(Reading time: 19 - 37 minutes)

'தெரியலயேப்பா... தெரியலையே.. 'என்றான் ரிஷி ' ஆனா என்னமோ சந்தோஷமா இருக்கு' இன்னமும் அவர் கையை  விடுவிக்கவில்லை அவன். கொஞ்சம் அசைந்த அவனது விரலுக்கு தட்டுப்பட்டது அவரது கையில் இருந்த அது. அவரது ஆறாம் விரல்.

ஜானகி அம்மாவின் வலது கையில் ஆறு விரல்கள் இருக்கும். சட்டென அவன் பார்வை அவர் கையின் மீது பதிய ஒரு முறை தொட்டுப்பார்த்தான் அந்த ஆறாம் விரலை. திடுக்கென்றது அம்மாவுக்கு. சின்ன வயதிலேயே அதை எப்போதும் தொட்டு தொட்டு விளையாடுவது அவனது பழக்கம்.

அவனது அடி மனதிலும் சிறியதிலும் சிறியதான ஏதோ ஒரு நினைவு புள்ளி தோன்றி மறைந்தது நிஜம். அவர் அவசரமாக கையை விலக்கிக்கொள்ள முயல, அவரது கையை விட்டவன் அவரது கட்டை விரலை மட்டும் விடுவிக்கவில்லை.

கொஞ்சம் வியப்பாக இருந்தது ஜானகிக்கு. அது அவனுடைய அடி மனதில் பதிந்து போயிருக்கும் அனிச்சை செயல் என்றே தோன்றியது அவருக்கு. சின்ன வயதில் இரவு எத்தனை மணி ஆனாலும் அம்மாவின் கட்டை விரலை பிடித்துக்கொண்டால் மட்டுமே அவனுக்கு உறக்கம் வரும்.

அவர் தவிப்புடன் அவன் முகம் பார்க்க, சின்ன புன்னகையுடன்  வெகு இயல்பாக சொன்னான் ரிஷி......

'உங்க சமையல் பிரமாதம். ரொம்ப ரசிச்சு சாப்பிட்டேன். எங்க அம்மா சாப்பிடணும் உங்க சமையலை. அப்புறம் உங்களை விடவே மாட்டங்க.' '

''யா.. ரு. .....ஓ!!!!  உ.. உ... ங்க.. அம்மாவா?'......

'எங்க அம்மா'  அவன் சொன்னபோது அவன் கண்களில் தெறித்து ஓடிய அந்த மின்னலை, அந்த ஒரு சந்தோஷ புன்னகையை கவனிக்க தவறவில்லை ஜானகி.  அதிலே அவருக்கு நிறையவே மகிழ்ச்சி.

'இருக்கட்டும் அவள் மட்டுமே எப்போதுமே உன் அம்மாவாக இருக்கட்டும்' சொல்லிக்கொண்டார் ஜானகி

'ம்... எங்க அம்மாவை தெரிஞ்சு இருக்கணுமே. உங்களுக்கு. கேள்வி பட்டு இருப்பீங்களே???'

'ஆங்... ஆ.. மாம்.. நிறைய கேள்வி பட்டு இருக்கேன்..'

'ஆனா .. நேரிலே பார்த்தது இல்லை... இல்லையா???.' அவர் முகம் பார்த்தபடியே ரிஷி கேட்க......

'நே.. நேரிலேயா?' தடுமாறின அம்மாவின்  வார்த்தைகள். 'பா.. பார்த்தேனே நே... நேத்து... கல்யாணத்திலே...'

'ஓ... நீங்க கல்யாணத்துக்கு வந்தீங்களா. நான் பார்க்கலை..' அவன் சொல்ல...

'ஒரு ஐடியா...' என்று இடைபுகுந்தான் உண்மைகளை அறியாத நம் அறிவாளி நண்பன். புருவங்கள் உயர ரிஷி அவன் புறம் திரும்ப..

'நாங்க யாரும் பத்து நாள் ஊரிலே இருக்க மாட்டோம். ஜானகி அம்மா உன்கூட இருக்கட்டுமே கெஸ்ட் ஹௌசிலே. நீ, அம்மா எல்லாரும் அவங்க சமையலை என்ஜாய் பண்ணா மாதிரியும் இருக்கும். அவங்க நம்ம பட்டு செல்லத்துக்கும் கதை எல்லாம் சொல்லி நல்லா பார்த்துப்பாங்க. என்னடா பட்டு செல்லம்..' என்றபடியே அவர்கள் அருகில் நின்று எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த தீக்ஷாவை அள்ளி முத்தமிட்டான் சஞ்சா.

'வெரி குட் ஐடியா... ' வழி மொழிந்தான் மகன். கொஞ்சம் அதிர்ந்துதான் போனார் ஜானகி.

'ஏனடா இறைவா உனக்கிந்த விளையாட்டு???? என்ன நினைத்துக்கொண்டு இயக்குகிறாய் என்னை? எந்த திசையை நோக்கி நகர்த்துகிறாய் என் வாழ்கையின் திரைக்கதையை???'

'அய்யோ... அதெல்லாம் வேண்டாம்பா...' அவசரமாக மறுத்தார் ஜானகி.

'ஏன்? ஏன்? ஏன் அப்படி?' ரிஷியிடமிருந்து அதே அவசரத்துடன் கேள்வி.

'அது... இங்கேதான் எனக்கு வசதியா...'

'ஏன் ஜானகிம்மா???. கெஸ்ட் ஹவுஸ் ரொம்ப வசதியா இருக்கும். பீச் ஓரத்திலே. சூப்பரா இருக்கும். போயிட்டு வாங்க....'

அவர் முகத்தையே பார்த்திருந்தான் ரிஷி. அவர் மெதுவாக தனது விரலை அவனிடமிருந்து விடுவித்துக்கொள்ள......

'ஏன் ஜானகி அம்மா என் கூட வரமாட்டீங்களா ... ' தலை சாய்த்து முகம் பார்த்து இறங்கிய குரலில் மகன் கேட்க ...

கண்களில் நீர் கட்டிக்கொண்டது ஜானகி அம்மாவுக்கு. மகன் வாவென அழைக்கும் நேரத்தில் மறுக்க எந்த அம்மாவுக்கு மனம் வருமாம்??? ஆனால் ஜானகி அம்மாவால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

தேவகியை விட.. யசோதைக்கே கண்ணனிடம் உரிமையும் பாசமும் அதிகம் அல்லவா?. அதே போலத்தானே இங்கும். திடீரென இருவருக்கும் இடையில் புகுந்து நான் உரிமை கொண்டாடுவதில் என்ன நியாயம் இருக்கிறதாம்???

தனக்குத்தானே தலை அசைத்துக்கொண்டார் ஜானகி. கண்களை மீறியது கண்ணீர். 'எதுக்குமா அழறீங்க?' இரு நண்பர்களும் ஒன்றாக பதறிப்போய் கேட்டனர்.

'அது... அது ... ஒண்ணுமில்லை...எனக்கு என் பையன் ஞாபகம்... என்னமோ அவனே கூப்பிட்ட மாதிரி.. நான்... இன்னொரு நாள் உன்னோட வரேன்பா... ' என்றபடியே ஜானகி கண்ணீரை துடைத்துக்கொள்ள அவரை நோக்கி நீண்டது சஞ்சாவின் தோளில் இருந்த அந்த பிஞ்சின் கரம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.