிட்டத் தட்ட ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் சந்தோஷ் ஸ்ருதி திருமணம் முடிவாகியது. உன்னை அழைத்து வருவதற்கு முன் இரண்டு மாதங்களாக உன்னைப் பற்றி எனக்குத்  தெரியும்” இது வரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மைதிலி திடுக்கிட்டு விழித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.