(Reading time: 29 - 57 minutes)

 ப்போது கோதையின் கைப்பேசி ஒலித்தது

'வந்துட்டேன்டா கோதைப்பொண்ணு..' மறுமுனையில் கோகுல் 'இப்போ இங்கே ஓடி வா பார்க்கலாம்...'

'நானா.. ம்ஹூம்... மருதாணி விரல்களை பார்த்துக்கொண்டே புன்னகைத்துக்கொண்டாள் கோதை. 'வேணுமானா நீங்க வாங்கோ..'

'நானா? வரவா... சரி இதோ வரேன் பாரு... ' அடுத்த சில நொடிகளில் அவன் மணமகள் அறை கதவை தட்ட.. வேதா.. கதவை.. திறக்க.. அறைக்குள் இருந்த பெண்களின் உற்சாக கூச்சலின் மத்தியில் உள்ளே நுழைந்தான் கோகுல்..

'நீ கூப்பிட்ட உடனே வந்துட்டேன் பார்த்தியா கோதை பொண்ணு..' அவன் கண் சிமிட்ட.. சிவந்து போனாள் கோதை.

'ஹலோ... நீங்க சைட் அடிக்க வந்துட்டு என் தங்கை மேலே பழி போடறேளா?' இது வேதா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

'அச்சோ.. நான் பொய்யே சொல்ல மாட்டேன்... கோதையை கேட்டு பாருங்கோ..' அவன் கோதையை பார்த்து கண் சிமிட்ட நிமிரவே இல்லை அவள்.

'இல்லை நீங்க போய் சொல்றேள்..' வேதா சொல்ல

'பெருமாள் சத்தியமா இல்லை மன்னி..' அந்த 'மன்னி'யில் அழுத்தம் கொடுத்து இதமான புன்னகையுடன் சொன்னான் கோகுல். அவளும் முரளியும் சீக்கிரம் இணைய வேண்டுமென்ற எண்ணம் அவன் அடி மனதிலும் வேரூன்றி கிடந்தது. கொஞ்சம் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் வேதா.

'நிஜமா மன்னி...' விடவில்லை அவன்.

'ச.. சரி நீங்க ரூமுக்கு போங்கோ... யாரனும் பார்த்தா ஏதானும் சொல்லப்போறா... ' அவள் குரலில் கொஞ்சம் தடுமாற்றம் கலந்திருந்தது

'நான் வரேன்டா... அவன் கோதையை பார்த்து சொல்லிவிட்டு நகர... அறையை விட்டு வெளியே வந்து கோகுலுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னாள் வேதா.

''இனிமே மன்னி வேண்டாமே ப்ளீஸ்..'

'அதெல்லாம் முடியாது.. யாரென்ன சொன்னாலும், எத்தனை வருஷம் ஆனாலும்  நீங்கதான் என் மன்னிங்கறதை மட்டும் யாராலையும் மாத்த முடியாது புரியறதா??? அவன் சொல்லிவிட்டு நகர, கைக்கெட்டும் தூரத்தில், கைகளை கட்டிக்கொண்டு அவர்கள் பேசுவதை கேட்ட படியே முரளி நின்றிருக்க... அவனை பார்த்து கண்ணடித்து விட்டு நகர்ந்தான் கோகுல்.

முரளியை பார்த்த மாத்திரத்தில் கொஞ்சம் தடுமாறித்தான் போனாள் வேதா. சட்டென உள்ளே சென்று அமர்ந்துக்கொண்டாள் அவள். 'என்ன நடக்கிறது எனக்குள்ளே???'

கோதையை பார்த்து பார்த்து அலங்கரித்த படியே . 'நீ அழகுடா கோதை...' அவள் காதுக்குள் மெல்ல கிசுகிசுத்தாள் அக்கா.

மாப்பிள்ளை அழைப்பு முடிந்து வரவேற்பில் இருவரும் நின்றிருக்க, மெரூன் நிற சேலையில் அசைந்தாடும் மாலைகளும், கலகலக்கும் வளையல்களும், அவள் அசையும் போதெல்லாம் சிணுங்கி சிணுங்கி அவனை அழைக்கும் கொலுசுகளுமாக தன்னருகே நின்றிருந்தவளின் மீதிருந்த பார்வையை விலக்கவே முடியவில்லை கோகுலால்.

றுநாள் காலை

விரதம் முடிந்திருந்தார்கள் கோகுலும் கோதையும்.. அழகான பச்சை நிற சேலை அவள் அழகுக்கு அழகு சேர்க்க நின்றிருந்தாள் கோதை. பஞ்சகச்ச வேஷ்டியில் கம்பீரமாக நின்றிருந்தான் கோகுல்.

அடுத்ததாக காசி யாத்திரை..

'மாமா...' என்றான் முரளி கோதையின் அப்பாவை பார்த்து  'உங்க மாப்பிள்ளை 'குடை, விசிறி  தடி எல்லாம் எடுத்துண்டு காசிக்கு போறானாம். கல்யாணம் வேண்டாமாம். சம்பிரதாய படி நீங்க போய் அழைச்சிண்டு வரணும். ஆனா அது வேண்டாம். போனா போகட்டும்னு விட்டுடுங்கோ. ரெண்டே நிமிஷம் அவனா திரும்பி ஓடி  வருவான் பாருங்கோ...'

சட்டென அங்கே சிரிப்பலை பரவ...

'பி...ர...தர்'. 'தோ... உங்களுக்கும் கல்யாணம் வந்துண்டே இருக்கு .. அப்போ நாங்களும் பேசுவோம் தெரியுமோன்னோ...'  கோகுல் சிரித்தபடியே சொல்ல..

'ஓ.. ஷூர்' என்ற முரளியின் பார்வை அங்கே எளிமையான அலங்காரத்தில் மின்னிக்கொண்டிருந்த வேதாவை வருட தவறவில்லை. 'சீக்கிரம் வரட்டும் கல்யாணம் மெதுவாக உச்சரித்தன அவனது உதடுகள். அது வேதாவின் காதுகளை எட்டாமல் இல்லை.

ஸ்ரீதரன் கோகுலை அழைத்து வர...

காசி யாத்திரை வேண்டாமென தடியை எறிந்து விட்டு வரும் கோகுலுக்கு, தாய் மாமா அவளது கையில் எடுத்து கொடுத்த மாலையை சூட்டினாள் கோதை.

மன்மதனுக்கு மாலையிட்டாயே
மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
அடி மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
ஜன்மம் அதில் சுகித்து நீராடி - மன்மதனுக்கு

பின்னால் இருந்து பாடல் ஒலிக்க....

அவள் வெட்க சிரிப்பில் சில நொடிகள் மயங்கித்தான் போனான் கோகுல்.

'என்னுடையதெல்லாம் இவளுக்கும் இவளுடையது எல்லாம் எனக்கும் சொந்தம்' என்பதாக.......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.