(Reading time: 21 - 42 minutes)

தியம் 2 மணி அளவில் விஷ்ணுவிற்கும் சந்துருவிற்கும் எம்டி ரூமில் இருந்து அழைப்பு வந்தது. இருவரும் சென்று நிற்க, இருவரையும் குமரனிடம் அறிமுகம் செய்து வைத்தார் கதிரவன். “ஐயா, இவர்கள்தான் நான் கூறிய புகைப்பட கலைஞர்கள். இவர் பெயர் சந்துரு, இவர் விஷ்ணு”.

இருவரும் அவருக்கு வணக்கம் கூற அவரும் பதில் வணக்கம் கூறிவிட்டு கதிரவனைப் பார்த்து “எம லோகத்தில் நடை பெரும் காட்சிகள்தான் இந்தக் கதையின் சிறப்பு அம்சம். எமலோகம் என்றால் நாம் இது வரை நாம் சினிமாவில் பார்த்தது போல் இல்லாமல் சற்று வேறுவிதமாக, புதுமையாக இருக்க  வேண்டும் என்பது என் எண்ணம். எப்படி என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் புதுமையாக இருந்தால் நன்றாக இருக்கும்”. கூறினார்.

பின்னர் விஷ்ணு சந்துரு இருவரையும் பார்த்து “உங்களுக்கு ஏதேனும் யோசனை இருந்தால் கூறுங்கள், ஏன் என்றால் இருவரும் கிரியேட்டிவ்வாக பணி புரிபவர்கள் அது மட்டும் இல்லாமல் இருவரும் இளைஞர்கள். இன்றைய தலை முறையினரின் எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்திருப்பீர்கள். ஆதலால் இப்போது எம லோகம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று உங்களுக்கு  எதுவும் ஐடியா இருந்தால் தாராளமாக என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்”. என்று கூறினார்.

விஷ்ணுவிற்கு மனதிற்குள் ஏகப்பட்ட மகிழ்ச்சி. உடனே தான் பார்த்த எமலோகத்தை பற்றிக் கூறிவிடலாமா என்று கூட அவனுக்குத் தோன்றியது. தொண்டை வரை வந்த வார்த்தைகள் அதைத் தாண்டி வர ஏனோ தயங்கியது.

அதற்குள் கதிரவன் “ஐயா இருவரும் நல்ல திறமைசாலிகள். நீங்கள் எதிர் பார்ப்பதைவிட  மேலாகவே இந்தக் கதை கொண்டு மக்களிடம் சேர்ப்பார்கள்” என்று கூறிவிட்டு இவர்கள் இருவரையும் பார்த்து “ஐயா கூறியது போல் உங்களுக்கு ஏதேனும் எண்ணம் தோன்றினால் தைரியமாகக் கூறலாம்” என்றார்.

இருவரும் சரி என்று தலை அசைத்து விட்டு வெளியே வந்தனர். இருவரும் தன் இடத்தில் அமர, அருகில் இருந்த வித்யாவிடம் சந்துரு தன் புலம்பலை ஆரம்பித்தான்.

“எம லோகம் புதுமையா இருக்கனுமாம். காலம் காலமாக இப்படிதான் இருக்கும் என்று நாம் படங்களில் பார்த்த, கதைகளில் கேட்ட எம லோகம் தான் நமக்குத் தெரியும். புதுசா எம லோகம் இருக்கனும் என்றால் நேரில் போய் பார்த்துட்டுதான் வரனும். புதுசா வேணுமாம் புதுசா” என்று எதோ முழுக் கதையையும் அவனையே எழுத சொன்னது போல்ப் புலம்பினான் சந்துரு.

அதற்கு அருகில் இருந்த வித்யா “என்னடா சந்துரு, ஏன் புலம்புர” என்று சந்துருவை கிண்டினாள்.

“உள்ள இருக்கே அந்த கிழம், அதுக்கு புதுசா எம லோகம் வேணுமாம். கதை எழுதுரது அவரு, அவருக்கு ஐடியா இல்லையாம் நான் சொல்லனுமாம். நீயே சொல்லு எம லோகம் எப்படி இருக்கும்” வித்யாவையே மீண்டும் கேள்வி கேட்டான்.

அதற்கு “எம லோகம்னா, பெரிய அரண்மனை மாதிரி கட்டிடம் இருக்கும். கையில் பெரிய கத்தி கடபாரைனு பெரிய பெரிய சைஸ்சுல ஆளுங்க, அதுக்கு நடுவுல ஒரு பெரிய சேருல பெரிய மீசை, பெரிய உருட்டுக் கட்டை எல்லாம் வச்சுக்கிட்டு எமன் ஒக்காந்துக்கிட்டு இருப்பார்.” என்று தான் படங்களில் பார்த்த எம லோகத்தைப் பற்றி நக்கலாகக் கூறினாள் வித்யா.

அவள் கூறிய விதத்தைக் கேட்டு உடனே விஷ்ணுவிற்குச் சிரிப்பு வர, சிரித்து விட்டான்.

வித்யாவிற்கு விஷ்ணுவின் சிரிப்பு ஏனோ எரிச்சல் தர அவனை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று “இதோ இந்த அறிவாளிதான் கூட இருந்தாரே இவரு அப்படியே ஐடியாவை அள்ளி தெளிச்சிருப்பாறே” விஷ்ணுவைப் பார்த்தவாறே சந்துருவிடம் சொன்னாள்.

“நீ சொல்றதும் சரிதான் வித்யா, சார் இப்போதான் ரீசன்டா எம லோகம் போயிட்டு வந்தாரு” என்று வித்யாவை பார்த்துக் கூறிவிட்டு, விஷ்ணு பக்கம் திரும்பி “சொல்லுங்க சார் நீங்கப் பார்த்த எம லோகம் எப்படி இருந்தது” என்றான்.

அதைக் கேட்ட விஷ்ணு ஒரு நிமிடம் வெட வெடுத்துப் போனான். சந்துரு உண்மை அறிந்து பேசுகிறானா?, இவனுக்கு எப்படித் தெரியும்? என்னைச் சுற்றி என்னதான் நடக்கிறது?. என்னிடம் வெளியே கூறாதே என்று கூறிவிட்டு இந்த எமன் டிவில எதுவும் டெலிகாஸ்ட் பண்ணிடாரா?. சந்துருவின் கேள்விக்கு என்னக் கூறுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

நடப்பது எதுவும் புரியாமல் வித்யாவும் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். “டேய் சந்துரு என்னடா சொல்ற?” என்று குழப்பத்தோடு அவனைக் கேட்டாள்.

அதற்கு “அது ஒன்னும் இல்ல வித்யா, மீட்டிங் இருக்கு வா னு சொல்ல நான் போன் பண்ணா, சார் நக்கலா என்கிட்ட சொல்றார், அவரு இப்போதான் எம லோகம் போயிட்டு வந்தார் னு” என்று தான் கூறியதற்கான விளக்கத்தைக் கூறினான்.

அப்போதுதான் விஷ்ணுவிற்கு அப்பாடா என்று இருந்தது. அரண்டவன் கண்களுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல் தான் ஆகிவிட்டது விஷ்ணுவின் நிலைமை.

“அப்போ உனக்குச் சரியான நோஸ் கட் னு சொல்லு சந்துரு. ஓ அதான் காலையில் நான் ஆபிஸ் கிளம்பும் போது ஏதோ உடைந்த சத்தம் கேட்டுசா?” என்று பெரிதாய் சிரித்தாள் வித்யா. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.