(Reading time: 21 - 42 minutes)

 

கொலு மண்டபம் மிக விஸ்தாரமாய் இருந்தது.சுவற்றில் காலம் சென்ற மன்னர்கள் உயிரோடிருந்த காலத்தில் கானகம் சென்று வேட்டையாடி வந்த கொடூர விலங்குகளின் தலைப் பகுதிகள் பாடம் செய்யப்பட்டு மாட்டப் பட்டிருந்தன.அவற்றைப் பார்க்கும் போதே அம்மன்னர்களின் வீரமும் வேட்டையாடுதலில் அவர்கள் கொண்டிருந்த மோகமும் புரிந்தது.சுவற்றிலிருந்து நாலடி முன்னே வரிசையாய் ஆறடிக்கும் மேலான உயரம் கொண்ட ஓவியங்கள் நின்றிருந்தன.ஆனால் அவை அனைத்துமே மெல்லிய துணியால் மூடப்பட்டிருந்தன.

அவ்வோவியங்களின் முன்னே போய் நின்றார் பெரிய மன்னர்.பரபரப்பாய் அவரோடு நின்று கொண்டான் குதிரைவீரன்.

முதல் ஓவியத்தின் முன் நின்ற பெரிய மன்னர் மூடியிருந்த துணியை விலக்க மிக கம்பீரமாய் நின்றிருந்தார் அவ்வரச குடும்பத்து முன்னோடி மன்னர் ஒருவர்.பக்கத்தில் அவரின் மனைவி மகாராணியின் ஓவியம்.இப்படி கொள்ளுத் தாத்தன்-கொள்ளுப் பாட்டி,எள்ளுத் தாத்தன்-எள்ளுப்பாட்டி முடிந்து அடுத்த ஓவியத்திடம் சென்ற மன்னர் இது எனது தந்தையின் தந்தை எனது தாத்தா என்றபடியே அவ்வோவியத்தின் துணியை விலக்க அவ்வோவியத்தில் இருந்த அரசரைப் பார்த்த குதிரைவீரன் அப்படியே அசந்து போய் மலைத்துப் போய் தன்னை மறந்து போய் மரம் போல் நின்றுவிட்டான் ..ஆனால் அவன் வலது கைமட்டும் அவனை அறியாமல் அவன் தோள் மீது சென்று அங்கிருந்த கொஞ்சமே கொஞ்சம் மேடிட்டிருந்த மிகச் சிறிய மச்சத்தில் போய் நின்றது.அவ்வோவியத்தில் இருக்கும் பெரிய மன்னரின் தாத்தாவிற்கு எவ்விடத்தில் மச்சம் காணப்பட்டதோ அதே இடத்தில் அதே நிறத்தில் அதே அளவு மச்சம் தனக்கும் இருப்பதைக் கண்ட குதிரைவீரன் அதிசயத்தில் பேச்சிழந்து நின்றான்.ஓரளவு அவரின் ஜாடையும் தனக்கிருப்பதாய் உணர்ந்த அவனுக்கு தன் பாட்டி தன்னை மிகுந்த பாசத்தோடு அணைத்து உச்சிமுகரும் போதெல்லாம் அவர் கண்களிலிருந்து வழியும் கண்ணீர் தன் தலையை நனைப்பதை பல முறை உணர்ந்தது நினைவுக்கு வந்தது அவனுக்கு.

மாமா இவரின் பெயர் என்ன மாமா?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

இவரின் பெயர்..அதிவீர பாண்டியன்..

பெரிய மன்னர் அப்பெயரை உச்ச்ரித்ததும் அப்படியே ஆடிப்போனான் குதிரரைவீரன்.

அப்படியானால்..அப்படியானால் இவர்தான் நம் பாட்டியின் தந்தையாக இருக்க வேண்டும்.அதனால்தான் பாட்டி தன்னை அதிவீரா..அதிவீரா என்று உருகி உருகி அழைப்பாரோ?அப்படி அதிவீரா என்று அழைக்கும் போதெல்லாம் அவரின் குரல் கம்மி தொண்டை அடைக்குமே?தன் தந்தை மீது அவர் வைத்திருந்த அதீத பாசத்தாலும் மரியாதையாலும் தன் தந்தையின் பெயரையே தன் பேரனான எனக்கு வைத்தாரோ?தனக்கு தங்கள் குலத்திற்கான,தங்கள் பரம்பரைக்கான வேறு பெயர் இருக்கையில் பாட்டி மட்டும் அதிவீரா என்றுதானே பாசத்தோடு அழைப்பார் என்ற நினைப்பு அவனுக்கு வந்தது. பெற்ற தந்தையின் பெயரை பேரனுக்கு வைப்பது வழக்கமே என்றாலும் மரியாதை நிமித்தமாக அப்பெயரைச் சொல்லி அழைப்பது பெரும்பாலும் வழக்கமில்லை என்றாலும் பாட்டி அப்பெயரைச் சொல்லி அழைப்பதிலேயே பெரும் நிம்மதி அடைவார் என்பது அவனுக்குத் தெரியும். 

இதோ பாருங்கள் இவர்தான் எனது பாட்டி..அடுத்த ஓவியத்திற்கு நகர்ந்தார் பெரிய மன்னர்.இவர் பெயர்.. ருக்மா தேவி....வாய்வரை வந்தது அப்பெயர் அதிவீரன் எனப் பெயர் கொண்ட குதிரை வீரனுக்கு(அதிவீரன் என இவனை அவனது பாட்டி மட்டுமே அழைப்பார் என்பதால் இவன் அக்குடும்பத்தாரால் மட்டுமே  அப்பெயரால் அறியப்பட்டிருந்தான்.பார் போற்றும் இவனை வேறு பெயர் கொண்டே உலகம் அறிந்திருந்தது.எனவே இவன் பெயர் அதிவீரன் என மட்டுமே கொள்ள வேண்டாம்)வாய்வரை வந்துவிட்ட அப்பெயரை வெளிவராமல் அடக்கிக் கொண்டான் அதிவீரனான குதிரைவீரன்.

தன் தங்கையை பாட்டி அடிக்கடி ருக்மா..ருக்மா என அழைத்துக் கொஞ்சுவார் என்பது அவனுக்கு நினைவு வந்தது.அழகும் மிடுக்கும் கம்பீரமுமாய் பெண்மைக்குரிய அனைத்து இலக்கணங்களோடும் வசீகரப் புன்னகையோடு ஓவியத்தில் காணப்பட்ட அப்பெண்மணியை கையெடுத்துக் கும்பிட்டான் அதிவீரன்.என்ன இருந்தாலும் அவர் தன் பாட்டியின் தாய் என்பதால் அவனுக்கு கூடுதலாய் ஒரு பாசமும் வந்தது அந்த மாதரசியின் ஓவியம் பார்த்து.

அடுத்திருந்த ஓவியத்தின் மீதிருந்த துணியை விலக்கி..இதோ பாருங்கள் மருமகனே..இவர்தான் என் தந்தை சுந்தர பாண்டியன் என் தாத்தா அதிவீர பாண்டியனின் மகன்.

ஓ...மாமா நீங்கள் இவரின் ஜாடையிலேயே இருக்கிறீர்கள்...

ஆம்..அப்படித்தான் சொல்வார்கள்...

இவர் எனது தாய்...சாவித்ரி தேவி...அடுத்த ஓவியத்தைச் சுட்டிக்காட்டினார் பெரிய மன்னர்.

ஓ..எவ்வளவு கனிவான பார்வை..?என்று சொன்னவன் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது.

மாமா...உங்கள் தாத்தா பாட்டிக்கு உங்களின் தந்தை ஒரே மகனா..?..அவரின் பதிலுக்காக அவன் மனம் பரபரத்தது..

சட்டென பெரிய மன்னரிடமிருந்து பதில் வரவில்லை..ம்..ம்..ம்..என்ற பெரு மூச்சொன்றே வந்தது.

அது..அது..தயங்கினார் அவர்.

சொல்லுங்கள் மாமா...ஏதோ தயங்குவது போல் தோன்றுகிறது..

அப்படியில்லை..ஆனால்.. ஆனால்.. அது.. அது.. வேண்டாமே..

பரவாயில்லை மாமா சொல்லக்கூடாதது என்றால் வேண்டாம் மாமா...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.