(Reading time: 33 - 66 minutes)

ரவு நேரம் பதினொன்றை தாண்டி கடந்துக்கொண்டிருந்தது.

எல்லாரும் மண்டபத்தில் அவரவர் அறைகளில் உறங்கிவிட்டிருக்க, குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு அதன் முதுகை வருடிக்கொடுத்தபடியே, அந்த அறையில் இங்குமங்கும் நடந்தபடியே, உறங்க வைத்துக்கொண்டிருந்தான் ரிஷி.  தமிழ் நாட்டை ஒரு கலக்கு கலக்கிய ஆக்ஷன் ஹீரோ ரிஷி தானா இது? புன்னகை பூத்தது அருந்ததியின் முகத்தில்.

ஏதோ இரண்டு மூன்று குழந்தைகளை வளர்த்துவிட்ட அனுபசாலி போல் குழந்தையை அவன் பொறுமையாக கதை சொல்லி தூங்க வைத்துக்கொண்டிருந்த விதத்தை ரசித்தபடியே அமர்ந்திருந்தாள் அருந்ததி. அதே நேரத்தில் அவன் முகத்தில் பரவிக்கிடந்த அழுத்தமும் வருத்தமும் அப்படியே தான் இருந்தது.

குழந்தையை தூங்க வைத்து, அதை அங்கிருந்த கட்டிலின் ஓரத்தில் படுக்க வைத்து அது உருண்டு விழுந்துவிடாமல் இருக்க அருகில் தலையணைகளை வைத்துவிட்டு அவன் படுக்க, அவனுக்கு இடப்பக்கம் சென்று படுத்துக்கொண்டாள் அவள்.

'ஏன்டா இவ்வளவு டல்லா இருக்கே. உன்னை இப்படி பார்க்க நல்லாவே இல்லை' தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள் அவள். அவனை கொஞ்சமாவது புன்னகைத்துவிட வைக்க வேண்டும் என்றே தோன்றிக்கொண்டிருந்தது அவளுக்கு.

கண்களை மூடிக்கொண்டு எங்கோ ஓட முயன்றுக்கொண்டிருந்த உறக்கத்தை துரத்திபிடிக்க அவன் முயற்சி செய்துக்கொண்டிருந்த வேளையில், அவன் பக்கமாக திரும்பி படுத்தவளின் கைக்கு அருகே இருந்தன அவனது விரல்கள். ஒரு குறும்பு புன்னகை அவள் உதடுகளில்.. அவன் கை மீது மெல்ல கோலமிட்டன அவள் விரல்கள்.

விருட்டென அவன் கண் திறந்து அவள் பக்கம் திரும்ப, அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு அவனை பார்த்தாள் அருந்ததி. அவளை ஒரு முறைப்பாக ஒரு  பார்வை பார்த்துவிட்டு, மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான் அவன். மறுபடியும் இன்னொரு கோலம்.

You might also like - Vasantha bairavi... A neat family story...

'பச்....' என்றவன் கண்களை கூட திறக்காமல் கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு படுத்து விட்டிருந்தான் . சிறிது நேரம் பேசாமல் படுத்திருந்தாள் அவள்.

எத்தனை நேரம் தான் அவன் அப்படியே படுத்திருக்க முடியுமாம்??? அவன் அரைகுறை உறக்கத்தை தொட்ட நொடியில் அவன் கை கொஞ்சம் தளர்ந்து கீழே வர கண்களில் கொஞ்சம் குறும்பு தெறிக்க அவன் உணர்வதற்குள் அவனது விரல்களை  பிடித்து உதடுகளுக்கு அருகில் கொண்டு போய் அதை 'நறுக்கென' கடித்து விட்டிருந்தாள் அவள். 

சுள்ளென்று புறப்பட்ட வலியில், திடுக்கென உறக்கம் கலைந்து அவள், வேலை இது என புரிந்து, சுரீரென பொங்கிய கோபத்தில் 'ராட்சசி...' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவன்  தன்னை மறந்து அவள் மீது பாய்ந்து அவளை கடிக்க அவள் முகத்துக்கு அருகே நெருங்கிய நொடியில் சட்டென தன்னிலை பெற்றான் அவன்.

நான்கு கண்களும் அருகருகே சில நொடிகள் ஒன்றை ஒன்று பார்த்தபடியே இமைக்காமல் இருந்தன. அவன் பெர்ஃப்யூம் வாசம் நாசியை வருட, திடீரென்று ஏற்பட்ட நெருக்கத்தில் சின்ன வெட்கமும் புன்னகையும் அவளிடம் சேர, மெல்ல மெல்ல மாறிய அவனது முகத்திலும் தொற்றிக்கொண்டது புன்னகை.

விலகத்தோன்றாதது போல் சில நொடிகள் அப்படியே அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் பின்னர் என்ன தோன்றியதோ???? தலையை இடம் வலமாக அசைத்துக்கொண்டு அவளை விட்டு விலகி சென்று படுத்துக்கொண்டான்.

ஆனால் இருவர் இதழ்களிலும் இன்னமும் புன்னகை மிச்சமிருந்தது. பலவித அழுத்தங்களுடன் மனம் அடைந்து கிடந்த நேரத்தில், இரண்டு மனங்களிலும் சட்டென ஒரு பனிக்காற்று வீசி சென்ற இதம், வார்த்தைகளில் விவரிக்க முடியாத சின்னதான ஒரு பரவசம் .இனி உறக்கம் கிட்டாது என இருவருக்கும் தோன்றிப்போனது. இப்படி திரும்பி, அப்படி புரண்டு படுத்து கடைசியில் ஒரு கட்டத்தில் நான்கு கண்களும் மறுபடியும் சந்தித்துக்கொள்ள நேர்ந்தது.  

இதோ இப்போது கூட அவனை வசி என்று அழைத்து விடலாம் தான்!!!!! ஆனால் அழைக்க வில்லை அவள்!!!! இதோ இப்போதுகூட எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு அவளை அணைத்துக்கொண்டு முத்தமிடலாம்தான் ஆனால் செய்யவில்லை அவன்!!!!

இருவரும் ஒருவரை ஒருவர் ரசித்தபடியே புன்னகையுடன் படுத்திருக்க இரண்டு மனமுமே ஏனோ மழைத்தேடி காத்திருந்தேன் பாடலின் படப்பிடிப்பு நடந்த அந்த நிமிடங்களையே தொட்டன. இருவரும் தங்களை மறந்துவிட்ட சில நிமடங்கள் அவை

மழை தேடி காத்திருந்தேன்...... காத்திருந்தேன்.......

மனம் தேடும் மழையானாய்...... மழையானாய்.....

கரைந்தேனடி கண்களில்....

விழுந்தேனடி வெள்ளத்தில்....

பாடல் ஒலித்துக்கொண்டிருக்க அவள் அவனை விட்டு விலக முயன்று, அவன் கைப்பிடியில் சுழன்று திரும்பி, அவனிடம் தஞ்சமாகி, அவன் கைகள் இடை வளைக்க, மேகத்தில் நடப்பதை போன்றதொரு உணர்வில் இருவரும்.  

கரைசேர்ப்பாய் முத்தத்தில்.....

பாடல் வரி ஒலிக்க வெட்க குளிரில் அவள் உடல் நடுங்கிக்கொண்டிருக்க அவளது விழி ஈர்ப்பு விசையில் விழுந்தவனாக ஓடிக்கொண்டிருக்கும் காமெராவையும், சுற்றி நின்ற மற்றவர்களையும் மறந்து, தனக்கும் அவளுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்று அவன் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் எல்லாம் காற்றில் பறக்க, அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டவன் தன்னை மறந்து அவள் இதழ் மீது இதழ் அழுத்தமாக பதித்து விட்டிருந்தான்.

அவன் இத்தனை நாட்கள் மறுத்து வந்த, அவனுக்குள்ளே வேரூன்றி கிடந்த காதலை அவள் மொத்தமாக உணர்ந்த தருணம் அது. சிலிர்ப்பும், பரவசமுமாக சில நொடிகள் தன்னையே மறந்திருந்தாள் அருந்ததி. பின்னர் திடுக்கென சுதாரித்து கொண்டு  அவனை விட்டு விலகி ஓடி சென்று தனது கேரவனுக்குள் சென்று அமர்ந்துக்கொண்டாள்.

அந்த இடமே கொஞ்சம் ஸ்தம்பித்து தான் போனது. யாருமே எதிர்பார்க்க வில்லை தான் அதை. அதன் பிறகு இயக்குனருடன் பேசி கமெராவில் பதிவான அந்த காட்சியை அவன் நீக்கியது, எல்லா பத்திரிக்கைகளிலும் இது பெரிய கிசுகிசுவாக பேசப்பட்டது, இரண்டு மூன்று நாட்கள் அவள் முன்னால் வருவதையே அவன் தவிர்த்தது, கடைசியில் ஒரு வழியாக அந்த பாடலின் படப்பிடிப்பு எப்படியோ நடந்து முடிந்ததெல்லாம் தனிக்கதை.

முகத்தில் இன்னமும் கொஞ்சம் மலர்ச்சி ரேகைகள் பாக்கி இருக்க அந்த நினைவுகளுடனேயே உறங்கிப்போயிருந்தனர் அருந்ததியும் ரிஷியும்.

றுநாள் காலை. களைக்கட்டி இருந்தது மண்டபம். திருமணதிற்கு தயாராகிக்கொண்டிருந்தனர் மணமக்கள். பளிசென்ற வெள்ளை வெட்டி சட்டையில் தனது அறையை விட்டு வெளியே வந்தான் சஞ்சா.

இன்னும் கொஞ்ச நேரத்தில்  வி.ஐ.பி.களின் வருகை ஆரம்பித்து விடும் இந்த நிமிடம் வரை திவாகரிடமிருந்து எந்த பிரச்னையும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு கீழே வந்த சஞ்சீவின் பார்வையில் பட்டன அன்றைய நாளிதழ்கள்.

நேற்றைய நிகழ்வுகள் எல்லா பத்திரிக்கைகளிலும் நிச்சியம் இடம் பெற்றிருக்கும் என்று அவனுக்கு தெரியும். திருமண பரபரப்பில் கவனிக்கவில்லை என்றாலும் சமூக இணைய தளங்களிலும் இதே பேச்சாக தான் இருக்கும் எனவும்  தெரியும் அவனுக்கு. ஓரமாக சென்று அவற்றை புரட்ட துவங்கினான் சஞ்சா.

'பெற்ற குழந்தையை தவிக்க விட்ட நடிகை அஹல்யா 'கையில் குழந்தையுடன் அஹல்யாவின் புகைப்படம். அதற்கு கீழே அவளை பற்றிய விமர்சனங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.