(Reading time: 10 - 20 minutes)

06. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

ன்றைய பிரச்சினைக்கு பிறகு ப்ரத்யா ஒரு முறைக்கு இரண்டு தடவையாக தன் மாமியார் மற்றும் நாத்தனாரிடம் கேட்டே தேவையானதை செய்தாள்.

காலை எழுந்தது முதல் எல்லோருக்கும் தேவையானது செய்து விட்டு, ஆபீஸ் ஓடி, பிறகு மாலையிலும் வந்த பிறகு வேலை என்று ஓடிக் கொண்டிருந்தாள்.

அவளின் இத்தனை ஓட்டத்தையும் சமாளிப்பது இரவில் ஆதி இவளோடு பேசும் நேரங்களில் கிடைக்கும் மகிழ்ச்சி மட்டுமே.

ஆதிக்கு இவ்வளவு கஷ்டபடுகிறாள் என்று தெரியாது. இருந்தும் வித்யா வந்த இரண்டு மூன்று நாட்களில் இரவில் பேசும்போது பிரயுவின் முகத்தில் தெரியும் களைப்பை பார்த்து விட்டு

“ப்ரயும்மா, ரொம்ப டயர்டா தெரியறியே? வேலை அதிகமா இருக்கோ?”

“இல்லை ஆதிப்பா. (இப்பொழுதெல்லாம் அவர்களின் இரவு பேச்சில் ஆதிப்பா என்று தான் அழைக்கிறாள்) .. அம்மா வீட்டில் இருந்ததை விட இங்கே கொஞ்சம் தூரம் அதிகம் என்பதால் கொஞ்சம் அசதியா இருக்கு.” என்று சமாளித்து விட்டாள்.

“வேண்டும் என்றால் ஸ்கூட்டி வாங்கி கொள்கிறாயா? அட்லீஸ்ட் நீ பஸ்ஸில் நசுங்காமல் வரலாம்”

பிரயுவின் மனத்திலும் அந்த எண்ணமே.. ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது.

“கொஞ்ச நாள் பார்க்கலாம். பா... தேவை என்றால் வாங்கி கொள்ளலாம்” என்று முடித்து விட்டாள். இதை பற்றி அவள் யாரிடமும் எதுவும் பேச வில்லை,

முதல் பிரச்சினைக்கு பிறகு ஆதி அவன் அம்மாவிடம் நலம் விசாரித்து விட்டு, வேறு ஏதாவது தேவையா என்று விசாரிப்பான்.. முதலில் இரவில் பேசிக் கொண்டிருந்தவன், வித்யா வந்த பிறகு ஆதி மதியம் அவன் அம்மாவிடம் பேசினான். அம்மா அறையில் அவள் இருப்பதால் அம்மாவிடம் பேசினாலும் வித்யாவிற்கு இரவில் தூக்கம் கெடும். அதோடு அவளிடமும் சாதாரணமாக  பேசி வைத்து விடுவான்

பிரத்யாவிடம் பேசிய மறுநாள் மதியம் வீட்டிற்கு அடித்து வித்யாவிடம் பேசி விட்டு, அம்மாவிடம் பேசினான்.

“அம்மா, பிரத்யாவிற்கு ஒரு ஸ்கூட்டி வாங்கி கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். அவள் வீட்டில் வேலை முடித்து விட்டு , ஆபீஸ் போய் வருவது கஷ்டமாக இருக்கிறது என்று தோன்றுகிறது. இரவில் பேசும்போது மிகவும் அசதியாக இருக்கிறாள். வித்யா கணவர் வந்தால் அவரோடு போய் வாங்கி வர சொல்லுங்கள் அம்மா”

“அது எதற்கு அனாவசியமாய்.. நீ அங்கே போய் இருப்பதே இருக்கிற கடன் எல்லாம் மொத்தமாக அடைக்கத்தான்.. இப்போ ஸ்கூட்டி வாங்கினால் அதுவும் கடனாகும்.”

“ஏன்மா .. கடன் வாங்கினால் நான் தானே அடைக்க போகிறேன். உங்களுக்கு என்ன பிரச்சினை. நான் அங்கே இருந்தால் அட்லீஸ்ட் அவளை கொண்டு விட்டு அழைத்து வருவேன். அவள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக போகட்டும் என்று எண்ணினேன். நீங்கள் இப்படி பேசுகிறீர்களே,?”

“ஏன் டா.. இப்போ ஸ்கூட்டி கடனோடு இது முடியுமா ? உன் தங்கை பிரசவத்திற்கு பணம் வேண்டாமா? அதற்கு முன் வளைகாப்பு, சீமந்தம் என்று வரிசையாக செலவு இருக்கிறதே? அதோடு பிறக்கும் குழந்தைக்கு எதாவது நகை போட வேண்டும். இதெல்லாம் செலவு இல்லியா. அதற்காக சொன்னால் என்னிடம் குதிக்கிறாயே? என்னவோ செய்.”

“அம்மா, இது எல்லாம் யோசிக்கமலா இருப்பேன். வித்யா சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு தனியாக பணம் எடுத்து வைத்து இருக்கிறேன். அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அப்படியா நான் அவளை விட்டு விடுவேன்” என்றான்

“அதுதான் உன்னிஷ்டம் என்று சொல்லி விட்டேனே” என்று போனை வைத்து விட்டார் அவன் அம்மா.

இதற்கு இடையில் அன்று மாலை ப்ரத்யா சக அலுவலர் ஒருவரின் திருமண வரவேற்பு இருப்பதால் மாலை கட்டிக் கொள்ள வேறு புடவை எடுத்து செல்ல மறந்து விட்டாள்.

சரி உள்ளபடியே வரலாம் என்றால், பிரியா அவளை கடித்த கடியில், மதிய உணவு இடைவேளையின் போது வந்து எடுத்துக் கொண்டு போய் விடலாம் என்று வந்தவள், தன் மாமியார் பேசுவதை கேட்டு விட்டாள். இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றவளிடம்,

“அவனை அங்கே பேச சொல்லி விட்டு, இங்கே வந்து ஒட்டு கேட்க வந்து விட்டாயா? ஆமாம். நான் ஸ்கூட்டி வேண்டாம் என்றுதான் சொன்னேன். இப்போ என்ன ? உன்னால் பஸ்சில் போய் வர முடியாதா? இருக்கிற செலவில் இது வேறா? மாதாமாதம் பெட்ரோல்க்கு வேறு செலவழிக்க வேண்டுமே? இதேல்லாம் உங்கள் இருவருக்கும் தெரியாதா? “ என்று பொரிந்து கொட்ட ஆரம்பித்து விட்டார்.

அமைதியாகவே தன் மாமியாரிடம் “நான் கேட்க வில்லை அத்தை “ என்றாள்.

வித்யா சும்மா இல்லாமல் “நீங்கள் கேட்கவில்லை என்றால், அண்ணன் ஏன் அம்மாவிடம் பேசுகிறார். அண்ணன் இங்கே இருக்கும் போது கார் வாங்க சொன்னதற்கு அவ்வளவு கணக்கு பார்த்தான்.  இப்போ நான் இங்கிருந்து செக் அப் போக, இன்னும் டெலிவரி சமயத்தில் எல்லாம் கார் தேவைபடாதா? இது எல்லாம் யோசிக்கவில்லை. உங்களுக்கு என்றால் உடனே செய்கிறான். “ என்று இன்னும் கொஞ்சம் ஏற்றி விட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.