(Reading time: 20 - 39 minutes)

'ன்னதான் நீ இல்லை இல்லைன்னு சொன்னாலும்... தீக்ஷா என் ரத்தம்தான்னு நான் சொல்றேன்.. நீயும் ஒரு நாள் சொல்லுவே. அதுவரைக்கும் நான் காத்திருப்பேன்..' என்று நண்பனை தீர்க்கமாக பார்த்துகொண்டே சொல்லியபடி அவளது கையில் இருந்த அந்த புகைப்படத்தை பார்க்காமல் கடலை மிட்டாயை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு நடந்தான் அந்த புத்திசாலி சித்தப்பா.

அதே நேரத்தில் செங்கல்பட்டில் இருந்த அந்த வீட்டில் திவாகரின் முன்னால் அமர்ந்திருந்தான் அருந்ததியின் அண்ணன் அஸ்வத். அரவிந்தாட்சன் சஞ்ஜாவின் பக்கம் சேர்ந்திருப்பார் என்று ஊகித்து விட்ட சில நிமிடங்களிலேயே திவாகரை தேட துவங்கி இருந்தனர் மேகலாவும், அஸ்வத்தும். அவனுக்கு தெரிந்த சில ஆட்கள் மூலம் திவாகரை தேடி பிடிப்பது ஒன்று கஷ்டமாக இருக்கவில்லை அவனுக்கு,

'எனக்கு நீங்க கொடுக்குறதா சொல்ற எதுவும் வேண்டாம்' என்றான் திவாகர் உறுதியான குரலில். ரிஷியையுடன் நெருங்கி விட வேண்டும் என்பது அவனது லட்சியமாக இருந்த போதும், இவர்கள் யாரையும் நம்பத்தயாராக இல்லை. திவாகர்.

'போதும் உங்களை எல்லாம் நம்பி நான் அடி வாங்கினது தான் மிச்சம். எனக்கு யாரையும் தெரியாது. யாரும் வேண்டாம். தயவு செய்து கிளம்புங்க' அஸ்வத்தை பார்த்து நேரடியாக சொன்னான் திவாகர்,  

அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் அஸ்வத். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் திவாகர் எப்படியும் தன்னை தேடி வருவான் என அவனது உள்மனம் உறுதியாக நம்பியது. தனது எண்ணை அவனிடம் கொடுத்துவிட்டு ......

'நான் சொல்ல வேண்டியது எல்லாத்தையும் சொல்லிட்டேன். என் உதவி உங்களுக்கு தேவைப்படும்ன்னு நினைச்சா எப்போ வேணும்னாலும் என்னை கூப்பிடுங்க.' மிக நல்லவனாக சொல்லிவிட்டு நகர்ந்தான் அஸ்வத். யோசனையுடனே அமர்ந்திருந்தான் திவாகர்.

அங்கே சஞ்சாவின் வீட்டில்...

சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருந்தனர் அனைவரும். அந்த புகைப்படம் இன்னமும்  தீக்ஷாவின் கையிலேயே இருந்தது. அவள் அருகில் அமர்ந்திருந்தாள் அருந்ததி. எல்லாரும் சுவாரஸ்யமாக பேசியபடியே சாப்பிட்டுக்கொண்டிருக்க அருந்ததி தீக்ஷாவுக்கு ஊட்டி விட எத்தனிக்க

'நானே சாப்பிடுவேன்....' என்றாள் தீக்ஷா.

'சரி சாப்பிடு.. என்ற அருந்ததியின் பார்வை குழந்தையின் கைக்கு சென்றது. 'என்ன வெச்சிருக்கே கையிலே??? குடு பார்ப்போம்...'

'ம்ஹூம்...' தர மாட்டேன்..'

'என்னதுடா அது. பார்த்திட்டு கொடுக்கிறேன்..'

'ம்ஹூம்...' இடம் வலமாக ஒரு தலை அசைப்பு. 'த....ர மா.....ட்.......டேன்.....' அதன் கண்களில் சின்னதாக ஒரு தீவிரம்.

'அம்மாடி..' சிரித்தாள் அருந்ததி. 'சரி தாயே நான் கேக்கலை. நீ அதை உன் மடியிலேயே வெச்சிட்டு சாப்பிட்டு முடி.'

ரிஷியின் தட்டில் உணவுகள் பரிமாற பட சாப்பிட ஆரம்பித்தான் அவன். உணவு உள்ளே இறங்க அவன் உதடுகளில் அழகான புன்னகை. முகத்தில் ரசனையின் பாவம். அந்த சாப்பாட்டு மேஜையில் இருந்து சில அடி தூரத்திலிருந்து தனது மகன் சாப்பிடுவதையே பார்த்திருந்தன அந்த அன்னையின் கண்கள்.

'என் சமையல் என் மகனுக்கு பிடித்திருக்கிறதா???' தவிப்பு அந்த அன்னையினிடத்தில்.

அதற்கான பதில் உடனடியாக கிடைத்தது ரிஷியிடமிருந்து 'சாப்பாடு சூப்பர்டா. யாருடா சமையல்???' அம்மாவின் கண்களில் நீர் சேர தவறவில்லை.

'ஜானகி அம்மா... ' முகம் மலர சொன்னான் சஞ்சா. 'எனக்கு தெரியும் உனக்கு அவங்க சமையல்  பிடிக்கும்னு... அவங்க சமையல் மட்டும் இல்லை. அவங்களை பார்த்தேனா உனக்கு அவங்களையும் பிடிக்கும். ரொம்ப நல்லவங்கடா...'

அவர்கள் பேசுவது ஜானகியின் காதில் விழ சட்டென சமையலறைக்குள் புகுந்துக்கொண்டார் அவர்.

'அட.... ' என்றபடியே புருவம் உயர்த்தினான் ரிஷி. 'எங்கே கூப்பிடு அவங்களை நான் பார்க்கணும்...'

'பரிமாறிக்கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்து சொன்னான் சஞ்சா 'ஜானகி அம்மாவை வரச்சொன்னேன்னு சொல்லு...'

'உள்ளே சென்றாள் அந்த பெண்  'உங்களை கூப்பிடறாங்க...'

சட்டென சிங்கின் அருகில் சென்று பாத்திரங்களை தேய்க்க ஆரம்பித்தார் ஜானகி 'நான் கொஞ்சம் வேலையா இருக்கேன் அப்புறம் வரேன்னு சொல்லு...'

'ஒரு வேளை என்னை பார்த்ததும் அவனுக்கு சிறுவயது நினைவு வந்துவிட்டால்??? சாத்தியமில்லை என்று ஒரு பக்கம் தோன்றிக்கொண்டே இருந்த போதும் மகனின் முன்னால் சென்று நிற்க தைரியம் வரவில்லைதான் ஜானகிக்கு.

காரணங்கள் ஆயிரம் இருந்த போதும், என் மகனை முழு சம்மதத்துடன் இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்தவள் நான் .இப்போது அவன் முகத்தை நானே எப்படி நிமிர்ந்து பார்ப்பேன்???' பாத்திரம் தேய்த்துக்கொண்டே நின்றிருந்தார் அவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.