(Reading time: 15 - 29 minutes)

"சித்  திஸ் டைம் நீ ஓவரால் செகண்ட் ப்ளேஸ்" அவனிடம் அவன் தேர்வு முடிவுகளை கொடுத்தார் வகுப்பு ஆசிரியை. அரையாண்டு தேர்வு முடிவுகளை மாணவர்களுக்கு வழங்கி கொண்டிருந்தார் அவர்.

"நெக்ஸ்ட் டைம் யு ஷுட் கம் பர்ஸ்ட் ஒகே"

"ஒகே  மேம்" இரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு அவன் அமைதியாக தன் இருக்கையில் வந்தமர்ந்தான்.

ஆனால் வகுப்பில் மற்ற மாணவ மாணவியருக்கோ பேரதிர்ச்சி!! தங்கள் ஹீரோ செகண்டா!!! அவர்களுக்குள் சலசலவென விவாதித்துக் கொண்டனர்.

"கோன் ஆயா ரே பர்ஸ்ட்" ( யாருடா அது பர்ஸ்ட் வந்தது)

" சித் கோ ஹரா தியா" (‘சித்’தை தோற்கடிச்சிட்டாங்க)

அந்த நேரம் உணவு இடைவேளை மணி அடிக்கவும் யார் சித்தார்த்தை தோற்கடித்தது என்று தெரிந்தே ஆக வேண்டும் என மாணவர்கள் எல்லோரும் வெளியில் ஓடிச் சென்றனர்.

"புதுசா ஒரு பொண்ணு வந்திருக்காம் “பி” செக்ஷன்ல அபூர்வான்னு பேரு. அவ தான் பர்ஸ்ட் வந்திருக்கா" சந்தோஷ் துப்பு அறிந்து விட்டு வந்து சொல்ல சலனமே இல்லாமல் அமர்ந்திருந்தான் சித்தார்த்.

அவனுக்கு இந்த பர்ஸ்ட் செகண்ட் இதிலெல்லாம் எப்போதுமே  ஈடுபாடு இருந்தது இல்லை...என்றேனும் விளையாட்டுகளில் அவன் தோற்றாலும் அதற்காக வருந்துவது அழுவது என்பதெல்லாம் கிடையாது.  ஆறு வயதிலேயே இந்த பக்குவத்திற்கு காரணம் அவன் பாட்டி.

"பகவான் நாம சாப்பிடுற ஒவ்வொரு பருக்கையிலும் நம்ம  பேர் எழுதி வச்சிருப்பார்" அவனுக்கு சாதம் ஊட்டும் போதெல்லாம் அவன் பாட்டி எப்போதும் சொல்வதுண்டு.

"எங்க பாட்டி எழுதிருக்கு"

"அதெல்லாம் நம்ம கண்ணுக்கு தெரியாது... சித்துவுக்கு எது நல்லதோ அது சாமி தானாகவே கொடுப்பார்”

"அப்போ நேத்திக்கு டிராயிங்ல சித்துக்கு பிரைஸ் கிடைக்கலையே...அப்போ சாமி இது சித்துவோடது இல்ல சித்துக்கு வேண்டாம் சொல்லிருச்சா"

"ஆமாம் டா கண்ணா...இத விட பெரிய பிரைஸ் சாமி சித்துக்கு வச்சிருக்காராம்... சாமிக்கு எல்லோரும் தானே குழந்தைங்க...மத்த குழந்தைகளுக்கும் சாமி பிரைஸ் தரனும்ல"

"ஆமா ஸ்வாதியும் பாவம்ல அவளே வச்சுக்கட்டும் பிரைஸ்"

மற்ற குழந்தைகள் பரிசு வாங்கும் போது தான் வாங்கவில்லை என்றாலும் கைதட்டி மகிழ்ச்சி அடைவான் சித்தார்த். ஆனால் இப்போதோ எதையுமே உணரும் மனநிலையில் அவன் இல்லை..

பூர்வா… பெயரை போலவே அபூர்வமான குழந்தை.. இந்த சின்ன வயசுலேயே எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா பழகுறா...ஹெல்பிங் டெண்டன்சி அதிகம் ..ரொம்ப அமைதியும் கூட. எதையும் ஈஸியா அப்சர்ப் பண்ணிக்கிறா" அபூர்வாவின் வகுப்பு ஆசிரியைகள் கூறுவதைக் கேட்கும் போது அபூர்வாவின் பெற்றோர் ரத்னாவதி விஜயகுமார் அகமழிந்து போவார்கள்.

அக்மார்க் அப்பா பெண்ணாகிய அபூர்வாவின் தந்தை விஜயகுமார் இந்திய ராணுவத்தின் விமானப் படையில் விங்க் கமாண்டர். முன்பு சென்னையில் உள்ள தாம்பரம் விமானப் படைப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் பணிமாற்றம் செய்யப்பட்டதால் தில்லிக்கு குடிபெயர்ந்தனர்.

ஆர். கே. புரத்தில் இருக்கும் ராணுவ குடியிருப்பு வளாகத்தில் அவர்களுக்கு குவார்ட்டர்ஸ் அலாட் செய்யப்பட்டிருந்தது. ராணுவ வீரரின் குழந்தை என்ற அடிப்படையில் பள்ளியின் பாதியிலும் அபூர்வாவிற்கு அட்மிஷன் கிடைத்திருந்தது.

"அபூர்வா வேணும்னா இந்த ஹாவ் இயர்லி எக்ஸாம் ஸ்கிப் பண்ணிக்கலாம். இப்போ தானே சேர்ந்திருக்கா" அவளது முந்தைய பள்ளியின் சான்றிதழ்களை பார்த்து பாராட்டிய படியே தற்போது அவள் சேர்க்கப்பட்டிருக்கும் பள்ளியின் முதல்வர் சலுகை அளிக்க முன்வந்தார்.

"நோ நோ மேடம். அபூர்வா வில் கிவ் தி எக்ஸாம். அண்ட் டேக் மை வொர்ட்ஸ் ஷி வில் டாப் தி கிளாஸ்" விஜயகுமார் பெருமை பீற்றி விட ரத்னாவதியோ அவரை ஒரு முறை முறைத்து அமைதியாக அமர்ந்திருந்தார்.

வீட்டுக்கு வந்ததுமே அந்த ராணுவ அதிகாரியும் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் நிலைமைக்கு ஆளானார்.

"எக்ஸாம் இன்னும் நாலே நாள் தான். இப்படி பெருமை பீத்திட்டு வந்திருக்கீங்க. நாளைக்கு அவங்க முகத்துல நானில்லை முழிக்கணும்" ரத்னவாதி ருத்திர தாண்டவம் ஆடாத குறை தான்.

"ரதி இப்போ எதுக்கு டென்சன் ஆகுற... பூக்குட்டி இங்க வாடா" தன் மகளை பூக்குட்டி என்றே ஆசையாய் அழைப்பார் தந்தை.

"டாடி” ஓடி வந்து அவர் மடியினில் ஏறி அமர்ந்து கொண்டாள் அபூர்வா.

"பூக்குட்டி டாடி இன்னிக்கு உன்னோட புது ஸ்கூல் பிரின்சிபால் கிட்ட என் பொண்ணு எக்ஸாம் எழுதிருவா பர்ஸ்டும் வந்திருவான்னு சொல்லிருக்கேன்"

"சரி டாடி. நான் எக்ஸாம் எழுதி பர்ஸ்ட் வந்திருறேன்" வில்லில் இருந்து புறப்பட்டு இலக்கை அடைந்திடும் அம்பாய் அவள் பதில் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.