(Reading time: 6 - 11 minutes)

03. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

mannan

ங்கே அரண்மனை மாடத்தில் அழகுப் பதுமை என,தங்கச் சிலையென நின்று கொண்டிருந்தாள் அபரஞ்சிதா. இந்தக் கால இளைஞன் என்றால் விசிலடித்திருப்பான்.

அவளின் அழகை பார்த்து. கவிஞனாகி கவிதையே பாடியிருப்பான். அப்படியொரு அழகுச் சித்திரம் அவள். மறைந்த கதாசிரியர் சாண்டில்யன் தனது யவன ராணி சரித்திரக்கதையில் வரும் இரு கதா நாயகிகளில் ஒருவரான காஞ்சனா தேவியை வர்ணிப்பாரேஅந்த வர்ணனைக்குக் கொஞ்சமும் குறைவில்லாத அழகுப் பெட்டகம் அபரஞ்சிதா.  குதிரைவீரனுக்கு அபரஞ்சிதாவைப் பார்த்ததும் அவளின் அழகைப் பற்றி என்ன தோன்றியது? ஓரளவு சாமுத்ரிகா லட்சணம் பற்றி அறிந்திருந்த அவனின் மனதில்என்னவெல்லாம் ஓடியது? என்பதை நான் எழுதினால் சில்சீ அதனை தணிக்கை செய்யும். படிக்கும் நீங்கள் கண்டனக் குரல் எழுப்புவீர்கள். எனவே நான் அதிகமாக அவளை வர்ணிக்கப் போவதில்லை.

அவளைப் பார்த்த மாத்திரத்தில் ஹம். . ம்மா. . என்று மெலிதாய்க் குரலெழுப்பி குதிரையைப் பிடித்த பிடி தளர குதிரையின் மீது சாய்ந்தான் குதிரைவீரன். அவன் அவளைப் பார்த்த அதே நேரம் குதிரையிலிருந்து வெகுலாவகமாய்க் குதித்த அவனின் மீது அவளின் பார்வையும் பதிந்தது. இருவர் பார்வையும் கலந்த அந்த நொடி அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற அளவுக்கெல்லாம் சொல்லுவதற்கில்லை.

குதிரை வீரனுக்கு வேண்டுமானால் அவளின் அழகு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால் தினம் தினம் திருமணம் நடந்து ஒவ்வொரு நாளும் கணவனை இழக்கும் அவளுக்கு மனம் முழுதும் சோகமே அடைத்திருந்தது. மனத்தின் சோகம் மெலிதாய் அவளின் முகத்திலும் படர்ந்திருந்தது அவளை ஊன்றி கவனிப்போருக்கு அது விளங்கும். ஆனாலும் கொஞ்சம் கூடுதல் கவனம் அவன்பால் அவளுக்கு ஏற்பட்டது என்பது என்னவோ உண்மை.

அரண்மனையின் உள்ளிருந்து திமு திமுவென சிறு கூட்டம் வெளியே வந்தது.

கூட்டத்திற்கு முன்னால் வந்த மன்னன் குதிரை வீரனை வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்று அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான். பணியாட்களை அழைத்து இவருக்கு எவ்விதக் குறையுமின்றி உபசாரங்கள் செய்து மணமகன் அலங்காரம் செய்து மண மேடைக்கு அழைத்து வாருங்கள் என உத்தரவிட்டான். இதைகேட்ட குதிரைவீரனுக்கு சிரிப்பு வந்தது. ஆட்டையோ மாட்டையோ கடவுளுக்குப் பலியிடும் முன் அதற்கு இப்படித்தானே உபசாரங்கள் செய்யப்படும். அதேபோல்அபரஞ்சிதாவை மணந்து முதலிரவு அறையில் சாகப்போகும் தனக்கு உபசாரங்கள் செய்ய மன்னன் கட்டளை இடுவது அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தது.

இப்படி ஒரு நிலையில் வேறு எந்த இளைஞனாவது இருந்தால் குதிரைவீரனுக்கு வந்த சிரிப்பு அவனுக்கு வந்திருக்குமா? ஆனால் நம் கதானாயகன் எதற்கும் அஞ்சானாயிற்றே?பணியாட்களால் அழைத்துச் செல்லப்பட்ட அவன் ஒரு பெரிய நீர்த்தொட்டிக்கு அருகில் அழைத்துச் செல்லப்பட்டான். கிட்டத்தட்ட அத்தொட்டி ஒரு ஸ்விம்மிங்பூல் அளவு இருந்தது.

அலைமோதியபடி இருந்த தண்ணீரில் வாசனைத் திரவியங்கள் கலக்கப் பட்டிருந்தனவோ என்னவோ கும்மென்று வாசம் எழும்பியது. ரோஜா இதழ்கள் தண்ணீரில் மிதந்தன. போதும் போதாததற்கு நான்கைந்து அழகிகள் வேறு தண்ணீரில் அவனுக்காக. . குதிரைவீரன் தண்ணீரில் இறக்கிவிடப்பட்டான். அழகிகள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கில்லாடிக்குக் கில்லாடியாயிற்றே நம் குதிரைவீரன். .  ஜகதலப் பிரதாபன்(ரொம்ம்ம்ம்ம்ப பழைய படம்)பட கதனாயகன் போல் ஜலக்கிரீடை செய்து முடித்தான்.

அடுத்து அறுசுவை உணவு. ஊரெல்லாம் பல நாட்களாகச் சுற்றி வந்த அவனுக்கு அவ்வறுசுவை உணவு தேவாமிருதமாயிற்று. ராஜா வீட்டு சாப்பாடு ஆயிற்றே?ஒரு பிடி பிடித்தான்.

கூட நின்ற பணியாட்கள் அவனை சிறிது நேரம் ஓய்வெடுக்கும்படியும் மாலை திருமணத்திற்குத் தயாராகவேண்டும்  என்று சொல்லி ஓர் அறையை அவனுக்குக் காட்ட அவ்வறையில் இருந்த மஞ்சத்தில் படுத்து உறங்கிப் போனான் நம் குதிரை வீரன்.

யிற்று மாலை பொழுது. .  நன்றாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த குதிரைவீரனின் காதுகளில் அறைக்கு வெளியே மேளதாள சப்தம் தடபுடலாய் கேட்க விருட்டென எழுந்து அமர்ந்தான்.

பெரிய பெரிய தட்டுக்களில் மணமகன் அணிந்து கொள்ளும் ஆடைகளயும்  அணிகலன் களையும் பணியாட்கள் எடுத்து வந்தனர். அவர்களில் இருவர் குதிரைவீரனுக்கு அவற்றை அணிவித்து மணமகன் அலங்காரம் செய்ய. .  அப்படி அலங்காரம் செய்து முடிக்கப்பட்டதும்  ஏற்கனவே அழகனான நம் கதானாயகன் மன்மதனே பார்த்து பொறாமைப் படும் அளவுக்கு பேரழகனானான்.

அவன் கழுத்தில் மணமகனுக்கு அணிவிக்கப்படும் மலர் மாலை ஒன்று போடப்பட்டது.

பணியாட்களால் மணமேடைக்கு  மங்கள வாத்தியங்கள் முழங்க மிகுந்த மரியாதையோடு அழைத்துச் செல்லப்பட்டான் குதிரைவீரன்.

மணமேடை. கலைப்புலி தாணுவால் போடப்பட்ட சினிமா கல்யாண செட்போல் அத்தனை அழகாக இருந்தது. அம் மேடையை நோக்கி அழைத்து வரப்பட்ட மன்மதனுக்கு ஒப்பான அழகோடு அரிமாபோல் நடந்துவரும் அவனைப் பார்த்த அங்கே நின்றிருந்தவர்களின் அத்தனைக் கண்களும் அவனின் அழகை வாங்கி மனதிற்குள் செலுத்தின. அதே சமயம் பாவம் இந்த அழகனின் ஆயுள் இன்றிரவோடு முடியப் போகிறதே என்று எண்ணி அவர்களுக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது.

மணமேடையில் வந்து அமர்ந்தான் குதிரைவீரன். எதிரே அக்னி குண்டம். அதில் எரிந்து கொண்டிருந்த தீயின் ஜுவாலையில் அவன் முகம் மேலும் பிரகாசித்தது.

அப்போது மணமேடையை நோக்கி மெள்ள மெள்ள நடந்துவந்தாள் அபரஞ்சிதா.

தோகை விரித்த மயில் ஒன்று மெதுமெதுவாய் நடந்து வருவதுபோல் இருந்தது அவள் நடந்து வந்த அழகு நடை.  குதிரைவீரனின் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டாள் அபரஞ்சிதா. சற்றே திரும்பி பக்கத்தில் அமர்ந்திருக்கும் அபரஞ்சிதாவைப் பார்த்தான் குதிரைவீரன். ஹம்ம்ம். . மா. . . . மீண்டும் பாடியது வாயும் மனமும். . ஆனாலும் அவள் முகத்தில் இருந்த சோகத்தை அவனால் காண முடிந்தது. காரணம் அவனுக்கு தெரிந்ததுதானே. ?

இருவரும் மாலை மாற்றிக்கொள்ள. . புரோகிதர் மந்திரம் சொல்ல அபரஞ்சிதாவின் கழுத்தில் மங்கள நாணைப் பூட்டினான் குதிரைவீரன். இவன் அபரஞ்சிதாவின் எத்தனையாவது கணவன் என்று அபரஞ்சிதாவைக் கேட்டால் அதற்கு பதில் அவளுக்கே தெரியாது. சுற்றி நின்றவர்களெல்லாம் மங்கள அட்சதை தூவ குதிரை வீரனும் அபரஞ்சிதாவும் கணவன் மனைவியாயினர்.

தடபுடலாக அனைவருக்கும் திருமண விருந்து பரிமாரப் பட்டது. அனைவருக்கும் தினம் தினம் விருந்துதான். தினம் தினம்தான் அபரஞ்சிதாவுக்குத் திருமணம்  நடக்கிறதே?

விருந்து கிடைக்காதா என்ன?

ஆயிற்று. . நிலவு வந்தாயிற்று. இரவு ஆரம்பம் ஆயிற்று. புதுமணத் தம்பதிக்காக முதலிரவு அறை அலங்கரிக்கப்பட்டு தயாராய் இருக்க. . அபரஞ்சிதாவும் - குதிரைவீரனும் அவ்வறைக்கு அனுப்பப் பட்டனர். அங்கு அவ்வறையில் நடந்தது என்ன? அடுத்த வாரம் பார்ப்போமா. . . நன்றி. .

தொடரும்...

Episode 02

Episode 04

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.