(Reading time: 19 - 37 minutes)

மனதோர மழைச்சாரல்... - 17 - வத்ஸலா

ங்கே மேகலாவின் வீட்டில் குழப்பத்துடன் அமர்ந்திருந்தார் மேகலா. அவரை குழப்பிக்கொண்டிருந்தது சற்று நேரத்துக்கு முன்னால் வந்த அந்த தொலைப்பேசி அழைப்பு. மறுமுனையில் பேசியது யார் என்று இன்னமும் புரியவில்லை மேகலாவுக்கு.

காலையிலிருந்தே அரவிந்தாட்சனுடன் பேசிவிடவேண்டும் என்று முயன்று கொண்டுதான் இருந்தார் மேகலா. நான்கு முறை முயன்ற பிறகுதான் ஏற்கபட்டது அழைப்பு.......

'புது சொந்தமெல்லாம் கிடைச்சிருக்கு போலிருக்கு. என்னை மறந்திட்டியா?' இப்படித்தான் ஆரம்பித்தார் மேகலா.

Manathora mazhai charal

'போதும்மா....' என்றார் அரவிந்தாட்சன். 'எல்லாமே தன்னாலே ஒரு முடிவுக்கு வந்திடுச்சு. ரிஷியும் உனக்கு மாப்பிள்ளைன்னு ஆயாச்சு. எனக்கு சஞ்சா மகன்னே சொல்லிட்டான்...'

'அடடா அப்புறம் .....'  கிண்டலான தொனியுடன் ஒலித்தது மேகலாவின் குரல்.

'மேகலா... விட்டுடலாம்.... நான் விட்டுட போறேன். எனக்கு என் பொண்ணு அவ நிம்மதி, சந்தோஷம், அவ குடும்பம் எல்லாமே முக்கியம். இனிமே நீ சொல்றதை நான் கேட்பேன்னு எதிர்பார்க்காதே. இந்த விஷயத்தை தவிர வேறே எதை வேணுமானாலும் பேசு....'

இந்த விஷயத்தை தவிர வேறெந்த விஷயத்தை பற்றி பேசுவது' மனம் ஆற மறுக்கிறதே.

டிசம்பர் 31. யாராலும் மறக்கவே முடியாத அந்த டிசம்பர் 31, தான் மொத்தமாக ரிஷியிடம் தோற்றுப்போய் நின்ற அந்த டிசம்பர் 31 நினைவிலாடியது  மேகலாவுக்கு

'எனக்கு சந்திரிகா அழணும்...'எல்லார் முன்னாடியும் அழணும்...'

'நான் போனை வைக்கிறேன்...' அழைப்பு துண்டிக்கபட்டது மறுபுறம்.

அதன் பிறகு தான் வந்தது இந்த அழைப்பு. இது யார் வேலையாக இருக்கும்??? அது ஒரு ஆண் குரல் தான். ஆனால் அந்த குரல் பரிச்சியமானதாக தெரியவில்லை. அழைப்பை துண்டித்த சில நிமிடங்களில் மறுபடியும் அழைத்து பார்த்த போது அந்த கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது.

அந்த கைப்பேசியில் வந்த செய்தி இதுதான்.

'ரிஷியை பெத்த அம்மா இன்னமும் உயிரோட இருக்காங்க.. சஞ்சா வீட்டிலேதான் இருக்காங்க.

'நீங்க யார் பேசறது. அதை முதலில் சொல்லுங்க.'

'அது எதுக்கு உங்களுக்கு? நான் சொன்னது உங்களுக்கு தேவையான விஷயம் தானே? அதை மட்டும் யோசிங்க'

'நீங்க சொல்றதை நான் எப்படி நம்பறது???'

'என் எதிரிகளும், உங்க எதிரிகளும் ஒண்ணு அப்படிங்கறதுனாலே உங்ககிட்டே சொன்னேன். நம்பறதும் நம்பாததும் உங்க இஷ்டம்.' துண்டிக்கப்பட்டது அழைப்பு.

இரண்டு நாட்களுக்கு முன் திருமண மண்டபத்தில் அந்த களேபரம் நடந்து முடிந்த போது கைப்பேசியில் அரவிந்தாட்சன் பேசியது நினைவுக்கு வந்தது மேகலாவுக்கு..

'ரிஷி சந்திரிகாவோட சொந்த பையன் இல்லை' என்றார் அரவிந்தாட்சன். அதை கேட்டவுடனேயே மேகலாவிடம் நிறையவே திகைப்பும், கொஞ்சம் சந்தோஷமும் பரவியது.

'இந்த குழந்தை அவனோட அண்ணன் குழந்தை. அவனோட அம்மா அண்ணன் யாருமே இப்போ உயிரோட இல்லை. சந்திரிகா வீட்டிலே வேலை பார்த்த வேலைக்காரியோட பையனாம் ரிஷி.

சந்திரிகா அவனோட அம்மா இல்லைன்னு தெரிஞ்சா அப்படியே உடைஞ்சிடுவான் ரிஷி. அதுக்கும் மேலே சந்திரிகா. அவன் வேறே யாரையாவது அம்மான்னு கூப்பிட்டாலே அவ உடைஞ்சிடுவா. இந்த விஷயம் நமக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இதை வெச்சே எல்லாரையும் ஆட்டி வெச்சிருக்கலாம். முக்கியமா அந்த ரிஷியை. சரி விடு இப்போ தெரிஞ்சிடுச்சு இல்ல. இனிமே பார்த்துக்கலாம்'

இரண்டு நாட்களுக்கு முன்னால்  இல்லாத அம்மா இப்போது திடீரென எங்கிருந்து முளைத்து இருக்க முடியும். அந்த கைப்பேசியில் வந்த செய்தி உண்மையா இல்லையா? யோசித்தபடியே அமர்ந்திருந்தார் மேகலா.

தே நேரத்தில்... அங்கே சஞ்சாவின் வீட்டில்....

சாப்பிட்டு முடித்து உறவினர்கள் அனைவரும் ஓய்வெடுக்க சென்று விட கூடத்தில் அருந்ததி, அஹல்யா, ரிஷி சஞ்சா அமர்ந்திருக்க, தயங்கி தயங்கி நடந்து தனது மகன் முன்னால் வந்து நின்றாள் அம்மா.

விழிகள் விரிய பார்த்திருந்த மகன் முகத்தில் புன்னகையை தவிர வேறெதுவுமே தென்படவில்லை. கண்களை நிமிர்த்தி மகன் முகம் பார்க்கும் தைரியம் நிச்சயமாக வரவில்லை அம்மாவுக்கு.

'அம்மா.... நானும் உன் கூடவே இருக்கேன்மா... அ.....ம்.....மா.. ப்.....ளீ....ஸ்...... அம்மா..

'இல்லடா ராஜா... நீ ஃப்ளைட்லே பறந்து போகப்போறே... உனக்கு நிறைய பொம்மை எல்லாம் கிடைக்கும்...  சாக்லேட் எல்லாம் கிடைக்கும்...'

'அம்மா... எனக்கு சாக்லேட் வேண்டாம்.. நீ.. தான் வேணும்...' கதறல் மகனிடம்

'சொன்னா கேட்க மாட்டே???' மகன் முதுகில் விழுந்தது ஒரு அடி. 'வாயை மூடு இப்போ...'

அன்று அவனை அடித்த தனது கரத்தையே ஏனோ பார்த்திருந்தார் அம்மா. குற்ற உணர்ச்சி ஒரு பக்கம் அழுத்த இன்னொரு பக்கம் உள்ளுக்குள் நடுங்குகிறது உள்ளம். அவனுக்கு இவை ஏதாவது நினைவு வந்துவிடுமா என்ன? கண்ணீர் ஒரு பக்கம் இதோ வந்து விடுகிறேன் என்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.