(Reading time: 33 - 66 minutes)

வேறு சில நடிகைகளை பார்க்கும் போது கூட இந்த எண்ணங்கள் மேகலாவுக்கு குறைவாகவே இருந்தது என்றே சொல்ல வேண்டும். சில நேரங்களில் மற்ற நடிகர் நடிகைகளை மேகலா பாராட்டும் நிகழ்வுகள் நடந்தாலும் சந்திரிக்காவுக்கு கிடைக்க ஆரம்பித்திருந்த அந்த பாராட்டை அவரால் எந்த வகையிலும் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

'மேகலாவின் நடனத்தையும், நடிப்பையும் ரசித்து ரசித்து பாராட்டுவதும், தலையில் வைத்துக்கொண்டு கொண்டாடுவதும் சந்திரிக்காவுக்கு எப்போதுமே பழக்கம், அவள் எப்போதும் அப்படியே இருக்க வேண்டும். எனக்கு கீழேயே இருக்க வேண்டும். தன்னை புகழ்ந்துக்கொண்டே தான் இருக்க வேண்டும்' என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்திருந்தது மேகலாவுக்கு.

தனது அறை கதவை சாத்திக்கொண்டு 'அவ ஒரு ஆட்டக்காரி. ஆட்டக்காரியாகவே தான் இருக்கணும். ஹீரோயின் எல்லாம் ஆக முடியாது' என மேகலா சத்தமாக கூவும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கும். சந்திரிகா ஒரு கவர்ச்சி நடிகை என்பது மக்களின் மனதில் பதிந்து போனது கூட ஒரு வகையில் மேகலாவுக்கு சாதகமாகவே போனது.

சந்திரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை அண்ணனுடன் சேர்ந்து ஆரம்பித்தார் மேகலா. ஒரு கட்டத்துக்கு மேல் தனது அம்மாவால் ஆட முடியாமல் போன ஆட்டத்தை ரிஷி தொடர்ந்து விளையாடியது தான் அண்ணனுக்கும் தங்கைக்கும் பேரதிர்ச்சி!!!!

இதோ இன்னமும் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது ஆட்டம். இதோ இன்று ரிஷியை பற்றிய சில உண்மைகளை தெரிந்துக்கொண்டு அதை வைத்து விளையாட்டு நடந்துக்கொண்டிருக்கிறது......

ஞ்சீவ் தங்கையின் திருமணம் நடக்கும் அந்த மண்டபத்திற்குள் தனது மனைவிக்காக சஞ்சா  அனுப்பிய காரை செலுத்திக்கொண்டு வந்து சேர்ந்து இருந்தார் அரவிந்தாட்சன்.

You might also like - Rojavai thalattum thendral... A breezy romantic story 

'நான் வந்திருக்கேன்னு உள்ளே யாருக்கும் தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சா அதுக்கப்புறம் என்னை நீ உயிரோட பார்க்க முடியாது' ஒரு மிரட்டலுடனே மனைவியை உள்ளே அனுப்பி இருந்தார் அரவிந்தாட்சன். அந்த காரின் பின் சீட்டில் ஒரு டிரைவர் போலவே படுத்துக்கிடந்த அரவிந்தாட்சன் மனம் ஒரு நிலையில் இல்லை.

'குழந்தையை என் சினிமா வாழ்க்கைக்கு தடையா இருக்கும்னு மறைச்சு வெச்சிட்டேன்' சில மணி நேரங்கள் முன்னால் மகள் பேசிய வார்த்தைகள் அவர் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது என்னதான் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் மனம் பாரமாக கிடந்தது அரவிந்தாட்சனுக்கு.

'தெரியும் அவருக்கு!!!! நாளை காலை பத்திரிக்கைகளும், ஊடங்கங்களும்  அவளை எப்படி கிழித்தெறியும் என தெரியும் அவருக்கு. ஒரு தகப்பனாக அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.

'இனி என்னவாகும் என் மகளின் வாழ்கை. பழி வாங்கும் விளையாட்டில் என் மகளின் வாழ்கை சின்னா பின்னமாகிறதே??? எல்லாவற்றையும் நொறுக்கி போட்டு அவளுக்கு ஒரு நல்ல வாழ்கை அமைத்துக்கொடுக்கும் அளவுக்கு பணவசதியும் இப்போது அவரிடம் இல்லைதான்.

'வைக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் நாளை காலை ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன். நாளை காலை திருமணதிற்கு மிகப்பெரிய சினிமா நட்சத்திரங்களும், முக்கிய பிரமுகர்களும் வரும் வேளையில் நடக்கும் என் விளையாட்டு. உடல் முழுவதும் காயங்களுடம் வெளியே வருவான் திவாகர். அத்தனை உண்மைகளையும் எல்லார் முன்னாலும் உடைத்தெறிவான். என் மகளின் மீதிருந்த அவப்பெயரும் துடைத்தெறியப்படும்.' மனதிற்குள் கறுவிக்கொண்டு படுத்துக்கிடந்தார் அரவிந்தாட்சன்.

நேரம் இரவு பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.

கையில் குழந்தையுடன் அந்த அறைக்குள் வந்தான் ரிஷி. அருந்ததி, அம்மா அப்பா மூவரின் மனதிலும் குழந்தையும் அதை சுற்றிய உண்மைகளும் உழன்றுக்கொண்டிருக்க அவர்கள் பார்வை அவன் முகத்திலேயே தஞ்சம். இப்போது இந்த உண்மைகளை அறியாதவர்கள் ரிஷியும், அஹல்யாவும் தானே.!!!!

குழந்தை அவன் ஜாடையை அப்படியே பரதிபலிப்பதை எல்லாராலும் உணர முடிந்தது. அவன் குழந்தையுடன் நின்றிருக்க அவனுக்கு பின்னால் சுவற்றில் இருந்தது அந்த ஓவியம். அந்த ஓவியத்தில் கோபியர்கள் சூழ்ந்திருக்க கையில் புல்லாங்குழலுடன் அழகாக சிரித்துக்கொண்டிருந்தான் அந்த மாயக்கண்ணன்.

'ரிஷி'!!! 'ரிஷி' என்ற 'ரிஷிகேஷ் கண்ணன்'. அவனது முழுப்பெயர் அதுதானே? இவனும் ஒரு கண்ணன் தானோ என தோன்றியது அருந்ததிக்கு. அந்த ஓவியத்தில் இருக்கும் அந்த மாயக்கண்ணனுக்கும் இவனுக்கும் என்ன ஒரு ஒற்றுமை!!!!!' அந்த ஓவியத்தையும் ரிஷியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள் அருந்ததி.

ஒரு பெருமூச்சு எழுந்தது அவளிடம். தெளிந்திருந்தாள் அவள். உண்மையை அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டிருந்தாள் அவள். 'இருக்கட்டும்!!!! எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அவன் என்றென்றைக்கும் இந்த அருந்ததியின் வசிதான். அதில் எந்த மாற்றமும் எப்போதும் இல்லை!!!!'

தான் அமர்ந்திருந்த கட்டிலில் இருந்து எழுந்தவள் அவனருகில் வந்தாள். அவனை புன்னகையுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு குழந்தையின் பக்கம் திரும்பினாள் அவள். குழந்தையை அள்ளி சேர்த்துக்கொள்ள மனம் விழைந்த போதிலும் அவள் கையில் இருந்த கட்டு அதை தடுத்தது. குழந்தையை நோக்கி கைகுலுக்கும் பாவனையில் கை நீட்டினாள் அருந்ததி. அவள் கையை பிடித்து குலுக்கியது குழந்தை.

'ஹாய் தீக்ஷா.. நான் யாரு சொல்லு...' திருதிருவென பார்த்தது அது.

'இது உன் அப்பான்னு சொன்னே தானே??? அப்போ நான் உன் அம்மா..' குழந்தையை பார்த்து அழகாய் தலையாட்டிய படியே சொன்னாள் அருந்ததி.

கல்யாண ராமனுக்கே கூட கொஞ்சம் வியப்பாக இருந்தது. 'இந்த குழந்தை ரிஷியின் குழந்தை' என்ற பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அவன் மீது கொஞ்சம் கூட கோபமோ, வருத்தமோ  இல்லாமல் இந்த குழந்தையை இத்தனை அழகாக ஏற்றுக்கொள்ள முடிகிறதே இந்த பெண்ணால்????'

அருந்ததி சொன்னது புரியாமல் ரிஷியின் முகத்தை ஒரு முறை பார்த்தது குழந்தை. 'பட்டு செல்லம் இது உன் அம்மாடா' ரிஷி சொல்ல அவள் பக்கம் திரும்பியது தீக்ஷா.

'இல்லை. நீ என் அம்மா இல்லை...' இடம் வலமாக தலை அசைத்தது குழந்தை. அந்த வார்த்தையில் ஏனோ சட்டென மாறியது சந்திரிக்காவின் முகம். ரிஷியின் முகத்தையே பார்த்திருந்தார் சந்திரிகா.

'இல்லடா... இனிமேல் நான் தான் உனக்கு அம்மாவாம். உன்னை நல்லா பார்த்துபேனாம். சரியா?' மறுபடியும் சொன்னாள் அருந்ததி.

'ம்ஹூம்....என் அம்மாவை நான் போட்டோலே பார்த்திருக்கேன். நீ என் அம்மா இல்லை.....' பளிச்சென சொன்னது தீக்ஷா.

'தீக்ஷா பாப்பா...' அருந்ததி ஏதோ சொல்ல முயல

'ம்...ஹூம்..... நீ... என்... அம்மா இல்லை...'  தீக்ஷா அழுத்தமாக சற்றே உயர்ந்த குரலில் சொல்ல......

'ஏய்.... தீக்ஷா.... இன்னொரு தடவை இந்த வார்த்தையை சொன்னே, என்கிட்டே அடி வாங்குவே நீ' அந்த வார்த்தைகளை தாங்கிக்கொள்ளவே முடியாமல் பாய்ந்து வந்தது சந்திரிக்காவின் குரல். கொஞ்சம் அதிர்ந்து திகைத்து போயினர் அங்கே இருந்த அவனைவரும்.

இதுவரை சந்திரிகா அப்படி குரல் உயர்த்தி பார்த்ததில்லை ரிஷியும், ராமனும். ரிஷியின் சின்ன வயதில் இருந்தே அவன் தவறுகள் செய்த போதும் சரி, அன்பான, அதே நேரத்தில் உறுதியான வார்த்தைகளில் அவனை திருத்தியே பழக்கம் அவருக்கு. என்னவாயிற்று என் அம்மாவுக்கு? புரியவே இல்லை அவனுக்கு.

'அம்மா... ' மெல்ல அவர் அருகில் வந்து அமர்ந்தான் ரிஷி. தான் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் சட்டென செய்து விட்ட தவறு புரிய தரையை பார்த்தபடி அமர்ந்திருந்தார் சந்திரிகா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.