(Reading time: 20 - 39 minutes)

சுரீரென பொங்கியது ராமனுக்கு. மேகலாவை நோக்கி கையையும் ஓங்கி விட்டிருந்தார் அவர். ஆனால் அங்கே இருந்தவர்களின் பார்வையும், சந்திரிக்கா இருந்த சூழ்நிலையும் அவரை தடுத்தது. தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு சந்திரிக்காவை அழைத்துக்கொண்டு நடந்தார் ராமன்.

மறுநாள் காலை வெளிவந்த நாளிதழ்கள் சந்திரிக்காவை பார்த்து கைக்கொட்டி சிரித்தன.

'முழு போதையில் பரதநாட்டியம்'. '

'பரத நாட்டிய மேடையில் கவர்ச்சி நடிகையின் அட்டகாசம்''

எல்லா இடத்திலும் இதைப்பற்றிய பேச்சுக்களே இடம் பெற்றிருக்க மக்கள் மத்தியில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்திருந்தார் சந்திரிக்கா.

'போதும். இதோட எல்லாம் போதும் வைதேகி..'. என்றார் ராமன். 'நீ என்னோட வைதேகியா என்னோட வந்திடு.

'எல்லாம் முடிஞ்சு போச்சா..' ஒரு பெருமூச்சுடன் கேட்டார் வைதேகி.

'போராடலாம் வைதேகி. போராடி எல்லாருக்கும் நாம யாருன்னு நிரூபிக்கலாம். ஆனால் அதுக்காக நம்மோட பல சந்தோஷங்களை இழக்க வேண்டி இருக்கும். வேண்டாம் வைதேகி !!!! தேவை இல்லை!!!! யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பேசிட்டு போகட்டும். நீ என்கூட வந்திடு. இவங்க யாருமே இல்லாத இடத்துக்கு போயிடுவோம். நான் உன்னை ரொம்ப ரொம்ப சந்தோஷமா பார்த்துக்கறேன்.' வைதேகியை தனது தோளில் சாய்த்துக்கொண்டு சொன்னார் ராமன்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்திருந்தது. தமிழ் நாட்டை விட்டு அவர்கள் இருவரும் லண்டன் செல்ல முடிவெடுத்திருந்த போது நடந்தது அது........

ஜானகியின் கணவன் ரகுவின் திடீர் மரணம். அதை தொடர்ந்து ஜானகி குழந்தைகளுடன் செய்த தற்கொலை முயற்சி. அவர்களை காப்பற்றியது ராமன்.  விவரம் அறிந்து இரண்டு குழந்தைகளையும் அள்ளி தன்னோடு சேர்த்துக்கொண்டார் சந்திரிக்கா.

'தற்கொலை தான் எல்லாத்துக்கும் முடிவுன்னா நான் எப்பவோ செத்து போயிருக்கணும்' கொதித்து வெளிவந்தது சந்திரிக்காவின் குரல். 'இவங்க முகத்தை பாரு .,இந்த குழந்தைங்க என்ன பாவம் பண்ணாங்க??? உன்னாலே முடியலைன்னா சொல்லு நான் வளர்த்துக்கறேன் இவங்க ரெண்டு பேரையும்'

இருபது, இருபத்தி ஓரு வயதில் கையில் இரண்டு குழந்தைகளுடன் தனியே வாழ்வது சாத்தியமே இல்லை என்று தோன்றி விட்டிருந்தது ஜானகிக்கு. அவர் சொன்ன வார்த்தைகளில் விருட்டென நிமிர்ந்து பார்த்தார் ஜானகி. அப்போது பதிலேதும் பேசவில்லை.

இரண்டு நாட்கள் கழிந்து விட்டிருந்த நிலையில் திடீரென அவர்கள் முன்னால் தனது மகன்களுடன் வந்து நின்றார் ஜானகி.

'அன்னைக்கு நீங்க சொன்னீங்களே அது நிஜமா தானா?'

'எது???" என்றார் சந்திரிக்கா.

'இல்லை... என் பிள்ளைகளிலே ஒண்ணை நீங்க வளர்க்க முடியுமா?'

திகைத்து நிமிர்ந்தனர் கணவனும் மனைவியும். அந்த நேரத்தில் தனிச்சையாக சந்திரிக்காவின் கரம் ரிஷியை இழுத்து தனது மடியில் அமர்த்திக்கொண்டது நிஜம்.

'ரெண்டு பிள்ளைகள என்னாலே வளர்த்து கரை சேர்க்க முடியுமான்னு எனக்கு தெரியலை. என் பாரத்தை உங்க தலையிலே வைக்கிறது தப்புத்தான். உங்களுக்கு இதிலே இஷ்டம் இருந்தாத்தான். இல்லைன்னா வேண்டாம்'

ராமன் தம்பதியினரிடம் சின்ன அசைவு கூட இல்லை. ஜானகியையே இமைக்காமல் பார்த்திருந்தனர் இருவரும்  

'எந்த அம்மாவும் செய்யாத காரியம் தான் இது. என் கூட இருந்தா ரெண்டு பேரும் கஷ்டம் தான் படுவான்னுங்க. இதிலே ஒருத்தனாவது மகாராஜாவா இருக்கட்டுமேன்னு பார்க்கிறேன்.

உங்க கூட இத்தனை நாள் இருந்திருக்கேன். உங்க மனசு எனக்கு தெரியும். உங்களுக்கு பிள்ளைங்க பிறந்தாலும் என் பிள்ளை கண்டிப்பா கஷ்டப்பட விட மாட்டீங்க. உடனே சொல்ல வேண்டாம். யோசிச்சு சொல்லுங்க.' அவள் பேசப்பேச சந்திரிக்காவின் கரம் ரிஷியின் கேசத்தை வருடிக்கொண்டே இருந்தது.

அடுத்த சில நாட்களில் ஜானகிக்கு ஒரு நல்ல வேலை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு, வங்கியில் ஒரு கணிசமான தொகையை அவள் பெயரில் போட்டு விட்டு, ரிஷியை தங்களுடன் அழைத்துக்கொண்டு லண்டன் கிளம்பினர் ராமன் தம்பதியனர்.

இரண்டரை வயது ரிஷி, தனது தாயை பிரிய மறுத்து கதறிய கதறல் இன்னமும் நினைவிருக்கிறது சந்திரிக்காவுக்கு.

கிளம்பும் முன் 'இப்படி அழறானேமா... வேணும்னா உன் கூடவே இருக்கட்டும்மா. நாங்க உனக்கு இவங்களை வளர்க்க என்ன உதவி வேணுமானாலும் செய்யறோம்'  மனம் தாங்காமல் சொல்லிப்பார்த்தார் ராமன்.

'ரிஷியின் எதிர்க்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஜானகியிடம் மேலோங்கி இருக்க, சந்திரிக்காவுக்கும் ரிஷியிடம் சொல்லத்தெரியாத ஒரு பிணைப்பு ஏற்பட்டு இருந்தது. அவனை பிரியும் எண்ணம் ஏனோ வரவே இல்லை சந்திரிக்காவுக்கு.

கடைசியில் ஒரு வழியாக அவனை தேற்றி தங்களுடன் அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டிருந்தனர் ராமன் தம்பதியினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.