(Reading time: 12 - 23 minutes)

11. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

தினைந்து நாட்கள் கழிந்து விட்டன இந்தியா வந்து..  இப்போது இந்த வெயிலும் கூட்டமும் கொஞ்சம் போல் பழகிவிட்டது அஜய்கும், பைரவிக்கும்.. அன்றைக்கு காலையிலேயே கிளாஸ் என்று முன் தினமே சொல்லிவிட்டபடியால் பைரவி பத்து மணிக்கு கீழே இறங்கி சென்றாள்.. தனக்கு முன்னதாகவே அந்த மியூசிக் அறையில் காத்து கொண்டிருந்த டீச்சரை பார்த்தவளுக்கு, எப்போதும் போல் ஒரு சிலிர்ப்பு.. 'எவ்வளவு அழகா சாந்தமா இருக்கா.. கண்கள் ரெண்டும் கருணையோடு பார்க்கும் போது யாராலும் எதையும் அவருக்கு மறுக்க மனம் வராது' என்று நினைத்தவள் அறைக்குள் நுழைந்து,

"நமஸ்காரம் மாமி", என்று கை கூப்பி வணங்கினாள்.

"வாம்மா பைரவி.. வந்து உட்கார்ந்துக்கோ", என்ற சாரதா தம்பூராவில் ஸ்ருதி கூட்டத் தொடங்கினாள்.

vasantha bairavi

"சொல்லும்மா..ம்.. இன்னிக்கு என்ன பாடலாம்..நேத்திக்கு நீ பாடின துக்காராமின்

"போலாவா விட்டல

பஹாவா விட்டலா"

அபங்கை திரும்பவும் ஒரு தரம் ப்ராக்டிஸ் பண்ணறாயா?.. இல்லை வேறு ஏதாவது புதுசா ஆரம்பிக்கவா..?", என்று புன்சிரிப்புடன் கேட்ட சாரதாவை பார்த்த பைரவி

"மாமி இன்னிக்கு ஏனோ என் மனசு ரொம்ப உற்சாகமா இருக்கு.. உங்களை பார்த்த உடனே எனக்கு ஒரு பாட்டு மனசுலே தோனறது அதை பாடவா?.. அதிலே ஏதாவது நான் இம்ப்ரூவ் பண்ணனும்னா சொல்லுங்கோ",

"அப்படி என்ன பாட்டுடியம்மா?.. நோக்கு என்னை பார்த்த உடனே தோனறது?.. பாடேன் பார்க்கலாம்", என்று மெல்ல தம்பூராவை மீட்டத் தொடங்கினாள் சாரதா.

மெல்ல, தொண்டையை சரி செய்து கொண்டு, பாபனநாசம் சிவன் இயற்றிய காபி ராகத்தில் அமைந்த

"என்ன தவம் செய்தனை!

எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க

ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில்

ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட நீ

என்ன தவம் செய்தனை யசோதா

எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க

You might also like - Unnal magudam soodinen... A romantic story...

என்ன தவம் செய்தனை!

பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள

உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாள் கண்ணனை

உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாள் தாயே

என்ன தவம் செய்தனை யசோதா

எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க

என்ன தவம் செய்தனை!

சனகாதியர் தவயோகம் செய்தே வருந்தி

சாதித்ததைப் புனிதமாக எளிதில் பெற

என்ன தவம் செய்தனை!

என்ன தவம் செய்தனை யசோதா

என்ன தவம் செய்தனை!"

கண்ணீர் மல்க பாடி முடித்தவள், தம்பூராவை பாடலின் நடுவிலேயே கீழே வைத்துவிட்டு மெய்மறந்து மூடிய கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்த சாரதாவை பார்த்து துணுக்குற்றாள் பைரவி.

சட்டென்று எழுந்து சாரதாவின் அருகில் சென்று அவள் கைகளை பிடித்தவள், "மாமி என்னாச்சு?..", என்று உலுக்கினாள்

"ம்ம்.. என்னம்மா..ஒன்னுமில்லை.. இரு", என்றவள் அருகிலிருந்த பாட்டிலில் இருந்த நீரை பருகி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

பின் மெல்ல பைரவியின் கன்னங்களை வருடி திருஷ்டி கழித்தவள்,  "என்ன ஒரு பாடாந்தரம்.. அவ்வளவு உருக்கம்.. ஒரு அஞ்சு நிமிஷம் நான் என்னையே மறந்து யசோதையாயிட்ட மாதிரி இருந்தது.. அதுவும் 'அம்மா'னு ஒவ்வொரு முறையும் நீ பாடும் போது ஏனோ என் மனசு என் புள்ளை வசந்த்தை தான் சுத்தி வந்தது.. அவன் அம்மான்னு கூப்பிடும் போது எப்பவும் எனக்குள் ஒரு பரவசம் ஓடும்.. அதே மாதிரி இருந்தது இன்னிக்கு"

"ஏன் மாமி வசந்த்துன்னா உங்களுக்கு அவ்வளவு பிரியமா?.. மத்த குழந்தைகளை விட?", என்று ஆவலாய் அவள் பதிலுக்கு காத்திருந்தவளை ஒரு கணம் பார்த்தவள் பின் பைரவியின் முகத்தில் பார்வையை நிலை நிறுத்தினாள்..

"ஆமாம் எனக்கு எல்லாரையும் விட என் பிள்ளை மேல் தான் பாசம் அதிகம்... காரணம் சொல்லத் தெரியலை.. ஆனா மூணு பொண்ணுகளுக்குப் பிறகு கிடைத்தவன்றதுனாலே கூட இருக்கலாம்.. எது எப்படி இருந்தாலும் ஒன்னு மட்டும் நிச்சயம்.. அவன் தான் என் உயிர் நாடி.. என் ஜீவன்.. அவனுக்காகத் தான் என் வாழ்வே.. அவனை யாருக்காகவும் என்னால் விட்டுத்தர முடியாது", என்று நிறுத்தினாள்.

இதையெல்லாம் கேட்டபடியே வந்த மஹதி,.. "ஏம்மா என் மேல கூட உனக்கு அந்த அளவு ஆசை கிடையாதா?.. டூ பேட்.. இப்படி சொல்லிட்டயே??.. போ உன் பேச்சு கா", என்று சிரித்தபடி அவளருகில் அமர்ந்து வாத்ஸல்யமாய் தோள்களில் சாய்ந்து செல்லம் கொண்டாடினாள்.

"வந்துட்டியா.. நீ என்ன வேணா சொல்லிக்கோ.. என் பிள்ளை தாண்டி எனக்கு முக்கியம்.. அப்புறம் தான் நீ, உன் அக்கால்லாம்..."

"ம்ம்.. பார்த்தியா நீயும் ஆம்பிளை பிள்ளை தான் உசத்தின்னு சொல்லற சராசரி அம்மாவாயிட்டே.. ஆனா பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு தெரியுமோன்னோ?"

"போடி வாயாடி.. நீ என்ன வேணா சொல்லு என் வசந்துக்கு ஈடா ஒன்னும் கிடையாது என் கிட்ட.."

"மாமி.. நீங்க ரொம்ப ஸ்வீட்.. இப்படி ஒரு அம்மா கிடைக்க வசந்த் குடுத்து வச்சிருக்கணும்.. எங்கம்மா கூட இப்படி தான் என் மேல ஒரே பாச மழையா இருப்பா.. ம்ம்.. ஐ ரியல்லி மிஸ் ஹெர் அண்ட் அப்பா.... இப்போ நீங்க என்னோட அம்மாவை ஞாபகப் படுத்திட்டேள்..  நான் மொதல்ல சாயங்காலம் அம்மா கிட்ட பேசணும்..",

"ஓ பாப்பாவுக்கு அம்மா நினைவு வந்துடுத்து போல.. எங்கே இருக்கற வரைக்கும் நீ என்னோட அம்மாவை உன்னோட அம்மாவா நினைச்சுக்கோ பைரவி.. எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை.. ஆனா வசந்த் சண்டைக்கு வரப் போறான்..", என்ற மஹதி வாசலில் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

கேட்டை மூடி விட்டு அப்பா ராமாமூர்த்தி உள்ளே வருவதை பார்த்தவள், "வாங்கோப்பா.. இந்தாங்கோ தீர்த்தம்.. குடிங்கோ.. ஏன் வெயிலிலே குடை கூட எடுத்துக்காம போறேள்", என்று கடிந்து கொண்டாள்.

"அதில்லைம்மா.. வசந்த் எங்கே??.. உள்ளே இருக்கானா?.. அந்த உதவாக்கரை?.. ரெண்டு நாள் முன்னயே அவாத்துலே போய் விவரம் கேட்டுட்டு வரச் சொன்னேன்.. சரி சரி.. சாரதா அந்த பையனாத்துகாரா.. என்ன விழிக்கற??.. அதான் மஹதியை கல்யாணத்துக்கு கேட்டாளே.. அந்த டாக்டர் பையன் விஜய்.. அவா அப்பா பேசினார்.. நாளைக்கு சாயங்காலம் ராகு காலத்துக்கு முன்னாடி பொண்ணு பார்க்க வராளாம்.. என்னென்ன தயார் பண்ணனுமோ பண்ணிடு.. ஞாயித்து கிழமைன்றதாலே.. நிச்சயம் நம்ம மொத ரெண்டு பொண்களையும் கூப்பிட வேணும்.. இல்லேன்னா பின்னாடி பிரச்சனை பண்ணிடுவார் மாப்பிள்ளை.

சரிதானே நான் சொல்லறது?", என்று கேட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.