(Reading time: 19 - 37 minutes)

ங்கே சஞ்சாவின் கெஸ்ட்  ஹவுஸ்......

ராமன் தோட்டத்தில் அமர்ந்து தினசரியில் மூழ்கி இருக்க ஒலித்தது வீட்டு தொலைப்பேசி.

'அம்மா... உங்களுக்கு போன்...' சந்திரிக்காவை அழைத்தார் வேலை செய்யும் பெண். மறுமுனையில் மேகலா. தான் கேள்விப்பட்ட விஷயம் உண்மையா பொய்யா என்றே தெரியாத போதிலும் சந்திரிக்காவை கலங்க வைத்து விடுவது ஒன்றே குறிக்கோளாக இந்த அழைப்பு.

'நான் மேகலா பேசறேன்..'

'ம்....'

'உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ரிஷியோட அம்மா, உயிரோட இருக்காளாமே?'

ஒரு முறை சுவாசம் நின்று பொய் மீண்டது சந்திரிக்காவுக்கு 'என்னது?'

'ரிஷியோட அம்மா.. நீ இல்லை...... அவனை பெத்த அம்மா உயிரோட இருக்கா. அதுவும் எங்கே தெரியுமா? அந்த சஞ்சா வீட்டிலே.'

இதயம் ஏனோ தடதடத்தது சந்திரிக்காவுக்கு. அவர் எதுவுமே பேசாமல் மெளனமாக இருக்க தொடர்ந்தது மறுமுனை...

'கூடிய சீக்கிரம் எல்லாம் நல்ல படியா நடக்கும். உன் கண்ணு முன்னாடியே அவன் அவளை அம்மான்னு கூப்பிடுவான் பாரு. அந்த டிசம்பர் 31. எப்படி பேசினான் அவன். வார்த்தைக்கு வார்த்தை எங்கம்மா... எங்கம்மான்னு சொன்னானனே, இனிமே பாரு.. இன்னும் கொஞ்ச நாளிலே பாரு... நீ என் அம்மா இல்லைன்னு அவனே சொல்லப்போறான்.'

........................... வார்த்தைகள் எழவே இல்லை சந்திரிக்காவுக்கு.

'என்ன பேச்சே காணோம். யோசிக்கறியா யோசி. யோசி. நீ என்ன யோசிச்சாலும் நீ  அவனோட அம்மா இல்லை. அதுதானே உண்மை. கடைசியிலே எப்படியும் நீ தோற்காத்தான் போறே பார்த்தியா... அய்யோ பாவம்... வெச்சிடறேன்...'

அப்படியே அமர்ந்தார் சந்திரிக்கா. ராமனிடம் கூட எதுவும் சொல்லவில்லை அவர். '

'சஞ்சாவின் வீட்டில் இருக்கிறாளா? ஜானகியா? இப்போது ரிஷி அங்கே தானே போயிருக்கிறான். பார்த்துவிடுவானா அவளை. அவளைத்தான் இனிமேல் அம்மா என அழைப்பானா? அப்படி என்றால் நான்????  

ங்கே சஞ்சாவின் வீட்டில்.......

ஜானகி வந்து நிற்க அவர் சட்டென அவர் அருகில் வந்து நின்றான் ரிஷி. ஏதோ ஒன்று அவனை ஈர்ப்பதை அவனால் நன்கு உணர முடிந்தது. சட்டென பற்றிக்கொண்டான் அவர் கையை.

'அம்மா.... ஒரு முறை குலுங்கியது அம்மாவின் உடல் மொத்தமும். விழி நிமிர்த்தினார் அவர்.

நீங்க தான் ஜானகி அம்மாவா' என்றான் அவன் 'எனக்கு உங்களை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்குமா. எங்கேன்னு தான் ஞாபகம் வரலை. ஏதோ கொஞ்ச நாள் உங்க கூடவே இருந்த மாதிரியே தோணுது'

என்ன உணர்வு எனக்குள்ளே? அம்மாவுக்கே புரியவில்லை. மகனின் அடி மனதில் நான் எங்கேயோ ஒரு ஓரத்தில் இருக்கிறேன் என்ற எண்ணத்தால் எழுந்த மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க......., 'இது வேண்டாம்... இது சந்திரிக்காவுக்கு நான் செய்யும் துரோகம்' என்ற எண்ணம் ஒரு புறம் பின்னால் தள்ள......., இத்தனை நாட்கள் கழித்து மகனை இத்தனை அருகாமையில் பார்த்த நெகிழ்வில் கண்களில் கொஞ்சம் நீர் சேர, என்ன செய்வது என்றே  தெரியாதவராகத்தான் நின்றிருந்தார் அவர்.

'என்ன ஜானகிம்மா அப்படி பார்க்கறீங்க???" ரிஷி கேட்க

சுதாரித்து நிமிர்ந்தார் அம்மா. 'எனக்கு என்ன பேச.. பே.. ச.. றதுன்னு தெரியலை.. நான் உங்க படமெல்லாம் ரொம்ப விரும்பி பார்ப்பேன்... நீங்க என் பக்கத்திலே..... எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்' அவனது சாதாரண ரசிகை போலவே பேசினார் அவனை பெற்றவள்.

'அய்யோ... என்னமா நீங்க... என்னை போய் நீங்க வாங்கன்னு சொல்லிட்டு... நீ... வா.. போன்னே... சொல்லுங்க ...' அவர் தனக்கு மரியாதை கொடுத்து பேசியதை தாங்கிக்கொள்ளவே முடியாமல் தான் சொன்னான் ரிஷி.

'போ' வென சொல்வதா? உன்னை ஒரு முறை போவென சொன்னது போதாதா??? மறுமுறை அப்படி சொல்வேனா??? தன்னையும் அறியாமல் ஏனோ புலம்பியது தாயுள்ளம். அவனையே பார்த்திருந்தார் அவர்.

'என்ன ஜானகிமா.. சொல்லுங்க என் படமெல்லாம் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?'

'உங்... உன் படமெல்லாம் மட்டும் இல்லப்பா.. உன்னையே ரொம்ப பிடிக்கும்..' அவன் கன்னம் வருடி சொல்லியே விட்டிருந்தார் அம்மா.

மகிழ்ந்து போனவனாக சிரித்தான் ரிஷி. அவனது மகிழ்ச்சி சஞ்சா, அருந்ததி இருவரையுமே வியப்பில் ஆழ்த்தியது. அவர்கள்  அருகில் வந்தனர் இருவரும். அஹல்யாவுமே வியப்புடன் பார்த்திருந்தாள் அவர்களை.

'என்னடா... ஒரே பாசப்போராட்டமா இருக்கு?' இருவரையும் மாறி மாறி பார்த்தபடியே கேட்டான் அந்த பாசப்போராட்டதின் அடித்தளம் என்ன என்பதை அறியாத அந்த உயிர் நண்பன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.