(Reading time: 48 - 95 minutes)

வன் கைவைத்ததும், அறையின் உள்ளே இருந்து மெல்லிய வளையல் ஒலி கேட்டது….

யாரோ கதவை அழுத்தி அவனுக்கு நேராக தள்ளுவது போல் இருக்க….

யாரோ இருக்கிறார்களோ… என்ற எண்ணத்தை உறுதிபடுத்துவது போல், ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது அவனுக்கு….

“என்ன இது…. அழுகை சத்தம் கேட்கிறதே…” என்ற அவன் எண்ணிய மாத்திரத்தில்,

“உள்ளே வராதீங்க… தயவுசெய்து கதவைத் திறக்க முயற்சி செய்யாதீங்க…” என்ற ஒரு பெண்ணின் குரல் அவனுக்கு தெளிவாய் கேட்டது….

அந்த குரலில் அவன் பயத்தினை தெளிவாக கண்டான்….

“நீங்க…. யாரு…. கதவை ஏன் திறக்க கூடாதுன்னு சொல்லுறீங்க?...” எனக் கேட்டதும் அந்த பெண்ணின் விம்மல் ஒலி அவனுக்கு தெளிவாகவே கேட்டது…

“ஏன் அழறீங்க…. அழாதீங்க… ப்ளீஸ்…” என அவன் சொன்னதும், அவள் மேலும் அழுதாள்….

“பாருங்க… இப்படி நீங்க அழுதுட்டே இருந்தா, எதுவும் நடக்கபோறதில்லை… என்ன நடந்துச்சுன்னு சொன்னாதான என்னால உதவி எதும் பண்ண முடியுமான்னு நானும் யோசிக்க முடியும்?.... சோ ப்ளீஸ் சொல்லுங்க…. என்னாச்சு?....” என அவன் அமைதியாக கேட்க

அவன் குரலில் இருந்த எதுவோ ஒன்று அவளை வாய் திறக்க வைத்தது அழுகையிலிருந்து…

மூன்றுபேர் சேர்ந்து பம்புசெட்டில் குளிக்க வந்ததையும், உடைமாற்ற ஒருவர் மாற்றி ஒருவர் வெளியே இருந்து துணியை எடுத்து கொடுத்ததையும், இப்போது தனது மேலாடை திண்ணையில் இல்லை எனவும், வந்திருந்தவர்களையும் காணவில்லை எனவும் அவள் சொல்லிமுடிக்க, அவனுக்கு பேச நா எழவில்லை….

“என்னால வெளியே வரவும் முடியாது… எங்கூட வந்தவங்களை எப்படி கூப்பிடுறதுன்னும் எனக்கு தெரியலை…. எனக்கு பயமாயிருக்கு ரொம்ப…. கதவு பக்கத்துல சின்ன சத்தம் கேட்டாலும் கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுது…. என்ன பண்ணுறதுன்னு எனக்குத் தெரியலை…. நிஜமா….” என்றவள் மீண்டும் அழ,

அவன் சற்றும் தயங்காது, தான் அணிந்திருந்த டீசர்ட்டை கழட்டி கதவின் இடுக்கு வழியே நீட்டினான்….

அவன் கரம் உள்ளே வந்ததும் அவள் பதறி விழிக்க, அவள் கைகளில் அணிந்திருந்த வளையல் அவள் பயத்தை அழகாய் சொன்னது அவனிடத்தில்….

“பயப்படாதீங்க… என் டீசர்ட்டை போட்டுக்கோங்க… நான் போய் உங்க கூட வந்தவங்க யாராவது இங்க பக்கத்துல இருக்காங்களான்னு பார்த்துட்டு வரேன்… அதுவரை பயப்படாம இருங்க… இப்போ இதை வாங்கிக்கோங்க…” என அவன் தன் கரத்தில் டீசர்ட்டை வைத்து கதவின் அந்த பக்கம் நீட்டிக்கொண்டே இருக்க….

அவள் தயங்கினாள்….

“வாங்கிக்கோங்க….. பயப்படாதீங்க… பிடிங்க….” என்றபடி அவன் சொல்ல

அவன் குரல் அவளுக்கு தைரியமும் நம்பிக்கையும் அளிக்க…. கதவை லேசாக திறந்து மெல்ல கை நீட்டினாள் அவளும்….

அவள் விரல்களும், அவள் அணிந்திருந்த வளையல்களும் மட்டும் அவன் பார்வைக்கு தென்பட, அவன் பார்வை மொத்தமும், அவள் வளையல்களின் மீதே இருந்தது…

மேலும், கதவின் கீழ், உடைந்து விழுந்திருந்த சில ஜோடி கண்ணாடி வளையல்களின் துண்டுகளும் கிடக்க, அவனுக்கு அவள் மேல் இன்னதென்று இனம் பிரித்து சொல்ல முடியாத அளவுக்கு ஒரு உணர்வு வந்தது….

“பாவம் கூட வந்தவர்களை முடிந்த மட்டும் கத்தி அழைத்திருக்கிறாள் கதவைத் தட்டி… அதில் சிதறியது தான் அந்த வளையல் துண்டுகள்…” என கண்டுகொண்டான் அவன்…

தன் கைகளிலிருந்து அவள் கைகளுக்கு துணியை கொடுத்தவன், கையை எடுத்துக்கொள்ள அவள் கதவை மூடினாள்…

“நீங்க இதை போட்டுக்கோங்க…. நான் போய் பார்த்துட்டு வரேன்….” என அவன் நகரப்போனதும்,

“ப்ளீஸ்… போகாதீங்க… எனக்கு பயமா இருக்கு…. போகாதீங்க….” என அவள் கெஞ்ச,

அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது…

ஒரு பெண்ணின் கெஞ்சல் அவனை அசையவிடாமல் கட்டிப்போட்டது போல் இருக்க, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளிடம் பேசினான் அவன்…

“பயப்படாதீங்க… நான் போயிட்டு உடனே வந்துடுவேன்… கண்டிப்பா யாராச்சும் உங்ககூட வந்தவங்க இங்க இருப்பாங்க தோப்புக்குள்ள…. அதும் இல்லாம செல்போன் மூலமா உங்கவீட்டுல இருக்குறவங்க யார்கிட்டயாச்சும் விஷயத்தை சொல்லலாம் என்றாலும் அவங்க உங்க கூட வந்தவங்களை தவறா நினைக்கவும் வாய்ப்பு இருக்கு… அதும் இல்லாம அது சரிபட்டு வரும்னு எனக்கு தோணலை… அதனால தான் சொல்லுறேன்… இங்கேயே இருங்க…. நான் இப்போ வந்திடுவேன்…” என அவன் அவளுக்கு தைரியம் கொடுக்க….

“ஹ்ம்ம்ம்…. சரி…. சீக்கிரம் வந்துடுவீங்க தான?....” என அவள் மெல்ல கேட்க, அவன் அந்த குரலில் கரைந்தே போனான்….

அவள் சொன்னது எதுவோ உரிமையாய் சொன்னது போல் இருக்க, அவன் அவளிடத்தில் முதன் முதலாக தொலைய ஆரம்பித்தான்….

“வந்துடுவேன்….. பயப்படாதீங்க…. துணைக்குதான் என் டீசர்ட் இருக்குல்ல…. நான் பக்கத்துல இங்க இருக்குற மாதிரி நினைச்சிக்கோங்க…. நான் உடனே வந்துடுறேன்….” என்றவன் செல்லும் முன், அவள் கதவை இழுத்து முடியும்மட்டும் சாத்தி விட்டு, யார் வந்தாலும் சத்தம் கொடுக்காதீங்க உங்க கூட வந்தவங்களை தவிர…. முக்கியமா பயப்படாம இருங்க… டீசர்ட்டை முதலில் போட்டுக்கோங்க….” என்றபடி அதற்கு மேலும் தாமதிக்காமல் அங்கிருந்து விரைந்து சென்றான் அவன்….

சென்றவன் தேடித்தான் பார்த்தான்…. ஆனால் ஏனோ அவன் பார்வைக்கு அங்கே யாரும் தென்படவில்லை… இப்போ என்னதான் செய்வது, அங்கே அவள் வேறு தனியாக இருக்கிறாளே…. என்ன செய்வது?... என்ற கவலையில் அவன் இருந்த போது அவன் கண்களுக்கு அங்கே முள்செடியின் ஒரம் சிக்கிக்கொண்ட ஒரு தாவணி தெரிந்தது….

பார்த்ததும் கண்கள் பளிச்சிட, வேகமாக சென்று அதனை கிழியாதவாறு எடுத்தவன், அவளிடத்தில் கொண்டு கொடுப்பதற்கு ஓடி வந்தான்….

அறைக்கு வெளியே வேகமான காலடி ஓசை கேட்டவளுக்கு இதயம் அடித்துக்கொள்ள, அவன் கால்கள் பின்னே நகர்ந்தன….

அவன் கொடுத்த டீசர்ட்டை அணிந்திருந்தவள் அதனை இறுகப் பற்றிக்கொண்டாள்…. அதனை பற்றியதும், அவளது பயம் சற்று தணிந்தது போல் இருக்க, இரு கைகளாலும் அதனை விடாமல் பற்றிக்கொண்டாள் அவள்….

“வந்துடுவேன்….. பயப்படாதீங்க…. துணைக்குதான் என் டீசர்ட் இருக்குல்ல…. நான் பக்கத்துல இங்க இருக்குற மாதிரி நினைச்சிக்கோங்க…. நான் உடனே வந்துடுறேன்….”

என அவன் சொன்ன வார்த்தைகள் அவள் காதுகளில் ரீங்காரமாய் கேட்டுக்கொண்டே இருந்தது…

வேகமாக ஓடி வந்து, “என்னங்க… உங்க தாவணி கிடைச்சிட்டு… இந்தாங்க….” என மூச்சு வாங்கிக்கொண்டே சொன்னவன்… “சாரிங்க…. ரொம்ப நேரம் ஆக்கிட்டேனா?....” என மன்னிப்பும் வினவ….

அவள் உள்ளே இல்லை என தலை அசைத்தாள்…. அவள் உதட்டில் புன்னகையும், மலர்ச்சியும் வர, வார்த்தைகள் மட்டும் ஏனோ வரவில்லை அவளுக்கு….

“இந்தாங்க உங்க தாவணி….” என அவன் கதவை தட்டிக்கொடுக்க….

அவள் அதை வாங்கிய பொழுது, தூரத்தில் ஒரு பெண்ணின் குரல் ஒரு பெயரை உச்சரித்தபடி கேட்க, அவனுக்கு அந்த வார்த்தைகள் தெளிவாக விழாமல் அரைகுறையாக விழுந்தது….

“யாரோ வராங்க போல இருக்குங்க….” என அவன் சொல்ல,

அவளோ, அது தன் உடன் வந்தவர்கள் என கூற, அவன் முகத்தில் புன்னகையும், வருத்தமும் ஒரு சேர வந்து நின்றது….

“சரிங்க…. வந்துட்டாங்கல்ல…. நான் வரேன்…” என்று கிளம்ப போனவனை

“ப்ரத்யுஷ்….” என்ற அவள் குரல் தடுத்து நிறுத்த,

“என் பேர்????.... உங்களுக்கு எப்படி???...” என அவன் ஆச்சரியத்தில் கேள்வி எழுப்ப,

“போனில் நீங்க பேசினது கேட்டது எனக்கு…. இருட்டறைக்குள்ள நான் இருக்கேன்ற பயம் கூட நீங்க கூட இருக்கீங்கன்னு நினைச்சதும் மறைஞ்சு போச்சு….” என அவள் சொல்லிக்கொண்டிருந்த போது,

“இன்னுமாடி நீ டிரெஸ் மாத்துற?.... தாவணி….?....” என பக்கத்தில் குரல்கேட்க,

அவன் அவள் பேசுவதில் கவனம் செலுத்தியதால், பக்கத்தில் கேட்ட குரலில் கடைசி வார்த்தைகள் மட்டும் அவனது கவனத்தில் அரைகுறையாக பதிந்தது… தவனி…. என்ற வார்த்தைகளாய் அவனுக்கு கேட்டது….

“சரிங்க… உங்க ஃப்ரெண்ட்ஸ் வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்…. நான் வரேங்க….” என்று அவன் உதடுகள் சொன்னதே தவிர, அவன் கால்கள் கொஞ்சம் கூட அசையவில்லை…. அவன் மனமும் அங்கே இருந்து செல்ல எண்ணம் கொள்ளவில்லை கொஞ்சமும்….

“நான்….. வந்து…. ப்….ர….த்…..” என அவள் திக்கித் திணறிய போது, காலடி ஓசைகள் அருகே கேட்க, அவன் சட்டென்று அங்கிருந்து அகன்று விட்டான்….

அதன் பின், மறைவாக சென்றதும், தந்தைக்கு போன் போட்டு, “அப்பா ஒரு சட்டை எடுத்துட்டு வாங்க…. நான் இங்க தோப்புக்குள்ள இருக்குறேன்…. என் டீசர்ட்டை கழட்டி வச்சிட்டு குளிக்கப்போனேன்…. அது காத்துக்கு பறந்து போயிடுச்சு…” என அவன் சொல்லிவிட்டு, சில நிமிடங்கள் கழித்து அந்த அறைப் பக்கம் தூரமாய் நின்று பார்த்த போது, ஒரு பெண் புள்ளியாய், அவன் வந்த திசை பக்கம் பார்த்து, உயர்த்திய கைகளை தாழ்த்தாத வண்ணம் நின்று கொண்டிருப்பதைக் கண்டவனுக்கு அவள் தான் த்வனியாக இருப்பாள் என்று மனம் சொன்னது… ஆனால் அவன் அவளுக்கு தூரமாய் இருந்ததால் அவள் உருவம் தூரத்தில் தெரிந்ததே தவிர, முகம் தெரியவில்லை சரியாக….

பின் அவன் சில நிமிடம் கழித்து அவளை சந்தித்த இடத்திற்கு வந்து பார்த்த போது, அவன் நின்றிருந்த இடத்தில் மணல் தரையில் அவனது பெயரும், அருகே ஈரமும் இருக்க, அவன் மனதிற்குள் முதன் முதலாய் ஏக்கமும், பிரிவும் உருவானது ஒருங்கே….

தன்னைத் தேடியிருக்கிறாள் என்பதை விட, தன்னை நினைத்திருக்கிறாள், தனக்காக கண்ணீர் சிந்தியிருக்கிறாள் என்ற எண்ணம் வந்ததுமே, அவன் அவள் இருந்த அறைக்குள் உடனே சென்றான்…

சுற்றிலும் இருட்டு தான்…. லேசான கீற்று வெளிச்சம் மட்டுமே அங்கு ஒளியாய்… அங்கே தானே அவனது பெண் நிலா இதுவரை இருந்தது என்றெண்ணியவனுக்கு மனதில் தென்றல் தவழ ஆரம்பிக்க…

அவனது கைகள் அங்கே சிதறியிருந்த வளையல் துண்டுகளை சேகரித்து, நெஞ்சோடு சேர்த்து வைத்து அணைத்துக்கொண்டது விழி மூடி….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.