(Reading time: 10 - 20 minutes)

01. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

தவன் மெல்ல தன் உதயத்தை உலகுக்கு உணர்த்திக்கொண்டிருந்த தருணம், தன் கூட்டிற்குள் இருந்த பறவை மெல்ல எட்டிப் பார்த்து சிறகை அடித்துக்கொண்டு அந்த நாளை வரவேற்க, தென்றலும் தனது சாமரத்தினால் மென்மையை அளிக்க,

அந்த மென்மையில் தன்னை மறந்தவளாக தண்ணீரில் கால்களை அளைந்த வண்ணம் குளித்து முடித்துவிட்டு தனதறைக்குள் நுழைந்தாள் சரயூ….

உடைமாற்ற ஆடையை தேடிய தருணம் அவள் கண்களில் பட்டது அந்த புடவை… இதமாக அதை வருடியவளுக்குள் பல நினைவுகள் அலை போல மிதந்து தவழ, கண் மூடி நின்றவளின் கண்களுக்குள் அந்த காட்சி விரிந்தது…

தழைய தழைய புடவையை கட்டி, ஈரமாக இருந்த தனது கற்றைக்கூந்தலை விரித்து காயவிட்டபடி நின்றிருந்தவளை இருகரம் சுற்றி வளைத்தது பின்னிருந்து…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... - 

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“ஹ்ம்ம்… விடுங்க…” என விலகி செல்ல,

“ஏன்….” என்ற கேள்வி அவளை பின் தொடர்ந்தது…

சில நொடிகள் அமைதியாக இருந்தவளின் முகத்தினில் ஏற்பட்ட மாறுதலை கவனித்தவனுக்கு புரிந்து போனது என்னவென்று…

“ஹேய்… வெட்கமா படுற நீ?...” என சிரித்தவன் அவளின் அருகினில் வந்து, சிவந்த அவள் முகத்தினை பார்த்து, கைகளில் ஏந்தி,

“நேத்து ராத்திரி கூட இப்படி எல்லாம் நீ வெட்கப்படலையே… இன்னைக்கு மட்டும் என்ன புதுசா?...” என கேட்க, அவள் விழி தாழ்த்திக்கொண்டாள் சிரிப்புடன் மெல்ல….

“வெட்கத்தை எல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு இப்போ என்னைப் பாரு…” என்றான் அவன்…

அவளும் பார்க்க, அவள் முகத்தினில் வந்து மோதியது அவளின் கூந்தல்…

“உனக்கு நல்ல சுருட்டை முடி… பாரு சும்மா பம்பை மாதிரி இருக்கு…” என்றவன் அவளை நெருங்க, அது மீண்டும் வந்து அவள் முகத்தினில் விழ, அவன் எரிச்சலாகி, அதை ஒதுக்கிவிட்டுவிட்டு, அவளை அணைத்தான்…

அவள் கைவிரல்களை இறுக பற்றிய வண்ணம், அவள் கழுத்தினில் முகம் புதைத்தவன், சற்று நேரம் கழித்து அவளிடமிருந்து விலகி,

“இனி தலைக்கு குளிச்சா, சீக்கிரம் காயவச்சுட்டு முடியை பின்னு…. பாரு சும்மா சும்மா பறந்து எரிச்சல்படுத்துது… கிளிப் வச்சு பறக்குற முடியை சரி பண்ணு… புரியுதா?...” என அவன் சொன்னதும், அந்நேரம் அவளுக்கு சிரிப்புதான் வந்தது…

பின்னே, அவன் நெருங்கும் போது முகத்தின் மீது முடி பறந்து வந்து விழுந்தால் அவனுக்கு அது தடையாகத்தானே இருக்கும்…. என்றெண்ணியவளுக்கு தன் மீதிருக்கும் அவனின் ஆசை மட்டும் அவளுக்கு அப்போது தெளிவாக புரிந்தது …

அங்கிருந்து செல்வதற்கு முன், மீண்டும் அவளிடம் வந்தவன், அவளை ஒருதரம் அணைத்துவிட்டு, “சுடிதார் போடேன்…. அது உனக்கு வசதியா இருக்கும்… புடவை கொஞ்சம் அசௌகரியமா இருக்குமே… அதான்…” என சிரித்துக்கொண்டே சொல்ல, அவளுக்குமே அது சரி என்று பட்டதோடு மட்டுமல்லாமல், தன் சௌகரியம் அவனுக்கு பெரிதாக தெரிவதை நினைத்து மகிழ்ந்தும் கொண்டாள்…

அன்று அணிந்திருந்த அந்த புடவையை இன்று பார்த்ததும், அவளுக்குள் பழைய கதைகள் எல்லாம் நினைவு வந்து, அவளும் அதனோடு பின்னோக்கி செல்ல முயல, முகத்தினில் வந்து விழுந்த கற்றைக்கூந்தல் அவளை நனவுலகுக்கு இழுத்துக்கொண்டு வந்தது பட்டென…

முடியை இழுத்து கிளிப் போட்டு விட்டு சுடிதாரை எடுத்து அணிந்துவிட்டு கண்ணாடி பார்த்து பொட்டு வைத்துக்கொண்டிருந்த போது அறைக்கதவை தட்டும் ஓசை கேட்டது…

கதவைத்திறந்தவளை தாண்டிச் சென்றது அவளது அன்னையின் பார்வை…

“தூங்குறாங்களா?... சரி… தூங்கட்டும்… நீ வா… காபி குடி…” என அவளை அழைத்ததும்

“நீங்க போங்கம்மா… நான் வரேன்….” என்றாள் அவள்…

சமையலறைக்குள் சென்றதும் நேரம் போனதே தெரியவில்லை அவளுக்கு…

சட்டென நினைவு வந்தவளாக, “அம்மா… தம்பி எங்க?...” எனக்கேட்டாள் அன்னையிடம்…

“அவன் தூங்கிட்டிருப்பான்...” என்றவரிடம்,

“சரிம்மா… நான் போய் தம்பிக்கு காபி கொடுத்துட்டு வரேன்…” என்றபடி காபியை எடுத்துக்கொண்டு அவளின் தம்பியைத் தேடிச் சென்றாள் அவள்…

“என்னைக் கட்டிப்பியா?... சொல்லு… பிரேமி… சொல்லு…” என தூக்க கலக்கத்திலிருந்த ஐந்து வயது குழந்தையிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான் அர்னவ்…

“டேய்… ஏண்டா… என் பொண்ணை பாடா படுத்துற?...” என காபி கப்பை மேஜையில் வைத்தபடி அவனிடம் கேட்டாள் சரயூ…

“அட போங்க சிஸ்… இப்படி பண்ணிட்டீங்களே?...” என முகத்தை திருப்பிக்கொண்டான் அவன்…

“என்னடா ஆச்சு கடல்??… எதுக்கு இப்படி காலையிலேயே கொந்தளிக்கிற?...”

“எதுவுமே உங்களுக்கு தெரியாதுல்ல?...” என தமக்கையை முறைத்தவன்,

“ஒன்னு பிரேமி குட்டியை கொஞ்ச நாள் முன்னாடியே பெத்து குடுத்துருக்கலாம்… இல்ல என்னை கொஞ்ச நாள் கழிச்சு நம்ம அம்மா பெத்துருக்கலாம்.. சே…. ரெண்டும் பண்ணாம, விட்டுட்டீங்களே…” என அவன் போலி வருத்தம் காட்ட,

தூக்கத்திலிருந்த விழித்தெழுந்த பிரேமி, “அச்சோ, மாமா அப்போ என்னை கட்டிக்கமாட்டீயா?...” என உதட்டை பிதுக்கிக்கொண்டு கேட்க,

“என் செல்ல பிரேமிடா நீ…. உன்னை மட்டும் தான் நான் கட்டிப்பேன்….” என்றபடி அவளை அர்னவ் அணைத்துக்கொள்ள, பிரேமியோ, அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.