அதைக் கண்ட வாசு திடுக்கிட்டு , “நடு ரோட்டில் ப்ரேக் போடுறே??? என்ன ஆச்சு?”
என்று கண்டிப்பும் பதற்றமு சரி விகிதம் கலந்திருக்க...
“மாம்ஸ்! தப்பு பண்ணிட்டேன்! அப்பவே இந்த ஐடி கார்ட்டை உங்ககிட்ட கொடுத்திருக்கணும்!”, என்று சொன்ன பாலாஜி தனது சட்டையில் வைத்திருந்த அந்த அடையாள அட்டையை எடுத்து வாசுவிடமே நீட்டினான்..
“என்னடா ஆச்சு! உனக்கு... சும்மா ஒரு ஆர்வத்தில் தான் பார்க்க கேட்டேன்.. அதை கொடுக்கலைன்னு உனக்கு மனசு குத்திடுச்சா டா.. அதுக்காக நடு ரோட்டில் ப்ரேக் போட்டு... சை... என் மேல இவ்வளோ பாசம் வைச்சு இருப்பன்னு நினைக்கவே இல்லை”, என்று நெகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே அதை வாங்க...
பாலாஜி, “போலீஸ் ஸ்டேஷனுக்கு போகப் பயப்படும் பொண்ணுங்க மத்தியில்.... போலீஸ் எங்கள் அண்ணன்னு நினைக்க வைக்கிற கண்ணியமான போலீஸ் நீங்க... “
“தங்கச்சியை பார்க்கிற ஆர்வத்தில் கேட்டு இருப்பீங்கன்னு இப்போ தான் மண்டையில் மணி அடிச்சது மாம்ஸ்”, என்று நமட்டு சிரிப்பில் சொல்லி விட்டு வண்டியை கிளப்ப....
“ஹூம் தம்மா துண்டு ஐடி கார்ட்டை பார்க்க கூடாதுங்கிறதுக்கு என் கடமை உணர்ச்சில கையை வைச்சு எல்லாரையும் தங்கச்சியாக்கிட்டியேடா!!”
“ஆர்யா ஏதாவது செட் ஆகுற நேரத்தில் வந்து களைச்சி விடுவான்.. நீ அதற்கு வாய்ப்பு வர்றதுக்கு முன்னாடியே களைச்சி விடு! நீங்கள்ல்லாம் நல்ல்ல்லா வருவீவீங்ங்ங்க”, என்றான் நொந்து வெந்து போய்..
கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததும், வண்டியை வாசுவிடம் ஒப்படைத்து விட்டு,
“சரி மாம்ஸ்.. கான்ஃபிரன்ஸ் முடிஞ்சதும் கூப்பிடுறேன்”, என்று விடை பெற்றவன் மனது எதையோ இழந்தது போல தவிக்க...
‘ஐடி கார்ட்டை பார்த்ததுமே லவ்விடுவியா... இதே போல எத்தனை பொண்ணை பார்த்திருப்ப நீ... இருந்தும் இருந்தும் பொண்ணுக்கு பயப்படுறே! பயந்து பயந்து ஒளியுறே!’, என்று மற்றொரு மனம் அவனை ஏளனம் செய்ய...
சட்டென்று மனம் மாறியவன், புல்லட்டை கிளப்பிக் கொண்டிருந்த வாசுவிடம் வந்து,
“அந்த ஐடி கார்ட்டை கொடுங்க”, என்று கேட்க..
அவனைக் குழப்பத்துடன் பார்த்த வாசு,
“உனக்கு என்னடா ஆச்சு! விடு விடு நானே பார்த்துக்கிறேன்.. “, என்று அலட்சியமாக...
பாலாஜியோ, “மாம்ஸ்... சீக்கிரம் கொடுங்க.. ஏற்கனவே லேட்”, என்று கலவரமாக....
‘இந்த தவி தவிக்கிறான்?? அப்படி என்னடா இருக்கு இந்த ஐடி கார்ட்ல!!!’ என்ற யோசனையோடு பாக்கெட்டில் இருந்த அந்த ஐடி கார்ட்டை எடுத்துப் பார்த்தான்.. அதிலிருந்த அந்த பெண் எங்கேயோ பார்த்திருக்கிறான்..எங்கே என்று தான் சட்டென்று அவன் நினைவிற்கு வரவில்லை..
“ஸ்ருதி வாசன்”, என்று அந்த பெண்ணின் பெயரை வாசித்தவனுக்கு.... ‘இவன் என்னவோ ஸ்ருதி ஹாசனை பார்த்தது போல பில்டப் கொடுக்கிறான்’, என்று நினைக்கும் பொழுதே.. அந்த பெண் யாரென்று நினைவிற்கு வர..
“ஹே இது...”, வாசு வாயைத் திறந்த சமயம் அந்த அடையாள அட்டை பாலாஜியின் கை வசம் சென்றிருந்தது..... அதன் பின்னும் வாசுவைப் பேச விடாது...
“பார்க்கலாம் மாம்ஸ்!!!“, என்று வேக நடையிட்டு அங்கிருந்து அகன்றான்..
அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்குள் பாலாஜி வந்த நேரம்.... உணவு இடைவேளை முடிந்து கருத்தரங்கு மீண்டும் ஆரம்பித்து இருந்தது.. மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம் மெல்ல சென்று தனக்கென ஒரு இருக்கையை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டவனுக்கு...
‘ப்ச்.. கான்பிரன்ஸ் செம போர்’, தனக்கு தானே ஒரு காரணத்தைக் கண்டு பிடித்து... பொழுதை கழிக்கவென்று அந்த அடையாள அட்டையை மீண்டும் கையில் எடுத்தான்...
‘போட்டோவை மட்டும் பார்த்திடவே பார்த்திடாதே’, தனக்குள் கட்டுப்பாடு விதித்து... அந்த அட்டையில் இருந்த அவள் பெயர் மற்றும் இதர விவரங்களைப் படித்தான்..
‘ஸ்ருதி வாசன்!!! நல்ல பேர்!! ஐடி கார்ட் இப்போ தான் இஸ்யூ செய்து இருக்காங்க... சோ.. புது வரவு.. ஜூனியர் இன்ஜினியர்ன்னு போட்டு இருக்கு... அஞ்சு சேர்ந்தப்போ கூட இதே டேசிகினேஷன் தானோ... அவளோட ஐடி கார்ட்டை கூட அந்த சமயம் ஃபோட்டோ எடுத்து அனுப்பினாளே..’, என்ற சிந்தனை வர...
வேகமாக தனது அலைபேசியின் புகைப்பட கேலரியில்... பல மாதங்கள் பின்னோக்கி சென்றான் - அதாவது அஞ்சனா அலுவலகம் சேர்ந்த மாதம்... நவம்பர் மாதம் - அந்த தேதி கூட நினைவில் இருக்கிறது - நவம்பர் பதினாறு - ஆம் அன்று தானே இவனும் சைனாவில் இறங்கி இருந்தான்!
அந்த தேதியை நோக்கி சென்றவன் கண்ணில் அஞ்சனா சசியுடன் எடுத்த புகைப்படம் கண்ணில் பட... அதைத் தொடர்ந்து அவன் நினைவுகள் தட்டியெழும்பியது...
பீஜிங்கில் இருந்த பாலாஜியின் மனம் பவதாரிணியிடம் பேசிய பின் ஒரு நிலையாய் இல்லை. ‘முன்ன பின்ன தெரியாதவளுக்கு ஐந்து இலக்க தொகையில் புடவை வாங்கி கொடுத்தாளா??’, எதையும்.. யாரையும் ஆராய்ச்சி கண்ணோடே பார்க்கும் பாலாஜிக்கு அஞ்சனா சொன்ன விளக்கம் எல்லாம் திருப்தி அளிக்கவில்லை.. ‘யார் அந்த சசி? எப்படி பட்டவளோ..’, என்று குழம்பிக் கொண்டிருக்க....