(Reading time: 10 - 19 minutes)

ஸ்ரீதரும், கமலும் எத்தனை கஷ்டங்களை இந்தப் பெண் தாங்கி இருக்கிறாள் என்று ஒரு பரிதாபப் பார்வையை அவளை நோக்கி வீசினார்கள்.

அவர்களின் பார்வை மாற்றத்தை கவனித்த தேவி, “என்ன சார், அதுக்குள்ளே என் கதையை கதாகாலட்சேபமா சொல்லியாச்சா.  என் கதை என்ன சார் ராமாயணமா ..... சொன்னாலும், கேட்டாலும் புண்ணியம் வந்து சேரறதுக்கு”, சற்று கடுப்பாக வரதனிடம் கேட்டாள்.

“கண்டிப்பா உங்க கதையைக் கேட்டா புண்ணியம் வந்து சேருதோ இல்லையோ, ஆனா மனதைரியம் வந்து சேரும்”, ஸ்ரீதர் நேரடியாக அவளைப் பார்த்து சொன்னான்.

“நீங்க இப்படி எல்லாம் பேசினா, நீங்க  பண்ணினது சரின்னு உங்க பக்கம் பேசுவேன்னு நினைச்சீங்களா?”

“கண்டிப்பா இல்லை.  ஏன் தேவி, உங்க விஷயத்தையே எடுத்துக்கோங்க.  தப்பு பண்ணினது முழுக்க நல்லதம்பி,  ஆனால் கோர்ட் மூலமா தண்டனை கிடைச்சு இந்த சமூகத்துக்கு குற்றவாளியா தெரிஞ்சவங்க வேற யாரோ ரெண்டு பேர்.  அதே மாதிரி என் விஷயத்துலயும் நான் தப்பு செய்யாம மீடியா மூலமா தப்பு செஞ்சவனா காட்டப்பட்டிருக்கேன்.  இந்த கோணத்துல யோசிச்சு பாருங்களேன்”

“சார், முதல்ல நீங்க ஒரு ஆண், அதாலேயே நான் உங்கள நம்ப மாட்டேன்.  அடுத்து ஒரு பொண்ணு மீடியா வரை வந்து பேசறான்னா கண்டிப்பா அதுல உண்மை மட்டும்தான் இருக்கும்.  பொய் சொல்லி அவ பேசி இருக்கறது வெளிய தெரிஞ்சா அவ வாழ்க்கையே மொத்தமா வீணாப்போய்டும்.  எந்தப் பொண்ணும் அந்த அளவு ரிஸ்க் எடுக்க மாட்டா.  அதனால வீணா சப்பைக் கட்டு கட்டாம கிளம்புங்க”

“ஆண் அப்படிங்கறதாலேயே நான் தப்பு பண்ணி இருப்பேனா.  I’m really sorry to say this தேவி.  நீங்க வக்கீலுக்கு படிச்சதே வேஸ்ட்.  உங்கக்கிட்ட எந்த ஆணும் கேஸ் கொண்டு வராம இருக்கற வரை பொழைச்சாங்க”

“உங்க ஆண் குலத்துக்காக ரொம்ப வருத்தப்படாதீங்க சார்.  நான் எடுத்து நடத்தறது எல்லாமே பெண்களுக்கு எதிரா நடக்கற கொடுமைகளை பற்றி வர்ற வழக்குகளை மட்டும்தான்”

“தேவி நீங்க சொல்றபடி பார்த்தால், விமலா மாதிரி ஒரு பெண்ணால் இத்தனைக் கஷ்டம் நான் பட்டதுக்கப்பறம் பெண்கள் அப்படின்னாலே ரெண்டு கிமீ தள்ளி நிக்கணும்.  ஆனால் ஒரு பெண்ணை வச்சுட்டு மொத்த பெண் குலத்தையும் நான் இழிவு படுத்த விரும்பலை”

“ரொம்ப சரி.  உங்க விஷயத்துல நீங்க பார்த்தது ஒரு விமலாவைத்தான்.  அதுக்கூட நீங்களேதான் அவ மேலப் புகார் சொல்றீங்க.  ஆனால் நான் பார்த்த வரையிலே உலகத்துல முக்கால்வாசி ஆண்கள் கெட்டவங்களாகத்தான் இருக்காங்க”

“வரதன் சார், ரவி சாரை பார்த்த பிறகுமா இப்படி சொல்றீங்க?”

“முக்கால்வாசி என்று சொன்னேனே, பாக்கி இருக்கற கால் வாசில அவங்க வர்றாங்க”

“அப்படிப் பார்த்தா உங்களை அடிச்சு ஊரைவிட்டு துரத்தினது அந்த நல்லதம்பியோட மனைவிதானே.  அவங்க பெண் வர்க்கம்தானே”

“அவங்க அதைப் பண்ணினதுனாலதான் நான் இன்னைக்கு உயிரோடவானும் இருக்கேன்.  இல்லைனா என்னை அந்த நாய் பண்ணின கொடுமைக்கு என்னைக்கோ போய் சேர்ந்திருப்பேன்”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது தேவி உணர்ச்சி வசப்படுவதை அறிந்து  இடையில் புகுந்த வரதன், “தேவி கண் மூடித்தனமா ஆண் வர்க்கத்தை தப்பு சொல்லாதம்மா.  ஸ்ரீதர் விஷயத்துல தப்பு பண்ணினது உன்னோட பெண் வர்க்கம்தான்.  இதை நான் இப்போ சொன்னா உன்னால ஏத்துக்க முடியாது.  இந்தக் கேஸ் எடுத்து நடத்தி ஆண்கள்ல நல்லவங்களும் இருக்காங்கன்னு உனக்கு நிரூபிச்சு காட்டறேன்”

“ஆமாம் தேவி, நானும் உங்களை குத்தம் சொல்லல.  நான் படற கஷ்டம் எல்லாம் ஒண்ணுமே இல்லை நீங்க பட்டதைப் பார்க்கும்போது,  ஆனால் அதுக்காக ஒட்டு மொத்த  ஆண்களும் அப்படித்தான்னு முடிவுக்கு வரக்கூடாது.  என்னோட விஷயத்துலையே அதை நீங்க புரிஞ்சுப்பீங்க”

“பார்க்கலாம் சார், நான் உங்களை புரிஞ்சுக்கறேனா, இல்லை சார் உங்களைப் போல ஆண்களைப் பற்றி புரிந்து கொள்கிறாரான்னு”

“சரி தேவி இதை நாம ஒரு சவாலாவே எடுத்துக்கலாம்.  என் மேல உங்களுக்கு நம்பிக்கை வேண்டாம். வரதன் சார்  கெட்டவங்களுக்காக கண்டிப்பா   ஒரு வழக்கை எடுத்து நடத்த மாட்டார்ன்னு நம்பிக்கை இருக்கு இல்லை”

“கண்டிப்பா சார் அப்படி செய்ய மாட்டார்.  அவரை நான் நூறு சதம் நம்பறேன்”

“சரி, அப்போ இந்தக் கேஸ் எனக்கு சாதகமா முடிஞ்சுதுன்னா நீங்க எனக்கு ஒரு வாக்குத் தரணும்”

“என்ன வாக்கு தரணும்.......”, அப்படி என்ன கேட்க போகிறான் என்று வரதனும்... கமலும்  ஆவலுடனும், ஏடாகூடமாக எதயாவது கேட்டால் அவனை குதறும் வெறியுடன் தேவியும்  ஸ்ரீதர் முகத்தையே பார்த்தார்கள்.

“பயப்படாதீங்க தேவி.  தப்பால்லாம் எதுவும் கேக்க மாட்டேன்.  சப்போஸ் நான் வின் பண்ணினேன்னா நீங்க இனிமே வரதன் சாரை அப்பான்னும், ரவி சாரை அண்ணான்னும் கூப்பிடணும்.  இதுக்கு ஒத்துக்கறீங்களா”, ஸ்ரீதர் கேட்க வரதன் முகம் முழுவதும் மலர்ச்சியாக தேவியைப் பார்த்தார்.

“அது....... அது.......  நான் எப்படி அவங்களை அப்படி கூப்பிடறது....... உறவுகள் அப்படின்னாலே வெறுப்பாத்தான் இருக்கு”

“நீங்க ஒரு ஒரு வாட்டியும் சார், சார் அப்படின்னு கூப்பிடும்போது வரதன் சார் முகம் அப்படியே சுருங்கிப் போகுது.  எனக்காக இந்த கேஸ் எடுத்து நடத்தற  அவருக்காக இதை நான் கேக்கறேன்.  என்ன சவாலுக்கு ஒத்துக்கறீங்களா?”

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தேவி சிறிது நேரம் தவித்து விட்டு, “சரி சார், நான் உங்க சவாலை ஏத்துக்கறேன்”, என்று கூற முகம் முழுவதும் பல்லாக வரதன் ஸ்ரீதரின் கையைப் பற்றி குலுக்கினார்.

“ஸ்ரீதர், என் பொண்ணு என்னை அப்பான்னு கூப்பிடணும் அப்படிங்கறதுக்காகவே நான் இந்தக் கேஸை வின் பண்ணப்போறேன்.  நீங்க இன்னும் ஒரு ரெண்டு நாள் கழிச்சு வந்து என்னைப் பாருங்க.  அதுக்குள்ள நான் கேஸ் முழுக்க study பண்ணிட்டு அடுத்து என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சு வைக்கறேன்”, என்று கூறி அவர்களுக்கு விடை கொடுத்தார்.

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:857} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.