(Reading time: 15 - 30 minutes)

'நீ எங்கே வேணுமானாலும் போ.... இப்போ நான் ஃபிரண்ட்ஸோட இருக்கேன். உன்னோட கொஞ்ச முடியாது..' தூண்டித்து விட்டான் அழைப்பை.

சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்துவிட்டாள் அவள். அவன் அப்படித்தான்!!!! தான் நினைத்தது நினைத்தபடி நடக்காவிட்டால் இப்படிதான் சுள்ளென பாய்வான். கோபம்!!!! மூக்கின் நுனியில் கோபம்!!!

'இந்த கோபத்தினாலே நான் ஏதோ பெருசா இழக்க போறேனோன்னு தோணுது அபர்ணா...' அவனே சொல்லி இருக்கிறான் பல முறை.

'இல்லை... அவன் அப்படி எதையும் இழந்துவிட கூடாது..' தவித்தது பெண் மனம். கெட்டவன் இல்லை அவன். சராசரி ஆண் மகன் என தோன்றியது அவளுக்கு.

'இதுதான் யதார்த்தமோ??? பொதுவாக ஆண்களின் இந்த முகம் திருமணதிற்கு பின் தான் வெளிப்படும். ஆனால் இவன் இப்போதே வெளிப்படுத்துகிறான். போலித்தனம் இல்லை இவனிடத்தில்.' தன்னை சமாதான படுத்திக்கொண்டு கிளம்ப முற்பட்டாள் அபர்ணா.

'என்ன உடுத்துவதாம்??? ஹேய்... சரியான பட்டிக்காடு மாதிரி எப்போ பாரு புடவை....' அருண் வார்த்தைகளே மறுபடியும் நினைவில். மறுபடியும் அமர்ந்தாள் அவள்.

சில நொடி யோசனை அவளிடம். இடம் வலமாக தலை அசைத்துக்கொண்டாள். 'இந்த விழாவுக்கு புடவையை தவிர வேறே எந்த உடை அணிவதும் சரியாக இருக்காது என்றே தோன்றியது'

அதிக பகட்டிலாத அந்த கரும்பச்சை புடைவையில், அளவான நகைகளுடன்  தனது வழக்கமான அலங்காரத்தில் அவள் தயாராகி அவள் வெளியே வர, விஷ்வா சோபாவில் அமர்ந்திருக்க, சமயலறையிலிருந்து வெளியே வந்தார் அவளுடைய அம்மா.

அப்பாவும் அவளது அண்ணனும் விஷ்வாவிடம் அதிகமாக பேசிவிடவில்லைதான். குடும்பத்தில் அவன் மீது எல்லாருக்கும் கொஞ்சம் வருத்தம் உண்டு. அவன் செய்துக்கொண்டிருக்கும் செயல்களால்தான் எல்லாம். அபர்ணாவுக்கும் அவளது அம்மாவுக்கும் அவனது செயல்களில் இருக்கும் நியாயம் ஓரளவுக்கு புரியும்.

மகளை பார்த்தவுடன் அம்மாவின் இதழ்களில் புன்னகை. அம்மா கொடுத்த முல்லை சரத்தை சூடிக்கொண்டு கிளம்பினாள் அபர்ணா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம். அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்...

விழா அரங்கத்தை கார் நெருங்கியது விஷ்வாவின் கார். அந்த தெரு முழுக்க பல கார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள்!!!

இந்த மாதிரி விழாக்களுக்கு வருவது இருவருக்கும் இதுவே முதல் முறை... பரத்தின் கையெழுத்துடனான அந்த அழைப்பிதழ் அந்த பாதுக்கப்பு ஏற்பாடுகளை தாண்டி இருவரும் உள்ளே செல்ல உதவியது.

பிரம்மாண்டமான அந்த அரங்கம், அலங்காரங்கள், வந்திருந்த வி.ஐ.பிக்கள் என அனைத்தையும் பிரமிப்புடன் பார்த்தபடி இருவரும் நடக்க, அதற்குள் அவர்கள் வந்த செய்தி அரங்கத்தினுள் இருந்த பரத்தை எட்டி இருக்க, இவர்கள் அரங்கிற்குள் நுழைய எத்தனித்த அந்த நொடியில், அவர்களை நோக்கி கிட்டத்தட்ட ஓடி வந்தான் பரத்.

வந்து நின்றான் அவர்கள் முன்னால்!!! அவன் கையில் ஒரு பூங்கொத்து!!!

சில நொடிகள் அவன் இமைகள் கூட தட்டவில்லை. ஏதோ பல வருடங்கள் காணமல் போயிருந்த அவனது பொக்கிஷம் மறுபடியும் அவன் கை சேர்ந்தது போல் பார்த்திருந்தான் அவளை. இதழ்களில் ஓடிய குளிர் புன்னகையுடன் அவன் எடுத்தக்கொண்ட ஆழமான சுவாசம் அவன் மன நிலையை நன்றாக உணர்த்தியது அவளுக்கு.

முன்பிருந்ததை விட நடை உடை பாவனைகளில் அவனிடம் நிறையவே கம்பீரமும், பார்வையில் நிறையவே முதிர்ச்சியும் வந்திருப்பதை போலவே தோன்றியது அவளுக்கு. அவளிடமும் ஒரு தீர்கமான சுவாசம். அழகாய், நட்பாய் ஒரு புன்னகை. நிறைந்து போனது பரத்தின் உள்ளம்.

'க..ண்..ண...ம்..மா...' அழைக்க துடித்த உதடுகளை கட்டுப்படுத்திக்கொண்டு புன்னகையுடன் பூங்கொத்தை அவளிடம் நீட்டினான் பரத்.

'வெல்கம்... அபர்ணா... நீ வந்தது எனக்கு... எ..ன..க்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்...' சொல்லிவிட்டு திரும்பிய பரத்தின் கண்கள் விஷ்வாவை நன்றியுடன் ஊடுருவ மறக்கவில்லை.

'அடப்பாவி... அட...ப்..பாவி... டேய்... எத்தனை... எத்தனை பொக்கே உனக்கு நான் அனுப்பி இருப்பேன். எனக்கு இதே மாதிரி ஒண்ணு வாங்கணும்னு உனக்கு தோணிச்சாடா??? அவளுக்கு மட்டும்.... 'வெல்கம்... அபர்ணா...' விஷ்வா புலம்ப..

பொங்கிய சிரிப்பை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டான் பரத். விஷ்வா இப்படிதான் புலம்புவான் என்று தெரிந்தேதான் ஒரு பூங்கொத்துடன் வந்தான் அவன். அவனை சீண்டி பார்ப்பதில் இப்போதெல்லாம் ஒரு தனி சந்தோஷம் பரத்துக்கு.

மூவரும் நடக்க திடீரென 'டேய்...' கத்தினான் விஷ்வா.!!!  'டேய்... நயன்தாராடா.......டேய்... பரத் என்னை அவங்களுக்கு அறிமுகப்படுத்தி வைடா... நான் அவங்க பக்கத்திலே உட்கார்ந்துக்கறேன்...'

சட்டென நின்ற பரத் திரும்பி அவனை முறைப்புடன் பார்க்க......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.