(Reading time: 48 - 95 minutes)

தன் பின் வேலன் திருவிழாவில் அவளைத் தேடி அலைந்தான்… அவன் கொண்டு வந்து  கொடுத்த அவளின் தாவணி நிறம் அவன் விழிகளுக்குள்ளே சிக்கிக்கொண்டு அவனைக் கொல்லாமல் கொல்ல, அவளின் உடை நிறம் எங்கேனும் தெரிகிறதா என தேடி தேடி ஓய்ந்து போனான் அவன்…

பின் அரை மனதோடு, சரி அடுத்த திருவிழாவில் பார்க்கலாம்… என்ற முடிவோடு ஊர் திரும்பினான் அவன்… ஊர் திரும்பும் வரை அவளின் நினைவுகள் தவிர வேறு ஒன்று இல்லை அவனுக்கு… சில நிமிட சந்திப்பு, அதுவும் முகம் கூட பார்த்து கொள்ளவில்லை… விழியோடு விழியும் கலக்கவில்லை… ஆனாலும் அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுப்பந்துகளின் ஓட்டம்….

முற்றிலும் அவள் தந்த நியாபங்களில் தொலைந்து இருந்த இடம் தெரியாமல் கரைந்து காணாமல் உருகி போனான் அவன் அன்றே…

என்ன இது…. இப்படி நானா ஆகிப்போனேன்??... என்ற கேள்வியும் அவனுள் எழாமல் இல்லை…. எழுந்தும் என்ன பிரயோஜனம்???... அவனுக்கு விடையும் கிட்டவில்லை… அவளின் எண்ணங்களிலிருந்து வெளிவரும் வழியும் அவனுக்கு தெரியவில்லை…

கோவிலில் இருந்து திரும்பி வந்தவன், கோவிலில் தான் ஒரு பெண்ணை சந்தித்து காதலில் விழுந்துவிட்டதாக கூறிவிட்டு, அவளைப் பற்றிய எந்த தகவலும் தெரியாது எனவும், அடுத்த சந்திப்பில் கண்டிப்பாக தெரிந்து கொள்வேன் எனவும் கூற, அவரும் சிரிப்புடன் சரி என்றார்…

அவள் நினைவிலே இருந்த மகனை மூன்று வருடங்கள் வரை எதுவும் சொல்லாமல் இருந்தவர் மூன்றாம் ஆண்டு இறுதியில் அடுத்த வருடம் நீ அவளை பார்க்காவிடில் அவள் இறந்துவிட்டாள் என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டும் என நிபந்தனை விதிக்க, அவனோ மனதே இல்லாமல் சம்மதித்தான்… எப்படியும் அவளை நாலாவது வருடம் பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்…

ஆனால் விதி அவனை பார்க்கவிடாது செய்ய, தாயிடம் வந்து உன் முடிவை நான் ஏற்கிறேன்… ஆனால் வாழ்வில் எனக்கு திருமணம் இனி கிடையாது… என் மனதில் மானசீக மனைவி என் த்வனி தான்… என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டவன், நேரே வெளிநாட்டில் சில வருடங்கள் தங்க முடிவெடுக்க தேவியும் சம்மதித்தார்… அதன் பின் ஒவ்வொரு வருடமும், அவளை சந்தித்த அந்த திருவிழாவில் கலந்து கொள்ள தயங்கவேயில்லை… இந்தியாவிற்கு அவன் வருவதே அந்த ஒரு நாள் மட்டும் தான்…

அவள் நினைவை அவன் வாழ்வில் ஒரு நிமிடம் கூட இழந்ததே இல்லை என கூறலாம்… எந்த நேரமும் த்வனி த்வனி த்வனி என மனதில் பாராயம் செய்து கொண்டே இருந்தான்….

அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் மௌனத்திரையைப் போட்டுக்கொண்டு சகஜமாக அலைந்தான்… ஆனால் அவனது மனம் தேவிக்கு மட்டும் புரிந்தது…

த்யூஷ்…. என மற்றவர்கள் அழைத்த போதெல்லாம், அவள் அழைப்பது போலவே இருக்க அவன் நிலை கொள்ளாமல் துடித்தான்… அதனாலேயே வீட்டில் அந்த பெயரை தவிர்க்க வைத்தான்… வேலன் என்ற பெயரை தேவிம்மா அழைக்க, ப்ரத்யுஷ் வேலன் என்ற பெயரை சுருக்கி யுவி என அவன் நண்பர்கள் அழைப்பது போல் வீட்டிலேயும் அழைக்க வைத்தான்….

அவள் நினைவால் பித்தனாகி விடுவேனோ என்ற பயமும் அவனை ஆட்கொள்ளாமல் இல்லை…. எனினும், ஒரு நாள் ஒரு பொழுதேனும் அவளை நேருக்கு நேர் சந்தித்தே தீருவேன் என்ற அடி மனதின் ஏக்கம் மட்டும் அவனுக்கு ஒரு நாளும் குறைந்ததே இல்லை…

அவளை சந்தித்து முழுதாக ஏழு வருடம் முடிவடைந்து விட்ட நிலையில், எட்டாவது வருட பாதியில் அவன் இந்தியா வந்தான்…

வந்தவன் அப்போது தான் எதிர்பாராத விதமாக வள்ளியை சந்திக்க நேர்ந்தது… ஏனோ முதல் சந்திப்பிலே இதுநாள் வரை அவன் சுமந்து கொண்டிருந்த பாரம் இறங்கியது போலவும், ஒரு வித உவகையும் தோன்ற அவன் அவளிடத்தில் வீழ்ந்தான்…

திருமணம் என்ற உறவில் இருவரையும் இணைக்க பெரியவர்கள் முடிவெடுத்த போதும், அவன் தன் மனதில் த்வனியை வைத்து வாழ்ந்துகொண்டிருக்கும்போது எப்படி என்னால் இன்னொருத்தியை திருமணம் செய்து கொள்ள முடியும் என்றவனது கேள்வியை இல்லாமல் ஆக்கினாள் வள்ளி…

ஏனோ வள்ளியைப் பார்க்கும்போதெல்லாம் விட்டுப்போன பூர்வ ஜென்ம பந்தம் தொடருவது போலவே அவனுக்குத் தோன்ற, அவனுக்கு த்வனி வேறு அவள் வேறு என்ற எண்ணமே தோன்றவில்லை…

இருந்தாலும், வள்ளியைக் கைப்பிடிக்கத் தயங்கினான்…

அந்த சமயத்தில் தான் இருவருக்கும் கோவிலில் சந்தித்தனர்… ஏனோ அவனுக்கு அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல் போக, அவன் அவளிடத்திலே பேச முனைந்த போது, தேவி வந்து இன்று உங்கள் இருவருக்கும் நிச்சயத்தார்த்தம் சம்மதமா?... என்று கேட்க அவன் சட்டென்று சரி என்றான்…

அதன் பின்னர் அவளும் சம்மதம் சொல்ல, அவனுக்குள் சந்தோஷம் பொங்கினாலும், ஒருவித கலக்கம் உருவாகாமல் இல்லை… நிச்சயம் முடிந்த மறுநாள், அவன் சாலையில் சென்று கொண்டிருந்த போது, கஸ்தூரியை எதிர்பாராத விதமாய் சந்திக்க நேரிட, கஸ்தூரியோ வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொள்ள, அவன் முதலில் மறுத்தான்… பின், என்ன நினைத்தானோ, செல்லலாம் என அவன் மனது சொல்ல, அவனும் சரி என்றான் கஸ்தூரியிடம்…

“வாங்க மாப்பிள்ளை… உள்ளே வாங்க…” என கஸ்தூரி வரவேற்று வேலனை உள்ளே அழைத்து செல்ல… அவனும் தயங்கி தயங்கி உள்ளே சென்றான்…

“கொஞ்சம் இருங்க மாப்பிள்ளை… நான் காபி எடுத்துட்டு வந்துடுறேன்… அதுவரை இந்த போட்டோஸ் எல்லாம் பாருங்க…” என தங்களது குடும்ப ஆல்பத்தை அவன் கையில் கொடுத்துவிட்டு அவர் சென்றுவிட, அவன் ஒவ்வொன்றாய் பார்த்தான்…

வரிசையாக பார்த்துக்கொண்டிருந்தவனது கண்கள் சட்டென வள்ளி உடுத்திருந்த ஒரு தாவணியின் கலரில் வந்து மையமிட்டு நின்றது….

பாலைவனத்தில் நீரைக் கண்டது போல் அவன் கண்கள் பிரகாசித்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.