(Reading time: 29 - 57 minutes)

'ல்லாமே நாம நினைக்கற மாதிரியே நடந்துடுத்துன்னா அப்புறம் லைஃப்லே ஸ்வாரஸ்யமே இருக்காதுடா கண்ணா... இது மாதிரி சின்ன சின்ன ப்ராப்ளம்ஸ் வரணும் அதை நாம தாண்டி ஜெயிக்கணும் சரியா...' என்றான் இதமாக...

முரளியின் அறையில் சென்று அமர்ந்தவளால் சில நிமிடங்களுக்கு மேல் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

'அப்பாவை எல்லாரும் என்னென்ன கேள்விகள் கேட்டுகொண்டிருப்பர்களோ என்ற எண்ணமே அவளை வதைத்துக்கொண்டிருந்தது. அவள் நினைத்த படியே தான் நடந்துக்கொண்டிருந்தது கீழே.

முரளியின் நண்பர்களும், அவனது தந்தையின் நண்பர்களும் வர ஆரம்பித்து இருந்தனர். அவர்களிடம் இவர்கள் எதையும் சொல்லி இருக்கவில்லை. வருபவர்களிடம் அப்போதைக்கு எதையாவது சொல்லி சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தவர்களுக்கு இப்போது கொஞ்சம் தர்ம சங்கடம் தொற்றிக்கொண்டிருந்தது .

வாசுதேவன் கோதையின் அப்பாவை தனது உறவினர்களிடமெல்லாம் அறிமுக படுத்த துவங்கினார். ஒவ்வொருவரிடமிருந்து ஒவ்வொரு விதமான கேள்விகள்..

'பெரிய பொண்ணை விட்டுட்டு சின்ன பொண்ணுக்கு முதல்ல பண்றேளே???'

'அது... வந்து...' ஸ்ரீதரன் தடுமாற

'பெரிய பொண்ணுக்கு தான் முரளியை பேசி இருந்தது இல்லையோ???

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்...!

படிக்க தவறாதீர்கள்... 

'ஆமாம் பேசி இருந்தது. ஆனா அவா ரெண்டு பேரும் கொஞ்ச நாள் போகட்டும்ங்கறா... சரி முதல்லே இவா கல்யாணத்தை முடிச்சிடுவோம்னு பண்ணின்டிருக்கோம்' உதவிக்கு வந்தார் வாசுதேவன்.

'ரெண்டு பேருக்கும் ஒண்ணா நடக்க  போறதுன்னுன்னா  சொல்லிண்டிருந்தேள்??? இப்போ ஏன் திடீர்ன்னு மாத்திட்டேள்??? ஒரு வேளை பெரிய பொண்ணு லவ் கிவ்ன்னு ஏதானும்... ' அந்த கேள்வியில் அப்பா உடலும் மனமும் கூசிப்போய் நிற்க .... சுற்றி இருந்தவர்கள் அவரை ஒரு மாதிரியாக பார்க்க.. சரியாக அதே நேரத்தில் மாடியிலிருந்து இறங்கி அங்கே வந்து நின்றனர் கோதையும், வேதாவும். மனம் கேட்காமல் கீழே வந்தே விட்டிருந்தாள் வேதா.

'நீ தான் சின்ன பொண்ணாடிமா??? நன்னா லட்சணமா இருக்கே.. நீயானும் பெரியவா  சொல்ற பேச்சை கேட்டுண்டு நல்லப்படியா கல்யாணம் பண்ணிண்டு குடித்தனம் பண்ணு..' கோதையை பார்த்து சொன்னார் ஒரு பெண்மணி.

சுற்றி நின்றவர்களின் பார்வையில் தான் செத்து பிழைத்துக்கொண்டிருந்த போதிலும் அப்பாவின் முக வாட்டமும் தர்ம சங்கடமுமே அவளை கூறுப்போட்டுக்கொண்டிருந்தது. மனம் குற்ற உணர்ச்சியில் துடித்துக்கொண்டிருந்தது வேதாவுக்கு .

'ச்சே... எத்தனை பெரிய முட்டாள்தனம்.. செய்திருக்கிறேன் நான்... அதுவும் ஒரு கிராதகனை நம்பி... என்னால் எத்தனை பேருக்கு எத்தனை தர்ம சங்கடங்கள்... நான் இங்கே கூனி குறுகி நிற்கிறேன்... அவன் எங்கே நிம்மதியாக கும்மாளம் அடித்துக்கொண்டிருக்கிறானோ??? நினைத்துக்கொண்டாள் வேதா... அங்கே மருத்துவமனையில் சரவணன் வலியில் துடித்துக்கொண்டிருப்பதை அறியாமல்...

அதற்குள் அவள் அருகே வந்து விட்டிருந்தான் முரளி... 'அதற்குள் உன்னை யார் கீழே வர சொன்னார்கள்???' என்பதாக ஒரு பார்வை அவனிடமிருந்து.

அதற்குள் அங்கே வந்து சேர்ந்தனர் முரளியின் நண்பர்கள்.

'என்னடா உனக்கு இன்னைக்கு எங்கேஜ்மென்ட் இல்லையா???' கேட்டான் ஒரு நண்பன்

'இல்லடா கொஞ்ச நாள் போகட்டுமேன்னு  பார்க்கறேன்..'

'டேய்... இப்பவே உனக்கு முப்பத்தி ஒரு வயசாச்சு... இதுக்கு மேலே தள்ளி போட்டேனா ஸ்ட்ரைட்டா அறுபதாம் கல்யாணம் தான்...' நண்பர்கள் கொல்லென சிரிக்க கொஞ்சம் சங்கடத்தில் நெளிந்தான் முரளி. பார்த்துக்கொண்டே இருந்தாள் வேதா.

'நாலு நாள் முன்னாடி அவ்வளவு ஹாப்பியா இன்வைட் பண்ணே இப்போ என்னடா ஆச்சு???.' இது அவனுடைய தோழி.

'இல்லமா எங்கே ரெண்டு பேருக்கும் ஒரு பேசிக் அண்டர்ஸ்டான்டிங் வரட்டும்னு பார்க்கறேன்... இப்போ கோகுல் என்கேஜ்மென்ட் இருக்கு வாங்க எல்லாரும்... உட்காருங்க...' அவன் பேச்சை மாற்ற  பார்க்க... விடவில்லை அவன் தோழி..

'அப்போ இது வேண்டாம்னு சொன்னது நீ தானா??? நான் உன்னை பத்தி என்னமோன்னு நினைச்சிருந்தேன். நீ நினைச்சா வேணும்னு சொல்லுவே.. நினைச்சா வேண்டாம்னு சொல்லுவே பாவம்டா அந்த பொண்ணு அவ எப்படி ஃபீல் பண்ணுவான்னு கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா... ' என்ற ரீதியில் அவள் பொரிந்து தள்ள... அதை பார்த்துக்கொண்டிருந்த யசோதாவும் நந்தகோபாலும் கொஞ்சம் கொதித்து தான் போனார்கள்.

அதையுமே முரளி வெகு இயல்பாக தான் எதிர்க்கொள்ள முயன்றான் என்ற போதிலும் அந்த வார்த்தைகளை ஏனோ வேதாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை...

திடீரென எழுந்தது அவள் குரல் 'தப்பு அவர் மேலே இல்லை. என் மேலே..'

கொஞ்சம் திகைத்து போனவனாக முரளி திரும்ப.. அங்கே சட்டென ஒரு மௌனம் பரவ... அந்த நேரத்தில் சரியாக கோகுல் கீழே இறங்கி வர ......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.