மெல்ல புன்னகைத்தவர் "உண்மைதான்.எனக்கு ஒரு 20 வயது இருக்கும். அப்போ எனக்கும் என் அம்மாவுடைய தம்பி என் மாமா அவருக்கும் திருமண நிச்கியதார்த்தம் நடந்தது. அது ஒருவகையில் காதல் திருமணம் தான். எங்க திருமணத்துக்கு ஒரு ஆறு மாத கால சமயம் இருந்தது. அவர் அப்போ வெளியூரில் தங்கி வேலை பார்த்தார். ஒரு நாள் நான் திடீர்னு மயங்கி விழுந்ததால் என்னை ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போனாங்க. எனக்கு இதயத்துல ஒரு ஓட்டை இருக்கறதாகவும் அதனால எனக்கு திருமணபந்தம் வேண்டாம்னும் என்னை பரிசோதித்த மருத்துவர் சொன்னார். அம்மாவும் அப்பாவும் ரொம்ப அழுதாங்க. எனக்கு வாழ்க்கையே வெறுத்து போயிடுச்சு. கடவுள் மேல இருந்த நம்பிக்கையும் போய்டுச்சு. தற்கொலைக்கு முயற்சி பண்ணுனேன். ஆனா காப்பாத்திட்டாங்க. விஷயம் என் மாமாவுக்கு போய்டுச்சு. வந்தவர் என்ன பண்ணினார் தெரியுமா? " - என்று அவர்கள் இருவரின் முகத்தையும் பார்க்க அவர்கள் இருவரும் அவரின் பதிலுக்காக ஆர்வத்தோடு நிற்பதை புரிந்தவர் இதழ்களில் அழகான புன்னகையை தவழவிட்டார்.
"பட்டு பட்டுனு ரெண்டு கன்னத்துலையும் நாலு அரை விட்டார். அம்மாவும் அப்பாவுமே பயந்துட்டாங்க. என்னை என்ன கிறுக்கனு நினைச்சியா. யாரைக்கேட்டு தற்கொலைக்கு முயற்சி பண்ணுன. உன் உயிர் உனக்கு சொந்தமில்லை. என்னை கேக்காமே அதை யாரும் கொண்டுபோக முடியாது. என்ன நம்ம ரெண்டு பேரும் இவ்வளவுநாள் மனசுல புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்தோமே அது உனக்கு சலிச்சு போயிடுச்சா... இல்லைல அப்போ அதே மாதிரி இனியும் வாழ்வோம் வானு கூட்டிட்டு போயி அப்போவே கர்த்தர் முன்னாடி நின்னு அவர் கழுத்துல இருந்தசிலுவையை என் கழுத்துல மாட்டி விட்டார். இனி நீ என் மனைவி. உன்னை எந்த விதத்திலும் வருத்தப்பட விடாம நான் பார்த்துப்பேன். இது உன் மேல சத்தியம்னு சொன்னாரு. என்னால உங்களுக்கு ஒரு வாரிசை தரமுடியாதேன்னு அழுதேன். அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா, ஆதி முட்டாள் பெண்ணே குழந்தை பாக்கியம் கர்த்தர் கொடுக்கும் ஒரு வரம் தான் நான் இல்லைனு சொல்லல. ஆனா ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லாமல் போவது கர்த்தர் தேறும் மிகப்பெரும் பாக்கியம். நீ குழந்தை பெற்றால் ஒன்றோ ரெண்டோ மூன்றோ குழந்தைகளுக்கு தாயாகி இருக்கலாம். ஆனா இப்போ இந்த உலகில் உள்ள அனைத்து ஆண்டவனின் குழந்தைகளுக்கும் நீ தான் தாய். அப்படினு சொல்லி இந்த இல்லத்தை ஆரம்பிச்சார். இரண்டு வருடம் முன்னால அவர் கர்த்தர் கிட்ட போயிட்டார். அவர் பக்கத்துலயே என்னையும் அடக்கம் பண்ணனும். அந்த கர்த்தர் என்னை விளிப்பதற்காக காத்திருக்கிறேன். இந்த நாற்பது வருஷத்துல அவர் சொன்னது எந்த அளவுக்கு உண்மைன்னு நான் உணர்ந்திருக்கிறேன். இந்த கைகளால் பல நூறு குழந்தைகளை தூக்கியிருக்கிறேன். எல்லா குழந்தைகளும் என்னை அம்மானு தான் கூப்பிடுவாங்க. நானே ஒரு குழந்தையை பெற்றிருந்தாலும் இப்படி ஒரு ஆனந்தம் எனக்கு கெடைச்சிருக்காது. உண்மையிலுமே இது கர்த்தர் எனக்கு தந்த ஒரு மிக பெரும் பாக்கியம்"
" கர்த்தர் எனக்கு தந்த மிகப்பெரும் பாக்கியம் " இந்த வார்த்தைகளே மதுவின் மனதில் திரும்ப திரும்ப ஒலித்து கொண்டிருந்தது.
அங்கு அந்த இல்லத்தில் இருந்து கிளம்பியதிலிருந்து அவள் மனநிலையை புரிந்த பைரவியும் அவளையோசிக்க விட்டவள் அமைதியாகவே வந்தாள்.
முதல் முதலாக தான் இந்த பிரச்னையை புரிந்து கொண்ட விதமும் அணுகியவிதமும் இதை மதியிடம் மறுத்ததும் தவறோ என்று தோன்றியது மதுவிற்கு.
எவ்வளவு அழகானதொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். 50 வருடம் ஒன்றாக வாழ்ந்து குழந்தைகளை பெற்றவர்களை காட்டிலும் மிக உயர்ந்த உன்னதமான வாழ்வல்லவா அவர்களுடையது. நினைக்க நினைக்க உடல் சிலிர்த்தது அவளுக்கு. காதலின் முன் காமம் என்பது ஒன்றுமே அல்ல. உண்மை காதல் எந்த குறையையும் காணாது. இதை எண்ணிய அந்த நொடி அவள் முகத்தி அறைந்தாற்போல அந்த உண்மை அவளை சுட்டது. அப்படி என்றால் தான் குறையை எண்ணி மதியை தவிர்த்தது தன் காதலை மட்டுமல்ல மதியின் காதலையும் அல்லவா அவமதித்து இருக்கிறேன் என்று அவள் உள்ளம் கலங்கியது.
பள்ளிக்கு வந்து தான் இருக்கையில் அமர்ந்தவள் எதையெதையோ நினைத்து குழம்பி தவித்து கொண்டிருந்தாள். மதியிடம் சொல்ல வேண்டும் அனைத்தையும் என்று சரியான முடிவெடுப்பவள் இல்லையில்லை வேண்டாம் என்று அடுத்த கணமே தவறான முடிவெடுத்தாள். இப்படி அவள் மாற்றி மாற்றி முடிவெடுப்பதில் குழம்பிக்கொண்டிருந்ததை கண்ட விதியோ பொறுமை இழந்து தன் வேலையை காட்டியது.
குழம்பிக்கொண்டிருந்தவளின் சிந்தையை கலைத்தது இரைந்து கொண்டிருந்த தொலைபேசி அழைப்பு. அதை எடுத்து காதில் வைத்தவள் அங்கு இருந்து வந்த செய்தியின் தாக்கத்தில் அம்ம்மா என்று கத்தியபடி மயங்கி சரிந்தாள்.
பிரெண்ட்ஸ் மதுவிற்கு என்ன ஆனது என்பதை இந்த பகுதியில் தெரியப்படுத்தி உள்ளேன். அனல் மேலே பனித்துளி இன்னும் இரண்டு எபிசோடுகளில் முடிவடையும். அதற்கும் முன்பு எஞ்சியுள்ள இன்னும் சில கேள்விகளுக்கான பதில் உங்களுக்கு கிடைக்கும்.
தொடரும்
{kunena_discuss:945}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.