(Reading time: 25 - 49 minutes)

"ப்பா அவ என்னோட ரூம்ல இருக்கா..." அவன் முழுதாக சொல்வதற்குள் அவர்கள் அனைவரும் அந்த அறையை நோக்கிச் சென்றார்கள்... திரும்பவும் அவர்களை நேருக்கு நேராக சந்திக்கும் தைரியம் ஏனோ அவனுக்கு இல்லை... பைக்கை எடுத்துக் கொண்டு வந்தவன் தான் இன்னும் வீட்டுக்கு போகவில்லை...

அவன் எப்படி யுக்தாவிடம் அப்படி நடந்துக் கொண்டான்... எத்தனையோ முறை சப்னாவே இவனிடம் நெருங்க முயற்சித்திருக்கிறாள்.. ஆனால் அதை இவன் விரும்பியதில்லை... ஆனால் யுக்தாவிடம் இப்படி..?? என்ன ஆனது எனக்கு...?? இதுவரையும் யோசித்து பார்க்கிறான் ஒன்றும் ஞாபகத்துக்கு வரவில்லை...

வீட்டில் என்ன நிலவரம் என்று தெரியவில்லை... திரும்பவும் எப்படி வீட்டுக்கு போவது... அம்மா அப்பாவை எப்படி பார்ப்பது... அவர்களுக்கு இப்படி ஒரு அவமானத்தை ஏற்படுத்திவிட்டானே... பிரணதியை எப்படி பார்ப்பது... அவளுக்கு எல்லா வகையிலும் இவன் தானே முன்னோடியாய் இருந்திருக்கிறான்... அப்பா அம்மா சொல்லிக் கொடுத்ததை விட இவனை பார்த்து அவள் கற்றுக் கொண்டது தானே அதிகம்... இப்போது இவனை பற்றி பிரணதி என்ன நினைப்பாள்...

ஒரு திருமணம் ஆகாத பெண் இருக்கும் வீட்டில் இவன் இப்படி நடந்துக் கொண்டது எவ்வளவு கேவலம்... யார் முகத்திலும் முழிக்காமல் எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு சென்றுவிடலாமா?? என்று கூட தோன்றகிறது அவனுக்கு... ஆனால் பிரச்சனையை கண்டு ஓடும் கோழையல்ல அவன்... எதையும் நேருக்கு நேராக சந்தித்து தானே ஆக வேண்டும்... திரும்பவும் வீட்டிற்கு புறப்பட்டான்.

அன்பால் நிறைந்த அந்த வீடு இப்போது சூன்யமாக காட்சி அளித்தது... அங்கு மூவர் இங்கு இருவர் என்று பிரிந்திருந்தாலும் எல்லோரும் மனதளவில் ஒற்றுமையாகவே இருந்தனர்... அந்த வீட்டில் எப்போதுமே சந்தோஷம் தான்... ஸ்கைபிலும் ஃபோனிலும் தினம் தினம் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொண்டிருந்தனர்... கேசவன் மறைவை தவிர அவர்கள் வாழ்வில் பிரச்சினைகள் இருந்ததில்லை..

கேசவன் போனப்பிறகு எங்களை தவிக்க விட்டுப் போய்விட்டார்களே என்று சாவித்திரியும் கவியும் ஒரு போதும் மாதவனையும் சுஜாதாவையும் தவறாக நினைத்ததில்லை... அவர்களுமே இவர்களுக்கு செய்ய வேண்டியதெல்லாம் செய்தாயிற்று என்று ஒதுங்கவில்லை... தனிதனியாக இருந்தாலும் எல்லோரும் ஒரே குடும்பமாக தான் இருந்தனர்...

அப்படி மனதளவில் சந்தோஷத்தோடு இருந்தவர்கள் இப்போது அனைவரும் ஒரே வீட்டில்... ஆனால் இன்று அந்த சந்தோஷம் காணாமல் போய்விட்டது...

ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருந்தனர்... மாதவன் ஒருபுறம் தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்தார்... சாவித்திரி தரையில் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்... சுஜாதா அழுதுக் கொண்டிருந்தாள்... இந்த கதையின் கதாநாயகியோ அவளது அறையில் அழுதுக் கொண்டிருந்தாள்...

நடந்ததெல்லாம் உண்மை என்று இன்னும் நம்ப முடியவில்லை சுஜாதாவால்... நேற்று இவர்கள் காரில் சென்று கொண்டிருந்த போது யுக்தாவிடம் இருந்து ஃபோன்... பர்த்டே பார்ட்டிக்கு வரேன்... நீங்க அங்க தானே இருக்கீங்க... என்று அவள் கேட்ட போது... தீடிரென்று மனசு மாறி வர நினைத்தாள் போலும்... என்று நினைத்து நாங்கள் கிளம்பிவிட்டோம்... நீ ஜாக்கிரதையா போய்ட்டு வா என்று சொன்னாளே அப்போது இப்படி ஆகும் என்று நினைத்திருப்பாளா...??

சாவித்திரியின் மனதிலும் அதே சிந்தனை... யுக்தா கிளம்பி போகும் போது சிறிது நேரத்திலேயே அங்கிருந்து கிளம்பிவிடுவேன் என்று சொல்லி சென்றாள்... ஆனால் 9 மணி ஆகியும் வீடு வரவில்லை... கவி எத்தனையோ முறை பத்து மணிக்கு வந்திருக்கிறாள்... வந்த புதிதில் பயந்திருக்கிறாள் சாவித்திரி... இந்த வேலையும் வேண்டாம்... ஒன்னும் வேண்டாம் வா நம்ம ஊருக்கே போய்டலாம் என்று அழைத்திருக்கிறாள்... இதுல பயப்பட ஒன்னுமில்லமா... நீங்க கவலைப்படாதீங்கன்னு கவி ஆறுதல் சொல்வாள்.... அதன்பிறகு கொஞ்சம் பயம் தெளிந்துவிட்டது.... பத்து மணி வரை பயமில்லாமல் இருப்பாள்...

இப்போதும் 9 மணி வரை யுக்தா வந்துவிடுவாள்... அங்கு பிருத்வியும் பிரணதியும் இருக்காங்களே... அவங்க இவளை பாதுகாப்பாக தான் அனுப்பி வைப்பாங்கன்னு பொறுமையாக இருந்தாள்... ஆனால் அதன்பிறகும் வரவில்லை என்றதும் தான் சாவித்திரிக்கு பயம் வந்தது... யுக்தா செல்லுக்கு முயற்சித்தாள்... தொடர்ந்து மணி அடித்து நின்று போனது... இவளுக்கு பிருத்வி, பிரணதி ஃபோன் நம்பரும் தெரியவில்லை...

விளையாட்டாக யுக்தா சொன்னதை நினைத்துப் பார்த்தாள் சாவித்திரி... இங்கு வந்து ஒரு வருடம் ஆகியும் எந்த இடத்திற்கும் தனியாக போய் பழகாதது எவ்வளவு பெரிய தவறு... இப்போது யுக்தாவை காணவில்லை... வடபழனிக்கு எந்த பஸ்ல போகனும்னு கேட்டு போகலாம்... ஏன் ஆட்டோ பிடிச்சு கூட போகலாம்... ஆனா அவங்க வீடை எப்படி கரெக்டா கண்டுப்பிடிச்சு போவது... ஒன்னுமே புரியவில்லை சாவித்திரிக்கு... சுஜாதாக்கு ஃபோன் செய்து தகவல் சொன்னாள்... பயப்படாதீங்க அக்கா... யுக்தா வந்துடுவா... நான் பிருத்விக்கு ஃபோன் பண்ணி பார்க்கிறேன்... என்று கூறி ஆறுதல் படுத்தினாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.