(Reading time: 9 - 17 minutes)

தே நேரத்தில்....... டெல்லியில்....

அந்த ஹோட்டல் அறையிலிருந்து புறப்பட தயாரகிக்கொண்டிருந்தாள் அவள்!!! ஹரிணி!!! விமானிகளுக்கான சீருடையுடன் கண்ணாடி முன்னாடி நின்றவளின் இதழ்களில் தன்னாலே ஒரு புன்னகை பிறந்தது.

அவளுடைய புன்னகை அவளுக்கு மிகப்பெரிய அழகை கொடுக்கும். ஒரு கம்பீரத்தை தோற்றுவிக்கும். ஆனால் அந்த புன்னகை பல நேரங்களில் பெண்களை பார்க்கும் போது மட்டுமே மிளிரும்!!!

ஏன்??? ஆண்களை பார்த்தால் புன்னகைக்க முடிவதில்லை. இந்த கேள்விக்கு சரியாக விடை கிடைத்ததில்லை அவளுக்கு. ஆண்களை பார்த்து சிரித்து பேசி எல்லாம் பழக்கம் இல்லை. அவர்களை எல்லா விஷயத்திலும் அவர்களுடன் போட்டி போட்டு பல நேரங்களில்  அவர்களை தோற்கடித்து மட்டுமே பழக்கம் அவளுக்கு..

அறையிலிருந்து வெளியே வந்து, டாக்ஸியில் ஏறி அமர்ந்த போது ஒலித்தது அவள் கைப்பேசி. அதில் ஒளிர்ந்த அந்த பெயரை பார்த்ததும் அவள் புருவங்கள் கொஞ்சம் முடிச்சிட்டன!!! நிறையவே யோசித்துவிட்டு

'ஹலோ...' என்றாள் அவள்.

'ஹலோ...' மறுமுனையில் கொஞ்சம் தயக்கத்துடன் ஒலித்தது குரல்.

'நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன். அப்புறம் பேசறேன்..' துண்டித்தாள் அழைப்பை. டாக்ஸி சாலையில் விரைந்துக்கொண்டிருக்க அவளது பார்வை சாலையில் பதிந்திருந்தது.

டாக்ஸி சிறிது தூரம் நகர்ந்திருக்க அவளது பார்வையில் பட்டது அந்த கடை வாசலில் இருந்த பெயர் பலகை. 'விவேக்' என இருந்தது அந்த பெயர். சுள்ளென்றது அவளுக்குள்ளே!!! 'விவேக்' அந்த பெயர் பல நேரங்களில் அவளுக்கு எரிச்சலை கொடுத்திருக்கிறது!!!

கல்லூரி காலம் துவங்கி எல்லா விஷயங்களிலும் அவளுக்கு நேரடி போட்டி அவன்தான். இத்தனைக்கும் அவன் இவளுடன் அதிகம் பேசியதே இல்லைதான். இருந்தாலும்  போட்டிகளிலும், தேர்வுகளிலும் வெற்றி கோப்பையை அவன் இவளிடமிருந்து தட்டி பறிக்கும்  நாட்களில், அவன் இவள் பக்கம் பார்த்துவிட்டு போகும் அந்த ஒற்றை பார்வை இவளுக்குள்ளே எரிமலைகளை உருவாக்கும்.

இவள் ஜெயித்து விடும் நாட்களில் அவள் அருகில் வந்து கைக்குலுக்கி விட்டுப்போகும் அவனது செய்கையும் கூட இதுவரையில் அவளுக்குள்ளே எரிச்சலையே விதைத்து இருக்கிறது.

'ஜெயிச்சிட்டா நீ என்ன பெரிய இவளா???' அவன் பார்வை அவளிடம் இப்படி கேட்பதை போலே தோன்றும் அவளுக்கு.

அவள் தேர்ந்தெடுத்த இந்த விமானத்துறையையே அவனும் தேர்ந்தெடுப்பான் என அவள் கனவிலும் நினைக்கவில்லைதான். இங்கும் வந்து விட்டான் அவன். பல நேரங்களில் அவனை சந்திக்க வேண்டி இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் இருவரும் ஒரே விமானத்தை இயக்கம் சந்தர்ப்பங்கள் கிடைத்தது மிகக்குறைவு தான். இவர்கள் நிறுவனத்தில் விமானிகள் எண்ணிக்கை அதிகம் என்பதால் உடன் வருபவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.

அவனை பற்றி யோசித்துக்கொண்டிருந்த வேளையில் சுரீரென ஊசியாக தைத்தது அந்த எண்ணம். அவனிடம் இல்லாத ஒரு பொக்கிஷம் அவளிடம் இருக்கிறதே!!! அது... அந்த ரகசியம் அவனுக்கு தெரிந்தால் என்ன செய்வான்??? அள்ளி சென்று விட துடிப்பானோ???

இல்லை இல்லை அது எப்படி நடக்கும்??? அது எப்படி சாத்தியம்??? தனக்குள்ளே சொல்லிக்கொண்டாலும் ஒரு பயம் அவளுக்குள்ளே பரவியது நிஜம்.

இவளது நெருங்கிய தோழி ரஞ்சனி திருமணம் செய்திருப்பது விவேக்கின் தம்பியை. அவர்கள் திருமணத்தில் தான் இந்த ரகசியம் இவளுக்கு தெரிய வந்ததே. இது ரஞ்சனிக்கு கூட தெரியாது!!!

ஏதோ யோசித்தவள் ஒரு வித தவிப்புடன்,  பரபரவென சற்று முன் அழைப்பு வந்த எண்ணை மறுபடியும் அழைத்தாள் ஹரிணி.

ஹலோ... நான் ஹரிணி பேசறேன். நல்லா இருக்கீங்களா??? அப்போ டக்குன்னு கட் பண்ணிட்டேன். அதான் மறுபடியும் கூப்பிட்டேன். நெக்ஸ்ட் வீக் ஃப்ரீ தான் நான் ஊருக்கு வந்து உங்களை பாக்கறேன்... பத்திரமா இருந்துக்கோங்க ... சரியா??? இப்போ வெச்சிடறேன்..'

படபடவென பேசிவிட்டு அழைப்பை தூண்டித்தாள் ஹரிணி. மறுமுனையில் ஆச்சர்யம் கலந்த மௌனம் 'என்னவாயிற்று இந்த பெண்ணுக்கு???

'அப்படி எல்லாம் விட்டு விட மாட்டேன்!!! அப்படி எல்லாம் தோற்று விட மாட்டேன்!!!' அவள் உறுதியாக தனக்குள்ளே சொல்லிக்கொள்ள அவளது கார் டெல்லி விமான நிலையத்தை நோக்கி பறந்துக்கொண்டிருக்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.