(Reading time: 33 - 66 minutes)

'ன்னாச்சு மா உனக்கு? நீ எப்பவும் இப்படி இல்லையே? உடம்பு ஏதாவது சரியில்லையா? குழந்தைமா இது...... அது ஏதோ அதுக்கு தெரிஞ்சதை பேசுது அது கிட்டே போய்.... என்னாச்சுமா?'

பதிலில்லை அம்மாவிடம். ரிஷியின் மடியில் அமர்ந்திருந்த குழந்தையின் முகம் கொஞ்சம் துவண்டு போயிருந்தது. வைதேகியையே பார்த்திருந்தது அது.. ரிஷிக்கு புரியாவிட்டாலும் அருந்ததிக்கும், ராமனுக்கும் வைதேகியின் மனநிலையும், அவரது தவிப்பும்  ஓரளவு புரிந்து தான் இருந்தது.

எதுவுமே புரியாமல் பார்வையை திருப்பியவனின் கண்களில் அப்போதுதான் பட்டது அது!!!!. அருகில் இருந்த அந்த சின்ன மேஜை.!!!! அதன் மீது மாத்திரைகள்.!!!! வைதேகியின் மாரடைப்பின் போது மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகள் அவை. இரவுக்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டு விட்டு அதை உள்ளே வைக்க மறந்திருந்தார் அவர்.

திகைப்பில் புருவங்கள் உயர்ந்து இறங்க கேட்டான் ரிஷி. 'என்னமா இவ்வளவு மாத்திரை? யாருக்குமா இதெல்லாம்?. ராமனிடமும், வைதேகியிடமும் ஒரு திடுக் பார்வை. மாரடைப்பு ஏற்பட்ட விஷயத்தை இன்னமும் ரிஷியிடம் சொல்லவில்லையே அவர்கள்.!!!! அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள சுதாரித்து தொடர்ந்தார் ராமன்......

'அம்மாவுக்கு தான்பா கொஞ்சம் உடம்பு சரியில்லை. ஒரு... ஒரு மைல்ட் ஹார்ட் அட்டாக்... மாதிரி...'

'ஹார்ட்... அட்டாக்கா...? எப்போ பா? எனக்கு எதுவுமே தெரியாது. ஏன்பா என்கிட்டே சொல்லலை? என்னாச்சு பா திடீர்னு...? இப்போ எப்படி பா இருக்கு? ஹாஸ்பிடல்லே அட்மிட் பண்ணீங்களா? எத்தனை நாள் பா?' பதற்றத்தின் உச்சியில் படபடவென கேள்விகளை அடுக்கினான் ரிஷி.. இந்த விஷயம் அவளுக்குமே தெரியாததால் கொஞ்சம் அதிர்சியுடனே பார்த்திருந்தாள் அருந்ததி.

'அது... நீ ஊருக்கு கிளம்பினவுடனே டா.....இப்போ நல்லா ஆயிட்டாடா. ஆரோக்யமா தானே இருக்கா. இப்போ நீயே பார்க்கறியே. உன்கிட்டே சொன்னா... இங்கிருந்து நீ மறுபடியும் ஓடி வருவே... அதனாலே.....' அப்பா நிதானமான குரலில் சொல்ல

You might also like - Nesam niram maaruma.. Cute family drama

'அதனாலே என்கிட்டே மறைச்சிடீங்களாக்கும்...'  அவன் முகத்தில் கோப ரேகைகள். அவன் அவர்களுடன் தீவிரமாக பேசிக்கொண்டிருக்க அவன் மடியிலிருந்து மெல்ல இறங்கியது, இத்தனை  நேரம் அவன் கோப முகத்தையே பார்த்திருந்த தீக்ஷா.

மெதுவாக நடந்து அங்கே நின்றிருந்த அருந்ததியின் அருகில் வந்து நின்று அவள் புடவை தலைப்பை பற்றி இழுத்தது. தன்னாலே தான் எல்லாரும் கோபமாக இருக்கிறார்கள். என்று அதற்கு தோன்றியிருக்க வேண்டும். அருந்ததி திரும்ப அவள் முகம் பார்த்து மெல்ல சொன்னது குழந்தை....

'தீக்ஷா சாரி.... நீ என் அம்மாதான்...' அப்படியே நெகிழ்ந்து தான் போனாள் அருந்ததி.

சட்டென அதனருகில் மண்டியிட்டு அமர்ந்து தன்னோடு சேர்த்துக்கொண்டு அதன் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள் அவள். அதன் முகத்தில் இருந்த கலவர ரேகைகள் புரிய தனது கைப்பையை துழாவி அதிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து அதனிடம் நீட்டினாள் அருந்ததி.

'பட்டு பாப்பாக்கு சாக்லேட் பிடிக்கும் தானே? ஃபாஸ்ட்டா சாப்பிட்டுடு. நாம அப்புறம் விளையாடலாம். நாம ரெண்டு பேரும் இனிமே ஃபிரண்ட்ஸ் சரியா.???' அதன் முகத்தில் கொஞ்சம் தெளிவு வந்திருக்க அதை தனது மடியில் அமர்த்திக்கொண்டு அமர்ந்தாள் அருந்ததி.

அவர்களுக்குள் எதிரில் அமர்ந்திருந்த ரிஷி, தனது அம்மாவின் கையை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டான்

'அம்மா இப்போ நிஜமாவே நல்லா ஆயிடுச்சா மா? கொஞ்சம் ஏதாவது உடம்புக்கு முடியாமல் இருந்தாலும் சொல்லிடுமா. உனக்கு ஏதாவது ஒண்ணுனா என்னாலே தாங்கிக்க முடியாதுமா...' சிறு குழந்தையாக அவர்  முகம் பார்த்து தவிப்பான குரலில் சொன்னான் ரிஷி.

மற்றொரு கையால் அவன் கன்னம் வருடினார் அம்மா. 'அம்மாக்கு ஒண்ணுமில்லைடா...'

'என்கிட்டே இனிமே எதையும் மறைக்காதே மா. எதுவா இருந்தாலும் சொல்லிடு. ப்ளீஸ்.. ' அவன் அவர் கண்களை ஊடுருவிய படியே சொல்ல அவர் உடலில் லேசான நடுக்கம் பரவியது.

'நான் முன்பிருந்த அதே வைதேகிதானா? என் இப்படி பதறுகிறது என் நெஞ்சம் நான் எப்போது இப்படி மாறிப்போனேன்??? '

'டேய்... விடுடா.... அதான் சொல்றோம் இல்ல ஒண்ணுமில்லைனு. ஏன்டா இவ்வளவு டென்ஷன்?' இடை புகுந்தார் அப்பா.

'சும்மா இருங்கபா நீங்க' வெடுக்கென ஆரம்பித்தவன் அப்பாவின் முகம் பார்த்து கொஞ்சம் தணிந்தான். அப்பாவை அப்படியெல்லாம் எதிர்த்து பேசி பழக்கம் இல்லை தான் அவனுக்கு. ஆனால் அம்மாவின் மீதுள்ள பாசம் அவனை பேசவைக்கிறது. அப்பாவுக்குமே அது புரியத்தான் செய்தது.

'எனக்கு உங்க மேலே ரொம்ப கோபம் பா.' என்றான் கொஞ்சம் தழைந்த குரலில். அம்மா வயித்திலே பிறந்த ஒத்தை பிள்ளைபா நான். என்கிட்டே போய் இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சு இருக்கீங்க? இது மட்டும் தானா இல்லை இன்னும் நிறைய விஷயங்கள் இது மாதிரி மறைச்சு வெச்சு இருக்கீங்களா? ...'  

சட்டென அங்கே கொஞ்சம் திகைப்புடன் கலந்த மௌனம் நிலவ, சரியாக அந்த நொடியில் அறைக்குள் நுழைந்த சஞ்சாவின் செவிகளில் அவன் பேசிய கடைசி இரண்டு வரிகள் மட்டுமே விழுந்தது..

ரிஷி அமர்ந்திருந்த நிலையும் அவன் முகத்தில் இருந்த வருத்தமும், சேர்ந்து அவனை குழப்ப ஒரு வேளை ரிஷிக்கு உண்மைகள் தெரிந்து விட்டதோ என்ற பயத்துடனே ராமனை கேட்டான் அவன்.

'என்னாச்சுபா ஏதாவது ப்ராப்ளமா?'

'பத்து நாள் முன்னாடி அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு சஞ்சா. நமக்கு சொல்லவே இல்லை. ரெண்டு பேரும் அங்கே தனியா என்ன பண்ணி இருப்பாங்கன்னே என்னாலே யோசிச்சு பார்க்க முடியலை. அதோட ஃப்ளைட்லே ட்ராவெல் பண்ணி வந்திருக்காங்க. இவங்களை எல்லாம் என்ன செய்ய?' நண்பனை பார்த்த மாத்திரத்தில் அவனிடம் மனதில் உள்ளதை கொட்டினான் ரிஷி.

'என்னமா?' என்றான் சஞ்சா. 'ஹார்ட் அட்டாக்கா? என்னாச்சுமா? இப்போ எப்படி இருக்கு?' சஞ்சா பதற்றத்துடன் கேட்க...

'ஒண்ணுமில்லை சஞ்சா மைல்ட் அட்டாக் தான். சரியாயிடுச்சு இவன் தேவை இல்லாம டென்ஷன் ஆறான்' என்ற அப்பாவை முறைப்புடன் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான் ரிஷி. அவனருகில் வந்து அவன் தோள்களை அணைத்துக்கொண்டு சொன்னான் சஞ்சா

'ஒண்ணுமில்லைடா. டென்ஷன் ஆகாதே. உனக்கு தப்பா எதுவுமே நடக்காது. எல்லாம் சரியாகும்.'

கொஞ்ச நேரம் எல்லாரிடமும் இறுக்கமான மௌனம். அங்கே இருந்த எல்லா உள்ளங்களும் திசைக்கொன்றாக அலைப்பாயந்துக்கொண்டிருந்தன. அப்போது அவர்களின் எதிரில் அமர்ந்திருந்த அருந்ததியின் மடியிலிருந்து மெல்ல இறங்கினாள் தீக்ஷா.  இன்னும் அந்த பிஞ்சு மனம் ஆறவில்லை போலும். தனது மருண்ட விழிகளை உருட்டிய படியே அவர்கள் அருகில் வந்து நின்றது அந்த தேவதை.

எல்லாரும் ஒரு சேர நிமிர, 'தீக்ஷா சாரி...' வாய் பேசிடும் புல்லாங்குழலாக ஒலித்த அவளது மழலை குரலில் எல்லார் மனதிலும் இருந்த வலிகளும் ஒரே நொடியில் எங்கோ ஓடிச்சென்று மறைந்துக்கொண்டது. எல்லார் உதடுகளிலும் புன்னகை கீற்று.

அவளை அப்படியே அள்ளிக்கொள்ள அத்தனை உள்ளங்களும் ஒரு சேர விழைய முந்திக்கொண்டது வைதேகியாகத்தான் இருந்தது. அவளை அள்ளிக்கொண்டு கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டார் அவர். அங்கே நெகிழ்ச்சி அலை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.