(Reading time: 23 - 45 minutes)

மனதோர மழைச்சாரல்... - 18 - வத்ஸலா

 

வெகு இயல்பாக எடுத்தாள் அந்த புகைப்படத்தை. அதை பார்த்த நொடியில் ஒன்றுமே புரியவில்லை தான் அவளுக்கு. இன்னொரு முறை கண் இமைத்து பார்த்தாள் அதை.

'இது நேற்று நான் பார்த்த ஜானகி அம்மா அல்லவா? அவர் அருகில் இருப்பது யார்? அச்சு அசலாக ரிஷியின் தோற்றத்தில்.  இத்தனை நாட்கள் ரசித்து ரசித்து அவனை படித்து பதித்து வைத்திருக்கும் கண்களுக்கு அது ரிஷி இல்லை என்று புரிகிறது அப்படி என்றால்????

அதிர்ச்சியில் தொண்டை வறண்டு போன உணர்வு. மேஜையின் அருகில் சென்று தண்ணீரை எடுத்து பருகிவிட்டு அங்கே இருந்த ஜன்னலின் மீது சாய்ந்தபடி நின்றுக்கொண்டாள் அவள். கண்கள் இன்னமும் அந்த புகைப்படத்தை விட்டு அகலவில்லை.

Manathora mazhai charal

'உன் கூட பிறந்த அண்ணனோட குழந்தைடான்னு எப்படி சொல்லுவேன். உன்கிட்டே இருந்து இதை இத்தனை நாளா மறைச்சிட்டேன்டா எப்படி சொல்லுவேன்? அன்று சந்திரிக்கா புலம்பியது நினைவுக்கு வந்தது.

எல்லாவற்றையும் சேர்த்து வைத்து பார்க்கும் போது இது ரிஷியின் அண்ணனா? தீக்ஷா இவன் மகளா??? அவனுடன் இருப்பது அவனது அம்மாவா? அப்படி என்றால் ஜானகி அம்மா ரிஷியை பெற்றவளாக இருக்குமா????

உயிர் வரை பரவியது ஒரு திடுக்கிடல். இது ரிஷிக்கு தெரிந்தால் என்ன செய்வான்??? அதற்கும் மேலாக இதை சந்திரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியுமா????

சஞ்சா அவரை வீட்டிலேயே வைத்திருக்கிறான் என்றால்???? கொஞ்ச நாள் இங்கே ஜானகி அம்மாவை அனுப்பி வைக்கிறேன் என்றானே.???? அப்படி என்றால்  அவனுக்கு இந்த உண்மை தெரியுமா? தெரியாதா???? அவனிடம் கேட்டே விடலாமா????

இந்த புகைப்படம் எப்படி என் கைப்பைக்குள் வந்தது??? யார் போட்டிருக்க கூடும்? பல நூறு கேள்விகளுடன் எங்கோ தொலைந்து போனவளாக அப்படியே அவள் நின்றிருக்க...

உறக்கம் கலைந்து புரண்டு படுத்த ரிஷியின் கரம் அருகில் படுத்திருந்தவளை .தேடி, அவள் இல்லை என உணர்ந்து, கண் திறந்து அவளை தேடினான். ஜன்னலின் அருகில் நின்றவளை அவன் பார்வை சேர ரசிப்பு புன்னகையுடன் சின்னதாக விசில் எழுப்பினான் அவன். அதில் அசைய கூட இல்லை அவள்.

'எதை கையில் வைத்துக்கொண்டு அப்படி பார்த்துக்கொண்டிருக்கிறாள் அவள்???' யோசனை அவனிடத்தில். அவளை பார்த்தபடியே அவன் கைப்பேசியை தேடி கையில் எடுக்க அவள் எண்ணங்களோ எங்கேயோ உலவிக்கொண்டிருந்தது. திடீரென வந்தது ஒரு ஞாபகம்.

'இந்த புகைப்படத்தில் இருப்பவனை எப்போதோ பார்த்திருக்கிறேனே???' அவள் யோசிக்க நினைவுக்கு எட்டியது அந்த நிகழ்வு,

சில வருடங்களுக்கு முன்பு  முறை இவர்கள் இருவரும் நடித்த ஒரு படத்திற்கான படப்பிடிப்பு அந்த சின்ன கிராமத்தில் நடந்த போது அவனை பார்த்திருக்கிறாள். இவர்கள் அந்த கிராமத்துக்கு பக்கத்தில் இருந்த சற்றே பெரிய ஊரில் தங்கி இருந்தனர்.

அங்கிருந்து படப்பிடிப்புக்குக்காக அருந்ததி வந்துக்கொண்டிருந்த போது அவளது கார் அங்கிருந்த ஒரு பள்ளத்தில் சிக்கிக்கொள்ள, அது மதிய நேரம் என்பதால் தெருவில் அதிக நடமாட்டம் இல்லாமல் போக, அப்போது எங்கிருந்தோ சட்டென  உதவிக்கு வந்தான் அவன்.  அவனை பார்த்த மாத்திரத்தில் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தவள் கீழே இறங்கி விட்டாள்தான்.

கைலியும், சற்றே அழுக்கு படிந்த சட்டையும், கொஞ்சம் கரை படிந்த பற்களும் தவிர மற்றது எல்லாவற்றிலும் அச்சு அசலாக ரிஷியையே உரித்து வைத்திருந்தான் அவன். கார் செலுத்திக்கொண்டிருந்த டிரைவருக்குமே ஆச்சரியம் தான்.

அவளை பார்த்ததும் மடித்துக்கட்டி இருந்த லுங்கியை இறக்கி விட்டுக்கொண்டு சட்டென கைகூப்பினான் அவன் 'வணக்கம்மா...'

பதிலுக்கு கை குவித்தவள் 'அட...' என்றாள் சிரித்தபடியே. 'நீங்க அப்படியே எங்க ரிஷி மாதிரியே இருக்கீங்களே. ஆச்சரியமா இருக்கு. உங்க கிட்டே யாரும் இதை பத்தி சொன்னது இல்லையா?

'இந்த ஊரிலே எல்லாரும் அப்படிதான் சொல்லுவாங்கம்மா. இந்த ஊரிலே எல்லாருக்கும் என்னை தெரியும். மத்தபடி இங்கே கிடைக்குற வேலையை செஞ்சிக்கிட்டு அப்படியே இருக்கேன். நான் இந்த ஊரை விட்டு வேறே எங்கேயும் போறது இல்லை'' என்று தயக்கமான குரலில். சொல்லி விட்டு ஏனோ தலை குனிந்துக்கொண்டான் அவன்.

'உங்க பேர் என்ன?

'சசி...' என்றான் அவன்.

'ஓ...' புன்னைகைத்தாள் அருந்ததி. 'ரிஷி சசி பேரு கூட ஒரே மாதிரி இருக்கு.'

'ம். ஆங்.... ஆமாம்..' கொஞ்சம் தடுமாறத்தான் செய்தது அவன் குரல். சில நொடிகள் அவளை நிமிர்ந்து கூட  பார்க்கவில்லை அவன்.

'நீங்க எங்க ரிஷியை நேரிலே பார்த்திருக்கீங்களா???' அவள் சாதரணாமாக கேட்க...

'அய்யோ.. அதெல்லாம்... அதெல்லாம் வேண்டாம்ம்மா' பதறித்தான் நிமிர்ந்தான் அவன்.

'ஏன் இப்படி பதறுறீங்க...'

'இல்லம்மா... அது.. அது வேண்டாம்.. என.. நா... வேண்டாம்மா...' எதையோ உள்ளுக்குள்ளே விழுங்கிக்கொண்டான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.