(Reading time: 12 - 24 minutes)

த்தனை முயன்றாலும், அவர் காதில் இந்த வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன. கடந்த மூன்று வருடங்களிலும் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் ? எத்தனை அவமானங்கள், துக்கங்கள் ? நினைத்து பார்த்தவரிடம் ஆழ்ந்த பெருமூக்சு வந்தது. தற்பொழுது சுலோட்சனாவின் ஒரே மகிழ்ச்சி சத்யன் தான் ! அவனது அதிவேக வளர்ச்சி, அந்த வளர்ச்சிக்கூட பறிக்க முடியாத தனிப்பட்ட வாழ்க்கை. திறமைசாலித்தான்  சத்யன்.

அந்த கஷ்டமான சூழ்நிலையில் அவன் சினிமாவிற்குள் விருப்பம் இல்லாமல் தான் நுழைந்தான். ஆனால் தோற்றத்திலும் சரி, திறனிலும் சரி அவன் யாருடைய எதிர்ப்பார்ப்பையும் பொய்யாக்காமல் அனைவருக்கும் அபிமானவனாய் இருந்தான்.

பிரபலத்தின் வாரிசு என்பது மிகப் பெரிய சுமை. ரசிகன் எனப்படுவன், நடிகனை சகமனிதனாக பார்ப்பதைவிட கடவுளாகவும் பார்க்கிறான் பல தருணங்களில். கடவுளை நாம் வழிப்படுகிறோம், ஆராதிக்கிறோம், நமது ஆசைகள் நிறைவேற சாத்தியம் இருக்கிறதா? என்பதனை ஆராயாமலேயே கடவுளிடம் ஒப்படைக்கிறோம்.

அப்படிப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் போய்விடும்போது கடவுளையே திட்டவும் நாம் தயங்குவதில்லை. நாம் திட்டியதற்காக எந்த கடவுளும் நமது வாசலில் நின்று நியாயம் கேட்பதில்லையே! அவர்களை திட்டுவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.அதே போலத்தான் நமக்கு அபிமான நட்சத்திரங்களும், அவர்களைப் போற்றுவதும் தூற்றுவதும் அவரவர் மனநிலையையும் ரசனையையும் சார்ந்த ஒன்றாக அமைந்து விடுகிறது. ரசிகன் என்பவன் கருத்து சுதந்திரத்தை கையாள்கிறான். அந்த உரிமை, ஒரு  பொறுப்பா? அல்லது பொழுதுபோக்கா? இவ்விரு நிலைகளின் இடையில் பந்தாடப்படுகிறது கலைஞனின் வாழ்க்கை.

மறைந்த நடிகர் கௌரவின் தந்தை, தமிழ் சினிமா, கருப்பு வெள்ளையாக திரையிடப்பட்டப்போதே புகழ் பெற்றிருந்தவர். சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த சமூக ஆர்வளாராகவும் இருந்தார் அவர். அவருக்கென ஒரு அடையாளயும் மதிப்பு இருந்தது. அவை ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்புகள் கௌரவின் வாழ்க்கையில் திணிக்கப்பட்டது. நடிகர் கௌரவ் நடித்த முதல்படம், பலராலும் கேலிசெய்யப்பட்டது.

“ நடிக்கத் தெரியாதவன் எதற்கு நடிக்க வேண்டும்?

எவ்வளவு பெரிய சிகரத்தின் வாரிசு இவன்? எனினும் நடிப்பு சுட்டுப் போட்டாலும் வராது!” இப்படி பல விமர்சனங்களை அவர் சந்திக்க நேர்ந்தது. அறிமுக நடிகன் என்ற ஸ்தானத்தையும் தாண்டி பிரபலத்தின் “வாரிசாக” தன்னை விமர்சனம் செய்தவர்களிடம் பாராட்டு பெற்றிடவே கௌரவுக்கு சில வருடங்கள் முழுமையாய் தேவைப்பட்டது.

கணவனைப் பற்றி நினைத்துக் கொண்டே மழையில் நனைந்து கொண்டிருந்த சுலோட்சனாவின் விழிகளை பின்னிருந்து மூடினான் சத்யன். அவர் கன்னத்திலிருந்து வழிந்த சூடான கண்ணீர் துளிகள் அவனது உள்ளங்கையை தீண்டி நழுவின.

“ என்னம்மா… ஃபங்க்ஷனுக்கு ரெடி ஆகலையா நீங்க?” அவர் அழுததின் காரணத்தைக் கேட்காமல் பேச்சை மாற்றினான் சத்யன்.

“ இன்னும் டைம் இருக்குல கண்ணா.. அதான் சும்மா…”

“சும்மா மழையில ஆட்டமா?” என்றவன் அன்னையின் வலது கரத்தை தன் தோள்மீது வைத்துக் கொண்டு இடது கையை தன் கைகளில் ஏந்தி நடனம் ஆடத் தொடங்கினான்.

“ டேய் என்னடா இது ? விடு!”

“அட, படத்துல மட்டும் ஹீரோயின்ஸ் கூட டான்ஸ் ஆடுறேன்.. ஆனால் என் அம்மாக்கூட நான் ஆடக்கூடாதா?” என்றவன் அன்னையுடன் ஆடிக் கொண்டே மெல்லிய குரலில் பாடினான்.

கண்ணீரெல்லாம் புன்னகையாகும் என்னழகே

நீ கடந்திடும் பாதையில் பூக்கள் மலரும் என்னழகே

நீயும் நானும் வேறு வேறா என்னழகே

நான் உனக்குள் வாழும் ஓருயிர் தானே என்னழகே” மெல்லிய குரலில் சத்யன் பாட மனதில் இருந்த பாரமெல்லாம் கரைந்தது போல உணர்ந்தார் சுலோட்சனா. அவன் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டார் அவர்.

“ சரி கட் கட்.. சீக்கிரம் பேக் அப் பண்ணிட்டு மேக் அப் போடுங்க.. இவினிங் அர்ப்பணாவை பார்க்கப் போவோம்” என்று மந்தகாசமாய் புன்னகைத்தான் சத்யன். அவன் சொல்லவும் தான் சுலோட்சனாவிற்கும் பொறித் தட்டியது.

ஆம், அர்ப்பணாவும் தானே அங்கு வருவாள் ? அதை எண்ணியவரின் உள்ளம் துள்ளி குதித்தது. “எல்லாமே நல்லப்படியாக நடக்கனும் பழனி முருகா” என்று வேண்டிக்கொண்டார் சுலோட்சனா.

வானின் நட்ச்த்திரங்கள் திரள்வதற்காகவும், அன்று பூமியின் நட்சத்திரங்கள் மிளிர்வதற்காகவும் தனது கடமையை சீக்கிரமே முடித்துவிட்டு மேற்கில் ஓய்வெடுக்க தொடங்கினான் ஆதவன்.

இந்திரன் “கட்டாதே” என்று சொன்னதற்காகவே பச்சை நிற புடவை அணிந்திருந்தாள் கண்மணி. தனது அடர்ந்து கூந்தலை எப்போதும் போல ரப்பர் பாண்ட்டில் அடக்கி வைக்காமல் நேர்த்தியாய் வாரி விரித்து விட்டிருந்தாள். போகும் இடத்தில் அவளுக்கென தனி அடையாளம் இல்லைத்தான். அதனால் தனது தோற்றம் யாருடைய கவனத்தையும் ஈர்க்க கூடாது என்பதில் தீர்மானமாய் இருந்தாள். அதுவும் இந்திரனை சந்திக்கவிருப்பதால், ஒப்பனைகளை இன்னும் குறைத்துக் கொண்டு சதாரணமாகத்தான் இருந்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.