(Reading time: 33 - 66 minutes)

'குழந்தையை என் சினிமா வாழ்க்கைக்கு தடையா இருக்கும்னு மறைச்சு வெச்சிட்டேன்' கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் சொன்ன நடிகை அஹல்யா'.  இது இன்னொரு பத்திரிக்கை. அஹல்யாவை பற்றியும் அவளது ஒழுக்கத்தை பற்றியும் தாறுமாறாக கிழித்திருந்தார்கள்.

பத்திரிக்கைகளை விட்டு தனது கைப்பேசியை அவன் கொஞ்சம் உரசிப்பார்க்க ...... இணைய தளங்களில் இன்னமும் மோசம்.

'இவளெல்லாம் ஒரு தாயா? இவளெல்லாம் ஒரு பெண்ணா? நம் கலாசார சீரழிவுக்கு இது போன்ற நடிகைகளே காரணம். இவளை நடு ரோட்டில் செருப்பால் அடிக்க வேண்டாமா... என்ற ரீதியில்... எல்லா துறைகளிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் சம எண்ணிக்கையில் இருக்கும் நிலையில் எல்லா தப்பும் சினிமாவில் மட்டுமே  நடக்கிறது என்ற பாவனையில்....

ஒரு பெண் என்பதையும் மறந்து அவளை பற்றி மிக கேவலமான விமர்சனங்கள்... அவள் தற்போது நடித்து வெளி வந்திருக்கும் திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதை தடுத்துவிடவும் சில முயற்சிகள்....

சுடு நெருப்பில் விழுந்து விட்டதை போல் துடித்தது சஞ்சாவின் இதயம். எந்த ஒரு தவறுமே செய்யாத நிலையில் அவளுக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை??? சினிமா வாழ்கையில் இது போன்ற விஷயங்கள் மிக சகஜம் என்ற போதிலும் ஏனோ உடல் நடுங்குவதை போல் உணர்ந்தான் சஞ்சா.

கண்களில் நீர் கட்டிக்கொள்ள 'அல்வா... துண்டு....' வாய்விட்டு உச்சரித்தான் அவன். சில நிமடங்கள் அவன் அப்படியே நின்று விட அவன் அருகில் வந்து நின்றான் ரிஷி.

'என்னாச்சுடா.???' தனது கைப்பேசியை அவனிடம் நீட்டினான் சஞ்சா.

You might also like - Moongil kuzhalanathe... A family drama...

அந்த விமர்சனங்களை படித்தவன் கொஞ்சம் கொதித்துதான் போனான் 'ராஸ்கல்ஸ்...' என்றான் பற்களை கடித்துக்கொண்டு. 'அவசர பட்டுட்டாடா அவ. ரொம்ப அவசர பட்டுட்டா.. நான் பேசி இருக்கணும். என் பிரச்சனைக்கு அவளை பணயம் வைக்குறது ரொம்ப தப்புடா. இனிமே அவ தனியா வெளியே போறதே கஷ்டம். பாவம் டா... சஞ்சா அவ...'

'ம்.....' அமோதிப்பாக தலை அசைத்தான்

'இப்போ ஏதாவது செஞ்சு ஆகணும் சஞ்சா'

'கண்டிப்பா செய்வோம். ரிஷி. செஞ்சே ஆகணும்' என்று உறுதியான குரலில் சொல்லிக்கொண்டே அவன் நிமிர்ந்த போது அவன் கண்ணில் தென்பட்டனர் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் அஹல்யாவும், அருந்ததியும். அவர்கள் அருகில் சென்றனர் இருவரும்.

நண்பர்கள் இருவரும் பளிசென்ற வெள்ளை வெட்டி சட்டையில் இருக்க அவர்களை பார்த்த மாத்திரத்தில் இரண்டு பெண்களின் முகத்திலும்  தன்னாலே புன்னகை அரும்பியது. ஆனால் உடையில் இருந்த பிரகாசம் இருவர் பிரகாசம் முகத்திலும் இல்லையே!!!!

'என்னாச்சு சஞ்சா. என்ன பிரச்சனை? ---- அஹல்யா.

'அதெல்லாம் ஒண்ணுமில்லைடா' என்றான் சஞ்சா

'அதுதான் எல்லாம் இருக்குன்னு உன் முகம் சொல்லுதே சஞ்சா. நீ மொபைலை உருட்டிட்டு இருந்ததும் அப்போ உன் முகம் போன போக்கையும் தான் பார்த்தேனே. காலையிலேயே இதையெல்லாம் நான் ஒரு ரவுண்டு பார்த்து சிரிச்சு முடிச்சிட்டேன் சஞ்சா. ஒரு விஷயம் நல்லா  புரியுது. நாட்டிலே யாருக்குமே வேலை இல்லை. என்னமா எழுதறாங்க.!!!! கவிதையா!!! கோர்வையா!!! நான் சொன்னதையும் தாண்டி நிறைய புது மேட்டர் வேறே சேர்த்து இருக்காங்க சூப்பர் போ...'

சத்தியமாக பதில் வார்த்தை எழவில்லை சஞ்சாவிடமிருந்து.

'அட ஏன் பா சந்தோஷமா இருக்க வேண்டிய தங்கச்சி கல்யாணத்திலே சோகமா இருக்கே. இதெல்லாம் நமக்கு என்ன புதுசா? போ.. போ... போய்... வேலையப்பாரு..' படு கூலாக பதில் சொன்னாள் அஹல்யா. ஒரு பெருமூச்சுடன் நடந்தான் சஞ்சா. மனம்தான் அடங்க மறுத்தது.

கொஞ்ச நேரத்தில் திருமண பரபரப்பு தொற்றிக்கொண்டது சஞ்சாவை. தங்கமும், வைரமும் சேர்த்து அலங்கரித்த சிலையாக மணமேடையில் வந்து அமர்ந்தாள் அவன் தங்கை திரை உலக வானில் மின்னிக்கொண்டிருக்கும் மிக பெரிய நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தனர்.

சஞ்சா மேடைக்கு சென்று விட அவர்களை வரவேற்று கவனிப்பது ரிஷியின் பொறுப்பு என்று ஆனது. இன்னும் ஏதாவது சுவாரஸ்யமான செய்திகள் கிடைக்கும் என்பதாலேயே பத்திரிக்கையாளர் கூட்டம் நேற்றை விட இன்று அதிகமாகவே இருந்தது. கேமரா ஃபிளாஷ்களின் ஒளி வெள்ளதில் மண்டபமே மின்னிக்கொண்டிருந்தது.

இங்கே எல்லாருடைய கவனமும் மணமேடையில் இருக்க, அங்கே அரவிந்தாட்சனின் கண்கள் திவாகர் மறைத்து வைக்கப்படிருந்த இடத்தை தேடிக்கொண்டிருந்தன. எல்லா அறைகளையும் விட்டு சற்று ஒதுக்கு புறமாக இருந்த அந்த அறையை கண்டு பிடிக்க அதிக நேரம் பிடிக்கவில்லை அவருக்கு. சரியாக அதே நேரத்தில் திவாகருக்கு காலை உணவு கொடுப்பதற்காக அவனது அறை கதவு திறக்கப்பட, அடுத்த சில நொடிகளில் அந்த அறைக்குள் நுழைந்திருந்தார் அரவிந்தாட்சன்.

மணமக்கள் இருவரும் இங்கே மாலை மாற்றிக்கொண்டிருக்க, பல பிரச்சனைகளையும் தாண்டி நடந்துக்கொண்டிருக்கும் தங்கையின் திருமணத்தை ரசித்துக்கொண்டிருந்தவனின் மனதின் இன்னொரு பக்கம் அஹல்யாவையே சுற்றிக்கொண்டிருந்தது. ரிஷியும், அருந்ததியும் மேடை மீது நின்றிருக்க. கீழே மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அஹல்யா.

அவள் பார்வை சஞ்சாவை விட்டு அகல மறுத்தது. வேஷ்டியும், சட்டையும் அவனது கம்பீரத்தை இன்னமும் அதிக படுத்தியது போலே தோன்றிக்கொண்டிருந்தது அவளுக்கு. எப்போதோ ஒரு முறை அவன் இதே  போன்றதொரு  உடையில் இருந்த போது இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ஞாபகம். இருவரும் பிரிந்து விட்ட பிறகு அதை கைப்பேசியிலிருந்து அழித்து விட்டாள் அவள்.

இப்போது சின்னதாக ஒரு ஆசை பிறந்தது அவள் மனதில் இப்போது அதே போன்று அவனுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியுமா? போதும். இந்த சின்ன ஆசை நிறைவேறினால் போதும் எனக்கு. அந்த புகைப்படத்தை பொக்கிஷமாக வைத்துக்கொள்வேன் நான்'  யோசித்தபடியே அமர்ந்திருந்தாள் அவள்.

அதே நேரத்தில் துறுதுறுவென சுழன்று யாரையோ தேடியது சஞ்சாவின் பார்வை. ஒரு வேளை என்னைத்தான் தேடுகிறானோ? அப்படித்தான் இருக்குமோ? எத்தனை கட்டுப்படுத்தியும் பரபரத்தது மனம். தவிப்புடனே அமர்ந்திருந்தாள் அவள். சில நொடிகளில் கண்கள் அவளிடம் வந்து அடைய, அவன் முகம் மலர, இவளுக்குள்ளே சந்தோஷ அருவி.

'மேலே வா' கண்களால் அழைத்தான் சஞ்சா

'இல்லை... இங்கேயே இருக்கேனே..' அவசரமாக தலை அசைத்து மறுத்தாள் அவள்.

'பச்... மேலே..... வா' மறுபடியும் கண்ணசைவில் சொன்னான் சஞ்சா.

ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு குழந்தையை தூக்கி கொண்டு மேடை ஏறி சஞ்சாவுக்கு கொஞ்சம் அருகில் சென்று நின்றுக்கொண்டாள் அஹல்யா. மனம் குதூகலித்தது. நல்லதாக போய்விட்டது. இனி எப்படியாவது புகைப்படம் எடுத்துக்கொண்டுவிடலாம். அவளை பார்த்து புன்னகைத்து திரும்பிய சஞ்சாவை தாக்கியது அந்த அதிர்ச்சி.

முதல் வரிசையில் வந்து அமர்ந்தார் அவர். அரவிந்தாட்சன்!!! அவர் முகத்தில் ஒரு வெற்றிப்புன்னகை. சஞ்சாவின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்து, அவன் பார்வை சென்ற திசையில் ரிஷியின் பார்வையும் செல்ல, அவன் முகமும் மாற்றம் கொண்டது.

இவர் தான் நடப்பவை எல்லாவற்றுக்கும் காரணம் என்று எல்லாருக்கும் தெரியுமே. அவரை பார்த்த மாத்திரத்தில் அஹல்யாவின் முகத்திலுமே கலவர ரேகைகள். ஏதோ ஒரு திட்டத்துடன் தான் அவர் வந்து அமர்ந்திருக்கிறார் என்பது எல்லாருக்குமே தெளிவாக புரிந்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.