(Reading time: 28 - 56 minutes)

"பிருத்வி நான்சென்ஸா பேசாதீங்க... நானும் தானே அந்த கேக்கை சாப்பிட்டேன்... நானே ஏதாவது கலந்திருந்தா நானே அதை எப்படி சாப்பிடுவேன்..."

"உன்மேல சந்தேகம் வரக் கூடாது இல்ல... அதனால நீயும் சாப்பிட்டு இருப்ப... எப்படி யுக்தா இப்படி ஒரு கேவலமான வேலையை உன்னால செய்ய முடிஞ்சுது...

உன்னை நினைச்சு எவ்வளவு பிரமிச்சு போயிருந்தேன் தெரியுமா...?? உன்னோட பழக்கவழக்கம், ட்ரெஸ்ஸிங் ஸ்டைல், நீ எங்க குடும்பத்தோட பழகுன விதம் எல்லாத்தையும் பார்த்து சந்தோஷப்பட்டுருக்கேன்... ஆனா இப்போ நினைச்சா அதெல்லாம் கூட என்ன கல்யாணம் பண்ணிக்க நீ போட்ட ட்ராமாவோன்னு தோனுது..."

அவன் அப்படி சொன்னதும் ஒன்றுமே புரியாமல் பார்த்து நின்று கொண்டிருந்த சுஜாதாவிற்கு கோபம் வந்தது... "பிருத்வி எதுவா இருந்தாலும் யோசிச்சு பேசு.... அவ ஒன்னும் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை... அது அவளோட இயல்பு... அவக் கூட இருந்தவங்க நாங்க எங்க முன்னாடியே எங்கப் பொண்ணை தப்பா பேசாத..."

"ஸாரி அத்தை... பழக்கவழக்கம், ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் இதுலெல்லாம் தமிழ்நாட்டு கலாசாரத்தை கடைப்பிடிச்சிருக்கலாம்... ஆனா உங்கப் பொண்ணு எதுல இந்த கலாசாரத்தை கடைப்பிடிக்கனுமோ... அதுல கடைப்பிடிக்கலையே... அதுல மட்டும் வெளிநாட்டு கலாசாரத்தை கடைப்பிடிச்சிருக்காப் போல..."

"பிருத்வி நீங்க ரொம்ப தப்பா பேசறீங்க..."

"இல்லை கரெக்டா தான் பேசறேன்... நீ செஞ்ச ஒவ்வொன்னையும் இப்ப நினைச்சு பார்த்தா... இதை நீதான் செஞ்சிருப்பன்னு தோனுது..."

"அப்படி நான் என்ன செய்தேன் பிருத்வி...."

"நீ என்ன காதலிச்ச... கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்ச எல்லாம் சரி... ஆனா நான் சப்னாவை காதலிக்கிறது தெரிஞ்சு நீ ஒதுங்கியிருக்கனும்.... ஆனா அப்பவும் உன்னோட காதலை சொல்லி... இங்க இனிமே இருக்கமாட்டேன்... உங்களை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்னு சொல்லி சிம்பதி கிரியேட் பண்ண...

ஆனா உடனே பர்த்டேக்கு விஷ் பண்ண... நான் தான் உன்ன பர்த்டேக்கு கூப்பிட்டேன்... ஆனா நீ வரப்போறதில்ல என்பது போல சீன் போட்ட... உங்கம்மாவும் நீ வரமாட்டேன்னு தான் சொன்னாங்க... ஆனா ஆள் இல்லாதது தெரிஞ்சு வர முடிவு செஞ்சு வேணும்னே லேட்டா வந்த... 

இங்க கேக் இருக்கும் போதே நீ கேக் செஞ்சு எடுத்துட்டு வந்த... இதுக்கெல்லாம்...." அவன் முழுசாக பேசும் முன்னே...

"ஸ்டாப் இட் பிருத்வி... போதும்... நீங்க சொல்றது சரி தான்... நான் தான் அதுல போதை மருந்தை கலந்தேன்... போதுமா நானே என்னோட வாயால ஒத்துக்கிட்டேன் போதுமா...

ஆமாம் அந்த கலாசாரத்தை பார்த்து வளர்ந்த எனக்கு இது தப்பா தெரியல... ஆனா தமிழ்நாட்டு கலாசாரமும் எனக்கு தெரியும்.... மனசுல ஒருத்தனை நினைச்சுட்டா... சாகறவரைக்கும் அந்த பொண்ணு அவனுக்காக மட்டும் தான் வாழ்வா... அப்படி நிறைய பொண்ணுங்க இந்த மண்ணுல வாழ்ந்திருக்காங்க...

கண்ணகியை கற்புக்கரசின்னு சொல்வாங்க.... அதே கதையில வரும் மாதவியை கூட கற்புக்கரசின்னு தான் சொல்வாங்க... தாசி குலத்துல பிறந்தாலும் கோவலனை மட்டுமே மனசுல நினைச்சு வாழ்ந்தா மாதவி... தன் மனைவி கண்ணகியை தேடி மாதவியை விட்டுட்டு கோவலன் போன போது கூட மாதவி அவ மனச மாத்திக்கல... கோவலனை நினைச்சுக்கிட்டு துறவு வாழ்க்கை தான் வாழ்ந்தா... அவளுக்கு பிறந்த குழந்தை மணிமேகலையையும் இந்த மண் போற்ற தான் செஞ்சுது...

அப்படிதான் நானும் நீங்க சப்னாவை காதலிக்கிறது தெரிஞ்சாலும் என்னால உடனே மனசை மாத்திக்க முடியாது... நான் நியூயார்க் போகனும்னு நினைச்சேன்... அதுக்கு முன்னாடி உங்கக் கூட ஒரு நாளாவது வாழனும்னு ஆசைப்பட்டேன்... அந்த நினைவோடு என்னோட காலத்தை கழிக்கனும்னு நினைச்சேன்... அதுக்கு தான் இப்படியெல்லாம் செய்தேன் போதுமா..."

எல்லோருக்குமே யுக்தா சொன்னதில் அதிர்ச்சி... பிருத்வி பேசும்போது கூட யுக்தா அப்படி செய்திருக்கமாட்டான்னு தான் நினைச்சாங்க... ஆனா அவ விளக்கமா சொல்லும் போது அது உண்மைதானோன்னு நினைக்க வச்சுது...

"யுக்தா நிறுத்து... நீதான் இதை செஞ்சன்னு நான் கண்டுபிடிச்சதும்... இப்படி டயலாக் விடுறீயா... உனக்கு தெரியாது அன்னைக்கு நைட் நீ வீட்டுக்கு போகலைன்னா உன்ன தேடுவாங்கன்னு.... அப்படி தேடி  உங்கம்மா வந்தப்போ நீயா தப்பை ஒத்துக்கிட்டதுக்கு காரணம்... அவங்க நமக்கு கல்யாணம் செஞ்சு வைப்பாங்கன்னு தானே... ??"

"நீங்க எப்படி நினைச்சுக்கிட்டாலும் எனக்கு கவலையில்லை... எனக்கு என்னப் பத்தி தெரியும்... அதான் நான் தான் செஞ்சன்னு தப்பை ஒத்துக்கிட்டேனே.... ஆமாம் அன்னைக்கு அம்மாவை பார்த்ததும் அழுதேன்.... ஏன்னா நான் செஞ்சது தப்புன்னு தெரியும் அதனால தான் அழுதேன்... அதுக்காக அம்மா என் கற்பு போச்சு எனக்கும் பிருத்விக்கும் கல்யாணம் செஞ்சு வைங்கன்னு கேக்கலையே...

உங்க வீட்ல தான் கல்யாணம் பேச வந்திருக்காங்க... நீங்க சொன்ன மாதிரி ஒருவேளை நான் உங்களை கல்யாணம் செஞ்சுக்க தான் இப்படியெல்லாம் பண்ணியிருந்தா கூட எனக்கு இப்போ உங்களை கல்யாணம் செஞ்சுக்க விருப்பமில்லை..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.