(Reading time: 23 - 45 minutes)

'குழந்தை கனவு எதாவது கண்டிருக்கும் வசி. அதை கீழே கூட்டிட்டு போ. நான் குளிச்சிட்டு வந்திடறேன்'  அப்போது ஒலித்தது ரிஷியின் கைப்பேசி. அழைத்தது சஞ்சா.

'சொல்லு சஞ்சா...'

'ஒரு சின்ன பிரச்சனைடா. ஜானகி அம்மா மயக்கமா இருக்காங்க. உன் பேரையே சொல்லிட்டு இருக்காங்க.. நீ இங்கே ஹாஸ்பிடல் வர முடியுமா???.

எழுந்து விட்டான் ரிஷி. 'இதோ... உடனே வரேன்..'. கட்டிலில் அமர்ந்து அவனையே பார்த்திருந்தது தீக்ஷா.

'என்னாச்சு வசி???'------ அருந்ததி.

'ஜானகி அம்மாக்கு உடம்பு சரியில்லையாம். என்னமோ என் பேரையே சொல்லிட்டு இருக்காங்களாம்.. போய் பார்த்திட்டு வந்திடறேன்..'

அவள் தலைக்குள்ளே பிரளயம். 'சஞ்சாவுக்கு உண்மைகள் தெரியாது போலும். அவனிடம் சொல்வதா வேண்டாமா???'

'எந்த ஹாஸ்பிடல் வசி???'

அவன் பெயரை சொல்ல.. அது அருந்ததி முன்பு அனுமதிக்க பட்டிருந்த அதே மருத்தவமனை.

.'நானும் வரேன்...' என்றாள் சட்டென

'நீ எதுக்குடா???'

'இல்லை வசி... அது... பத்து நாளிலே என்னை மறுபடியும் செக் அப் வர சொன்னாங்க. அதான் அப்படியே டாக்டரை பார்த்திட்டு வந்திடலாம் இல்லையா???'

'சரி வா...'

ங்கே மேகலாவின் வீட்டில்......

படியில் உருண்டு கீழே வந்து விழுந்தார் இயக்குனர். பதறிக்கொண்டு ஓடி வந்தனர் மனைவியும் மகனும். அவர் நெற்றியிலும் , மூக்கிலும் அடிபட்டு ரத்தம் வழிந்துக்கொண்டிருக்க மயங்கி இருந்தார் அவர்.

அலறித்தான் விட்டார் மேகலா. அவர் கண்களில் அருவி. அடுத்த சில நிமிடங்களில் மருத்தவமனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது அவர்கள் இருந்த கார். 

அடுத்த சில நிமிடங்களில் கிளம்ப ஆயத்தமாகி குழந்தையுடன் கீழே வந்தனர் அருந்ததியும் ரிஷியும்.. கீழே வரும் முன் யார் கண்ணிலும் படாமல் அந்த புகைப்படத்தை எடுத்து மறுபடியும் அதை தனது கைப்பையில் வைத்துக்கொள்ள மறக்கவில்லை அருந்ததி.

டைனிங் ஹாலில் இருந்தனர் சந்திரிக்காவும், ராமனும். குழந்தையை டைனிங் டேபிளில்  அமர செய்து விட்டு அதனருகில் தனது கைப்பையை வைத்து விட்டு அந்த சமையல்காரர் கொடுத்த காபியை அருந்ததி பருக ஆரம்பிக்க...... இத்தனை காலையில் எங்கே கிளம்புகிறார்கள் என்பது போல சந்திரிகா பார்க்க..

'அதும்மா... நேத்து ஜானகி அம்மான்னு சொன்னேன் இல்லையா அவங்களுக்கு உடம்பு சரியில்லையாம்... அதான் நான் போய் பார்த்திட்டு வந்திடறேன்..' ரிஷி சொல்வதற்குள் சந்திரிக்காவின் முகத்தில் அப்பட்டமான மாற்றம். அதை அருந்ததியால் நன்றாக உணர முடிந்தது.

ராமனின் புருவங்கள் கூட ஒரு முறை உயர்ந்து இறங்கின 'ஜானகி அம்மாவா??? எந்த ஜானகி???'

தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து ரிஷியின் அருகில் வந்தார் சந்திரிக்கா அவன் கையை பிடித்துக்கொண்டு கேட்டார்....

'ஏன்டா??? திடீர்னு... அ.. அங்கே போறேங்கறே???.' அவரது குரல் முழுவதும் அத்தனை தவிப்பும் ஏக்கமும். 'என்னை விட்டு போய்விடாதே...' என்ற கெஞ்சல் மட்டுமே அவர்  கண்களில். .மனைவியின் முக பாவம் ராமனுக்கு ஆயிரம் கதை சொல்லியது.

'எங்கேம்மா போறேன்???? ஹாஸ்பிடல் தானே??? போயிட்டு உடனே வந்திடுவேன்...' என்றான் ரிஷி.

'நா... நாளைக்கு போயேன்...' அவர் கண்களில் சின்னதாக நீர் கோடு. அவன் கையை பிடித்திருந்த அவரது பிடி இன்னமும் இறுக்கமானது.

'மா... என்னாச்சு மா உனக்கு... உடம்புக்கு ஏதாவது பண்ணுதா???' அவர் நெற்றியை தொட்டு பார்த்தான் ரிஷி.

'ம்.. ஆங்..??? ஆ.. ஆமாம். காலையிலிருந்தே தலைவலி...'

'தலைவலி தானே மா. கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. போயிட்டு உடனே வந்திடறேன்...'

'ரொம்ப வலிக்குதுடா... நீ கூடவே இரேன்...' அவர் சொல்லி முடிப்பதற்குள் மனைவியின் தோளை அணைத்திருந்தது ராமனின் கரம். கண்களில் இன்னமும் அதிகமாக நீர் சேர அவர் ராமனை திரும்பி பார்க்க மனைவியை கண்களால் அமைதி படுத்தி விட்டு ரிஷியின் பக்கம் திரும்பினார் ராமன்.

'நீ போயிட்டு வா ரிஷி. நான் அம்மவை பார்த்துக்கறேன் ...'

'சரியாமா???' கேட்டான் ரிஷி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.